கிரிக்கெட்டில் பயிற்சியாளர்கள் என்று நமக்கு நன்கு தெரிந்த பல பேர் முன்னாள் வீரர்களாக இருந்தவர்கள்தான். பயிற்சியாளர்கள் மட்டுமல்ல, வர்ணனையாளர்கள்கூட ஒன்றிரண்டு பேர் தவிர பெரும்பாலானோர் அதற்கு முன்னர் கிரிக்கெட் வீரர்களாகக் களமிறங்கியவர்கள்தான்.
தற்போது டி20 உலகக்கோப்பையை வென்றிருக்கும் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் மேத்யூ மாட், சர்வதேச கிரிக்கெட்டே விளையாடாத அரிய பயிற்சியாளர்களுள் ஒருவர். 49 வயதாகும் மேத்யூ மாட் பயிற்சியாளராகக் கைவசம் நான்கு உலகக்கோப்பைகளை வைத்திருக்கிறார். அதிலும் இரண்டு உலகக்கோப்பைகள் இந்த ஒரே ஆண்டில் வென்றவை!

1973-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரத்தில் அக்டோபர் 13-ம் தேதி பிறந்தவர் மேத்யூ மாட். இவரின் பெற்றோர்கள் ஆசிரியர் பணியில் இருந்தவர்கள். உடன் பிறந்தவர்களில் இருவரும் ஆசிரியர் பணியில் இருந்துள்ளார்கள். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்ட மேத்யூ, அடிலெய்டில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவந்தார். இடக்கை பேட்ஸ்மேனான இவர், 1994-95-ம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் குயின்ஸ்லாந்து அணிக்காக அறிமுகம் ஆகியிருந்தார்.
பல சிறப்பான இன்னிங்க்ஸ்களை ஆடிய மேத்யூ, 1996-97 Sheffield Shield கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாய் இருந்தார். இருப்பினும் குயின்ஸ்லாந்து அணியில் இவருக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் விரைவில் விக்டோரியா நகரத்துக்கு இடம்பெயர்ந்தார். பின்னர் 1998 முதல் 2004 வரை விக்டோரியா அணிக்காகத் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். இவர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் அவருக்கு நிறைய ரசிகர்களையும் அணியில் நிரந்தரமான இடத்தையும் பெற்றுத் தந்தது. ஆனாலும் ஆஸ்திரேலிய அணிக்கு அவரால் தேர்வாக முடியவில்லை!

மேத்யூ மாட் தன் 32-வது வயதிலேயே பயிற்சியாளராகப் பயணத்தைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணியான நியூ சவுத் வேல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக இருந்த இவர், அதே அணிக்கு 2007-ம் ஆண்டு தலைமைப் பயிற்சியாளரானார். இவர் சிறப்பாக விளையாடி வென்ற Sheffield Shield கோப்பையை தலைமைப் பயிற்சியாளராகத் தன் முதல் ஆண்டிலேயே நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு வென்று கொடுத்தார்.
2008-ல் ஐ.பி.எல் தொடங்கியபோது தற்போதைய இங்கிலாந்தின் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் இடம்பெற்ற கொல்கத்தா அணிக்குத் துணைப் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகள் இருந்தார் மேத்யூ மாட். 2009 ஐ.பி.எல் முடிந்த பின் கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளராக நேர்காணலில் பங்குபெற்றார். ஆனால் தேர்வாகாத காரணத்தால் கொல்கத்தாவுடனான பயணத்தை முடித்துக்கொண்டார்.
மற்றொரு பக்கம் 2009-ல் முதல் முறையாக நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை டி20 தொடரையும் வென்றது நியூ சவுத் வேல்ஸ். வெற்றிகரமாகத் தொடங்கிய அவரது நியூ சவுத் வேல்ஸுடனான பயணம் 2011 வரை நீடித்தது. அதன்பின் இவரது பயிற்சியாளர் பயணம் இங்கிலாந்துப் பக்கம் திரும்பியது. இங்கிலாந்தில் உள்ளூர் அணியான கிளமோர்கன் கிரிக்கெட் கிளப்பின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார். அங்கு மூன்றாண்டுகள் பயணம் 2013 Yorkshire Bank 40 தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியுடன் முடிந்தது. இதற்கிடையில் 2010-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் துணைப் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2015 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் 2014-ல் அயர்லாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

இப்படி பல்வேறு நாடுகளில் வெவ்வேறு அணிகளுக்குப் பயிற்சியாளராக இருந்த மேத்யூ மாட் 2015-ல் தாய்நாடு திரும்பினார். எந்த நாட்டின் தேசிய அணிக்காக ஆட முடியாமல்போனதோ அதே ஆஸ்திரேலியாவின் பெண்கள் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளரானார். எல்லா அணிகளுடனும் சற்று குறைந்த காலமே இருந்த மேத்யூ ஆஸ்திரேலியப் பெண்கள் அணியுடன் மொத்தம் ஆறு ஆண்டுக் காலம் இருந்தார். இந்த ஆறாண்டுக் காலம் ஆஸ்திரேலியப் பெண்கள் கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பின் நடந்த மூன்று பெண்கள் டி20 உலகக்கோப்பையிலும் இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா. அதில் 2016-ல் தோல்வி அடைந்தாலும் 2018, 2020-ல் நடைபெற்ற இரண்டு உலகக்கோப்பையும் தொடர்ச்சியாக வென்று கலக்கியிருந்தது.
டி20 உலகக்கோப்பை மட்டுமல்லாமல் இவ்வாண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரையும் வென்றிருந்தது ஆஸ்திரேலியா. எப்போதும் பெண்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக ஆஸ்திரேலியா இருந்தாலுமே அந்த ஆதிக்கத்தை அடுத்த கட்டத்துக்கு ஒயிட்பால் கிரிக்கெட்டில் எடுத்துச் சென்றதில் மேத்யூ மாட்டின் பங்கு மிக அதிகம்!
மேத்யூ பயிற்சி அளிக்கும் முறையைப் பொறுத்தவரை அவர் எல்லோரையும் நன்கு புரிந்துகொள்வார். கிரிக்கெட் களத்தில் மட்டுமல்ல, கிரிக்கெட்டைத் தாண்டியும் வீராங்கனைகளை அறிவார்.ஆஸ்திரேலியா பெண்கள் அணி கேப்டன் மெக் லேனிங்
ஆஸ்திரேலியப் பெண்கள் அணியுடனான பயணம் முடிந்த பின் இங்கிலாந்து ஒயிட்பால் அணியின் தலைமைப் பயிற்சியாளராகியுள்ளார் மேத்யூ மாட். இவருடன் பயிற்சியாளர் பதவிக்குப் போட்டியிட்டவர் நாம் அனைவரும் நன்கு அறிந்த இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பால் காலிங்வுட். தற்போது பதவி ஏற்று ஆறு மாதங்கள்கூட முடிவடையாத நிலையில் இங்கிலாந்துக்கு டி20 உலகக்கோப்பையை வென்று வெற்றி ஃபார்முலாவைத் தொடர்ந்துள்ளார். 12 மாதக் காலத்துக்குள் இரண்டு நாடுகளுக்காக இரண்டு உலகக்கோப்பை வென்றது என்பது அரிதிலும் அரிதான மிகச் சிறப்பான ஒரு விஷயம்!
ஒருவர் சரியாக விளையாடவில்லை என்றால், அவரை அதிக பயிற்சி செய்யச் சொல்லுபவர் இல்லை மேத்யூ. அதற்குப் பதிலாக குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கச் சொல்வார். அது களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புபவர் மேத்யூ!மார்க் வாலேஸ்

மேத்யூ மாட் பயிற்சியில் விளையாடிய கிளமோர்கன் அணிவீரர் மார்க் வாலேஸ் இப்படிக் கூறியிருக்கிறார். இன்று உலகம் முழுதும் பரவலாக மனநலம் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளோம். ஆனால் மேத்யூ மாட் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால் அது களத்தில் வெளிப்படும் என்பதைப் பத்தாண்டுகளுக்கு முன்பே வீரர்களுக்கு உணர்த்தியுள்ளார்.
அதற்குத் தக்க சான்றுதான் வாலேஸ் மேற்கூறிய விஷயம். இப்படியான பல விஷயங்கள்தான் பயிற்சியாளர் மூலம் வீரர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மேத்யூ மாட் வென்றுள்ள நான்கு உலகக்கோப்பைகள் வெறும் சாதனைக்கான விஷயமாகப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட் உலகில் விளையாடாமல் பயிற்சியாளராக ஆசைப்படும் பலருக்கும் ஒரு நம்பிக்கை தரும் விஷயம்.
ஒருவரின் பயிற்சியளிக்கும் திறனுக்கும் விளையாடும் திறனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்ற ஆணித்தரமான கருத்தை உரக்கப் பதிவு செய்திருக்கிறார் மேத்யூ மாட்!