Published:Updated:

காந்தக் குரல், இலக்கிய நயம்... தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் வாழ்க்கைக் குறிப்புகள்!

அப்துல் ஜப்பார்
அப்துல் ஜப்பார்

இளம் வயதிலேயே வானொலி மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார். பின்னர் கிரிக்கெட் நிகழ்ச்சியை வர்ணனை செய்யும் வாய்ப்பு கிடைத்தபோது அதன் மூலம் புகழடைந்தார்.

கிரிக்கெட் வர்ணனையின் மூலம் தனி முத்திரை பதித்து தமிழர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார். 1939-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி பிறந்த இவர் தனது 81-வது வயதில் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அப்துல் ஜப்பாரின் தந்தை வியாபாரம் செய்து வந்தார். வணிகம் செய்வதற்காக இலங்கைக்குச் சென்ற அவரது தந்தை தன் ஒரே மகனான அப்துல் ஜப்பாரையும் இளம் வயதிலேயே இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அதனால் கொழும்பு நகரில் உள்ள பாடசாலையில் அவர் கல்வி கற்றார்.

அப்துல் ஜப்பார் பள்ளியில் படித்த காலத்தில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பாக சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது ஆர்வம் மற்றும் காந்தக் குரல் ஆகியவை அப்போது வானொலி ஆளுமையாக இருந்த சுந்தா சுந்தரலிங்கத்தைக் கவர்ந்தது.

வர்ணனை செய்யும் அப்துல் ஜப்பார்
வர்ணனை செய்யும் அப்துல் ஜப்பார்

அதனால் அவர் அப்துல் ஜப்பாருக்கு வானொலி குறித்த விசாலமான பார்வையை ஏற்படுத்தினார். அத்துடன், வானொலி மாமா சரவணமுத்து, சானா சண்முகநாதன் போன்ற மூத்த ஆளுமைகளின் தொடர்பும் அப்துல் ஜப்பாரை வானொலி ஊடகத்தின் பக்கம் இழுத்துச் சென்றது.

பள்ளிப் படிப்பு முடித்ததும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றார். கிட்டத்தட்ட 14 வருடங்கள் வானொலி நாடகங்களில் பங்கேற்பது, நிகழ்ச்சி தயாரிப்பு பணி என ஓய்வின்றி பணி செய்தார்.

இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அரசியல் காரணமாக அப்துல் ஜப்பார் தாயகமான தமிழகம் திரும்பினார். தமிழகத்தில் வானொலியில் பணியாற்ற வாய்ப்புகளைத் தேடிய சமயத்தில் அவருக்குத் தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அப்துல் ஜப்பார்
அப்துல் ஜப்பார்
ஆங்கிலத்தில் மட்டுமே கிரிக்கெட் வர்ணனை இருந்த 80-களில் தமிழில் வர்ணனை செய்தால் மக்களை சென்றடையுமா என்ற சந்தேகம் இருந்த காலத்தில் துணிச்சலுடன் அந்தப் பணியைச் சிறப்பாக மேற்கொண்டார். அவரது காந்தக் குரலும், நிதானமாக ஒவ்வொரு பந்தையும் பற்றி விரிவாகப் பேசும் திறமையும் சேர்ந்ததால் அவரது கிரிக்கெட் வர்ணனை அனைவருக்கும் பிடித்துப் போனது.
அழகு தமிழில் அசத்தல் வர்ணணை... மறைந்தார் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்!

1982-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவரது தமிழ் வர்ணனையைக் கேட்ட அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், அவரை நேரில் அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தார்.

1999-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை லண்டனில் இருந்து 45 நாள்களும் தமிழில் வர்ணனை செய்தார். அதன் பின்னர் ஈ.எஸ்.பி.என் மற்றும் ஸ்டார் தொலைக்காட்சிகளுக்காகவும் தமிழ் வர்ணனை செய்தார்.

இலக்கிய நயம் மிக்கதாக இருக்கும் அப்துல் ஜப்பாரின் வர்ணனையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன். அதனால் 2002-ம் ஆண்டு அவரை ஈழத்திற்கு நேரில் அழைத்து விருந்தளித்து கௌரவித்தார். அந்தச் சந்திப்பு அனுபவத்தை அப்துல் ஜப்பார், 'அழைத்தார் பிரபாகரன்' என்று நூலாக எழுதியுள்ளார்.

அப்துல் ஜப்பார்
அப்துல் ஜப்பார்

காற்று வெளியினிலே மற்றும் இறைத்தூதர் முஹம்மது ஆகிய நூல்களையும் எழுதியிருக்கிறார். லண்டன் தமிழ் வானொலி விருது, இலங்கை அரசின் விருது, தமிழ்மாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், ஊடகவியலாளர், வர்ணனையாளர் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்த அப்துல் ஜப்பார் மறைந்தாலும் அவரின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.
அடுத்த கட்டுரைக்கு