பங்குச்சந்தை சந்திக்கும் அதிவேக ஏற்ற இறக்கங்களை உள்ளடக்கியதுதான் உஸ்மான் கவாஜாவின் டெஸ்ட் பயணத்தின் பக்கங்கள்.
இரண்டரை ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் கம்பேக் கொடுத்ததிலிருந்து ஜெட் விமானமாக மேல்நோக்கிப் பறக்கத் தொடங்கிய அவரது ப்ரைம் டைம் தரையிறங்கவேயில்லை. அதிலும் எந்த இந்தியாவில் விளையாடவே தகுதியற்றவர் என முன்னதாகப் புறந்தள்ளப்பட்டாரோ அதே இந்தியாவில் தனது சதத்தைப் பதிவு செய்து மீண்டெழுந்திருக்கிறார்.
2011-ம் ஆண்டு ஆஷஸில் அவரது கனவு அறிமுகம் நடந்தேறியதிலிருந்து டெஸ்டில் அவரது இயக்கத்தை கட்டுப்படுத்தும் ரிமோட் பல கைகளுக்கும் மாறியது. காயங்கள் தொடங்கி மிக்கி ஆர்தரின் ஹோம்ஒர்க் சர்ச்சை வரை உஸ்மானை உருட்டி விளையாடின. அதுவும் ஆசிய நாடுகளுக்கான ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் ஆஸ்திரேலிய அணிக்கு இவர் அழையா விருந்தாளிதான். அழைத்துச் செல்லப்பட்டாலும் பிளேயிங் லெவனில் இவருக்கான இருக்கை இருக்கவே இருக்காது. காரணம் இல்லாமலும் இல்லை.
2011 - 2017:
ஆசியாவில் மொத்தம் 5 போட்டிகளில் ஆடிய உஸ்மானது துணைக்கண்ட சராசரி வெறும் 14.62 மட்டுமே. 2011-ல் இலங்கையில் இருபோட்டிகளில் 60 ரன்கள், 2016 இலங்கையில் 2 போட்டிகளில் 58 ரன்கள். ஒரு போட்டியில் விளையாடி அதன் இரு இன்னிங்ஸ்களிலும் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்த 2017 பங்களாதேஷ் தொடர் என கசப்பான அனுபவங்கள் மட்டுமே அசைபோடக் கிட்டின.
அந்த மூன்று தொடர்களில் ஆட்டமிழந்திருந்த எட்டு இன்னிங்ஸ்களில் ஐந்து முறை ஸ்பின்னர்களிடமே தனது விக்கெட்டைப் பறிகொடுத்திருந்தார். இந்த சொற்ப ரன்களும் ஸ்பின் பலவீனமுமே அவருக்கெதிராக கொடி பிடித்தன. 2015-ல் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக என மூன்று அடுத்தடுத்த போட்டிகளில் அவர் அடித்த மூன்று சதங்கள்கூட அவருக்காக பரிந்துபேச முடியவில்லை. விளைவு, இதற்கு முன்னதாக இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா ஆடவந்த இரு சுற்றுப்பயணங்களின் போதுகூட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஒரு போட்டியை இங்கு வெல்வதையே மலையேற்றமாகப் பார்க்கும் ஆஸ்திரேலியா இவரை வைத்துப் பந்தயம்கட்ட எப்படி முன்வரும்?
2017 தொடரில் இந்தியாவில் ஆடமுடியாமல் போனதைப்பற்றி தனது வருத்தத்தை உஸ்மான் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ரெட் பாலோடு கண்ணாம்பூச்சி ஆடும் இந்த உள்ளே வெளியே போராட்டம் தனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை உடைத்தெறிவதாகவும் தொடர்ச்சியான வாய்ப்புகளே தனக்கான ரிதத்தை செட் செய்ய உதவுமென்பதை பற்றிக்கூறி ஆதங்கப்பட்டிருந்தார். ஆனால் அதற்காக அவர் ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
2019 ஆஷஸில் கடைசியாக ஆடியவரது டெஸ்ட் ரீ என்ட்ரி இரண்டரை ஆண்டுகள் கழித்து 2022 ஆஷஸில் நடந்தேறியது. தனது இரண்டாவது சுற்றைத் தொடங்கிய அந்த முதல் போட்டியிலேயே இங்கிலாந்து பௌலர்களைக் கலங்கடித்து இரு இன்னிங்க்ஸ்களிலும் சதமடித்தார். அவருக்கும் துணைக்கண்ட வாய்ப்புக்கும் நடுவில் நின்ற வாயிலின் பூட்டிற்கு அந்த இருசதங்கள்தான் திறவுகோல்களாகின. சரி சேர்த்துதான் பார்ப்போமே என தேர்வுக்குழு அவரை பாகிஸ்தான் தொடரில் நம்பி இணைக்க வெற்றுக்காகிதம் தாங்கிய அவரது பெயர் வெற்றியின் ஆயுதமாக உருமாறத் தொடங்கியது.

பாகிஸ்தான் பௌலர்கள் முன்பு சந்தித்திராத ஒரு உஸ்மானை அத்தொடரில் சந்தித்தனர். ஸ்பின் அவரைச் சோதிக்கவில்லை. பௌலர்களுக்கு கற்கும் புது வேரியேஷன்கள் கூடுதல் பலம் சேர்ப்பது போன்றதுதான் பேட்ஸ்மேன்கள் கற்றறியும் புதுப்புது ஷாட்களும். உஸ்மானின் வசம் சேர்ந்திருந்த ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகள் அவரை இன்னமும் தன்னம்பிக்கையோடு களம்காண வைத்தன.
மூன்று போட்டிகளில் 496 ரன்களை 165.33 சராசரியோடு எட்டி மிரட்டினார். தொடங்கிய இடத்திலேயே முடிப்பதைப்போல், அவரது துணைக்கண்ட சாபம் முற்றிலுமாக நீங்குமாறு கடந்தாண்டு இலங்கையிலும் 45.66 சராசரியில் ரன்களை சேர்த்திருந்தார்.
என்னதான் இது அவரது அப்டேட்டட் வெர்ஷனின் வெளிப்பாடென்றாலும் இந்தியக்களங்களில், சுழல் நிபுணர்களான அஷ்வின் - ஜடேஜாவையும் சமாளிக்காவிடில் அந்த சங்கிலித்தொடர் எப்படி முழுமைபெறும்? அதனையும் தற்சமயம் பூர்த்தி செய்துள்ளார் உஸ்மான்.
விசா பிரச்சினைகளால் இந்தியாவிற்கு தாமதமாக வந்துசேர்ந்த உஸ்மானின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்? முந்தைய இந்திய சுற்றுப்பயணங்களின் ஆழமான ரணங்களையும், பயங்களையும் அவர் முன்பிருந்த பாதை டர்ன் ஆகும் பிட்சாக மாற்றி வெளிக்கொணர்ந்திருக்கும். அபாயமான வளைவு என்ற அறிவிப்புப்பலகை வைக்காத குறையாக அச்சுறுத்தியிருக்கும்.

அது உந்தியதாலோ என்னவோ நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் வெறும் 1 மற்றும் 5 ரன்களோடு ஆட்டமிழந்திருந்தார். முதல் இன்னிங்ஸில் சிராஜின் அவுட் ஸ்விங்கர் அவரது பேடைப் பதம் பார்த்துத் துரத்தியது. இரண்டாவது இன்னிங்ஸிலோ டிரைவ் ஆடத் தூண்டிலிட்டு அஷ்வின் உஸ்மானை ஆட்டமிழக்க வைத்தார்.
263 ரன்களை அணி சேர்த்திருக்க அதில் 31 சதவிகிதம் ரன்கள் அவரால் அடிக்கப்பட்டிருந்தது. 81 ரன்களைக் குவித்திருந்தார் என்றாலும் அது வேகமாக சேர்க்கப்பட்டிருந்தாலும் அதிலும் ஒரு கட்டுப்பாடு நிரம்பியிருந்தது. ஷமியின் upright seam மற்றும் சிராஜின் நிச்சயத்தன்மையற்ற Wobble Seam-ஐயும் எதிர்கொண்டு கவர் டிரைவாக்கியதையோ கல்லி ஏரியாவில் பந்தை முன்னேற வைத்ததையோவிட சுழலை சமாளித்ததுதான் கவனம் கவர்ந்தது.
இந்திய சுழல் மூவேந்தர்களின் பந்துகளுமே அவரால் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் செய்யப்பட்டன. துணிந்து ஆடவேண்டிய ஸ்வீப் ஷாட் சற்றே டைமிங் தப்பினாலும் மீளுவதற்கான நேரமே தராமல் ஸ்டம்ப் அல்லது பேடைப் பதம் பார்க்கும். ஆனால் அதனை கனகச்சிதமாக உஸ்மான் ஆடினார்.
இந்தூரில் இந்தியப்படை மொத்தமும் 109 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதன்பிறகு 60 ரன்களை அசாத்தியமாக உஸ்மான் ஒருவரே அடித்தார். இம்முறை அவரை சுலபமாக சுழலால் சுருட்ட முடியவில்லை ஏனெனில் எல்லாப் பந்துகளுக்கும் அவரிடம் விடையிருந்தது. மிதிவண்டியை நன்றாக ஓட்டிப் பழகிய ஒரு சிறுவனிடம் இருக்கும் அதே நம்பிக்கையும் பேலன்ஸும் அவரது ஆட்டத்தில் தொனித்தது. அதுதான் ஆஸ்திரேலியாவை ஓவர்டேக் செய்ய வைத்ததோடு வெற்றிக்கோட்டில் போய் நிறுத்தியது.

இந்த இன்னிங்ஸ்களுக்கெல்லாம் முத்தாய்ப்பானதுதான் அஹமதாபாத் இன்னிங்ஸில் பொறுமையால் நெய்யப்பட்ட அவரது 180 ரன்கள். முதல் மூன்று போட்டிகளில் இருந்த அவசரம் இப்போட்டியில் அவரிடம் அணுவளவுமில்லை. ப்ளாட் பிட்ச், ரன்களை துரித கதியில் சேர்க்கலாம் என்ற பேராசையில்லை. கடமைகளை முடித்து கடலோடு சங்கமமாகும் முன் அமைதியோடு பயணிக்கும் நதிபோல ஆர்ப்பாட்டமில்லாத அமைதி அவரது ஆட்டத்தில் இருந்தது. முந்தைய இன்னிங்ஸ்கள் போலவே ஏரியல் ஷாட்டுகள் பெரும்பாலும் இங்கேயும் இல்லை, சேஃப் ஜோனில் பயணிக்க வேண்டுமென்பதில் தெளிவாயிருந்தார். அதேபோல் தனது ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுக்கும் இக்களம் உகந்ததல்ல என்பதை உணர்ந்து அதையும் பெரிதாக உபயோகிக்கவில்லை. பௌலர்களுக்கு வாய்ப்பே தராத ஸ்லோ பிட்ச் என்பதைத் தனக்கு சாதகமாக்கி விளையாடினார்.
பௌலர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர உத்தேசித்து ஃபீல்டிங்கை சற்றே ரன் சேர்க்க இலகுவாக்கி களத்தைத் திறந்துவிட்டு ரோஹித் வரவேற்றாலும்கூட `நோ தேங்க்ஸ்' என டிஃபென்ஸ் செய்வதில்தான் உஸ்மானது கவனமிருந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு மிக வெளியே சென்ற பந்துகளைக்கூட தேர்ந்தெடுத்தே கவரில் அனுப்பினார். அதிலும் லெந்துக்கு ஏற்றாற்போல் உடலை வில்லாய் வளைத்து பெண்டுலமாக பேட்டை ஸ்விங் செய்து ஃப்ரண்ட் மற்றும் பேக் ஃபுட் இரண்டிலும் அவர் ஆடிய டிரைவ்களும் அற்புதம். டைமிங், லெந்தை அவர் கணித்த விதம், தனது இன்னிங்ஸை அவர் பதறாமல் சிதறாமல் கட்டமைத்த பாணி என எல்லாமே கிளாசிக்கல் கிரிக்கெட்டருக்கு உரியதாகவே இருந்தது.

பந்து பெரிதாக டர்ன் ஆகி பயமுறுத்தவில்லைதான். இருப்பினும் அஷ்வின் போன்ற ஸ்பின்னர்களுக்கு டர்னும் களத்தின் அரவணைப்பும் மட்டுமே கருவிகளல்ல. ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஏற்படுத்திய கடினமான கோணத்தோடு Drift, Dip இத்தியாதிகளோடு இடக்கை ஆட்டக்காரரான உஸ்மானுக்கு நெருக்கடி தந்தார். ஆனால் அவரது ஆட்டமோ அதே கட்டுக்கோப்போடே நகர்ந்தது. 2017-ல் அவர் குறிப்பிட்டிருந்த ரிதம் இப்போட்டியில் செட் ஆகியிருந்தது. 146 பந்துகளில் வந்த அரைசதமும், 246 பந்துகளில் கடக்கப்பட்ட சதமும் அவரது ஆட்டத்தின் சாராம்சமாக இருந்த பொறுமையை சுட்டிக்காட்டியது.
10 மணிநேரத்திற்கு நீடித்த அவரது தொடர் ஓட்டம் 422 பந்துகளை சந்தித்து 180 ரன்களோடு முடிவுக்கு வந்தது. 480 ரன்கள் என ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கைப்பிடிக்குள் நகர உஸ்மானின் இன்னிங்ஸும், க்ரீனுடனான அவரது பார்ட்னர்ஷிப்பும் துணை நின்றன.
இந்தியாவில் ஆஸ்திரேலியர் ஒருவரின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகவும் இது மாறியிருக்கிறது.
இந்தியாவில் நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியர்களில் யாருமே இதுவரை 400 பந்துகளுக்கு மேல் ஒரே இன்னிங்ஸில் சந்தித்ததில்லை. அதை உஸ்மான் நிகழ்த்தியிருக்கிறார். 2022 ஜனவரியில் அவர் கம்பேக் கொடுத்தபின்பு உலகளவில் அவரைவிட வேறெந்த பேட்ஸ்மேனும் அதிக ரன்களை சேர்க்கவில்லை. 1608 ரன்களை 16 போட்டிகளில் கிட்டத்தட்ட 70 ஆவரேஜோடு உஸ்மான் குவித்திருக்கிறார்.

அதில் ஆறு சதங்களும் ஏழு அரைசதங்களும் வந்திருக்கின்றன. நடப்புத்தொடரில்கூட இருபுறமும் உள்ள வீரர்களில் அதிக ரன்களை உஸ்மான்தான் அடித்துள்ளார். உலக அரங்கில் சிறந்த ஓப்பனிங் டெஸ்ட் பேட்ஸ்மேனாக அவரை இது ஒவ்வொன்றும் நிரூபித்து வருகிறது. இந்திய பந்துவீச்சை இந்தியாவில் வைத்து எதிர்கொள்வது எந்தவொரு வெளிநாட்டு பேட்ஸ்மேனுக்கும் சிரமமே. குக், ஹெய்டன், ஸ்மித் என ஒருசிலர் மட்டுமே அதனை அழகாக செய்து காட்டியிருக்கின்றனர். அப்பட்டியலில் தனது பெயரையும் உஸ்மான் இணைத்துள்ளார். ஒப்பற்ற இந்த கம்பேக், காலத்திற்கும் அவரை நினைவில் வைத்துக் கொள்ளும்படி மாற்றியுள்ளது.