Published:Updated:

கேள்விகள் ஆயிரம் இருக்கின்றன... ரவி சாஸ்திரியிடம் பதில்கள் இருக்குமா?!

Ravi Shastri ( AP )

``நாங்கள்தான் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணி" என்று எப்போதும் தன் முடிவுக்கும், அணியின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒருவர், அணிக்குள் இருக்கும் பிரச்னையைப் பற்றிப் பேசுவாரா, அதைத் தீர்ப்பாரா?

Published:Updated:

கேள்விகள் ஆயிரம் இருக்கின்றன... ரவி சாஸ்திரியிடம் பதில்கள் இருக்குமா?!

``நாங்கள்தான் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணி" என்று எப்போதும் தன் முடிவுக்கும், அணியின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒருவர், அணிக்குள் இருக்கும் பிரச்னையைப் பற்றிப் பேசுவாரா, அதைத் தீர்ப்பாரா?

Ravi Shastri ( AP )

`பிதாமகன்' படத்தில் சூர்யா ஆடும் லங்கர் கட்டை ஆட்டத்தைப்போல்தான் நடந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வு. கபில் தேவ் தேர்வு செய்கிறார், எக்கச்சக்க விண்ணப்பங்கள், போட்டியில் டாம் மூடி, மைக் ஹெசன் எனப் பல பில்டப்கள் நடந்தாலும், கடைசியில் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தட் 'எதுக்கு உருட்டிக்கிட்டு' மொமன்ட்! ரசிகர்கள் பலருக்கும் இது ஏமாற்றம்தான். ஏன் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது, ஏன் இந்த முடிவால் நாம் பயப்படவேண்டியிருக்கிறது? காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன..!

முன்குறிப்பு: இங்கு ரவி சாஸ்திரியைப் பற்றிப் பேசும்போது, அதை கோலி - சாஸ்திரி இணையாகத்தான் பேசியாக வேண்டும். ஏனெனில், சாஸ்திரி மட்டுமே சொல்லி அங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. இங்கு சாஸ்திரியின் முடிவு என்பது இந்தக் கூட்டணியின் முடிவாகவே இருக்கும்.

உண்மையில், இந்தக் கூட்டணியும் இந்திய அணி வெற்றி பெறவேண்டும் என்றுதான் நினைக்கிறது. அதற்காகத்தான் எல்லா முடிவுகளும் எடுக்கிறது. அஷ்வின், ஜடேஜா போன்ற சீனியர்களை ஒருநாள் போட்டிகளில் ஒரே நேரத்தில் ஓரங்கட்டியது; அதே ஜடேஜாவை உலகக் கோப்பைக்கு முன் திரும்ப அழைத்தது; ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு மயாங்க் அகர்வாலைத் தேர்ந்தெடுத்தது; புஜாரா, ரஹானே போன்றவர்களைக்கூட பெஞ்சில் அமர்த்தியது என மிகவும் தைரியமான முடிவுகளை இந்தக் கூட்டணி எடுத்துள்ளது. அந்த முடிவுகளின் விளைவு சரியாக அமைந்ததும், அமையாததும் வேறு விஷயம். ஆனால், எப்படியான முடிவையும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் எடுத்த கூட்டணி இது. அதுவும் இந்திய அணியின் வெற்றிக்காக.

Ravi Shastri and Kohli
Ravi Shastri and Kohli
AP

இந்தக் கூட்டணியின் மிகப்பெரிய தோல்வி - எந்த வீரரையும், அவரது பலத்துக்கு ஆட விடாதது. எந்தவொரு வீரருக்கும் அவருக்கு உகந்த பேட்டிங் பொசிஷனில் அதிக வாய்ப்புகள் தராதது. தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே போன்றவர்கள் 5 அல்லது 6-வது இடத்தில் சோதிக்கப்பட்டனர். சரி, புதியதொரு இடத்தில் அதிகமான வாய்ப்புகள் கொடுத்தார்களா? அதுவும் இல்லை. ஒரு போட்டியில் 5-வது வீரர், அடுத்த போட்டியில் 6-வது வீரர், விக்கெட்டுகள் திடுபுடுவென விழுந்தால், அந்த மோசமான நிலையில் அனுபவ தோனிக்கு முன்பு இவர்கள் இறக்கப்படுவார்கள். எப்பேர்ப்பட்ட கொடுமை!

சர்வதேச அளவில் ஆடுகிறார்கள் என்பதற்காக எல்லோரும், எல்லா பொசிஷனிலும் ஆடவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. டி-20 போட்டிகளில் நான்காவது வீரராகக் களமிறங்கி கடந்த 2 ஆண்டுகளில் கோலியால் கூட பெரிய ஸ்கோர் அடிக்கமுடியவில்லையே! அதனால்தானே, நம்பர் 1 இடத்தில் இருந்தவர், இப்போது டாப் 10 பொசிஷனில்கூட இல்லை. அதை இப்போது எப்படிச் சரிசெய்திருக்கிறார்கள்? வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் தன் ஆஸ்தான நம்பர் 3 பொசிஷனுக்கு நகர்ந்திருக்கிறார் கோலி. அதனால், முதல் இரண்டு டி-20 போட்டிகளில் ராகுல் பிளேயிங் லெவனில் இல்லை. இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனுக்கே பேட்டிங் ஆர்டர் சிக்கல் இருக்குமென்றால், 15 ஆண்டுகளாக அணிக்குள் வருவதும் போவதுமாக இருக்கும் ஒரு வீரருக்கு அந்த நெருக்கடி இருக்காதா?

Ravi Shastri and Kohli
Ravi Shastri and Kohli
AP

இப்படியான விஷயங்களில்தான் சொதப்பியது இந்தக் கூட்டணி. தொலைநோக்குப் பார்வையோடு எதையும் யோசிக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்குப் பின், மிடில் ஆர்டரில் வீரர்களுக்கு சரியான வாய்ப்புகள் கொடுத்து அதை பலப்படுத்தியிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, ஒவ்வொரு போட்டியை வெல்வதிலும், ஒவ்வொரு தொடரையும் வெல்வதிலும் மட்டுமேதானே இவர்கள் ஆர்வம் காட்டினார்கள்!

சரி, பழசையெல்லாம் விட்டுவிடுவோம். இப்போது, "இனிவரும் ஒருநாள் தொடர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது வீரராகக் களமிறங்குவார்" என்று சொல்லியிருக்கிறார் ரவி சாஸ்திரி. ஏதோ, தவறுகளைச் சரிசெய்யத் தொடங்கிவிட்டார்கள் என்பதுபோல் தெரியலாம். ஆனால், புதிதாகக் கிளம்பும் பிரச்னைகள், அதே மிடில் ஆர்டர் பிரச்னை போலத்தான் அணுகப்படும் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அது என்ன புதிதான பிரச்னை? நிறையவே இருக்கிறது.

Shreyas Iyer
Shreyas Iyer
AP

ஒருநாள் அணியின் நம்பர் 4 பிரச்னை தீர்ந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். இதற்கு மேல் ஏதும் எழாதா? கண்டிப்பாக கேதர் ஜாதவ் அடுத்த உலகக் கோப்பையில் ஆடப்போவதில்லை. கோலி, தவான், ரோஹித், ஷ்ரேயாஸ் ஐயர், பன்ட் என இப்போதைய டாப் 5 யாரும் பந்துவீசப்போவதில்லை. இவர்களுக்கு மாற்றாக இருக்கும் ஷுப்மான் கில், மனீஷ் பாண்டே போன்றவர்களும் பந்துவீசப்போவதில்லை. அப்படியெனில் இந்தியாவுக்கு ஆறாவது பௌலிங் ஆப்ஷனாக இருக்கப்போவது யார்? நிச்சயம் ஜடேஜா மற்றும் பாண்டியா இருவரையும் ஆறாவது, ஏழாவது பேட்ஸ்மேன்களாக இறக்க முடியாது. குருனால் பாண்டியாவும் அதேதான். ஒருநாள் போட்டிகளுக்கு அவர் செட் ஆகமாட்டர். அப்படியிருக்கையில், பகுதி நேர பௌலராகச் செயல்படக்கூடிய ஒரு வீரரை இவர்கள் எப்போது அடையாளம் காணப் போகிறார்கள்? அவருக்கு எப்போது வாய்ப்பு கொடுக்கப்போகிறார்கள். நித்தீஷ் ராணா போன்ற வீரருக்கு எப்போது அணியில் இடம் கிடைக்கும்? இப்போதுதான் அவரை இந்திய ஏ அணியிலேயே எடுக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஜாதவை வைத்து இழுத்தடித்துவிட்டு, கடைசியில் வாய்ப்பு தரப்போகிறார்களா?!

இன்னொரு விஷயம்... இங்கு ஒருநாள் அணியையும், உலகக் கோப்பையையும் மட்டுமே கணக்கில் கொள்ளாமல், ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டையும் மதிப்பிடவேண்டிய அவசியம் இருக்கிறது. ஒருவேளை துருதிருஷ்டவசமாக ரவிச்சந்திரன் அஷ்வின் காயமடைகிறார் என்று வைத்துக்கொள்வோம். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு, இந்திய அணியின் கைவசம் இருக்கும் ஸ்பின்னர் யார்? குல்தீப் யாதவ்தான் அஷ்வின் இடத்தில் எப்படியும் ஆடுவார். அப்படியெனில் மூன்றாவது ஸ்பின்னர் யார்? ராகுல் சஹாரா? ஆஃப் ஸ்பின்னர் யாரும் இருக்கிறார்களா இந்திய அணியின் பட்டியலில்?

Jayant Yadav
Jayant Yadav

ஜெயந்த் யாதவ்... கும்பிளே நடையைக் கட்டியதோடு இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த டெஸ்ட் தொடரிலேயே (இலங்கைக்கு எதிராக) ஓரங்கட்டப்பட்டார் ஜெயந்த். பலவீனமான அந்த இலங்கைக்கு எதிராக, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக, ஏன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகக்கூட அவர் களமிறக்கப்படவில்லை. ஆனால், இந்திய ஏ அணியில் ஆடிக்கொண்டிருக்கும் ஆஃப் ஸ்பின்னர் இவர்தான். கடந்த ரஞ்சி சீசனில் 90 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் இவரை நேரடியாக இவர்களால் தென்னாப்பிரிக்கத் தொடருக்குத் தேர்வு செய்ய முடியுமா? புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின்னர்களுக்குப் பெயர் போன இந்திய அணி, ஆஃப் ஸ்பின்னர் இல்லாமலேயே ஒரு டெஸ்ட் தொடரைச் சந்திக்கும் நிலை வரலாம்! அப்போது இவர்களிடம் பதில் இருக்காது.

அடுத்து டி-20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கப்போகிறது. அதற்கான தீர்க்கமான திட்டம் இவர்களிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. 3 வேகப்பந்துவீச்சாளர்கள் + ஹர்திக் பாண்டியா ஆடுவது உறுதி எனும்போது, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 டி-20 போட்டிகளில் ராகுல் சஹார், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என 3 ஸ்பின்னர்களை (குருனால் பாண்டியாவைச் சேர்க்காமல்!) பயன்படுத்துவது எந்த வகையில் உலகக் கோப்பைக்குத் தயாராவதை உணர்த்துகிறது. அதுவும் குல்தீப், சஹால் போன்றவர்கள் அணியில் இருக்கும்போது இத்தனை ஸ்பின்னர்களை சோதித்துப் பார்ப்பது ஏன்?

Ravi Shastri
Ravi Shastri

இப்படியாக யோசித்தால், இந்தக் கூட்டணியிடம் என்ன தொலைநோக்குப் பார்வை இருக்கிறது தெரியவில்லை. அடுத்து ஒரு பிரச்னை வந்து, அதனால் சில முக்கியமான போட்டிகளை அல்லது தொடர்களை இழந்து, கடும் விமர்சனத்துக்கு ஆளாகி, அதன்பிறகுதான் இவர்கள் மாற்றுவார்களேயானால், இந்திய அணிக்குக் கஷ்டம்தான்.

சரி, இவ்வளவு நேரம் கூட்டணி கூட்டணி என்றுதானே பேசினோம். அப்படியெனில் இதில் கோலியின் பங்களிப்பும் இருக்கிறதுதானே! நிச்சயமாக. ஆனால், அவரைக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கும் முடிவுக்கு இந்திய நிர்வாகம் போகாது. அதுவும் சமீபமாக நடந்துவரும் 'ஈகோ' யுத்தத்துக்கு இடையே, அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். அப்படியிருக்கையில், சாஸ்திரியாவது குறைந்தபட்சம் மாற்றப்பட்டிருக்கவேண்டும். அதுவும் நடக்கவில்லை என்பதுதான் பிரச்னை.

Virat Kohli, Ravi Shastri, R Jadeja
Virat Kohli, Ravi Shastri, R Jadeja
AP

இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர், இந்திய அணிக்குள் சிக்கல் இருப்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது. தொடர்ந்து போட்டிகளில் ஆடும் கோலி, சிறிய அணிகளுக்கு எதிரான தொடரிலோ, டி-20 தொடர்களிலோ ஓய்வு எடுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே வழக்கமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. தொடர்ச்சியாக ஐ.பி.எல், உலகக் கோப்பை என ஆடிவிட்டு, கோலி டி-20 தொடரிலும் ஆடியது மிகப்பெரிய அதிர்ச்சிதான். முன்பு சொன்னதுபோல், தன் டி-20 சராசரி குறையக் காரணமாக இருந்த நான்காவது இடத்தை விட்டுவிட்டு, மீண்டும் தன் மூன்றாவது இடத்துக்கே நகர்ந்ததும், அதற்காக ராகுலை நீக்கியதும், கோலி தன் பிடியை விடத் தயாரில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது. ஒரு பெரிய பிரச்னை தீப்பொறியாய் இருக்கும்போது, அதை அணைக்கவேண்டிய ஒரு ஆள் அங்கு இருக்கவேண்டும்.

ஆனால், "நாங்கள்தான் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணி" என்று எப்போதும் தன் முடிவுக்கும், அணியின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒருவர், அந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசுவாரா, அதைத் தீர்ப்பாரா? நிச்சயம் வாய்ப்பில்லை. அதனால்தான், ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் ஆகியிருப்பதற்கு பயப்படவேண்டியிருக்கிறது!