Published:Updated:

INDvENG: கோலியும் சூர்யாவும் மட்டுமே போதுமா? அதிரடி இங்கிலாந்தை வீழ்த்த இந்தியாவின் வியூகம் என்ன?

விராட் கோலி

சில குறைகள் இருந்தாலும் இங்கிலாந்து அபாயகரமான அணிதான். அங்கே அலெக்ஸ் ஹேல்ஸ், பட்லர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், சாம் கரன் என ஏகப்பட்ட கேம் சேஞ்சர்களும் மேட்ச் வின்னர்களும் நிரம்பி இருக்கிறார்கள்.

Published:Updated:

INDvENG: கோலியும் சூர்யாவும் மட்டுமே போதுமா? அதிரடி இங்கிலாந்தை வீழ்த்த இந்தியாவின் வியூகம் என்ன?

சில குறைகள் இருந்தாலும் இங்கிலாந்து அபாயகரமான அணிதான். அங்கே அலெக்ஸ் ஹேல்ஸ், பட்லர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், சாம் கரன் என ஏகப்பட்ட கேம் சேஞ்சர்களும் மேட்ச் வின்னர்களும் நிரம்பி இருக்கிறார்கள்.

விராட் கோலி
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்திய அணி இன்று அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கிறது. பரபரப்பாக நடைபெறப்போகும் இந்தப் போட்டியில் வென்று பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? அவை பற்றிய ஒரு சிறு அலசல் இங்கே..

இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாகவே ஐ.சி.சி நடத்தும் பெரிய தொடர்களில் முக்கியமான கட்டத்தில் சொதப்பியிருக்கிறது. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் ட்ராஃபியை தோனி தலைமையில் இந்தியா வென்றிருந்தது. அதன்பிறகு, எல்லாமே சறுக்கல்தான். 2015 ஓடிஐ உலகக்கோப்பையில் அரையிறுதியோடு வெளியேற்றம், 2017 சாம்பியன்ஸ் ட்ராஃபியில் ரன்னர் அப், 2019 ஓடிஐ உலகக்கோப்பையில் அரையிறுதியோடு வெளியேற்றம், 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இறுதிப்போட்டியில் தோல்வி, அதே ஆண்டில் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றோடு வெளியேற்றம். இப்படியாக ஐ.சி.சி தொடர்களில் இந்திய அணியின் கடந்த 10 ஆண்டுகள் என்பது சுமாராகவே இருந்திருக்கிறது. முக்கியமான கட்டங்களில் சென்று சரியாக சொதப்பியிருக்கின்றனர்.

இந்த முறை அப்படி எதுவும் நடக்கக்கூடாது. இந்திய அணியின் பெர்ஃபார்மென்ஸூம் நம்பிக்கையளிக்கும் வகையிலேயே இருக்கிறது. சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே வீழ்ந்திருக்கிறார்கள். அதிலும் கடும் சவாலளித்தே தோற்றிருந்தனர். மற்ற எல்லா போட்டிகளிலும் மெச்சத்தகுந்த பெர்ஃபார்மென்ஸையே கொடுத்திருக்கின்றனர். பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் கோலியும் சூர்யகுமாரும்தான் பெரிய நம்பிக்கை. அடிலெய்டு மைதானம் கோலிக்கு மிகவும் பிடித்த மைதானம் வேறு. அதனால் இங்கே ஒரு தரமான இன்னிங்ஸை அவரிடம் எதிர்பார்க்கலாம்.

ஆனால், கோலி, சூர்யகுமார் தவிர்த்து மற்ற வீரர்களின் பெர்ஃபார்மென்ஸ் கொஞ்சம் முன்னும் பின்னுமாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, ஓப்பனிங் கூட்டணி இன்னும் அழுத்தமாக ஆடியாக வேண்டும். ராகுல் கூட ஸ்கோர் செய்யத் தொடங்கிவிட்டார். ஆனாலும் அவரின் அந்த மந்தமான தொடக்கத்தை கொஞ்சம் தவிர்த்துதான் ஆக வேண்டும்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
ரோஹித் அனுபவமிக்க வீரர். இதேமாதிரியான பெரிய போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டே ஆக வேண்டும். செயல்படுவார் என நம்புவோம்!

தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் இந்த கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. இருவருமே சொதப்புவதால் யாரை லெவனில் எடுப்பதென்பது கடைசி நிமிடம் வரை நீடிக்கும் கேள்வியாக இருக்கக்கூடும்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங், ஷமி, புவனேஷ்வர் குமார் இந்த மூவருமே தொடர்ச்சியாக சிறப்பாக வீசி வருகின்றனர். ஆட்டம் ரொம்பவே நெருக்கமாக செல்லும்பட்சத்தில் டெத் ஓவர்களில் மட்டும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். மற்றபடி இதுவரையிலான அவர்களின் ஃபார்மை தொடர்ந்தாலே இங்கிலாந்தை ஆட்டம் காண வைத்துவிடலாம். ஸ்பின்னர்கள் விஷயத்தில்தான் சில கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. அக்சர் படேலையும் அஷ்வினையும் இந்திய அணி பயன்படுத்தியிருக்கிறது. சஹாலை பென்ச்சிலேயேத்தான் வைத்திருக்கிறார்கள். அஷ்வின் சூப்பர் 12 சுற்றில் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். இந்த 6 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகள் நெதர்லாந்துக்கும் ஜிம்பாப்வேயிக்கும் எதிராக வந்தது. ஸ்பின்னர்களை பற்றி பேசும்போது, இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களுக்கு எதிரான அணுகுமுறை பற்றியும் பேசியாக வேண்டும். சூப்பர் 12 சுற்றில் எந்த அணியின் ஸ்பின்னர்களுக்கு எதிராகவும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்யவே இல்லை. அயர்லாந்தை சேர்ந்த டெலனிக்கு எதிராக மட்டுமே கொஞ்சம் அட்டாக் செய்திருக்கிறார்கள்.

இங்கிலாந்தை எதிர்த்திருக்கும் வேறெந்த அணியின் ஸ்பின்னர்களின் பெரும்பாலும் 6 ஐ தாண்டியதாக இல்லை.
ரவி அஷ்வின்
ரவி அஷ்வின்

இங்கிருந்துதான் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் பதுங்க வைக்க வேண்டும். அஷ்வின் அல்லது சஹால் யாராக இருந்தாலும் அவர்கள் வீசப்போகும் அந்த 4 ஓவர்கள் மிக முக்கியமானதாக இருக்கும்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரைக்கும் இந்த ஆண்டு முழுவதுமே பல ஏற்ற இறக்கங்களுடனேயே பயணித்திருக்கிறது. இயான் மோர்கன் கேப்டன் பதவியை விட்டு விலகி ஜாஸ் பட்லர் புதிய கேப்டன் ஆனதிலிருந்து அந்த அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தவே இல்லை. இந்தத் தொடரிலும் அது தொடர்ந்திருக்கிறது. கடந்த உலகக்கோப்பையைப் போல எந்தத் தடையுமின்றி அரையிறுதிக்கு வரவில்லை. போராடியே இங்கே வந்திருக்கின்றனர். பேட்டிங் - பௌலிங் என இரண்டிலுமே ஒரு முழுமையான பெர்ஃபார்மென்ஸ் அவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. பேட்டிங்கில் முதல் பந்திலிருந்தே அட்டாக் செய்ய வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், அதைப் பல போட்டிகளில் அவர்களால் செய்ய முடியவில்லை. செய்ய முயன்ற சில போட்டிகளிலும் அந்த அணுகுமுறையால் அவர்களுக்குப் பிரச்னையே ஏற்பட்டிருக்கிறது. பௌலிங்கிலும் சாம் கரன் மாதிரியான வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் எதோ ஒன்று மிஸ் ஆவதை போன்ற உணர்வே ஏற்படுகிறது. ஸ்பின்னர்கள் அடில் ரஷீத்தும் மொயீன் அலியும் முக்கிய பங்களிப்பை கொடுக்கக்கூடும்.

சில குறைகள் இருந்தாலும் இங்கிலாந்து அபாயகரமான அணிதான். அங்கே அலெக்ஸ் ஹேல்ஸ், பட்லர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், சாம் கரன் என ஏகப்பட்ட கேம் சேஞ்சர்களும் மேட்ச் வின்னர்களும் நிரம்பி இருக்கிறார்கள்.

ஜாஸ் பட்லர்
ஜாஸ் பட்லர்
யாராவது ஒருவருக்கு வசமாக க்ளிக் ஆனால் கூட போட்டியை அப்படியே தலைகீழாக மாற்றிவிடுவார்கள். ஆக, இந்திய அணி கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.

நவம்பர் 13 ல் மெல்பர்னில் பாகிஸ்தானை எதிர்கொள்ளப்போகும் அந்த ஒரு அணி எதுவென்பது இன்று தீர்மானம் ஆகப்போகிறது. என்ன நடக்கப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.