Published:Updated:

கங்குலியின் உறுதி, பாகிஸ்தானின் அடம், வெஸ்ட் இண்டீஸின் கடுப்பு... நடக்குமா 2020 ஐபிஎல்?

IPL
IPL

சொல்லப்போனால் கொரோனா பாதித்திருக்கும் இந்த சூழ்நிலையில்தான் முன்னெப்போதும் இருந்ததைவிட இந்தத் தொடரின் தேவை மற்ற போர்டுகளுக்கு அதிகமாக இருக்கிறது.

``இந்தச் சூழ்நிலையில் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதுவும் சொல்லிவிட முடியாது. கடந்த 10 நாள்களுக்கு முன் என்ன சூழ்நிலை நிலவியதோ அதே நிலைமைதான் இப்போதும் இருக்கிறது” - ஐபிஎல் தொடரை காலவரையின்றி தள்ளிவைத்தது பற்றி பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி இப்படித்தான் சொன்னார்.

கொரோனாவால் மொத்த உலகமும் ஸ்தம்பித்துக்கிடக்கும் இந்த நிலையில் கிரிக்கெட் உலகமும் கையறுநிலையில் நின்றுகொண்டிருக்கிறது. டி20 உலகக் கோப்பை, ஐபிஎல் போன்ற இரு பெரும் தொடர்கள் சிக்கல்களுக்குள்ளாகியிருக்கும் நிலையில், இதனால் கிரிக்கெட் உலகில் ஏற்படும் தாக்கம் என்ன?

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை வழக்கமான ஏப்ரல் - மே விண்டோவில் நடத்துவது இனி சாத்தியமில்லை. ``இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஐபிஎல் பற்றி யோசிப்பதே மிகவும் தவறு. இப்போது சிக்கல்களை முதலில் கடந்து வருவோம். எல்லாம் சரியானாலும் வெளிநாட்டு வீரர்களை அந்த நாடுகள் விடுவார்களா, இல்லை நம் நாட்டில்தான் அவர்களுக்கு அனுமதி கிடைக்குமா! எத்தனை சிக்கல்கள் இருக்கின்றன” என்று ஓப்பனாகப் பேசியிருக்கிறார் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர் நெஸ்வாடியா. அணியின் உரிமையாளர்கள், பி.சி.சி.ஐ உறுப்பினர்கள் என எல்லோருமே இப்போது எந்த பதிலும் இல்லாமல்தான் இருக்கிறார்கள். இப்போது முடியவில்லையென்றாலும் டி-20 உலகக் கோப்பைக்கு முன்பாவது ஐபிஎல் தொடரை நடத்திவிட வேண்டும் என்ற மனநிலையில் பி.சி.சி.ஐ நிர்வாகிகள் இருப்பதாகத் தெரிகிறது. அப்படி என்னதான் அவசியம் இந்தத் தொடரை நடத்தியாக வேண்டுமென்று!

T20 World Cup
T20 World Cup

ஐபிஎல், கிரிக்கெட்டில் பல மோசமான டிரெண்டுகளுக்கு அடித்தளம் அமைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம், அதன் பொருளாதார தாக்கம் பலரையும் பாதிப்பதாக இருக்கிறது. இந்த ஓர் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லையென்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 3,869.5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுமாம். விவோ நிறுவனத்துக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை (5 ஆண்டுகளுக்கு) 2000 கோடிக்கு அளித்திருந்தது பி.சி.சி.ஐ. இப்போது இந்த ஒரு வருடம் ஐபிஎல் நடக்கவில்லையென்றால், 400 கோடி ரூபாய் இழக்கநேரிடும். அதேபோல், மற்ற ஸ்பான்சர்ஷிப்களின் மூலம் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஸ்டார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒளிபரப்பு ஒப்பந்தத்தின்படி 3269.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். மொத்தம் 3869.5 கோடி!

இதனால் பி.சி.சி.ஐ-க்கு மட்டும் இழப்பு இல்லை என்பதுதான் உண்மை. ஒரு வெளிநாட்டு வீரர் இந்தத் தொடரில் பங்கேற்க வேண்டுமெனில் அவரது தேசிய கிரிக்கெட் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு அந்த வீரரின் ஆண்டு ஊதியத்தில் 20 % சதவிதத்தை ஐபிஎல் மற்றும் அந்த வீரரின் அணி அனுமதி கொடுக்கும் போர்டுக்குக் கொடுக்க வேண்டும். உதாரணமாக கம்மின்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவின் ஒப்புதல் வேண்டும். அதற்காக, அவர் இந்த ஆண்டு பெறும் ஊதியமான 15.5 கோடியில் 20 சதவிகிதமான 3.1 கோடியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பி.சி.சி.ஐ இணைந்து ஆஸ்திரேலியாவுக்குக் கொடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வீரரின் போர்டுக்கும் அந்தக் குறிப்பிட்ட தொகை போகும். இப்படி ஐபிஎல் மூலம் ஒவ்வொரு கிரிக்கெட் போர்டும் பலனை அனுபவத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

சொல்லப்போனால் கொரோனா பாதித்திருக்கும் இந்த சூழ்நிலையில்தான் முன்னெப்போதும் இருந்ததைவிட இந்தத் தொடரின் தேவை மற்ற போர்டுகளுக்கு அதிகமாக இருக்கிறது. அனைத்துத் தொடர்களும் தடைபட்டிருக்கும் இந்த நிலையில் எப்போது எல்லாம் சரியாகும் என்று சொல்ல முடியாது. இதற்கிடையே, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய நான்கு போர்டுகளும் ஏற்படுத்தியிருந்த ஒளிபரப்பு உரிம ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. அடுத்த கிரிக்கெட் காலண்டர் தயாராகாமல் நிச்சயம் புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்த முடியாது. அதனால், அந்த வருவாயும் இப்போது இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய் இழப்பு ஒருபக்கம் இருக்க, ஆண்டு ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களுக்கான ஊதியத் தொகையைக் கொடுக்கவேண்டியிருக்கிறது. பி.சி.சி.ஐ, இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் போர்டு தவிர மற்ற அனைத்து கிரிக்கெட் சங்கங்களுமே இதனால் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு ஐபிஎல் மூலமாகவும் வருமானம் இல்லையென்பதால்தான் ஆசிய கோப்பையை நடத்தியே ஆகவேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். ஏற்கெனவே பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடத்த இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் துபாயில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்போது ஐபிஎல்லை காரணம்காட்டி ஆசிய கோப்பையைத் தள்ளிப்போடக் கூடாது என கொதிக்கிறது பாகிஸ்தான்.

இன்னொருபக்கம் ஆகஸ்ட் - செப்டம்பரில் கரீபியன் பிரீமியர் லீக் நடக்க வேண்டும் என்பதால் அந்தநேரத்தில் ஐபிஎல் நடத்தினால் நாங்கள் கடுப்பாவோம் என்கிறது வெஸ்ட் இண்டீஸ். கரீபியன் பிரீமியர் லீகின் தலைவர் பீட்டர் ரஸல், ``ஆகஸ்ட், செப்டம்பரில் ஐபிஎல் நடத்தினால் எப்படி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்தியாவில் விளையாட முடியும். அப்போது வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் லீகில்தானே அவர்கள் விளையாடுவார்கள். மற்ற நாட்டு போர்டுகளின் அட்டவணையையும் பிசிசிஐ கொஞ்சம் மதிக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

கிரிக்கெட் சங்கங்களின் இழப்பு ஒரு பக்கமென்றால், வீரர்கள் பலருக்கும் தனிப்பட்ட முறையில் இழப்புகள் ஏற்படும். கோலி, தோனி போன்ற வீரர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், 20 லட்சம் ரூபாய்க்கு முதல் முறையாக ஏலம் போன வீரர்களின் நிலை?! உள்ளூர் வீரர்கள் பலரும் சையது முஷ்தாக் அலி, விஜய் ஹசாரே போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடியதால் தேர்வு செய்யப்பட்டவர்கள். இந்த முறை ஐபிஎல் நடக்காமல் தள்ளிப்போனால், அடுத்த ஏலத்தில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம். அப்போது அடுத்த உள்ளூர் சீசனின் அடிப்படையில் மாற்றங்கள் நிகழ்ந்தால் இவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு நழுவிச் சென்றுவிடும். இவர்கள் போக, ஐபிஎல் நேரங்களில் கொடி, ஜெர்சி விற்பவர்கள், ஓவியம் வரைபவர்கள், மைதான பராமரிப்பாளர்கள் என்று பலரின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும். இந்தியா முழுக்க ரெஸ்ட்டாரன்ட்கள், பார்கள், ஹோட்டல்கள் கடுமையான வருவாய் இழப்பை சந்திக்கும். ஐபிஎல் - பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி பொருளாதாரத்தில், பலரின் வாழ்வாதாரத்தில் மிகமுக்கிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், பிசிசிஐ தலைவராக தான் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே இப்படி ஒரு சிக்கல் எழுந்திருப்பதில் கங்குலி அண்ட் கோ செம அப்செட். அதனால் செப்டம்பருக்குள் ஐபிஎல் போட்டியை நடத்திக்காட்டிவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால், காலம் கொரோனாவின் கையில் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு