சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“இந்திய அணியில் இடம் பிடிப்பேன்!”

சஞ்சய் யாதவ்
பிரீமியம் ஸ்டோரி
News
சஞ்சய் யாதவ்

டி.என்.பி.எல் தொடரில் சிறந்த வீரர் விருது வாங்கியது பெரிய மகிழ்ச்சி. ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான சூழலில் களமிறங்கினேன்

சஞ்சய் யாதவ் என்ற பெயரைக் கேட்டதும், ‘யாரோ உ.பி பக்கம் கிரிக்கெட் ஆடும் ஆசாமி’ என்ற நினைப்பு உங்களுக்கு வரலாம். ஆனால், அவர் தமிழ்நாடு அணிக்காக ஆடும் கிரிக்கெட் வீரர். ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெறும் வாய்ப்பையும் இந்த ஆண்டு பெற்றிருந்தார் சஞ்சய். சமீபத்தில் நடந்து முடிந்த டி.என்.பி.எல் தொடரில் பெரிதாகப் பேசப்பட்டவர். ஒரு பக்கம் மைதானத்தில் அடிக்கடி மழை வர, மற்றொரு பக்கம் சஞ்சயின் பேட்டிலிருந்து ரன் மழை பொழிந்துகொண்டே இருந்தது.

``உத்தரப்பிரதேசத்தில் பிறந்து, சின்ன வயசிலேயே தமிழ்நாடு வந்துட்டேன். அப்பாவுக்கு பெங்களூரில் வேலை. ஓசூரில் செட்டில் ஆகிட்டோம். ஸ்கூல் படிச்சது ஓசூரில்தான். அடுத்து சென்னை லயோலா காலேஜ்ல படிச்சேன். கிரிக்கெட்டும் சின்ன வயசுல இருந்து இங்கதான் ஆடிட்டிருக்கேன்'' என்ற சஞ்சயிடம் பேசினேன்.

“இந்திய அணியில் இடம் பிடிப்பேன்!”

``டி.என்.பி.எல் தொடரில் சிறந்த வீரர் விருது வாங்கியிருக்கிறீர்கள்... தொடரிலேயே அதிக ரன் அடித்த வீரரும் நீங்கள்தான். எப்படி சாத்தியமானது?’’

‘‘டி.என்.பி.எல் தொடரில் சிறந்த வீரர் விருது வாங்கியது பெரிய மகிழ்ச்சி. ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான சூழலில் களமிறங்கினேன். அதுக்கு ஏத்த மாதிரி விளையாடி இந்த விருது வாங்கினது ரொம்ப சந்தோஷம். டி.என்.பி.எல்-ல இது எனக்கு ஆறாவது வருஷம். ஒவ்வொரு வருஷமும் நிறைய கத்துக்கிட்டே இருக்கேன். அதைப் பயன்படுத்தி என் விளையாட்டை மேம்படுத்திக்கிட்டு இந்த அளவுக்கு வந்திருக்கேன். திருச்சியுடன் நடந்த போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்து சதம் அடித்தேன். மொத்த மைதானமும் என் பெயரை உச்சரித்தது பரவசமாக இருந்தது. டி.என்.பி.எல் தொடரில் எனக்கு அதுதான் முதல் சதம். அதனால், மனசுக்கு ரொம்பவே நெருக்கமான இன்னிங்ஸ் அது. கடைசிப் பந்துல சிக்ஸர் அடித்து 100 ரன்களைக் கடந்தது உண்மையிலேயே வேற லெவல் உணர்வு. அதுல வருத்தமான விஷயம் என்னன்னா, அதே மேட்ச்ல அபராஜித்துக்கும் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் ‘நீதான் இந்த சதத்துக்குத் தகுதியானவன். நீ இந்த மேட்ச்ல அடி. நான் இன்னொரு மேட்ச்ல அடிச்சிக்கிறேன்'னு சொன்னார். அவர் கொடுத்த ஊக்கம்தான் அந்த சதத்துக்கு முக்கிய காரணம்!''

“இந்திய அணியில் இடம் பிடிப்பேன்!”

``இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மும்பை உங்களை வாங்கியிருந்தது. அந்தத் தருணம் பற்றிச் சொல்லுங்க!’’

‘‘இந்தத் தடவை ஐ.பி.எல் ஆடுவோம்னு நம்பிக்கை இருந்தது. ஆனால் எந்த அணிக்கு ஆடுவோம்னு தெரியாம இருந்தது. மும்பை இந்தியன்ஸ் எடுத்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. இது என்னோட மூன்றாவது ஐ.பி.எல் தொடர். தொடர்ந்து நல்லா ஆடணும்னு நினைக்கிறேன். முதல் நாள் பயிற்சியிலேயே வந்து பேசி நிறைய ஊக்கப்படுத்தினார் ரோகித் சர்மா. எப்போது எது வேண்டுமானாலும் அவர்கிட்ட பேசலாம். ரொம்ப நல்ல மனிதர். ஜாலியா பேசுவார். பெருசா கவலைப்படாம ஆடச்சொல்வார். ஒவ்வொரு வீரரிடமும் கற்றுக்கொள்ள அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. பயிற்சியாளர்களும் நிறைய கற்றுக்கொடுத்தார்கள். அணி நிர்வாகமும் எங்களை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க.’’

``மும்பை அணியில் இடம்பெற்றாலும், மைதானத்தில் ஆடும் வாய்ப்பு ஒரு போட்டியில்தான் கிடைச்சது. அபராஜித், சாய் கிஷோர்னு பல தமிழக வீரர்களுக்கு இதே நிலைதான். இதை எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘‘ஐ.பி.எல்-லில் ஆட வீரர்களுக்கிடையே கடும் போட்டி எப்போதுமே இருக்கும். நிறைய சீனியர் பிளேயர்ஸ் விளையாடுவாங்க. நாம வாய்ப்பு கிடைக்கும்போது அதைத் தவறவிடாமப் பயன்படுத்திக்கணும். ஒரு முறை நிரூபிச்சிட்டா தொடர்ந்து வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.’’

“இந்திய அணியில் இடம் பிடிப்பேன்!”

``இம்முறை டி.என்.பி.எல் போட்டிகள் சென்னையைத் தாண்டிப் பல மாவட்டங்களில் நடைபெற்றன. இந்த மாற்றம் எப்படி இருந்தது?’’

‘‘நல்ல விஷயம்தான். நிறைய பேர் குடும்பத்துடன் போட்டிகளைப் பார்க்க வந்திருந்தாங்க. பெற்றோர்களுக்கும் இதையெல்லாம் பார்க்கும்போது தங்கள் பிள்ளைகள் ஸ்போர்ட்ஸில் சாதிக்கணும் என்ற ஆசை வரும். சிறுநகரங்களில் இருக்கும் திறமையான சிறுவர்களின் கிரிக்கெட் தாகத்துக்குத் தீனி போடும் விஷயம் இது.''

``ஐ.பி.எல் வந்த பிறகு இந்திய அணியில் இடம்பெறுவதற்கான போட்டி இன்னும் கடுமையாகியுள்ளது. அதையெல்லாம் கடந்து இந்திய அணிக்கு ஆடுவீங்கன்னு எவ்வளவு ஆசையும் நம்பிக்கையும் இருக்கு?’’

‘‘எல்லோருக்கும் இருக்குற மாதிரி எனக்கும் அந்த ஆசை ரொம்பவே இருக்கு. அந்தக் கனவை எட்ட ஒவ்வொரு படியாக ஏற வேண்டும். தொடர்ந்து சிறப்பாக விளையாடி நிச்சயம் ஒரு நாள் இந்திய அணியில் இடம்பிடிப்பேன்!’’