Published:Updated:

அந்த முதல் பால்… அந்த ஒரு பால் போதும் சூர்யா! #SuryakumarYadav #INDvENG

Suryakumar Yadav ( AP )

பேக் ஃபூட் வைத்து, தன் இடுப்பை வளைத்து, இடது கால் தூக்கி, ஃபைன் லெக்கில் பந்தைப் பறக்கவிடுகிறார். 75 மீட்டர் தள்ளிப் போய் விழுகிறது. அம்பயர் கைகளை உயர்த்துகிறார். ஆர்ச்சர் வாயடைத்து நிற்கிறார். வர்ணனையாளர்கள் கவிஞர்களாய் மாறுகிறார்கள். ஒட்டுமொத்த தேசமும் சிலிர்த்துப்போகிறது.

அந்த முதல் பால்… அந்த ஒரு பால் போதும் சூர்யா! #SuryakumarYadav #INDvENG

பேக் ஃபூட் வைத்து, தன் இடுப்பை வளைத்து, இடது கால் தூக்கி, ஃபைன் லெக்கில் பந்தைப் பறக்கவிடுகிறார். 75 மீட்டர் தள்ளிப் போய் விழுகிறது. அம்பயர் கைகளை உயர்த்துகிறார். ஆர்ச்சர் வாயடைத்து நிற்கிறார். வர்ணனையாளர்கள் கவிஞர்களாய் மாறுகிறார்கள். ஒட்டுமொத்த தேசமும் சிலிர்த்துப்போகிறது.

Published:Updated:
Suryakumar Yadav ( AP )

ஆர்ச்சர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார் இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மா. தவறான ஷாட் ஆடி அவுட்டான சோகத்தில் மிகவும் மெதுவாக பெவிலியன் நோக்கி நகர்கிறார். அப்போது அவரைக் கடந்து புயல் வேகத்தில் களத்துக்குள் நுழைகிறார் அந்த ’30 வயது’ இளைஞர். “களத்துக்குள் இவ்வளவு வேகமாக யாரும் நுழைந்து பார்த்ததில்லை" என்கிறார் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. அப்படியொரு வேகம். ஏதோ உற்சாகத்தால் வந்த வேகம் இல்லை. காத்திருப்பின் விரக்தி கொடுத்த வேகம் அது. சூர்யகுமார் யாதவ், ஒரு நொடி கூட காத்திருக்கத் தயாராக இல்லை!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதன் முதலாக கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்த தருணம் ஒவ்வொருவரும் காணும் கனவு, அந்த ஆடுகளத்துக்குள் இந்திய ஜெர்சியை அணிந்து பேட் பிடிக்கவேண்டும் என்பதுதான். ஒவ்வொரு நாளும் அந்தக் கனவை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருக்கும். அது நிகழ்வதற்குச் செய்யவேண்டிய விஷயங்கள் என இந்த உலகம் வரையறுத்திருக்கும் ஒவ்வொன்றையும் படிப்படியாகச் செய்யவேண்டும். எல்லாப் படிகளையும் ஏறிவிட்டால், மலை உச்சியைத் தொட்டுவிடலாம் என்பதுதான் உலகம் சொல்லும் இலக்கணம். ஆனால், எல்லாமும் அப்படி அமைந்துவிடுவதில்லையே!

சூர்யகுமார்
சூர்யகுமார்

சூர்யகுமார் யாதவ், இந்திய கிரிக்கெட் வரையறுத்த அத்தனை விஷயங்களும் செய்து முடித்தார். பழைய விதிகளான முதல் தர போட்டிகள், லிஸ்ட் ஏ, டொமஸ்டிக் டி-20 என அத்தனை ஃபார்மேட்களிலும் சிறப்பாகச் செயல்படுகிறார். இந்திய கிரிக்கெட்டின் மாடர்ன் criteria-வாக இருக்கும் ஐபிஎல் தொடரிலும் தன்னை நிரூபித்துவிட்டார். சொல்லப்போனால், இதற்கு மேல் நிரூபிப்பதற்கு ஒன்றும் இல்லை எனும் அளவிற்கு செயல்பட்டுவிட்டார். 101 ஐபிஎல் போட்டிகளில் ஆடியாகிவிட்டது. இனியும் என்னதான் செய்ய முடியும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருந்தும் சூர்யாவுக்கு அந்த மலை உச்சியில் இடம் கிடைக்கவில்லை. இடம் தரப்படவில்லை என்று முழுமையாகக் கூறிவிட முடியாது. ஏனெனில், சூர்யா ஒன் டவுன் ஆடும் வீரர். தன் மாநில அணிக்கும் சரி, ஐபிஎல் அணிக்கும் சரி அந்த பொசிஷனில்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். இந்திய அணியில் அவர் அந்த இடத்தில் அமரவேண்டுமெனில், அந்த மலையின் மீது வீற்றிருக்கும் விராட் கோலி எனும் இன்னொரு மலையை அகற்றவேண்டும். இயலாத காரியம். சரி, வேறு பொசிஷனுக்கு ஏதும் கிடைக்குமா..? கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ், மனீஷ் பாண்டே என ஏற்கனவே மிடில் ஆர்டரில் ஆடிக்கொண்டிருக்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையில் சூர்யாவையும் சேர்த்துக்கொள்ள அணி நிர்வாகம் விரும்பவில்லை.

தகுதிகள் இருப்பவர்கள் வாய்ப்பு மறுக்கப்படுவதும், கிடைக்காமல் தடுமாறுவதும் இந்தியாவில் ஒன்றும் புதிதில்லையே. கிரிக்கெட் மட்டும் எப்படி விதிவிலக்காக அமையும்?

ஒருசில வீரர்கள் வாய்ப்பு கிடைக்காதபோது மனம் விட்டுவிடுவார்கள். அடுத்த வேலையைப் பார்க்க நகர்ந்துவிடுவார்கள். ஒருசிலர் ஓய்வே பெற்றுவிடுகிறார்கள். ஆனால், சூர்யா காத்திருந்தார். ஒருவேளை தானும் ஒரு மலையாக உருவெடுத்தால்… தவிர்க்க முடியாத ஒருவராக மாறினால்… எத்தனை நாள் தன்னை ஒதுக்கிவைத்துவிட முடியும்! 30 வயது ஆகிவிட்டது. ஆகட்டுமே..! முந்தைய சீசன்கள் முப்பதுகளில் இருந்த தன் ஐபிஎல் சராசரியை, கடந்த சீசன் 40 ஆக்கினார். மும்பை இந்தியன்ஸின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆனார்.

வேறு வழியில்லை. இதற்கு மேலும் அவரை ஓரத்தில் நிற்கவைக்க முடியாது. ‘அட எங்கயாவது இவர இறக்கிப் பாத்திடுவோமே’ என தேர்வுக் குழு ஒருவழியாக இந்த டி-20 தொடரில் அவர் பெயரை டிக் செய்துவிட்டது. இரண்டாவது போட்டியில் அறிமுகமும் கிடைத்துவிட்டது. ஒருவழியாக மலை உச்சியில் அவருக்கு இடம் கிடைத்துவிட்டது. ஆனால், கால்கள் ஊன்றி நிற்பதற்கான இடம் கிடைக்கவில்லை. பிட்சுக்குள் காலே வைக்காமல், அடுத்த போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டார். கால்கள் இடறிக்கொண்டிருக்க, உச்சியிலிருந்து மீண்டும் கீழே இறக்கப்பட்டார்.

சூர்யகுமார்
சூர்யகுமார்

இத்தனை காலம் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. முதல் முறையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டபோதும், அந்த ஆடுகளத்தை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்துக்கொள்ளவேண்டியதாக இருந்தது. அத்தனை திறமைகளும் இருந்தும் இப்படியொரு நிலையில் இருக்கும் வீரருக்கு எப்படி இருக்கும்! விரக்தியின் உச்சிக்கு சென்றிருக்க மாட்டாரா! இன்னும் எத்தனை காலம் தான் காத்திருக்க முடியும்!

இப்படியொரு மனநிலையில் இருந்த சூர்யா, ‘இனி ஒரு நொடியும்’ காத்திருக்கக்கூடாது என்றுதான் அவ்வளவு வேகமாக ஆடுகளத்தை அடைந்திருப்பார். எங்காவது உள்ளே சென்றுகொண்டிருக்கும் போது கூட அழைத்து உட்கார வைத்துவிடுவார்கள். ஆர்ச்சர் ரோஹித்தின் கேட்சைப் பிடித்த மறு நிமிடமே ஆக்சிலரேட்டர் அழுத்தப்பட்ட ஆஸ்டன் மார்ட்டின் கார்போல் பாயத் தயாராக இருந்திருப்பார் சூர்யா!

மின்னலெனப் பாய்ந்து களத்துக்குள் நுழைந்தாயிற்று. முதல் முறையாக, இந்திய ஜெர்ஸி அணிந்து, இந்தியக் கொடி பதிக்கப்பட்ட ஹெல்மெட் அணிந்து ஆடுகளத்தில் நிற்கிறார். மைதானத்தில் இருந்த மைக்கில் அவர் பெயர் ஒலிக்கிறது. ஸ்கோர் கார்டில் இந்தியா என்று பெயருக்குக் கீழே அவர் பெயர். 20 ஆண்டுகளுக்கு முன் சூர்யா கண்ட கனவெல்லாம் கண் முன் விரிந்துகொண்டிருந்திருக்கும்.

சூர்யகுமார், இஷான் கிஷன், கோலி
சூர்யகுமார், இஷான் கிஷன், கோலி
இந்திய அணியில், அவருக்குப் பிடித்த மூன்றாவது பொசிஷனில் இறங்கிவிட்டார். இப்போது எல்லாம் அவர் கையில்தான். தேர்வாளர்கள், கேப்டன் என யார் கையிலும் இல்லை. இனி அவரும், அவர் கையில் இருக்கும் SS பேட்டும்தான் பதில் சொல்லியாகவேண்டும்.

சூர்யா களத்துக்குள் இருந்த அந்த நொடி, ஒவ்வொருவரும் அவரின் நல்ல தொடக்கத்தை எதிர்பார்த்திருப்போம். ஏனெனில், திறமை மிக்க ஒருவரின், வாய்ப்புக்காக போராடிய ஒருவரின் வெற்றியைப் பார்க்கவேண்டும் என்றுதான் எல்லோருமே நினைப்போம். ஒட்டுமொத்த இந்தியாவும் அதைத்தான் வேண்டிக்கொண்டிருந்திருக்கும். ஆனால், எதிரில் நின்றுகொண்டிருந்தது ஜோஃப்ரா ஆர்ச்சர் எனும் மான்ஸ்டர்.

பழைய ஆர்ச்சருக்கும் இந்த ஆர்ச்சருக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது. முன்பு, தன் வேகத்தாலும் கூடுதல் பௌன்ஸாலும் அனைவரையும் மிரட்டிக்கொண்டிருந்தார். உலகின் முக்கியமான பௌலராக உருவெடுத்துக்கொண்டிருந்தார். ஆனால், அப்போது அவரிடமிருந்து ஆயுதம் அது ஒன்றுதான். ஆனால், இந்த ஆர்ச்சர் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கிறார். ஒவ்வொரு ஓவரிலும் பல வேரியேஷன்கள் காட்டுகிறார். லென்த்தில், லைனில், பந்தின் வேகத்தில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படுத்துகிறார். முழுமையான பந்துவீச்சாளராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார்.

முன்பிருந்த ஆர்ச்சரை விட இந்த ஆர்ச்சரை எதிர்கொள்வதுதான் மிகவும் சிரமம். இந்தத் தொடரின் முதல் 3 போட்டிகளில் அவரது எகானமி 6.58 தான். மார்க் வுட்டை விட மிகவும் மெதுவாகத்தான் வீசினார். ஆனால், விக்கெட்டுகள் எடுத்தார். ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார்.

நேற்று, அந்த மூன்றாவது ஓவரில் அதுவரை வீசிய 4 பந்துகளிலுமே மிகப்பெரிய வேரியேஷன் காட்டியிருந்தார் ஆர்ச்சர். முதல் பந்து - 120 kmph. இரண்டாவது பந்து - 143 kmph. மூன்றாவது பந்து 141 kmph. மூன்று பந்துகளின் லென்த்தையும் மாற்றிக்கொண்டே இருந்தவர், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிக்கொண்டிருந்தார். நான்காவது பந்து - லென்த், லைன், வேகம் எல்லாம் மாறியது. வெறும் 125 kmph வேகத்தில் ஸ்டம்புகள் நோக்கி வந்தது அந்த லெக் கட்டர். அந்த ஸ்லோ பந்திலும், தன் டிரேட் மார்க் எக்ஸ்ட்ரா பௌன்ஸை ஏற்படுத்தினார் ஆர்ச்சர். வேகம், லைன், பௌன்ஸ் என ரோஹித் எதையுமே எதிர்பார்க்கவில்லை. தன் ஷாட்டைத் தாமதமாக ஆட, நேரே ஆர்ச்சர் கைகளில் விழுந்தது பந்து. இதுதான் புதிய ஆர்ச்சர்.

Jofra Archer
Jofra Archer
AP
அவர் வீசப்போகும் அடுத்த பந்து, சூர்யாவின் சர்வதேச வாழ்க்கையின் தொடக்கம். இதைவிட ஒரு சவாலான தொடக்கம் அமைந்துவிடாது. சூர்யா அதை எதிர்கொள்ளத் தயாரானார். விரிந்துகொண்டிருந்த அவர் கனவுகளின் நடுவே ஆர்ச்சரின் பிம்பம்.

ஆனால், 10 வயதில் கனாக் கானத் தொடங்கிய யாரும் இந்திய அணிக்கு அறிமுகம் ஆவதோடு அதை முடித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். தொடக்கம் எப்படி இருக்கவேண்டும் என்றும் அந்தக் கனவுகள் விரிந்திருக்கும். ‘சிக்ஸர் அடிச்சு தொடங்கணும், செஞ்சுரி அடிக்கணும், மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கணும்’ என அது எல்லைகளற்று விரிந்திருக்கும்.

இப்போது ஆர்ச்சரின் பிம்பம் நகரத் தொடங்குகிறது. தன்னை நோக்கிப் பாய்ந்து வருகிறது. இந்த பந்திலும் வேரியேஷன்கள். வேகம் 143.9 kmph தொடுகிறது. பௌன்ஸ் அதிகமாகிறது. பந்து மார்பை நோக்கி வருகிறது. 30 வயதில் தன் முதல் பந்தை எதிர்கொள்ளும் ஒரு வீரரால் இப்படியொரு பந்தில் ரிஸ்க் எடுத்திருக்க முடியுமா தெரியவில்லை. ஆனால், கனவுகள் மட்டுமே சுமந்த ஒரு 10 வயது சிறுவனால் எதுவும் முடியும்.

Suryakumar Yadav
Suryakumar Yadav
Hotstar screenshot

பேக் ஃபூட் வைத்து, தன் இடுப்பை வளைத்து, இடது கால் தூக்கி, ஃபைன் லெக் திசையில் பந்தைப் பறக்கவிடுகிறார். 75 மீட்டர் தள்ளிப் போய் ஸ்டாண்டில் விழுகிறது. அம்பயர் இரண்டு கைகளையும் உயர்த்துகிறார். வர்ணனையாளர்கள் கவிஞர்களாய் மாறுகிறார்கள். டக் அவுட்டில் இருந்த வீரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். ஆர்ச்சர் வாயடைத்து நிற்கிறார். ஒட்டுமொத்த தேசமும் சிலிர்த்துப்போகிறது. 10 வயது சிறுவனின் கனவுகளும், வாய்ப்புக்காக காத்திருந்த 30 வயது இளைஞனின் காத்திருப்பும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கிறது. ஸ்கோர் போர்டில் சூர்யகுமார் யாதவ் என்ற பெயருக்கு அருகே 6 ரன்கள் சேர்க்கப்படுகிறது!

இத்தனை நாள் தனக்குக் கிடைக்காத, டி-20 உலகக் கோப்பைக்கு சில காலமே இருக்கும் நிலையில் கொடுக்கப்பட்ட இந்த வாய்ப்புக்கு அர்த்தம் சேர்க்க வேறு என்ன வேண்டும்? தன் 20 வருட ஆசையை, அந்த ஆசை கொடுத்த தேவைகளை, அது ஏற்படுத்திய அழுத்தங்களை இறக்கி வைக்க, ஆசுவாசப்பட, ஆனந்தப்பட வேறு என்ன வேண்டும்? அந்த முதல் பால், அந்த ஒரு பால் போதும் சூர்யா..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism