Published:Updated:

உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியாதான்... ஆனால், இதயங்களை வென்றது தாய்லாந்து! #WomensT20

தாய்லாந்து கிரிக்கெட் டீம்
News
தாய்லாந்து கிரிக்கெட் டீம் ( Women's T20 )

இந்தியாவை ஆஃப்கானிஸ்தான் எதிர்பாராத வகையில் தோற்கடித்துவிட்டால், இந்திய ரசிகர்களின் மனதில் ஏற்படும் வருத்தம் அவ்வளவு பெரிதாக இருக்காது. மாறாக, ரஷித்கானுக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்திருப்பார்கள் நம்மூரார்.

"எங்கள் அணியினர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். யாரோ ஒருவர் தனியாகவோ சோகமாகவோ இருப்பதென்பது அரிது. நாங்கள், ஒரு மிகச்சிறப்பான குழுவாகச் செயல்படுகிறோம்" - ஆஸியில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை போட்டியில் முதன்முதலாகக் களமிறங்கிய தாய்லாந்து அணியின் பயிற்சியாளர் ஹர்சல் பதக்கின் வார்த்தைகள் இது. தாய்லாந்து கிரிக்கெட் விளையாடுமா என்பது பலருக்கும் இந்த உலகக் கோப்பையின் மூலம்தான் தெரியவந்திருக்கும். அதுவும் ஆண்கள் அணி செய்யாத சாதனையைப் பெண்கள் அணி முதல்முறையாக தகுதிப் போட்டிகளில் வெற்றிபெற்று, 2020 உலகக் கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு வந்தது.

உலகக் கோப்பை மாதிரியான ஐசிசி-யின் பெரிய தொடர்களில் தமது சொந்த நாட்டு அணியையோ அல்லது பிடித்த வீரர்கள் இடம்பெற்றுள்ள அணியையோ சப்போர்ட் செய்வதைத் தாண்டி, ஒவ்வொரு முறையும் புதிதாகக் களமிறங்கும் சிறிய அணிகளும் ஒரு போட்டியிலாவது ஜெயித்தால் நன்றாக இருக்குமே என்று அந்த அணிகளுக்கும் சப்போர்ட் செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளம் உண்டு. படம் முழுவதும் வில்லனிடம் அடிவாங்கிவிட்டு கிளைமாக்ஸில் ஹீரோ வில்லனுக்கு ஒரு பன்ச் கொடுக்கும்போது ஒரு உற்சாகம் உள்ளெழுமே அதுபோன்ற உணர்வு அது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் ஜெயித்துவிட்டால் என்னதான் பெரிய மனதோடு எழுந்துநின்று கைதட்டினாலும் அடுத்த தொடரில் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடிக்கும் வரை ரசிகனின் மனதுக்குள் ஒரு வென்ஜென்ஸ் இருந்துகொண்டே இருக்கும். அதேநேரத்தில், இந்தியாவை ஆஃப்கானிஸ்தான் எதிர்பாராத வகையில் தோற்கடித்துவிட்டால், இந்திய ரசிகனின் மனதில் ஏற்படும் வருத்தம் அவ்வளவு பெரிதாக இருக்காது. மாறாக, ரஷித்கானுக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்திருப்பார்கள் நம்மூரார்.

தாய்லாந்து டீம்
தாய்லாந்து டீம்
Women's T20

உலகக் கோப்பை போட்டிகளைப் பொறுத்தவரை அயர்லாந்து, வங்கதேசம் போன்ற அணிகள் சில பெரிய அணிகளுக்கு எதிராக மிகப்பெரிய அப்செட்டுகளை நிகழ்த்தியிருக்கின்றன. அந்த அப்செட்டுகள் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த பெண்கள் உலகக் கோப்பை போட்டியில், சிறிய அணியான தாய்லாந்து, அப்படியொரு அப்செட்டை நிகழ்த்தியிருக்கும். மழையால் தப்பித்தது பாகிஸ்தான். ஒவ்வொரு தோல்வியின்போதும் புன்னகையும் மகிழ்வுமாக இருந்த தாய்லாந்து அணி, மழையால் தாங்கள் பெற்றிருக்க வேண்டிய முதல் வெற்றி தள்ளிப்போனபோதும் சிரிப்புடன்தான் அந்நாளைக் கடந்துவந்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தாய்லாந்து முதலில் கவனிக்கப்படுவதற்கான காரணம், அந்த அணியின் மனநிலை. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற திமிங்கிலங்களோடு மோத வரும் சிறிய அணிகள் எப்போதும் தோல்வி உறுதி என்ற முன் முடிவோடு டிப்ரெஷனோடு விளையாடுவார்கள். ஆனால் தாய்லாந்து அணியினர், எந்த முன்முடிவும் இல்லாமல் தங்களுக்குக் கிடைத்துள்ள உலக மேடையை ரசித்து விளையாடினர். காலேஜ் டூர் முடிவில், 'குமுதா ஹாப்பி அண்ணாச்சி' என்ற ஸ்மைலி ஃபார்முலாவில்தான் அணிச்சூழலே கட்டமைக்கப்பட்டிருந்தது.

எந்த நெகட்டிவிட்டியும் சோகமும் இல்லாமல் 13 வருடங்களாக இதற்காகத்தான் உழைத்துள்ளோம். இங்கே, நம்முடைய திறமையை மட்டும் வெளிக்காட்டினால் போதும் என்ற பாசிட்டிவிட்டியோடு களமிறங்கினர், தாய்லாந்து கேர்ள்ஸ். டாஸ் போடும்போதும் சரி, ஆட்டம் முடிந்தவுடனும் சரி... எதிரணியினருக்கும் அம்பயர்களுக்கும் ரசிகர்களுக்கும், தாய்லாந்தின் பாரம்பர்ய முறையில் இரு கைகளையும் கூப்பி மரியாதை நிமித்தமாக வாய் (வணக்கத்திற்கு தாய்லாந்தில் வாய் என்று பெயர்) சொல்வது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பின் இன்னொரு பரிணாமம்.

தாய்லாந்து டீம்
தாய்லாந்து டீம்
Women's T20

2007 முதல் பெண்கள் கிரிக்கெட் ஆடிவரும் தாய்லாந்து அணியில், முதலில் பலருக்கும் கிரிக்கெட் என்றாலே என்னவென்று தெரியாது. பெண்கள் கிரிக்கெட் அணியை உருவாக்க நினைத்த தாய்லாந்து கிரிக்கெட் அசோசியேஷன், ஃபுட்பால், சாஃப்ட் பால், வாலிபால், தடகளம் போன்றவற்றில் விளையாடிக்கொண்டிருந்த பெண்களை, கிரிக்கெட்டுக்கு அழைத்துவந்து பயிற்சி கொடுத்தது.

2007-லிருந்து தாய்லாந்து அணியின் ஒரு ஆட்டத்தைக்கூட தவறவிடாதவரும், தாய்லாந்து அணியின் தற்போதைய கேப்டனுமான டிப்போச்சும் ஒரு சாஃப்ட் பால் ப்ளேயர்தான். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், வேறு விளையாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதால், முதலில் கிரிக்கெட் ரூல்ஸைப் புரிந்துகொள்வதே இவர்களுக்கு சிரமமாக இருந்திருக்கிறது.

டி.வி-யில் கிரிக்கெட் பார்க்கும்போது, பவுண்டரிகள் அடித்தால் மட்டும் கைத்தட்டி ரசிப்பார்களாம். ஆங்கிலம் ஒரு சிலருக்குத்தான் தெரியும் என்பதால், வெளிநாட்டு கோச்சுகள், மேட்ச் நடக்கும்போது ஆங்கிலம், தாய் இரண்டு மொழிகளையும் பேசத்தெரிந்தவர்களை அருகில் வைத்துக்கொண்டு ஸ்ட்ரேட்டஜிக்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

2013, 2015, 2018 என மூன்று முறை தகுதிச்சுற்றுப் போட்டியில் முயன்றுபார்த்தும் உலகக் கோப்பைக்கு முன்னேற முடியவில்லை. 2018-ல், இந்தியரான ஹர்சல் பதக் தாய்லாந்து பெண்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர்களிடம் திறமையிருக்கிறது, கொஞ்சம் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்து செதுக்கினால் மட்டும் போதும் எனத் திட்டமிட்ட ஹர்சல், தாய்லாந்து அணியினரை குறிப்பிட்ட ஓவர்களில் பல டாஸ்க்குகளைக் கொடுத்து அட்டாக்கிங் ஸ்டைல் கிரிக்கெட்டுக்கு பழக்கப்படுத்தியிருக்கிறார். ஹர்சல் பதக்கின் மனைவி ஸ்வேதா மிஷ்ரா, பாண்டிச்சேரி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர். அதனால், பாண்டிச்சேரியில் தாய்லாந்து அணியினருக்கான சிறப்பு முகாம்களை ஏற்பாடுசெய்து, பயிற்சி அளித்திருக்கிறார் பதக். இந்நிலையில், 2019-ல் உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்றில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகளைத் தோற்கடித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் உலகக் கோப்பைக்குள் நுழைந்துவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* முதல் போட்டியில், பவர் ப்ளேவுக்குள் வெஸ்ட் இண்டீஸின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, தாங்கள் செட் செய்திருந்த 79 ரன் டார்க்கெட்டுக்கு 17-வது ஓவர் வரை இழுத்துச்சென்றது தாய்லாந்து.

* இரண்டாவது போட்டியில், கிரிக்கெட்டின் பிதாமகர்களான இங்கிலாந்து அணியைச் சந்தித்தது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முதலில் ஆடி 176 ரன்கள் அடித்துவிட்டு, 5 ஓவர்களுக்குள் மேட்ச்சை முடித்துவிடும் ஆர்வத்தில் பெளலிங் போடவந்தார்கள். ஆனால், ஆல் அவுட் ஆகாமல் 20 ஓவர்கள் வரை நின்று ஆடியது தாய்லாந்து.

* மூன்றாவது போட்டி தென்னாப்பிரிக்காவுடன். இந்தப் போட்டியில்தான் முதல்முறையாக ஆல் அவுட் ஆனது தாய்லாந்து. அதுவும் கடைசி ஓவரில்.

* கடைசி லீக் போட்டி பாகிஸ்தானுடன். முதலில் அசால்ட்டாக டீல் செய்த பாகிஸ்தான், பவர் ப்ளேவின் முடிவில் பயந்துவிட்டது. காரணம், முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 49 ரன்கள் அடித்திருந்தது. தாய்லாந்தின் முதல் விக்கெட்டை 14-வது ஓவரில்தான் எடுத்தது பாகிஸ்தான். தாய்லாந்தின் ஓப்பனர்கள் சந்தம் 56 ரன்கள் அடிக்க, பூச்சத்தம் 44 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் அடித்திருந்தது தாய்லாந்து. அன்று மட்டும் மழை வராமல் இருந்திருந்தால், தாய்லாந்து வென்றிருக்கும். காரணம், பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் 130 ரன்களுக்கு மேல் அடிக்கவேயில்லை. மழையால் பாகிஸ்தான் விளையாடாமல் போக, தாய்லாந்தின் முதல் வெற்றி பறிபோனது.

தாய்லாந்து டீம்
தாய்லாந்து டீம்
Women's T20

உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றதே தாய்லாந்து அணிக்கு உலகக் கோப்பையை ஜெயித்தது போன்றுதான் இருந்திருக்கும். தோல்விகள் ஒருபுறம் இருந்தாலும் தாய்லாந்து பெண்களின் அந்த பாசிட்டிவான செயல்பாடுகளும் கியூட் ஸ்மைல்களும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

'எங்களைப் பார்த்து இன்னும் நிறைய வீரர்கள் கிரிக்கெட் பயின்று அணிக்குள் நுழைய வேண்டும்' எனப் பேசி இன்ஸ்பையர் செய்யும் தாய்லாந்து, அடுத்த உலகக் கோப்பையில் இன்னும் பல மேஜிக்குகளை நிகழ்த்தும்.

வாழ்த்துகள் தாய்லாந்து கேர்ள்ஸ் !