பெங்களூர் மற்றும் லக்னோ போட்டியின் போது கோலியும் கம்பீரும் களத்திலேயே வாக்குவாதம் செய்து கொண்ட சம்பவம் இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இருவரையும் பரம வைரிகள் போல சித்தரித்து பலரும் மீம்ஸ் போட்டு வருவதை பார்க்க முடிகிறது. இப்படியானவர்களுக்காக ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் ஒன்றை ஓட்டிப் பார்ப்போம்.

ஒருகாலத்தில் கம்பீர் விராட் கோலிக்காக ஆட்டநாயகன் விருதையெல்லாம் விட்டுக் கொடுத்திருக்கிறாரென்றால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில், அது என்றைக்குமே மறக்க முடியாத இனிய தருணம்.
18 ஆகஸ்ட் 2008 இல் இலங்கைக்கு எதிரான ஓடிஐ போட்டியில்தான் கோலி முதன் முறையாக இந்திய ஜெர்சியை அணிந்து அறிமுகமாகியிருந்தார். அதிலிருந்து ஒரு வருடத்திற்கு கோலி இந்திய அணியில் பெரிதாக நிலையான இடத்தை பெறவே இல்லை. பெரியளவில் ஸ்கோரும் செய்யவில்லை. முதல் 12 இன்னிங்ஸ்களில் அவருக்கு திருப்புமுனையான ஆட்டம் எதுவும் அமையவில்லை.
டிசம்பர் 24, 2009 இல் இலங்கைக்கு எதிராக அவர் ஆடிய அந்த 13 வது இன்னிங்ஸில்தான் கோலி தனது முதல் சர்வதேச சதத்தை அடித்திருந்தார். அந்தப் போட்டியில் 114 பந்துகளை எதிர்கொண்டு 107 ரன்களை கோலி அடித்திருந்தார்.

அந்தப் போட்டியில் இந்திய அணி 316 ரன்களை சேஸ் செய்திருக்கும். கோலியோடு சேர்ந்து அந்தப் போட்டியில் கலக்கிய இன்னொரு வீரர் கவுதம் கம்பீரே. கம்பீர் அந்தப் போட்டியில் 150 ரன்களை எடுத்திருந்தார். கம்பீர் - கோலி இருவரும் இணைந்து கூட்டாக 224 ரன்களை எடுத்திருந்தனர். 300+ சேஸிங்கை இந்திய அணு வெற்றிகரமாக எட்டி முடிக்க இவர்களின் இந்த ஆட்டமே மிக முக்கிய காரணமாக இருந்தது.
போட்டி முடிந்த பிறகுதான் அந்த ஹைலைட்டான சம்பவம் நடந்திருந்தது.
150 ரன்களை அடித்ததற்காக கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், கம்பீர் அந்த விருதை பெற்றுக் கொள்ளாமல் அதை விராட் கோலிக்கு வழங்கியிருந்தார்.
இந்த சம்பவம் அந்த சமயத்தில் பலரையும் நெகிழச் செய்திருந்தது. 'நாங்கள் ஓப்பனர்களை சீக்கிரமே இழந்துவிட்டோம். அந்த சமயத்தில் விராட் கோலி ரொம்பவே பாசிட்டிவ்வாக ஆடி வேகமாக ரன்களை சேர்த்தார். அது என் மீதான அழுத்தத்தைக் குறைத்தது.' என கோலி பற்றி கம்பீர் கூறியிருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் அந்தத் தருணம் குறித்து பேசிய கவுதம் கம்பீர், 'நான் சிறப்பாக எதுவும் செய்துவிடவில்லை. விராட் கோலியால் 100 சதங்களை கூட அடிக்க முடியும். அவர் அந்தளவு திறன் உடைய வீரர்தான். ஆனால், எத்தனை சதங்கள் அடித்தாலும் அந்த முதல் சதம் என்பது எப்போதுமே ஸ்பெஷல்தான். எனக்கும் இலங்கைக்கு எதிராக நான் அடித்த எனது முதல் சதம் இன்னும் நினைவில் நிற்கிறது.
கோலியின் அந்தத் தருணத்தை மேலும் மதிப்புமிக்கதாக, சிறப்பானதாக மாற்ற வேண்டும் என நினைத்தேன். அதனால்தான் ஆட்டநாயகன் விருதை அவருக்கு வழங்க வைத்தேன். கோலி செய்திருக்கும் சாதனைகளில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. அவர் இன்னும் அதிகமாக சாதிப்பார்.' என்று கம்பீர் கூறியிருந்தார்.
கம்பீருக்கும் கோலிக்கும் இடையிலான உரசல் ஒன்றும் புதிதல்ல. அவ்வப்போது இப்படி சண்டையிட்டுக் கொள்வார்கள்தான். ஆனால், இருவருக்குமிடையே ஒரு நல்ல உறவு இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.