Published:Updated:

லான்ஸ் க்ளூஸ்னர்... ஆஸ்திரேலியா பதறும், இந்தியா அலறும், இலங்கை கதறும்! அண்டர் ஆர்ம்ஸ் - 10

லான்ஸ் க்ளூஸ்னர்

க்ளூஸ்னரின் பெளலிங் ஸ்டைலே தனி அழகுதான். மெதுவாக ஓடிவந்து க்ரீஸின் அருகே வந்ததும் ஒரு துள்ளல் துள்ளி காற்றில் இருந்தபடியே பந்தை வீசுவார் க்ளூஸ்னர்.

லான்ஸ் க்ளூஸ்னர்... ஆஸ்திரேலியா பதறும், இந்தியா அலறும், இலங்கை கதறும்! அண்டர் ஆர்ம்ஸ் - 10

க்ளூஸ்னரின் பெளலிங் ஸ்டைலே தனி அழகுதான். மெதுவாக ஓடிவந்து க்ரீஸின் அருகே வந்ததும் ஒரு துள்ளல் துள்ளி காற்றில் இருந்தபடியே பந்தை வீசுவார் க்ளூஸ்னர்.

Published:Updated:
லான்ஸ் க்ளூஸ்னர்
இவர் ஆடியது கிரிக்கெட்டா அல்லது பேஸ்பாலா என இன்று வரை ஆராய்ச்சி நடக்கிறது. பெளலர் ஓடிவந்து பந்து வீசியது மட்டும்தான் தெரியும்... அடுத்த நொடி கேமரா பவுண்டரி லைனை ஃபோகஸ் செய்யத்தடுமாறும். துப்பாக்கியில் இருந்து பாயும் புல்லட்டின் வேகத்தைவிட க்ளூஸ்னரின் பேட்டில் இருந்து பறக்கும் பந்தின் வேகத்துக்குப் பவர் அதிகம். க்ளூஸ்னரின் பேட்டிங்கில் மட்டுமல்ல... பெளலிங்கிலும் அனல் தெறிக்கும். ஒரு ஆல்ரவுண்டர்னா எப்படியிருக்கணும் தெரியுமா?

இந்தியாவுக்கு எதிராகத்தான் க்ளூஸ்னரின் முதல் அசால்ட் நடந்தது. க்ளூஸ்னர் இந்தியாவை சம்பவம் செய்யக் காரணம் அசாருதினின் சீண்டல். 1996-ல் உலகக்கோப்பை முடிந்ததும் அந்த ஆண்டின் இறுதியில் இந்தியா வந்தது தென்னாப்பிரிக்கா. எம் டிவி இந்தியாவில் பாப்புலாராக இருந்த அந்த நேரத்தில் அலிஷாவின் 'மேட் இன் இந்தியா' பாடல் சர்வதேச வைரலானது. தென்னாப்பிரிக்க அணியினர் 'மேட் இன் இந்தியா' பாடலை முணுமுணுத்தபடி டெல்லி விமானநிலையத்தில் இருந்து வெளியேவந்த காட்சி இன்னும் நினைவிருக்கிறது. பேட் சிம்காக்ஸ் பாடிக்கொண்டுவந்தார். அவருக்குப் பின்னாலேயே புதுமுகமாக தென்னாப்பிரிக்க அணியோடு வந்தவர்தான் லான்ஸ் க்ளூஸ்னர்.

Lance Klusener
Lance Klusener
ICC

பயிற்சிப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய லான்ஸ் க்ளூஸ்னருக்கு அஹமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஹேன்ஸி க்ரோனியே வாய்ப்பளிக்கவில்லை. இந்தியா அந்தப் போட்டியில் வெற்றிபெற்றது. உடனே இரண்டாவது டெஸ்ட்டுக்கு அணிக்குள் மாற்றமாக புதுமுகம் க்ளூஸ்னரைக் கொண்டுவந்தார் க்ரோனியே.

டெஸ்ட் போட்டிகள்
தென்னாப்பிரிக்காவுக்காக 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் க்ளூஸ்னர். 4 சதம், 8 அரை சதங்கள் என 1906 ரன்கள் அடித்திருக்கிறார். டெஸ்ட்டில் இவரின் டாப் ஸ்கோர் 174 ரன்கள். 80 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. தென்னாப்பிரிக்காவின் ஓப்பனர்கள் ஹட்ஸன், கிரிஸ்டன் இருவரும் சென்சுரி அடிக்க, வெங்கடேஷ் பிரசாத் 6 விக்கெட்டுகள் எடுக்க 428 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்தது தென்னாப்பிரிக்கா. சச்சின், டிராவிட், கங்குலி என மூன்று டாப் பேட்ஸ்மேன்களுமே பெரிய ஸ்கோர் அடிக்காமல் வெளியேற, காயம்பட்டு வெளியே போய் மீண்டும் உள்ளே வந்து கும்ப்ளேவுடன் பார்ட்னர்ஷிப்போட்டு தென்னாப்பிரிக்க பெளலிங்கை வெளுத்தார் முகமது அசாருதின். ஒருநாள் போட்டியில் விளையாடுவதைப்போல விளையாடினார் அசாருதின். அன்றுதான் அசார் கையில் சிக்கினார் புதுமுகமான லான்ஸ் க்ளூஸ்னர்.

அசாருதின்
அசாருதின்

க்ளூஸ்னரின் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 பவுண்டரிகள் அடித்தார் அசாருதின். முதல் இன்னிங்ஸில் 14 ஓவர்கள் வீசி 75 ரன்கள் கொடுத்தார் க்ளூஸ்னர். ஒரு விக்கெட்கூட எடுக்க முடியவில்லை. ''யாரோ புது பெளலர்... அசார்கிட்ட சிக்கி இந்த அடி வாங்குறானே'' என க்ளூஸ்னரைப் பார்த்து உச் கொட்டினார்கள் இந்திய ரசிகர்கள். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அம்பி, அந்நியனாக மாறியிருந்தார். டாப் டு பாட்டம் என எந்த பாரபட்சமும் இல்லாமல் இந்திய விக்கெட்டுகளைத் தூக்கினார் க்ளூஸ்னர். லக்‌ஷமண் அன்று போல்டானதெல்லாம் வேற லெவல் யார்க்கர். இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் எடுத்து வெறும் 137 ரன்களுக்கு இந்தியாவை ஆல் அவுட் ஆக்கி தென்னாப்பிரிக்காவை வெற்றிபெற வைத்தார் க்ளூஸ்னர். அன்று ஆரம்பித்த க்ளூஸ்னரின் அதிரடிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

க்ளூஸ்னரின் பெளலிங் ஸ்டைலே தனி அழகுதான். மெதுவாக ஓடிவந்து க்ரீஸின் அருகே வந்ததும் ஒரு துள்ளல் துள்ளி காற்றில் இருந்தபடியே பந்தை வீசுவார் க்ளூஸ்னர். தென்னாப்பிரிக்க அணிக்குள் வேகப்பந்து வீச்சாளராகத்தான் வந்தார் க்ளூஸ்னர். தென்னாப்பிரிக்கா பேட்டிங் லைன் அப்பில் கடைசி பேட்ஸ்மேனாக, ஓப்பனிங் பெளலராக இருப்பார். அதனால் ஆரம்பத்தில் அவர் பேஸ்பால் ஸ்டைல் பேட்ஸ்மேன் என்பதே வெளி உலகத்துக்குத் தெரியாமல் இருந்தது. இந்தியாவுக்கு எதிராகத்தான் பேட்டிங்கிலும் முதல் சம்பவத்தைச் செய்தார் க்ளூஸ்னர். இந்தியாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டெஸ்ட், ஒரே ஒரு ஒருநாள் போட்டித்தொடரை முடித்த கையோடு தென்னாப்பிரிக்கா பறந்தது இந்தியா.

ஒருநாள் போட்டிகள்
171 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் லான்ஸ் க்ளூஸ்னர். 2 சதம், 19 அரை சதங்கள் அடித்திருக்கிறார். 192 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

க்ளூஸ்னர் வலது கை வேகப் பந்துவீச்சாளர். ஆனால், இடது கை பேட்ஸ்மேன் என்பதையே அன்றுதான் பலரும் கவனித்திருப்பார்கள். 1997 புத்தாண்டு பிறந்த இரண்டாவது நாள் கேப் டவுனில் அந்த டெஸ்ட் தொடங்கியது. எட்டாவது டவுன் பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய க்ளூஸ்னர், மேக்மில்லனோடு இணைந்து இந்திய பெளலர்களைப் பந்தாடினார். 100 பந்துகளில் 102 ரன்கள். ஒருநாள் போட்டியில் விளையாடுவதைப்போல விளையாடினார் க்ளூஸனர். அன்று க்ளூஸ்னரின் பேட்டில் இருந்து பவுண்டரிகள் எல்லா பக்கமும் பறந்தன. தென்னாப்பிரிக்கா 282 ரன்கள் வித்தியாசத்தில் அந்த டெஸ்ட்டில் வெற்றிபெற்றது.

இரண்டாவது டெஸ்ட்டில் விழுந்த அடிக்கு மூன்றாவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவைப் பழிதீர்க்க இந்தியாவுக்கு மிகச்சரியானத் தருணம் வாய்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு 356 ரன்களை டார்கெட்டாக செட் செய்திருந்தது இந்தியா. ஶ்ரீநாத், பிரசாத், கும்ப்ளே என மூவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் எடுக்க தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் ஆர்டர் அப்படியே சரிந்தது. 95 ரன்களுக்கு ஏழு விக்கெட் காலி. ஆனால், கல்லினனோடு பார்ட்னர்ஷிப் போட்டார் க்ளூஸ்னர். இரண்டாவது டெஸ்ட்டில் ஒருநாள் ஆட்டம் ஆடிய க்ளூஸ்னர், மூன்றாவது டெஸ்ட்டில் முழுமையான டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாறியிருந்தார். 95-க்கு ஏழு விக்கெட்டில் இருந்தவர்கள் அப்படியே 222 ரன்களுக்கு வந்துவிட்டார்கள். டிராவை நோக்கி கொண்டுபோய்விட்டு கடைசி நாளில் இன்னும் ஒரு சில ஓவர்களே இருந்த நிலையில் க்ளூஸ்னர் 49 ரன்களில் அவுட் ஆனார். ஆட்டமும் டிரா ஆனது.

Lance Klusener
Lance Klusener
ICC

கடைசிக்கட்ட பேட்ஸ்மேனாக இருந்த க்ளூஸ்னரை திடீரென ஓப்பனிங் பேட்ஸ்மேனாக மாற்றினார் கேப்டன் க்ரோனியே. 1997-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4 - 2 ஆஸ்திரேலியா வென்றுவிட்டது. கடைசி ஒருநாள் போட்டியில் க்ரோனியே என்ன நினைத்தாரோ க்ளூஸ்னரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆடவிட்டார். சென்சுரி ஜஸ்ட் மிஸ். ஓப்பனிங் பேட்ஸ்மேனாகத் தனது முதல் ஒருநாள் போட்டியில் 92 ரன்கள் அடித்தார் க்ளூஸ்னர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான க்ளூஸ்னரின் முதல் அசால்ட் அது.

97-ல் இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான முத்தரப்பு போட்டி பாகிஸ்தானில் நடந்தது. இதன் கடைசி லீக் போட்டியிலேயே பளார் பளார் அடிகளால் இலங்கையைப் பயமுறுத்திய க்ளூஸ்னர், இறுதிப்போட்டியிலும் இலங்கையை ஓடவிட்டார். ஆனால், மீண்டும் சென்சுரி மிஸ்ஸானது. 96 பந்துகளில் 99 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவை வெற்றிபெறவைத்தார் க்ளூஸ்னர்.

இதன் பிறகு ஓப்பனிங்கில் தொடர்ந்து சில போட்டிளில் சொதப்ப, மீண்டும் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆனார் க்ளூஸ்னர்.

க்ளூஸ்னரின் கரியரில் மிக முக்கியமானது 1999-ல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை. பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே க்ளூஸ்னரின் பர்ஃபாமென்ஸ் வெறித்தனமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலுமே அரை சதம் அடிப்பார், விக்கெட்டுகள் எடுப்பார் எனக் க்ளூஸ்னர் செம பிக்அப்பில் இருந்தார். தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் ஆர்டரில் எட்டாவது அல்லது ஒன்பதாவது பேட்ஸ்மேனாக வருவார் க்ளூஸ்னர். இப்படிப்பட்ட பேட்ஸ்மேனை ஏன் இவ்வளவு லேட்டாக இறக்குகிறார்கள் என நமக்கே தோன்றும். ஆனால், க்ளூஸ்னரின் இன்னிங்ஸ்கள் ஃபினிஷிங் டச்சோடு செம த்ரில்லாக இருக்கும். இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆலன் டொனால்டை ஒருமுனையில் வைத்துக்கொண்டு சமிந்தா வாஸை மரண அடி அடித்திருப்பார் க்ளூஸ்னர். ஆட்டத்தின் கடைசி ஓவரை வீச வந்த சமிந்தா வாஸ் 22 ரன்களைக் கொடுத்துவிட்டு பரிதாபமாக நிற்பார். இந்த ஓவரில் மட்டும் க்ளூஸனரின் பேட்டில் இருந்து 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள் பறந்திருக்கும்.

Lance Klusener
Lance Klusener
ICC

1999 உலகக் கோப்பையில் இரண்டே போட்டிகளில்தான் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்திருக்கும். ஒன்று லீக் போட்டிகளில் ஜிம்பாப்வேவிடம். அடுத்து சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம். இந்தத் தோல்விதான் பின்னர் தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டிக்குள் போகவிடாமல் செய்துவிடும். ஆம், அரையிறுதிப் போட்டியில் மீண்டும் அதே ஆஸ்திரேலியாவுடன் மேட்ச்!

ஆஸி. 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கும். எளிதில் வெற்றிபெற்றுவிடும் என எல்லோரும் நினைக்க தென்னாப்பிரிக்கா தடுமாறும். காலிஸ் 53, ரோட்ஸ் 43 என தட்டுத்தடுமாறி கடைசி 10 ஓவர்களுக்குள் தென்னாப்பிரிக்கா வரும். க்ளூஸ்னர் க்ரீஸூக்கு வரும்போது 31 பந்துகளில் 39 ரன்கள் என்பது தென்னாப்பிரிக்காவுக்கான டார்கெட். மெக்ராத்தும், ஃப்ளெம்மிங்கும் டெத் ஓவர்களை மிகச்சிறப்பாக வீச தென்னாப்பிரிக்கா திணறும். கடைசியில் 8 பந்துகளில் 16 ரன்கள் அடிக்க வேண்டியிருக்கும். யாருமே எதிர்பாராத வகையில் மெக்ராத்தின் பெளலிங்கில் சிக்ஸர் அடித்து, கடைசிப் பந்தில் சிங்கிள் எடுத்து ஆலன் டொனால்டை நான் ஸ்ட்ரைக்கராகவே வைத்து கடைசி ஓவருக்குள் வருவார் க்ளூஸ்னர்.

6 பந்துகளில் 9 ரன்கள். ஃப்ளெம்மிங் பெளலிங். கவர், லாங் ஆன் என முதல் இரண்டு பந்துகளையும் அடுத்தடுத்து பவுண்டரி ஆக்கி ஸ்கோரை சமன் செய்துவிடுவார் க்ளூஸ்னர். வெற்றிக்கு 1 ரன் மட்டுமே தேவை. ஃப்ளெம்மிங்கின் மூன்றாவது பந்து டாட் பாலாகிவிடும். ஆனால், இன்னும் மூன்று பந்துகள் இருக்கின்றன என்கிற நிலையிலும், முந்தைய பால் டாட் பால் ஆனப் பதற்றத்தில் நான்காவது பந்தில் சிங்கிள் எடுக்க ஆசைப்பட்டு க்ளூஸ்னர் ஓட, டொனால்ட் வேறு எங்கோ வேடிக்கைப் பார்க்க, க்ளூஸ்னர் அப்படியே நேராகப் பெவலியனுக்கு ஓடிவிடுவார். டொனால்ட் ரன் அவுட். ஆஸ்திரேலியா சூப்பர் சிக்ஸில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும். இந்தப் போட்டியில் மட்டும் வெற்றிபெற்றிருந்தால் 1999 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவுக்குக் கிடைத்திருக்கும். இந்த உலகக்கோப்பையில் 281 ரன்கள் அடித்ததோடு 17 விக்கெட்டுகளையும் எடுத்து மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வென்றார் லான்ஸ் க்ளூஸ்னர்.

1999 உலகக்கோப்பைக்குப் பிறகு தொடர் காயங்களால் அவதிப்பட்டார் க்ளூஸ்னர். அவர் மீண்டும் 2000-ல் நடைபெற்ற இந்தியத் தொடரில்தான் ஃபார்முக்கு வந்தார். இந்தத் தொடர்தான் மேட்ச் ஃபிக்ஸிங் புகார்களுக்குள் சிக்கியது. அஹமதாபாத்தில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் மீண்டும் எட்டாவது பேட்ஸ்மேனாக டெத் ஓவர்களில் இறங்கி இந்திய பெளலர்களை துவைத்தெடுத்தார் க்ளூஸ்னர். 58 பந்துகளில் 75 ரன்கள். 3 சிக்ஸர், 8 பவுண்டரி. இந்த மேட்ச்சில்தான் ஜவகல் ஶ்ரீநாத் 6 ஓவர்களில் 65 ரன்கள் கொடுத்தார்.

Graeme Smith in the field for South Africa during a tour match against Somerset in 2012
Graeme Smith in the field for South Africa during a tour match against Somerset in 2012
Harrias / CC BY-SA (https://creativecommons.org/licenses/by-sa/3.0)

காயங்கள் தொடர, கேப்டன் க்ரோனியேவும் மேட்ச் ஃபிக்ஸிங் புகாரால் வெளியேற, அடுத்து கேப்டனான கிராம் ஸ்மித்துடன் க்ளூஸ்னருக்கு செட் ஆகவே இல்லை. 2003-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பையிலும் விளையாடினார் க்ளூஸ்னர். ஆனால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஸ்மித்தும் க்ளூஸ்னரும்ம் வெளிப்படையாகவே ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். காயமடைந்து, ஃபார்ம் இழந்து, கேப்டனுடன் நிதானமிழுந்து எனத் தன் கடமையை முழுமையாக முடிக்காமலேயே தென்னாப்பிரிக்க அணியில் இருந்து வெளியேறினார் க்ளூஸ்னர்.

தென்னாப்பிரிக்க அணியைவிட்டு க்ளூஸ்னர் வெளியேறினாலும் அவரை கிரிக்கெட் உலகம் மறக்கவில்லை. இப்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் க்ளூஸ்னர். ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் அடுத்த க்ளூஸ்னரை எதிர்பார்க்கலாம்.