Published:Updated:

`அக்ரஸிவ் இன்டண்ட் எங்கே?' - பயிற்சியாளர் டிராவிட் செய்யத் தவறியவை பற்றிய ஓர் அலசல்!

Rahul Dravid

"கும்ப்ளே இல்லாவிட்டால், ஃப்ளைட் ஏறமாட்டேன்", என்று சொன்ன கங்குலியின் வீம்பின் ஒருதுளியாவது, டிராவிட்டிடமும் இருந்திருக்க வேண்டும்.

Published:Updated:

`அக்ரஸிவ் இன்டண்ட் எங்கே?' - பயிற்சியாளர் டிராவிட் செய்யத் தவறியவை பற்றிய ஓர் அலசல்!

"கும்ப்ளே இல்லாவிட்டால், ஃப்ளைட் ஏறமாட்டேன்", என்று சொன்ன கங்குலியின் வீம்பின் ஒருதுளியாவது, டிராவிட்டிடமும் இருந்திருக்க வேண்டும்.

Rahul Dravid
பார்த்தனுக்கு சாரதியாக, ரோஹித்துக்கு டிராவிட் துணை நின்று தேரை செலுத்துவார் என்று நினைத்தால், அவரே அச்சாணி வரை பழுதாக்கி, தேரைக் கவிழ வைத்திருக்கிறார்.

"ஒரு வீரர், எவ்வகையில், செஸ் ஆடுகிறார் என்பதிலேயே, அவரது குணாதிசயங்கள் எதிரொளிக்கும்" என ரஷ்யாவின் செஸ் கிராண்ட் மாஸ்டரான கிராம்னிக் கூறுவார். இது, வீரர்களைவிட ஒரு பயிற்சியாளருக்கு, பலமடங்கு பொருந்தும். 'உங்களால் முடியும்' என்ற நம்பிக்கையை அணிக்குள் விதைப்பதும் பயிற்சியாளர்தான், சதுரங்கத்தில் காய்களை நகர்த்தும் எதிரணிகளே அறியாமல், சதுரங்கக் கட்டங்களையே நகர்த்துவதும், அவர்தான். அவரது வியூகங்கள்தான், அணியை கால இயந்திரத்தில் ஏற்றி, பல வருடங்கள் முன்னோக்கி எடுத்துச் செல்லும், சின்னத் தவறுகள்கூட, பின்னோக்கி நகர்த்தும்!

இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இதில் எந்த சட்டகத்துக்குள் பொருந்திப் போகிறார் என்று ஆழமாக ஊடுருவினால், வருத்தப்படும்படியாக இரண்டாவதை நோக்கியே கைகாட்ட வேண்டியுள்ளது.

முகமது பின் துக்ளக்கை, மோசமான மன்னனாக வரலாறு விவரிப்பதுண்டு, காரணம், டெல்லியையும், தௌலதாபாத்தையும், தலைநகராக மாற்றி மாற்றி அறிவித்து, மக்களைத் தவிக்க விட்டது உள்ளிட்ட அவருடைய பல நிர்வாகக் கோளாறுகளால் தான்.

Team India - Rohit Sharma and Rahul Dravid
Team India - Rohit Sharma and Rahul Dravid
துரதிர்ஷ்டவசமாக, இந்தியப் பயிற்சியாளர் டிராவிட், சீரமைக்க செயல்படுத்திய சில நகர்வுகளும் அப்படித்தான் மாறிப்போனது. அவர் தலைநகரங்களை மாற்றி விளையாடினார் என்றால், இவர், வீரர்களின் தலைகளை உருட்டி விளையாடினார்.

கடந்தாண்டு உலகக் கோப்பை கைநழுவுகிறது, கேப்டன், பயிற்சியாளர் என எல்லோருமே மாறுகிறார்கள், மாதக்கணக்கில் புதிய அணுகுமுறைகளைக் கையாளுகிறார்கள், ஆனால் அடுத்த ஆண்டிலும், அதே முடிவுதான் திரும்பக் கிடைக்கிறது என்றால், அடிப்படையிலேயே தவறு இருப்பதாகத்தானே அர்த்தம்?

அதைக் கண்டறிந்து களையெடுக்காதது யார் குற்றம்?

போனமுறை போலில்லாமல், இம்முறை, நாக்அவுட் சுற்றை எட்டி விட்டோமே, இதுவே முன்னேற்றம்தானே என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் அவைகூட, கோலி, சூர்யா போன்ற தனிப்பட்ட நபர்களால் வந்திருக்கிறதே ஒழிய, எந்தப் போர்க்கால நடவடிக்கைகளாலும் வந்துவிடவில்லை. கோலியின் அந்த சரித்திர சிக்ஸர் இல்லாவிட்டால், இந்தியா அடுத்த கட்டத்துக்குத் தாவியிருக்க முடியாமலேகூட போயிருக்கலாம்.

பொதுவாகவே, கோர் அணியை உருவாக்குவதுதான் எந்த ஒரு பயிற்சியாளருக்கும் முதல் வேலை. ஆனால்,

டிராவிட்டோ, Puzzle-ஐ தீர்ப்பதற்கான சில்லுகளை நகர்த்திக் கொண்டே இருந்தாரே ஒழிய, இறுதிவரை அதனைத் தீர்க்கவே இல்லை. இம்மாற்றங்கள் ஓவர் டோஸாக, ஒரு அணியாகவே உருவாரம் பெறமுடியாத அளவிற்கு, சீட்டுக்கட்டுக்கள் போல பிளேயிங் லெவன் குலைக்கப்பட்டது.
Team India - Rahul Dravid and Rohit Sharma
Team India - Rahul Dravid and Rohit Sharma

புதிய டிரம்ப் கார்டுகளும் கண்டறியப்படவில்லை, ரம்மியும் சேரவே இல்லை. இறுதியில், சிறுகுழந்தை விளையாட்டாக, போன உலககோப்பையில் ஆடிய வீரர்களின் லிஸ்டில், மூன்று பெயர்களை மட்டுமே அடித்து மாற்றி, எடுத்துவர, விளைவு `நஷ்டம்' எண்ட் கார்ட் போட்டது. ஆசியக் கோப்பையின் முடிவைக்கொண்டேனும் விழித்துக் கொண்டிருந்தால், சேதாரங்களைத் தடுத்து, அரையிறுதியையாவது தாண்டியிருக்கலாம்.

கடந்த உலககோப்பையை இழந்ததில் முக்கிய காரணமாகவும், அணி உருவாக்கத்தில், மிஸ்ஸிங் பீஸாகவும் இருந்து வந்தது, அச்சுறுத்தக்கூடிய வேகப்பந்து வீச்சாளருக்குரிய இடம். 2020-ல், இதே ஆஸ்திரேலியாவில், இந்தியா ஆடியபோது, ஒரு வேகப்பந்து வீச்சாளர் காயமடைந்து விலகினால், இன்னுமொருவர் கிளம்பி வந்து கொண்டே இருந்தனர், அதற்கான பாராட்டுக்களில் ஒருபங்கு, உள்ளூர் கிரிக்கெட் சர்க்யூட்டில் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார், மாற்று வீரர்களால் வரிசைகட்டி, பெஞ்சினை நிரப்புகிறார் என்பதற்காக டிராவிட்டிற்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் அதே டிராவிட்தான் மெகா ஸ்க்ரீனுக்கு ஸ்க்ரிப்ட் நகர்ந்ததும் அதை எப்படிக் கையாளுவது, யாரை மேடையேற்றுவது என்று தெரியாமல் தோற்றிருக்கிறார்.

"கும்ப்ளே இல்லாவிட்டால், ஃப்ளைட் ஏறமாட்டேன்", என்று சொன்ன கங்குலியின் வீம்பின் ஒருதுளியாவது, டிராவிட்டிடமும் இருந்திருந்தால், அது நேர்மையாக செயல்பட்டிருந்தால், கேஎல் ராகுலின் இடத்தில், ப்ரித்வி அல்லது இஷான் கிஷன் போன்ற திறமையான அதிரடி ஓப்பனர்கள் அமைந்திருப்பார்கள், "பவர்பிளேயிலேயே தோற்றோம்" என்ற கருத்துக்களும் உண்மையாகி இருக்காது. "Trusting the process" என தோனி கூறுவதைப்போல, செயல்பாட்டை மட்டுமே நம்பிக் கொண்டிருந்த டிராவிட், அது சரியான முடிவை நோக்கிய நகர்வாகவும், வெற்றியை நோக்கிய பயணமாகவும் மாறவேண்டும் என்பதையும் மறந்து விட்டார். விளைவு,
இந்திய டி20 அணி, ஒருநாள் அணியாக மாறியுள்ளது, ஒருநாள் போட்டிகளிலோ டெஸ்ட் அணியாக உருவெடுக்கிறது, டெஸ்டிலோ, டிராவை நோக்கி மட்டுமே ஆடுகிறது.

எந்த டெஸ்டிலும், டிரா எனக்கு கடைசி ஆப்சனாகக்கூட இருக்காது", என்று சொன்ன கோலியின் அந்த அணுகுமுறைதான், ரெட்பால் கிரிக்கெட்டில் இந்தியாவை முன்னெடுத்துச் சென்றது, டிராவிட் கோட்டைவிட்டதும் அங்கேதான்.

இன்டெண்ட் என்பதை வீரர்களுக்குள் இன்ஜெக்ட் செய்யாதது ஒரு தவறென்றால், அட்டாக்கிங் கிரிக்கெட் என்பதையே ஒரு டி20 அணியை மறக்க வைத்தது, பெருந்தவறு. பேட்டிங்கில் மட்டுமல்ல, பௌலிங்கிலுமே இந்தியா தற்காப்பு பாணிக்குத்தான் நகர்ந்திருந்தது, மோதிப் பார்க்கும் எண்ணமிருந்திருந்தால், அஷ்வினை விடுத்து, விக்கெட் எடுத்துத் தரும் ஆப்சனாக, சஹாலிடம் சென்றிருக்கும். புவ்னேஷ்வர் புதிய பந்திலே, ஸ்விங் ஆகும் கண்டிஷன்களில் மட்டுமே வித்தகம் காட்டுபவர், ஷமியோ, போன உலககோப்பைக்குப்பின் சர்வதேச டி20யே ஆடாமல், தக்கலில், கடைசி நேர எண்ட்ரியாக நுழைந்தவர், அர்ஷ்தீப்போ கற்றுக் கொண்டிருக்கும் இளைஞர். அப்படியிருக்க, பிரதான ஸ்பின்னராக ஆண்டுமுழுவதும் வலம்வந்த சஹால், ஒரு விக்கெட் டேக்கிங் ஆப்சனாக கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும்.

Chahal
Chahal
ICC
ஹேடன் இந்தியாவின் தோல்வியின் காரணமாகவும் பாகிஸ்தானின் வெற்றிநடை தொடர்வதற்கான காரணமாகவும் லெக் ஸ்பின்னைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், டிராவிட் அதை உணர்ந்தாரா? சடுகுடு, சஹாலுடன் மட்டுமல்ல!

டெத் பௌலராக ஹர்சல் உருவேற்றப்பட்டார், ஆனால் பிறகு ஆடவைக்கப்படவில்லை, தினேஷ் கார்த்திக் தொடர் முழுவதும் ஆடவைக்கப்பட்டு, முக்கிய இறுதிக் கட்டத்தில், பன்ட் கொண்டு வரப்படுகிறார். இந்த ஒவ்வொரு நிகழ்வுகளுமே, துக்ளக்கையும், டிராவிட்டையும் இணைத்துப் பார்க்கும் கோட்டைக் கிழிக்க வைக்கின்றன. ஹர்சல் அதிக ரன்களுக்குப் போகிறாரென்றால், அதற்கு முக்கிய காரணம், ஸ்டாக் டெலிவரியிலிருந்து, பிரதான ஒன்றாக மாறிப் போன ஸ்லோ பால்கள், அதை சுட்டிக் காட்டி, அவரை மெருகேற்றியிருந்தாலே, டெத் பௌலிங் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். சஹாலை உள்ளே கொண்டு வந்திருந்தால், மிடில் ஓவர்களில், சற்றே ரன்களைக் கொடுத்தாலும், ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்குரிய வழமை மாறாமல், விக்கெட்டுகளை எடுத்துத் தந்திருப்பார். பன்ட்தான் சரியானவர் என நினைத்திருந்தால், முதல் போட்டியிலிருந்தே அவரை ஆடவைத்திருந்தால், களம் பழகி, அவரது ஆட்டமும்கூட அணிக்கு சாதகமானதாக மாறியிருக்கலாம்.

டெக்னிக்கலாக, வியூகங்களின் வாயிலாக என இப்படி எல்லாவற்றையுமே போட்டுக் குழப்பியதில் அணியின் தொலைநோக்குப் பார்வையும், க்ளாரிட்டியும் தொலைந்து போயிருந்தது.

சில விஷயங்களை இன்னமும் தெளிவோடும், சற்றே கடுமையாகவும் டிராவிட் அணுகியிருக்க வேண்டும். பௌலிங் என்பது ஓரிரவில் சரிசெய்ய முடியாத பள்ளமென அவர் உணர்ந்திருந்தால், அதற்கான மாற்றுத் திட்டத்தையே முன்கூட்டியே வகுத்திருக்க வேண்டும். இருக்கும் ஓப்பனர்களுக்கேனும் எச்சரிக்கை சமிக்ஞையை சற்றே காட்டமாக அனுப்பி, இலக்கை இன்னமும் எட்டிப் பிடிக்க முடியாதபடி, எங்கோ நகர்த்த வைத்திருப்பார், பௌலிங் குறைபாடு, பேட்டிங்கால் ஈடுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் இதை எதையுமே டிராவிட் செய்யவில்லையோ என்றுதான் தோன்ற வைத்தன, ராகுல் - ரோஹித்தின் இன்னிங்ஸ்கள். "எனது பந்துகள் எனது உரிமை" என்பது போலவும், நிரந்தர ஓப்பனர்கள் தாங்கள் மட்டுமே என்பது போலவும் கொஞ்சமும் பொறுப்பின்றியே இருவரும் ஆடினர்.

Dravid
Dravid
டிராவிட்டின் மன, எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பாகவே, இந்திய அணுகுமுறை டிஃபென்சிவாக இருந்தது.

கேஎல் ராகுல், உள்ளூர்க் கிரிக்கெட்டில் ஆடும்போது, டிராவிட் தந்த ஒரு 'Pep Talk'தான், திருப்புமுனையானது என்று கூறியிருக்கிறார். அதை "Ted Talk"ஆக இப்போதும் கொடுக்க டிராவிட் தவறிவிட்டாரா?

பல தருணங்களில் கேப்டனாகவும் ரோஹித் வலிமையற்றுக் காணப்பட்டார். அவரது உடல் மொழிகளும், களத்தில் சில நகர்வுகளும் அதையே பறைசாற்றின. அவர் சோர்ந்து போகும் சமயங்கள், அணிக்குள் நம்பிக்கையின்மையை கடத்தும். முன்னமே சொன்னது போல், அதனாலேயே, தோல்வியை ஒத்துக் கொள்ளும் மனப்பாங்கோடுதான் ஒட்டுமொத்த அணியும் ஆடியது. ஒரு ஆசானாக, டிராவிட் இதையும் நேர்படுத்தியிருக்க வேண்டும்.

`36' அவமானத்துக்குப்பின் அணியை மீண்டெழ வைத்தது, ரவி சாஸ்திரியின் பேச்சு. பயிற்சியாளரால், நிச்சயமாக அப்படியொரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும்.

ஆல்ப்ஸ் மலைத்தொடரின் குறுக்கே பள்ளத்தாக்கை கடக்க கயிற்றின் மேல் செல்லும் பயணம் போன்றதுதான் டி20 ஃபார்மட். அதனைக் கடக்க கையிலுள்ள கம்பு எப்படி இருபக்கமும் சரிசமமாக இருக்க வேண்டுமோ, பேட்டிங் மற்றும் பௌலிங் அப்படித்தான் ஒன்றையொன்று ஆதரிக்க வேண்டும், அப்போதுதான் அடிப்பிரதட்சணம் செய்து அணி மறுபக்கம் பார்க்கும், இல்லையெனில் கிடுகிடு பள்ளத்தாக்குதான். இவற்றையும்மீறி கடக்க வேண்டுமென்ற மனோதிடமும் தைரியமும் எப்படி என்ற திட்டமிடலும் மிக முக்கியம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இது எதுவுமே இல்லாமல் அணியைப் பார்க்க முடிந்தது. வீழ்வது குற்றமல்ல, வீழ்ந்து விடுவோமோ என்ற பயத்தோடே எல்லாவற்றையும் அணுகும் எதிர்மறை சிந்தனைதான் குற்றம்.

`அஞ்சாமை பேதைமை' என்பது டி20-க்குரிய சொற்றொடர் அல்ல. இங்கே பயந்தால் பயனில்லை என்பதே உண்மை. அதை டிராவிட்டும் உணர்ந்து வீரர்களுக்கும் உணர்த்த வேண்டும்.

Team India
Team India
BCCI
`What if i fall?' என்று கேட்பவர்களிடம் `What if you fly?' என்று சொல்லி சிறகை விரிக்க வைப்பதே, வானை அளக்க வைக்கும். இதைப் புரியவைத்து, அணியின் மைண்ட் செட்டையே மாற்ற வேண்டும். இல்லையேல் கடினம்தான்!