Published:Updated:

உலகக்கோப்பை 2011: தோனியின் அந்த ஒற்றை சிக்ஸர்... நூறு கோடி கனவுகள் நனவான நாள்!

உலகக்கோப்பை 2011

சொந்த மண்ணில் நடக்கப்போகும் அடுத்த உலகப்கோப்பையை... அதுவும் முந்தைய தொடரில் அதிகம் விமர்சிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனியின் கரங்கள் ஏந்தப் போகின்றன என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

Published:Updated:

உலகக்கோப்பை 2011: தோனியின் அந்த ஒற்றை சிக்ஸர்... நூறு கோடி கனவுகள் நனவான நாள்!

சொந்த மண்ணில் நடக்கப்போகும் அடுத்த உலகப்கோப்பையை... அதுவும் முந்தைய தொடரில் அதிகம் விமர்சிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனியின் கரங்கள் ஏந்தப் போகின்றன என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

உலகக்கோப்பை 2011

வெற்றிக்கு தேவை 4 ரன்கள் மட்டுமே. 49-வது ஓவரின் இரண்டாவது பந்தை, வான்கடேவின் கார்வேர் எண்டில் இருந்து வீச தன் ரன்-அப்பைத் தொடங்குகிறார் இலங்கையின் குலசேகரா. ஃபுல் லென்த்தில் பிட்சாகிய அப்பந்தினை லாங்-ஆன் திசைக்கு மேல் தூக்கி அடிக்கிறார் தோனி. MCA பெவிலியனில் போய் விழும் அதை கொஞ்சமும் திரும்பி பார்த்திருக்கவில்லை நான்-ஸ்ட்ரைகர் என்டில் இருந்த யுவராஜ் சிங். வெற்றிக்களிப்பில் தன் இரு கைகளையும் அவர் ஏற்கெனவே தூக்கிக் கத்தத்தொடங்கியிருக்க, தன் கண்களை இன்னமும் பந்திலிருந்து அகற்றியிருக்கவில்லை தோனி. ஒரு மைக்ரோ செகண்டிற்கு மொத்த இந்தியாவும் உறைந்து போகிறது.

World cup -2011
World cup -2011

எந்த ஒரு மிகப்பெரிய கனவு நனவாகும் போதும், அதை மெய்யாக்க நாம் உழைத்த உழைப்பு அனைத்தும் நம் கண் முன் வந்து போகும் அல்லவா, அந்த வெற்றியை நம்புவதற்கு, ஏற்பதற்கு, அனுபவிக்க தயாராவதற்கு ஒரு சிறிய கால அளவு தேவைப்படும் அல்லவா, அதற்குதான் அந்த ஒரு மைக்ரோ செகண்ட்.

ரவி சாஸ்திரியின் குரல்
Dhoniiii….finishes off in style….a magnificent strike into the crowd…India lift the world cup after 28 years…

கமெண்டரி பாக்ஸில் இருந்த ரவி சாஸ்திரி இச்சொற்களை சொல்லி முடிப்பதற்குள் அன்றைய இரவு வானம் மொத்தமும் வாணவேடிக்கைகளால் நிறைந்து இந்திய தேசமே நள்ளிரவு நேரத்தில் திருவிழா கோலமாகிறது.

World cup -2011
World cup -2011

இந்த மேஜிக் அனைத்தும் நேற்று இரவு நடந்தது போல இருக்கிறதல்லவா, அதற்குள்ளாகவே 11 வருடங்கள் ஓடிவிட்டன. இரண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, இரண்டு சாம்பியன்ஸ் டிராபி, நான்கு டி20 உலகக்கோப்பை என இடைப்பட்ட காலத்தில் இத்தனைத் தொடர்களை ஆடிவிட்டது இந்திய அணி. உலக கிரிக்கெட் அரங்கின் அசைக்க முடியாத சக்தியாகக் கடந்த தசாபத்தில் இந்திய அணி பெற்ற வெற்றிகள் ஏராளம். ஆனால் அதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக அமைந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய ரசிகர்களுக்கு என்றைக்கும் ஸ்பெஷல்தான். இன்றும் கூட தோனியின் அந்தக் கடைசி சிக்ஸரை நம் கண்கள் காண, ரவி சாஸ்திரியின் வர்ணனை நம் காதுகளை எட்ட ஒரு விநாடிக்கு நம் மொத்த உடம்பும் மெய்சிலிர்த்துப்போவது நிச்சயம்.

ஆம், கபில் தேவிற்குப் பிறகு சுமார் 28 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த நூறு கோடி கனவுகள் நனவான நாள் இன்று ஏப்ரல் 2. 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி 2007இல் படுமோசமாக விளையாடி முதல் சுற்றோடு வெளியேறியது. ஆனால் சொந்த மண்ணில் நடக்கப்போகும் அடுத்த உலகப்கோப்பையை... அதுவும் முந்தைய தொடரில் அதிகம் விமர்சிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனியின் கரங்கள் ஏந்தப் போகின்றன என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

World cup -2011
World cup -2011

காலிறுதியில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்து இறுதிப்போட்டியில் இலங்கையை சந்திக்க களமிறங்கியபோது இந்த முறை கோப்பையை எப்படியேனும் கைப்பற்றிவிடும் நம் அணி என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர் இந்திய ரசிகர்கள். இரு முறை டாஸ் போடப்பட்டு முதலில் பேட் செய்த இலங்கை அணியை நாற்பது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எனக் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர் இந்திய பௌலர்கள். ஆனால் ஜெயவர்தனாவின் அற்புத சதத்தாலும் டெத் ஓவர்களில் திசாரா பெரெரா அதிரடியாலும் 274 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு சவாலான டார்கெட்டை நிர்ணயித்தது இலங்கை.

அடுத்து பேட் செய்த இந்திய அணியின் சேவாக்கும் சச்சினும் அடுத்தடுத்து வெளியேற 2003-ம் ஆண்டின் ஃபிளாஸ்பேக் லேசாக திகில் கிளப்பியது. ஆனால் அதன் பிறகு நடந்தது எல்லாமே கிரிக்கெட் வரலாற்று பக்கங்களில் பொறிக்கப்பட்டவைதான். இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த கம்பீர் ஆடிய இன்னிங்க்ஸ் பெரிய அளவில் போற்றப்படாதது வருத்தமளித்தாலும் மறுமுனையில் தோனி அன்று செய்தது ஒவ்வொன்றுமே மேஜிக்தான். வெற்றிக்கு பின்னர் சச்சின் டெண்டுல்கரை இந்திய அணியினர் தோளில் சுமந்து சென்றதைக் கண்டு தங்களின் வாழ்நாள் பயனையே அடைந்துவிட்டதாக எத்தனையோ கிரிக்கெட் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். சச்சின், சேவாக், யுவராஜ், ஜாகிர் கான், ஹர்பஜன் என அன்றிருந்த ஜாம்பவான்கள் எவரும் இன்று அணியில்லை. ஐ.பி.எல் மட்டுமே ஆடி வரும் தோனியின் கிரிக்கெட் வாழ்வும் அஸ்தமனத்தில் உள்ளது. அன்றைய இறுதி ஆட்டத்தில் ஆடிய விராட் கோலி மற்றும் அஷ்வின் மட்டுமே இந்திய அணியில் இன்னமும் விளையாடி கொண்டிருக்கின்றனர்.

சச்சினை சுமக்கும் இந்திய அணி
சச்சினை சுமக்கும் இந்திய அணி

வருடத்தின் ஏப்ரல் மாதம் வந்துவிட்டாலே 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை நினைவிற்கு வந்து அப்படியான ஒரு அணியை இனி நாம் திரும்பி எப்போது பார்க்கபோகிறோம் என ஏங்கதொடங்கிவிடுவான் இந்திய ரசிகன். இந்திய அணி இன்னொரு முறை, ஏன் இனி எத்தனை முறை உலகக்கோப்பையை வென்றாலும் அது 2011-ம் ஆண்டு இந்நாளில் தோனி அடித்த அந்த சிக்ஸருக்கு ஈடாகாது. நம் தலைமுறையினருக்கு பல மறக்கமுடியாத மிகச்சிறந்த நினைவுகளைக் கொடுத்ததும் அந்த ஒற்றை சிக்ஸர்தான்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் முன்னால் வீரர் சுனில் கவாஸ்கர் இப்படிக் கூறுகிறார்...

"நான் இறக்கும் முன்பு கடைசியாக பார்க்க விரும்புவது தோனியின் அந்தக் கடைசி சிக்ஸரைதான்!”
கவாஸ்கர்