Published:Updated:

Tagenarine: அதே ஸ்டான்ஸ், அதே தாக்கம்; இந்திய வம்சாவளியின் புகழைப் பரப்பும் ஜூனியர் சந்தர்பால்!

தேஜ்நரைன் சந்தர்பால்

கிரிக்கெட் உலகில் யாராலும் வெற்றிகரமாகப் பின்பற்ற முடியாத ஸ்டான்ஸில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 163 டெஸ்ட் போட்டிகள், 268 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் என்று மொத்தமாக 41 சதங்கள், 125 அரை சதங்கள் விளாசிய சீனியர் சந்தர்பாலின் ஜூனியர்தான் தேஜ்நரைன் சந்தர்பால்!

Published:Updated:

Tagenarine: அதே ஸ்டான்ஸ், அதே தாக்கம்; இந்திய வம்சாவளியின் புகழைப் பரப்பும் ஜூனியர் சந்தர்பால்!

கிரிக்கெட் உலகில் யாராலும் வெற்றிகரமாகப் பின்பற்ற முடியாத ஸ்டான்ஸில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 163 டெஸ்ட் போட்டிகள், 268 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் என்று மொத்தமாக 41 சதங்கள், 125 அரை சதங்கள் விளாசிய சீனியர் சந்தர்பாலின் ஜூனியர்தான் தேஜ்நரைன் சந்தர்பால்!

தேஜ்நரைன் சந்தர்பால்
19-ம் நூற்றாண்டு இறுதியில் ஆரம்பித்து 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு, டச்சு, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இந்தியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மேற்கிந்தியத் தீவுக் கூட்டங்களுக்குக் கூட்டிச் செல்லப்பட்டார்கள். அவ்ர்கள் இந்தோ-கரீபியன்கள் என்று அறியப்படுகிறார்கள்.

மேற்கிந்தியத் தீவுக் கூட்டத்தின் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வம்சாவளியினரின் தொடர்பும், பங்களிப்பும் நீண்ட சிறப்பு வாய்ந்தது. இதன் தொடக்கம் 1950ஆம் ஆண்டு ஆப்-ஸ்பின், லெக் ஸ்பின் இரண்டையும் ஒரே மாதிரியான பாணியில் வீசும் வல்லமை பெற்ற சோனி ரமாதின் என்ற இந்தோ - கரீபியரால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. 774 பந்துகள் வீசி, ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகள் வீசிய உலக சாதனை இன்றுவரையில் இவரிடம்தான் இருக்கிறது.

ஷிவ்நரைன் சந்தர்பால்
ஷிவ்நரைன் சந்தர்பால்

மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட்டில் இந்திய வம்சாவளியின் தொடர்ச்சியாக அடுத்து 1957-ல் நளினமான பேட்டிங்குக்குச் சொந்தக்காரரான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன், ஐசிசி ஹால் ஆப் பேமில் இடம்பெற்றுள்ள ரோகன் கன்ஹய் வருகிறார். இவர் மொத்தம் 18 ஆண்டுகளுக்கு, அதாவது 1975 வரை விளையாடுகிறார். அடுத்து இடது கை பேட்ஸ்மேன் வலது கை சுழற்பந்து வீச்சாளர் 1972-ல் ஆல்வின் கள்ளிச்சரன் என இந்திய வம்சாவளியின் கொடி மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட்டில் உயரப் பறக்கிறது!

மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட்டில் இந்திய வம்சாவளியின் இந்தப் புகழ்க்கொடியின் கயிற்றை அடுத்து வந்த ஷிவ்நரைன் சந்தர்பால் மற்றும் ராம்நரேஷ் சர்வான் மிக இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்களின் காலத்திற்குப் பிறகு, உலக கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் எப்படி வீழ்ச்சி அடைந்ததோ, அதேபோல் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டில் இந்திய வம்சாவளியின் தொடர்ச்சியும் வீழ்ச்சி அடைந்தது. 1957-ல் சோனி ரமாதின் ஏற்றி வைத்த புகழ்க் கொடியும் கீழே இறங்கியது.

இறங்கிய இந்தப் புகழ்க்கொடியின் கயிற்றை இப்பொழுது ஒரு இளம் இந்திய வம்சாவளி வீரர் கையில் எடுத்திருக்கிறார். அவர் தேஜ்நரைன் சந்தர்பால். ஆம், மேற்கிந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வெற்றிகரமான வீரரான ஷிவ்நரைன் சந்தர்பாலின் மகனேதான்!
கிரிக்கெட் உலகில் யாராலும் வெற்றிகரமாகப் பின்பற்ற முடியாத ஸ்டான்ஸில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 163 டெஸ்ட் போட்டிகள், 268 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் என்று மொத்தமாக 41 சதங்கள், 125 அரை சதங்கள் விளாசிய சீனியர் சந்தர்பாலின் ஜூனியர்தான் தேஜ்நரைன் சந்தர்பால்!

தந்தையைப் போல் பெயரெடுப்பது வேறு, ஆனால் தந்தையைப் போலவே ஸ்டான்ஸ் எடுப்பது, ஷாட் செலக்சன் செய்வது, ஷாட் விளையாடுவது என்பதும், அதை சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வந்து அப்படியே செயல்படுத்துவது என்பதும் ரொம்பவே அரிது. ஷிவ்நரைன் சந்தர்பாலின் முதன்மை ரசிகர் அவரது வீட்டிலேயே அவரின் மகனாக இருந்திருக்கிறார். அவரது மறு வடிவாகவே இப்போது மைதானத்தில் இருக்கிறார்.

இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை எந்த பேட்ஸ்மேனும் பெரிதாய் விரும்பாத, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகின் அதிவேக ஆடுகளத்தைக் கொண்ட பெர்த்தில், மிட்சல் ஸ்டார்க், ஹேசில் வுட், பாட் கம்மின்ஸ் என வெரைட்டியான வேகக் கூட்டணிக்கு எதிராக, கடந்த ஆண்டு நவம்பர் 30-ல் ஆரம்பிக்கிறது. அறிமுகத்திற்கான தொப்பியை போர்ட் ஆப் ஸ்பெயினின் பிரின்ஸ் பிரையன் லாரா வழங்க, இந்த இளைஞன் பூரிப்பாக வாங்கி அணிந்துகொள்கிறார்!

ஆஸ்திரேலிய ரன் மிஷின்களில் முதன்மையானவரான லபுசேன், அந்தப் போட்டியில் முதலில் இரட்டை சதம் அடிக்கிறார். அடுத்து இரண்டாவது ரன் மிஷின் ஸ்மித் இரண்டாவதாக இரட்டை சதத்தை நிறைவு செய்கிறார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளுக்கு 598 ரன் என்ற எதிரணிக்கு அதிர்ச்சியைத் தருகின்ற ரன்களை ஸ்கோர் போர்டில் ஏற்றி டிக்ளர் செய்கிறது.

கேப்டன் பிரத்வெயிட் உடன் களம் கண்ட ஜூனியர் சந்தர்பால் அதிவேக ஆடுகளத்தில் அதி உயர் தரமான வேகப்பந்து வீச்சை அநாயாசமாக எதிர்கொள்கிறார். மகனுக்குள் தந்தை கூடு பாய்ந்தது போல் இருந்தது அவரது ஆட்ட அணுகுமுறை. அந்த இன்னிங்ஸில் 79 பந்துகளில் 51 ரன்களை ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன், அறிமுக சர்வதேச முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தன் பெயரில் ஒரு அரை சதத்தை அழகாகச் சேர்த்து, உலக கிரிக்கெட்டிலும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டில் இந்திய வம்சாவளியின் இரண்டாவது வருகையையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

தேஜ்நரைன் சந்தர்பால்
தேஜ்நரைன் சந்தர்பால்
அந்த ஒரு சிக்ஸர், பேட் கம்மின்ஸ் வீசிய பந்தின் லைனுக்கு வேகமாக நகர்ந்து ஒரு ஹூக் ஷாட்டில் லாங் லெக்கில் பறக்க விட்ட நேர்த்தியில் வந்தது. அந்த சிக்ஸர் வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிக்கு ஜூனியர் சந்திர்பால் கொடுத்த விசிட்டிங் கார்டும்கூட.

இந்த நிலையில்தான் தன்னுடைய வருகை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் தன் தந்தையின் இருப்பைப்போல எவ்வளவு உறுதியாகவும் நீண்டதாகவும் வீரியமாகவும் இருக்கும் என்று, ஜிம்பாப்வேயுடனான போட்டியில் நிரூபித்தார். புலவாயோவில் பிப்ரவரி 4 முதல் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 467 பந்துகளைச் சந்தித்து 16 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 207 ரன்கள் விளாசி அதை பிரகடனம் செய்திருக்கிறார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், சீனியர் சந்தர்பாலின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 203*.

ஆட்டம் மற்றும் ஆடுகளத்தின் சூழ்நிலையைப் புரிந்துகொள்வது, பந்துகளுக்கு மட்டும் மதிப்பளித்து ஏற்றாற்போல் தகவமைவது, தேவையைப் பொறுத்து பேட் வீச்சின் வேகத்தைக் குறைப்பது, அதிகரிப்பது, ஒரு புள்ளியில் குவிக்கும் கவனம் என ஒரு வெற்றிகரமான பேட்ஸ்மேனுக்கான அம்சங்களோடு இருக்கிறார் ஜூனியர் சந்தர்பால்.
தேஜ்நரைன் சந்தர்பால்
தேஜ்நரைன் சந்தர்பால்
Twitter

தடகள வீரர்களுக்கான உடலமைப்போடு, தடதடவென வேகமான அதிரடி கிரிக்கெட்டை விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு மத்தியில், சூழலை உணர்ந்து பொறுமை, கவனம், ஆட்ட நுணுக்கமென்று விவேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்குப் புது வண்ணத்தைத் தந்தவர்கள் இந்திய வம்சாவளி வீரர்கள். அவர்களின் தொடர்ச்சியாக அந்த மரபின் குணாதிசயங்களோடு கச்சிதமாக நிற்கிறார் ஜூனியர் சந்தர்பால்.

ஜூனியர் சந்தர்பாலின் வெற்றிகரமான வருகை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் இந்திய வம்சாவளியின் இறங்கிய புகழ்க் கொடியை மீண்டும் உயரத்தில் பறக்க வைக்கும் சாத்தியக்கூறுகள் கொஞ்சம் அழுத்தமாகவே தென்படுகின்றன. இந்தக் கொடி உயர்ந்தால், உலகக் கிரிக்கெட்டில் விழுந்திருக்கும் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டின் புகழ்க் கொடியும் உயர்கிறது என்பதுதானே பொருள். இரண்டுமே உச்சத்தில் உயரட்டும்!