Published:Updated:

பாகிஸ்தான் அதிர்ச்சி: `அறிகுறியே இல்லை’- 10 கிரிக்கெட் வீரர்களுக்குக் கொரோனா பாசிட்டிவ்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹபீஸ்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹபீஸ் ( ICC )

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் 10 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாட இருந்தது. இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதலில், ஹைதர் அலி, ஹரீஷ் ரவுஃப் மற்றும் சதாப் கான் ஆகியோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், மேலும் 7 வீரர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

கொரோனா கார்ட்டூன்
கொரோனா கார்ட்டூன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பாகிஸ்தான் அணியின், ஃபகர் ஜமான், இம்ரான் கான், காசிப் பட்டி, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோருக்குத் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், அணி நிர்வாகத்தில் பணிபுரியும் மலங் அலிக்கும் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பு கருதி வீரர்கள் 10 பேர் உள்ளிட்ட 11 பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா தொற்று

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்குச் செல்ல இருந்த வீரர்கள், நிர்வாகிகள் என தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 11 பேர் உட்பட 35 பேரில் ஒருவருக்குக் கூட கொரோனா அறிகுறிகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள் எவருக்கும் அதற்கான அறிகுறிகள் இல்லை. இதன்மூலம் அந்த வைரஸின் பாதிப்பு வீரியத்தைத் தெரிந்துகொள்ளலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வஹாப் ரியாஸ்
வஹாப் ரியாஸ்
ICC

மேலும், ``பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவுறுத்தியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதுடன் அரசின் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய சூழலில் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். அவர்களுக்கான சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடன் நிற்கும்’’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வீரர்கள்...தனிமைப்படுத்தப்பட்ட சூழல்! - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு டிராவிட்டின் கேள்வி

திட்டமிட்டபடி இங்கிலாந்து பயணம்

அதேநேரம், இங்கிலாந்து தொடர் நடப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் வாசிம் கான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவரது அறிக்கையில், ``இங்கிலாந்து தொடர் நிச்சயம் நடைபெறும். பாகிஸ்தான் அணி திட்டமிட்டபடி வரும் 28ம் தேதி இங்கிலாந்து கிளம்பும். அதிர்ஷ்டவசமாக டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை முகமது ரிஸ்வான் தவிர மற்ற வீரர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இதன்மூலம், இங்கிலாந்து சென்றவுடன் அவர்கள் பயிற்சியைத் தொடங்க எந்தத் தடையுமில்லை. இரண்டாவது பரிசோதனை முடிந்து இங்கிலாந்து செல்வதில் பிரச்னையில்லை என்று தெரிந்தபிறகு இதில் எந்தப் பிரச்னையும் இருக்கப்போவதில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சதாப் கான்
சதாப் கான்
ICC

இங்கிலாந்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான சூழல் மற்றும் அதற்கான திட்டமிடலில் பயிற்சியாளர் மிஸ்பா உல்ஹக் ஈடுபட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், அதிலிருந்து மீண்டபின்னர் அவர்கள் இங்கிலாந்து சென்று அணியுடன் இணைவார்கள் என்று தெரிகிறது. முதல் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்படாதவர்களுக்கு, இரண்டாவது முறையாக பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வந்தபிறகு இங்கிலாந்து புறப்பட இருக்கிறார்கள். இரண்டாவது பரிசோதனை நாளை (ஜூன் 25) மேற்கொள்ளப்பட இருக்கிறது. இங்கிலாந்து செல்லும் வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் லாகூரில் பாதுகாப்பான சூழலில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு