Published:Updated:

சுரேஷ் ரெய்னா... வெறுக்கவே முடியாத முகம்... தவிர்க்கவே முடியாத கிரிக்கெட்டர்! #RainaRetires

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

சதங்களும் பெரிய இன்னிங்ஸ்களும் சில பல டி20-க்களும் மட்டுமே ரெய்னாவின் அடையாளம் கிடையாது. 2011 உலகக்கோப்பை கால் இறுதி - அரை இறுதிப் போட்டிகளில விக்கெட் விடாமல் அவர் பொறுப்பாக ஆடிய அந்த இன்னிங்ஸ்கள்தான் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதற்கு மிகமுக்கியக் காரணம்.

சில முகங்களை எப்போதும் வெறுக்கவே முடியாது. பார்த்த முதல் நொடியே அவர்களின் பாசிட்டிவிட்டியும் புன்னகையும் நமக்கும் தொற்றிக்கொள்ளும். கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் அப்படிப்பட்ட முகத்திற்கு சொந்தக்காரர் சுரேஷ் ரெய்னா. தோனியின் ஓய்வு முடிவு எதிர்பாராத நேரத்தில் வந்திருந்தாலும் கடந்த ஒரு வருடமாகவே தோனி எப்போது வேண்டுமானாலும் தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்ற நிலைதான் இருந்தது. டெக்னிக்கலாகப் பார்த்தால் தோனியின் இந்த முடிவு மிகச் சரியானதும்கூட. ஆனால், கூடவே சேர்ந்து ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.

தோனி, சுரேஷ் ரெய்னா
தோனி, சுரேஷ் ரெய்னா

தோனியைப் போன்றே ரெய்னாவும் தனது முதல் ஒருநாள் போட்டியில் டக்-அவுட் பேட்ஸ்மேன்தான். பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கியவர் அதன் பிறகு இந்திய அணி எப்போதெல்லாம் திணறுகிறதோ அப்போதெல்லாம் ஒரு தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அணியைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். டி20 உலகக் கோப்பையில் ரெய்னா அடித்த சதம் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. ஸ்டெய்ன், மார்க்கல், காலிஸ் எனப் பலம் பொருந்திய தென்னாப்பிரிக்காவின் பௌலிங் லைன் அப்பை சிதறடித்திருப்பார். மெக்கலமும் கெயிலும் மட்டுமே அதற்கு முன்பாக டி20 போட்டிகளில் சதமடித்திருப்பர். இந்த இன்னிங்ஸ் மூலம் இந்தியாவுக்காக டி20-க்களில் சதமடித்த முதல் வீரர் மற்றும் உலகளவில் மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரெய்னா. அந்த 2009 சமயத்தில்தான் ஐபிஎல்லில் சிஎஸ்கேவிலும் ஒரு காட்டு காட்டிக்கொண்டிருந்தார் ரெய்னா. 'ரெய்னாட்ட சிக்குனான் செத்தான்ய்யா' என ரெய்னாவின் பேட்டிங் மீது ஒரு பிரமிப்பு உண்டாகத் தொடங்கியது.

சதங்களும் பெரிய இன்னிங்ஸ்களும், சில பல டி20-க்களும் மட்டுமே ரெய்னாவின் அடையாளம் கிடையாது. 2011 உலகக்கோப்பை கால் இறுதி-அரை இறுதிப் போட்டிகளில் சின்னதாக இருந்தாலும் விக்கெட் விடாமல் அவர் பொறுப்பாக ஆடிய அந்த இன்னிங்ஸ்கள்தான் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதற்கு மிகமுக்கியக் காரணங்களில் ஒன்று. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் என்ற இருபெரும் அணிகளுக்கு எதிராக ஹை ப்ரெஷர் ஆட்டத்தில் அவர் அடித்த 34, 36 இரண்டுமே ஒரு சதத்திற்கு நிகரானவை. அதேமாதிரிதான் 2015 உலகக் கோப்பையிலும் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரு வரலாற்று இன்னிங்ஸை ஆடியிருப்பார்.

Suresh Raina
Suresh Raina
ICC

அந்தப் போட்டியில் ஜிம்பாப்வேவிடம் தோற்றிருந்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அப்செட்டாக இருந்திருக்கும். ரோஹித், தவான், கோலி, ரஹானே என டாப் ஆர்டர் சொதப்ப ரெய்னாவும் தோனியும் சேர்ந்து 280+ டார்கெட்டை பொறுப்பாக சேஸ் செய்திருப்பார்கள். ரெய்னாவின் சதம்தான் ஆட்டத்தின் ஹைலைட். யுவராஜ் உடல்நிலை காரணமாக அணியிலிருந்து ஒதுங்கத் தொடங்கிய காலத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ரெய்னாதான் இந்திய அணியின் ஆஸ்தான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத் தொடர்ந்தார்.

ஆர்த்தடாக்ஸ் கிரிக்கெட்தான் ஆடுவார் என்றாலும் ரெய்னாவின் அந்த ஸ்டைல் அவருக்கு மட்டுமே பாத்தியப்பட்டது. அவரின் இன்சைட் அவுட் ஷாட்களையும் மிட்விக்கெட்டுக்கு மேல் தூக்கியடிக்கும் ஷாட்களையும் கண்கொட்டாமல் பார்க்கலாம்.

ஐபிஎல் தொடக்கக் காலத்தில் பெஸ்ட் பேட்ஸ்மேன், பெஸ்ட் பௌலர் எனப் பல பிரிவுகளில் யார் சிறந்த வீரர் என ஆன்லைன் வாக்கெடுப்பு நடக்கும். 2010 காலகட்டம் மும்பை அசுரத்தனமாக விளையாடிக்கொண்டிருந்த நேரம் என்பதால் பெரும்பாலான பிரிவுகளில் மும்பை வீரர்களே வென்றிருப்பார்கள். ஆனால், ஒரே ஒரு பிரிவில் மட்டும் எந்தக் குழப்பமும் இல்லாமல் இந்த மஞ்சள் சட்டைக்காரரின் பெயர்தான் இருக்கும். ரெய்னா பேட்டிங்கில் அடித்த மிஸ்ஹிட்கள் ஏராளம். ஆனால், ரெய்னாவின் பெயரில் ஒரு மிஸ் ஃபீல்டைக்கூட காண்பித்துவிடவே முடியாது. பேட்ஸ்மேனின் ஆஃப் சைடில் சர்க்கிளுக்குள் ஃபீல்ட் செய்தார் எனில் பந்து அவரைத்தாண்டி பவுண்டரி செல்லத் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டும். இந்தியாவுக்காக ஒரு மேட்ச்சில் லாங் ஆஃபில் பவுண்ட்ரி லைனில் இருந்தெல்லாம் ஒரு டைரக்ட் ஹிட்டை அடித்து மாஸ் காட்டியிருக்கிறார் ரெய்னா.

Suresh Raina
Suresh Raina
ICC

ஒரு கட்டத்தில் அணியின் அடுத்த கேப்டன் ரெய்னாதான் என்றளவில் இருந்தது. எப்படி சிஎஸ்கேவில் தோனிக்கு அடுத்த இடம் ரெய்னாவுக்கு இருந்ததோ, இருக்கிறதோ, அதேபோலத்தான் இந்திய அணியிலும் தோனிக்கு அடுத்த இடம் ரெய்னாவுக்கு என்றிருந்தது. ஒரு வங்கதேசத் தொடரில் ரெய்னா தலைமையில் இந்திய அணி முதல் பேட்டிங் பிடித்து 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கும். ஆனால், வங்கதேசத்தை 50+ ரன்களுக்குள் சுருட்டி அசாத்திய வெற்றி பெற்றிருக்கும்.

ரெய்னாவின் ஃபார்ம் இந்தக் கட்டத்தில் இருந்தது போலவே தொடர்ந்திருந்தால் இன்றைக்கு கோலி இருக்கும் இடத்தில் ரெய்னா இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கோலியின் உலகத்தரமான அசாத்திய பர்ஃபாமென்ஸும், ரெய்னாவின் சறுக்கல்களும் எதிரெதிர் திசையில் ஒரே நேரத்தில் நிகழத்தொடங்கியது ரெய்னாவுக்கு பெரும்பின்னடைவாக இருந்தது. கரியரின் தொடக்கத்திலிருந்தே ஷார்ட் பால்களும் பவுன்சர்களும் ரெய்னாவுக்கு அலர்ஜி. ரெய்னாவை ஃபார்ம் அவுட் ஆக வைத்ததிலும் ரெட் பால் கிரிக்கெட்டராக மாற விடாமல் தடுத்ததிலும் ஷார்ட் பால்களின் பங்கு அதிகம். தன்னுடைய பலவீனத்தை எதிரணியின் பௌலர்கள் கண்டுபிடிக்கும் முன் அவரே கண்டுபிடித்திருக்க வேண்டும். ரெய்னா அப்படி செய்யத் தவறிவிட்டார். ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் ஷார்ட் பாலாகப் போடச்சொல்லி சொல்லி ரெய்னாவின் விக்கெட்டை எடுத்த நிகழ்வுகளெல்லாம் நடைபெற்றிருக்கிறது.

2015-க்குப் பிறகு 2018-ல் இங்கிலாந்து சீரிஸில் கம்பேக் கொடுத்திருந்தாலும் பெரிய அளவில் பர்ஃபாமன்ஸ் இல்லை. இந்த நேரத்தில்தான் இந்தியா ஒரு நல்ல நம்பர் 4 பேட்ஸ்மேனுக்கு வலைவீசிக்கொண்டிருந்ததால் தொடர்ந்து ரெய்னாவுக்கு வாய்ப்பளிக்காமல் அடுத்தடுத்தடுத்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது.

அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டிருந்தாலும் ரெய்னா எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வியே இதுவரை எழுந்ததில்லை. லாக்டவுன் நேரங்களில் ரெய்னா கொடுத்திருந்த பேட்டிகளில் கூட அணியில் விளையாட சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகத்தான் சொல்லியிருந்தார். டி20 அணிக்கு ஒரு வெறித்தனமான கம்பேக் கொடுத்து இன்னும் குறைந்தபட்சம் 2 வருடங்களாவது சர்வதேச கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு ரெய்னாவுக்கு இருக்கவே செய்தது.

Raina
Raina
ICC
தோனி எடுத்த அந்த 4 முக்கிய முடிவுகள்...  ரிஸ்க்கா, ட்ரிக்கா, ஸ்மார்ட்டா?! #DhoniForever
டெக்னிக்கலாக மட்டுமல்லாமல் சக வீரர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் வகையிலும், அவர்களின் வெற்றியைத் தன் வெற்றியாக சிலாகிக்கும் ரெய்னா மாதிரியான ஒரு டீம் ப்ளேயர் இனி இந்திய அணிக்குக் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
அடுத்த கட்டுரைக்கு