Published:Updated:

IND v NED: பற்ற வைத்துப் பறக்கவிட்ட Sur-Vir கூட்டணி - நெதர்லாந்தை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்த இந்தியா!

Kohli - Surya | Sur-Vir கூட்டணி ( ICC )

கடைசி பந்தில் சிக்சர் அடித்து அரைசதத்தை கடந்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 200 க்கும் மேல் இருந்தது. சூர்யகுமாரின் அதிரடியால் மட்டுமே இந்திய அணி 179 ரன்களை எட்டியது.

IND v NED: பற்ற வைத்துப் பறக்கவிட்ட Sur-Vir கூட்டணி - நெதர்லாந்தை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்த இந்தியா!

கடைசி பந்தில் சிக்சர் அடித்து அரைசதத்தை கடந்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 200 க்கும் மேல் இருந்தது. சூர்யகுமாரின் அதிரடியால் மட்டுமே இந்திய அணி 179 ரன்களை எட்டியது.

Published:Updated:
Kohli - Surya | Sur-Vir கூட்டணி ( ICC )
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்று நெதர்லாந்தை எதிர்கொண்டது. எதிர்பார்த்ததைப் போலவே இந்தப் போட்டியில் இந்திய அணி மிக சுலபமாக வென்றிருக்கிறது.

சிட்னியில் நடந்த இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவே டாஸை வென்றிருந்தார். கடந்த போட்டியில் டாஸை வென்று சேஸிங்கை தேர்வு செய்தவர், இந்தப் போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் ஓப்பனர்கள் ரோஹித், ராகுல் இருவருமே கடுமையாக சொதப்பியிருந்தனர். பவர்ப்ளேயில் மட்டுமே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எதிர்பார்த்த நல்ல தொடக்கம் இந்திய அணிக்கு கிடைத்திருக்கவில்லை. இந்தப் போட்டியில் அந்தக் குறையைப் போக்கும் வகையில் முதலில் பேட்டிங் எடுத்து அழுத்தமின்றி நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பது ரோஹித்தின் திட்டமாக இருந்திருக்கக்கூடும். ஆனால், அதற்கு அப்படியே தலைகீழாக இந்தப் போட்டியிலும் கொஞ்சம் சறுக்கலான தொடக்கமே கிடைத்திருந்தது. வான் மேக்கரன் வீசியிருந்த மூன்றாவது ஓவரில் ராகுல் lbw ஆகியிருந்தார். நன்கு ஃபுல்லாக வந்து உள்ளே திரும்பிய அந்தப் பந்தை ராகுல் பேடில் வாங்கியிருந்தார். ரிவியூவ் எதுவும் எடுக்கவில்லை. ஆனால், ரீப்ளேவில் பந்து லெக் ஸ்டம்பை மிஸ் செய்திருந்தது. ராகுல் ரிவியூவ் எடுத்திருந்தால் தப்பித்திருக்கலாம், தவறிவிட்டார்.

நம்பர் 3 இல் விராட் கோலி இறங்கினார். ஒரு மாபெரும் இன்னிங்ஸை ஆடிவிட்டு அவர் ஆடும் அடுத்த இன்னிங்ஸ் என்பதால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் நின்று அரைசதமும் அடித்திருந்தார். தொடக்கத்தில் மெதுவாகவே ஆரம்பித்தார். ரோஹித்துமே பெரிதாக அதிரடி காட்ட முனையவில்லை.

Rohit Sharma
Rohit Sharma
ICC
பவர்ப்ளேயின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 32-1 மட்டுமே. ஒரு பவுண்டரியும் ஒரு சிக்சரும் மட்டுமே அடித்திருந்தனர். 21 டாட்கள் ஆடியிருந்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணியின் பவர்ப்ளே ஸ்கோர் 31-3. தொடர்ந்து பவர்ப்ளேக்களில் 6 ரன்களுக்கும் குறைவாக எடுப்பதை இந்திய அணி தவிர்த்தே ஆக வேண்டும். கடந்த ஒரு வருடமாக இந்திய அணி கடைபிடித்து வந்த அட்டாக்கிங் அணுகுமுறைக்கு நேர் எதிரானது இந்த அணுகுமுறை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலிய மைதானங்களில் முழுக்க முழுக்க தடாலடியாக ஆடிவிட முடியாதுதான். ஆனாலும், இன்னும் கொஞ்சம் துடிப்பாகவே பவர்ப்ளேயில் ஆடலாம்.

பவர்ப்ளேயை கடந்தபிறகு ரோஹித் கொஞ்சம் வேகமெடுத்தார். லீட், பிரிங்கிள் போன்றோரின் பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த வேகத்திலேயே க்ளாசனின் பந்தில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பிறகு, விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் கூட்டணி சேர்ந்தனர். கடந்த போட்டியில் ஏமாற்றமளித்த சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் வெளுத்தெடுத்தார். அவருக்கு உறுதுணையாக கோலியுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். `வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக குறுக்காக (across) ஷாட்டுகளை ஆட முயலாமல் நேராக லாங் ஆன் / ஆஃபை குறிவைத்து V வடிவத்தில் ஷாட்களை ஆடுங்கள்' என பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக சச்சின் இந்திய வீரர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார்.

Kohli
Kohli
ICC
சச்சினின் அறிவுரையை கோலி கேட்டாரோ இல்லையோ ஆனால், கடந்த போட்டியிலிருந்தே அதிகமாக பௌலரின் தலைக்கு மேல் ஷாட்களை ஆடி பவுண்டரி எடுக்கிறார். இந்த போட்டியிலும் அதையேத்தான் செய்திருந்தார்.
SuryaKumar
SuryaKumar
ICC

க்ளியர் கட்டாக பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் அடித்திருந்தார். சூர்யகுமார் தனது வழக்கமான பாணியில் அடிமட்ட பேட்டிலிருந்து அடித்து வெளுக்கும் ஷாட்களை சிறப்பாக ஆடியிருந்தார். கடைசி பந்தில் சிக்சர் அடித்து அரைசதத்தை கடந்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 200 க்கும் மேல் இருந்தது.

சூர்யகுமாரின் அதிரடியால் மட்டுமே இந்திய அணி 179 ரன்களை எட்டியது. இல்லையேல் ஒரு 20 ரன்கள் குறைந்திருக்கவே வாய்ப்பு அதிகம். ரோஹித், கோலி, சூர்யகுமார் என மூவருமே அரைசதத்தை கடந்தது இந்தியாவிற்கு தெம்பளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது.

நெதர்லாந்துக்கு 180 ரன்கள் டார்கெட். அவர்களுக்கு இது கொஞ்சம் கடினமான டார்கெட்டாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் நெதர்லாந்து அணி துவண்டுவிடாமல் போராட்ட குணத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது பெருத்த ஏமாற்றம். இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சும் கூட நெதர்லாந்து அணிக்கு போராடும் எண்ணமே முளைத்திடாமல் செய்தது என்றும் கூறலாம்.

Bhuvi
Bhuvi
ICC
புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரே முழுமையாக மெய்டன் ஆனது. அவர் வீசிய அடுத்த ஓவர் விக்கெட் மெய்டன். விக்ரம்ஜித் சிங்கை போல்டாக்கி வெளியேற்றினார்.

இந்த இரண்டு ஓவர்களும்தான் நெதர்லாந்தின் மனதில் எங்கோ ஓர் மூலையில் ஒட்டியிருந்த நம்பிக்கையையும் துடைத்தெறிந்தது. இதன்பிறகு, எங்கேயும் நெதர்லாந்து எழவில்லை. இந்திய பௌலர்கள் வலைப்பயிற்சியில் வீசுவதைப் போல செம கூலாக வீசி விக்கெட்டுகளை அள்ளினர். பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் அக்சர் படேலை இஃப்திகார் அகமது அடித்து வெளுத்திருந்தார். அஷ்வினுக்கு விக்கெட்டே கிடைத்திருக்கவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் அக்சர், அஷ்வின் இருவருமே சிறப்பாக வீசியிருந்தனர். அஷ்வின் 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் அக்சர் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். புவனேஷ்வர் குமார் மூன்று ஓவர்களில் இரண்டு மெய்டன்களோடு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 123-9 என்ற ஸ்கோரையே எட்டியது. 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியைப் பெற்றது.

மற்ற அணிகளின் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்திய அணி ஆடிய இரண்டு போட்டிகளுமே முழுமையாக நடந்திருக்கிறது. இரண்டு போட்டிகளையுமே இந்திய அணி வென்றிருக்கவும் செய்கிறது. இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு இதன் மூலம் பிரகாசமடைந்திருக்கிறது.

ஆயினும், இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஆடப்போகும் போட்டி முக்கியமானதாகவும் சவால்மிக்கதாகவும் இருக்கும்.