Published:Updated:

IND v ZIM: சுழன்றடித்த சூர்யா; ஜிம்பாப்வேயை வீழ்த்தி டேபிள் டாப்பராக அரையிறுதிக்குச் சென்ற இந்தியா!

Team India ( BCCI )

இன்னொரு பேட்ஸ்மேனாக இருந்த பாண்டியா, ரன் எடுப்பதற்காக துணைக்கு ஓடினால் மட்டுமே போதும் என்ற அளவுக்கு சூர்யாவின் ஆட்டம் இருந்தது. நான்-ஸ்ட்ரைக்கரை, உண்மையான நான்-ஸ்ட்ரைக்கராகவும் பார்வையாளராகவும் இருக்க வைத்து ரன் வேட்டையாடும் கலை அவருக்கே கைவந்தது.

IND v ZIM: சுழன்றடித்த சூர்யா; ஜிம்பாப்வேயை வீழ்த்தி டேபிள் டாப்பராக அரையிறுதிக்குச் சென்ற இந்தியா!

இன்னொரு பேட்ஸ்மேனாக இருந்த பாண்டியா, ரன் எடுப்பதற்காக துணைக்கு ஓடினால் மட்டுமே போதும் என்ற அளவுக்கு சூர்யாவின் ஆட்டம் இருந்தது. நான்-ஸ்ட்ரைக்கரை, உண்மையான நான்-ஸ்ட்ரைக்கராகவும் பார்வையாளராகவும் இருக்க வைத்து ரன் வேட்டையாடும் கலை அவருக்கே கைவந்தது.

Published:Updated:
Team India ( BCCI )
சூர்யாவின் அதிரடி அரை சதத்தால் ஜிம்பாப்வேயை வீழ்த்தி டேபிள் டாப்பராக, அரையிறுதிக்குள் கம்பீரமாக நுழைந்திருக்கிறது இந்தியா!
Toss
Toss
ICC

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஓங்கிய நெதர்லாந்தின் கரத்தால் சூப்பர் 12-ல் ஜிம்பாப்வேவுடன் கடைசிப் போட்டியில் ஆடுவதற்கு முன்னதாகவே அரையிறுதிக்கு தேர்வாகி விட்டது இந்தியா. இருப்பினும், இந்தியா அரையிறுதியில் சந்திக்க வேண்டிய எதிரணியையும் நாளையும் தீர்மானிப்பதற்கான போட்டியாக ஜிம்பாப்வே உடனான இப்போட்டி மாறியது.

பேட்டிங் செய்து கடின இலக்கை ஜிம்பாப்வேக்கு நிர்ணயிப்பார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல, பவர்கட் ஆனதாகவே இந்திய பவர்பிளே ஓவர்கள் அமைந்தன. மெய்டனோடுதான் கே.எல் ராகுல் முதல் ஓவரையே தொடங்கி வைத்தார்.

இந்தாண்டு, சர்வதேச டி20களில் முதல் ஓவரில், ரோஹித் 62 பந்துகளில் 69 ரன்களையும், ராகுல் 33 பந்துகளில் 15 ரன்களையும் மட்டுமே எடுத்துள்ளனர். இந்த மிக மந்தமான தொடக்கம்தான் பவர்பிளே முழுவதும் வியாபிக்கிறது.
ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

பவர்பிளே ஓவர்களில் ஆடுவதென்றாலே மின்சாரக் கூண்டுக்குள் சிறை வைத்தது போலத்தான் ரோஹித்தின் அணுகுமுறை இருக்கிறது. இத்தொடரில் ஆடிய ஐந்து இன்னிங்ஸ்களில், 13 ஆவரேஜோடு, 89.7 ஸ்ட்ரைக்ரேட்டோடு, மொத்தமாகவே 52 ரன்களை மட்டுமே ரோஹித் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் மட்டுமே பவர்பிளேயில் பிழைத்திருக்கிறார். பேக் டு பேக் அரை சதத்தோடு ராகுல் கம்பேக் கொடுத்தாலும், அவரது டாட் பால்களால் விளையும் அழுத்தம், ரோஹித்துக்குள்ளும் கடத்தப்படுகிறது. போதாக்குறைக்கு அவரது புல் ஷாட் பலவீனமும் அவரது விக்கெட்டை வழக்கம் போல இப்போட்டியிலும் காவு வாங்கியது. 30-களிலேயே இத்தொடர் முழுவதும் உலவிக் கொண்டிருந்த பவர்பிளே ரன்கள் ஒரு வழியாக 46-ஐ இப்போட்டியில் எட்டியது என்பது மட்டுமே ஒரே ஆறுதல்.

மிடில் ஓவர்களில், ஜிம்பாப்வே தனது பிடியை இன்னமும் இறுக்கியது. 12 ஓவர்களுக்குள்ளேயே ஏழு பௌலர்களையும் பயன்படுத்தி விட்டனர். முதலில் ரன்களைக் கட்டுப்படுத்திய ஸ்பின்னர்கள், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை இக்கட்டிற்கு எடுத்துச் சென்றனர். சீன் வில்லியம்ஸ், ராசா வீழ்த்திய வலையில் வீழ்ந்து அடுத்தடுத்து கோலி, ராகுல், பண்ட் விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. மூன்று ஓவர்களில் வரிசையாக மூன்று விக்கெட்டுகள் வீழ, போட்டியின் திருப்புமுனையாக இது மாறுமென்ற தோற்றம் உருவானது. காரணம், 7 - 15 ஓவர்களில் மொத்தமே 61 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்திருந்தது.

Blessing in disguise என்பது போல் இந்த விக்கெட்டுகளால், போட்டியை மீட்டெடுக்க வேண்டிய முழுப்பொறுப்பும் சூர்யா - பாண்டியா பக்கம் சேர்ந்தது இந்தியாவிற்குச் சாதகமாகவே மாறியது.
சூர்யகுமார்
சூர்யகுமார்
ICC

ஸ்பின்னர்கள் நிறுத்தப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்டுவரப்பட, 16-வது ஓவர் சூர்யகுமாரின் அதிரடியைப் பார்க்கத் தொடங்கியது. முசரபானி வீசி சூர்யாவும் - பாண்டியாவும் தலா இரண்டு பவுண்டரிகளை அடித்த அந்த ஓவர்தான் இந்தியாவின் ஆட்டத்தின் வேகத்தை மறுபடியும் முடுக்கியது.

வழக்கம் போல தனது ஜிம்னாஸ்டிக் வித்தைகளை பேட்டுக்கும் கற்றுத் தந்து எல்லா திசைகளிலும் ரன்களை எடுக்கத் தொடங்கினார் சூர்யா. எந்த பௌலரைக் கொண்டு எந்த லைனில் எந்த லெந்தில் இவருக்குப் பந்துவீச செய்வது என்ற குழப்பம் வழக்கம்போல எதிரணியைத் தொத்திக் கொண்டது. இன்னொரு பேட்ஸ்மேனாக இருந்த பாண்டியா, ரன் எடுப்பதற்காக துணைக்கு ஓடினால் மட்டுமே போதும் என்ற அளவுக்கு சூர்யாவின் ஆட்டம் இருந்தது. நான்-ஸ்ட்ரைக்கரை, உண்மையான நான்-ஸ்ட்ரைக்கராகவும் பார்வையாளராகவும் இருக்க வைத்து ரன் வேட்டையாடும் கலை அவருக்கே கைவந்தது.

18வது ஓவரில் வந்த அந்த டீப் எக்ஸ்ட்ரா கவர் மேலே பறந்த சிக்ஸரும் சரி, 18.4வது பந்தில் வந்த அந்த பவுண்டரியும் சரி, டாப் கிளாஸ் ஷாட்கள்.

20-வது ஓவரில், கடைசி நான்கு பந்துகளில் வந்த இரண்டு சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியுமே நம்ப முடியாத ஷாட்கள்தான். லோ ஃபுல் டாஸாக, கிட்டத்தட்ட யார்க்கர் லெந்தில் வந்த இரு பந்துகளையுமே பவுண்டரி லைனைப் பார்க்க விரட்டினார்.

SuryaKumar
SuryaKumar
ICC
கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் இந்தியா 79 ரன்களைக் குவித்தது. இதில் 70 சதவிகிதம் ரன்கள் சூர்யா அடித்ததுதான், அதுவும் இந்த 4 ஓவர்களில் மட்டும் அவரது ஸ்ட்ரைக்ரேட் 289.5.
இந்தாண்டு மட்டும் 1000 ரன்களை டி20-ல் கடந்திருக்கிறார் சூர்யா. 2021-ல் இதே மைல்கல்லை எட்டிய ரிஸ்வானுக்கு அடுத்து இதனைச் செய்திருக்கும் ஒரே வீரர் சூர்யா மட்டும்தான்.

இறுதி ஓவரில் ஒரு பந்தைக்கூட சந்திக்கும் தேவை அக்ஸருக்கு இருக்காதபடி அதிரடி காட்டி, 187 ரன்களுக்கு இலக்கை எடுத்துச் சென்றுவிட்டார். அதிரடியாக ஆடுவது பெரிய விஷயமென்றால், அவரது ஸ்ட்ரைக்ரேட்டுக்கு சமமாக ஆவரேஜும் நம்பிக்கையளிப்பதுதான் அவர் ஏன் ஸ்பெஷல் என உணர்த்துகிறது. இதுவரை அவர் சர்வதேச டி20-யில் 50+ ஸ்கோரை எட்டிய எந்தப் போட்டியிலும் அவரது ஸ்ட்ரைக்ரேட் 147-க்குக் கீழ் இறங்கியதேயில்லை.

2016-ல் இந்திய பேட்டிங் யூனிட் மொத்தத்தையும் கோலி தூக்கிச் சுமந்தார் என்றால், இந்தாண்டு ஒவ்வொரு போட்டியிலும், அடிக்க வேண்டிய ரன்களை விட 20-25 ரன்கள் அதிகமாக வருவதை சூர்யாதான் உறுதி செய்கிறார். அதுதான் இந்தியாவின் வெற்றியையும் உறுதி செய்கிறது.

187 ரன்களை டிஃபெண்ட் செய்து, டாப் ஆஃப் தி டேபிளுக்கு முன்னேறும் நோக்கோடு, புவனேஷ்வரோடு தொடங்கியது இந்தியா. ஸ்விங் கிங்கான புவனேஷ்வர் ஃபுல் லெந்தில் வீசிய முதல் பந்தே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அவுட் ஸ்விங்காகி விக்கெட்டோடுதான் தொடங்கியது. விக்கெட் மெய்டனோடு அமோகமாக ஆரம்பித்தார்.

இத்தொடரில் வேறெந்த பௌலரும் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்டனே வீசாத நிலையில், புவனேஷ்வர் மூன்று மெய்டன்களை வீசியுள்ளார். டி20 வரலாற்றில் அதிக மெய்டன்களை (10) வீசியவரும் அவர்தான்.

அடுத்த ஓவரிலேயே ஷகாப்வாவின் ஸ்டம்புகளைச் சிதறடித்து அர்ஷ்தீப் இன்னொரு டக் அவுட்டை ஜிம்பாப்வே கணக்கில் சேர்த்தார். அங்கிருந்து ஐந்தாவது ஓவர்வரை முங்யோங்கா - எர்வீன் கூட்டணி சற்றே சமாளித்தது. அடுத்த மூன்று ஓவர்களில் இந்தியா ஏறக்குறைய போட்டியின் முடிவை முடிவு செய்ய வைத்துவிட்டது. ஷமி மற்றும் பாண்டியா வீசிய அந்த மூன்று ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை ஜிம்பாப்வே பறிகொடுத்தது. 36/5 என மொத்தமாக ஜிம்பாப்வேயின் அஸ்திவாரத்திலேயே மண்ணைப் போட்டு மூடியது இந்தியா.

Raza
Raza

ஜிம்பாப்வேயின் மீட்பராக அவர்களது எழுச்சிக்கான தொடக்கப்புள்ளியாக ராசாதான் இருந்து வருகிறார். இந்தாண்டு, 500 ரன்களையும், 25 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். வேறெந்த ஆல்ரவுண்டரும் டி20 வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்தியதில்லை. ஒருகட்டத்தில் 50 ரன்களையாவது அணி தாண்டுமா என்ற நிலைதானிருந்தது. ஆனால் 36-ல் இருந்து 96 வரை அணியின் ஸ்கோரை ராசா - ரியான் பர்ல் கூட்டணி எடுத்துச் சென்றது. 35 பந்துகளில் 60 ரன்களைச் சேர்த்தது. அக்ஸர் - அஷ்வின் ஓவர்களில் ரன்களைத் துரிதமாகச் சேரத்தது. எனினும், ரியான் பர்ல் விக்கெட்டோடு மொத்தமாக ஜிம்பாப்வே சரியத் தொடங்கிவிட்டது. ஐந்து ஓவர்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இந்தியப் படை வீழ்த்திவிட்டது. 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டேபிளின் உச்சத்தில் இந்தியா முடித்தது.

ராசாவை மட்டுமே சுற்றி ஜிம்பாப்வேயின் பேட்டிங் பலம் அமைந்திருப்பது இன்னுமொரு முறை அவர்களை வீழ்ச்சியை சந்திக்க வைத்துள்ளது. ரியானுடனான அவரது பார்ட்னர்ஷிப் மட்டுமே 100 ரன்களையாவது அவர்களைத் தாண்ட வைத்தது.

இப்போட்டியில் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் கடைசியில் முடித்ததனால், அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தேர்வு பெறும் வாய்ப்பை ஜிம்பாப்வே பறிகொடுத்துள்ளது.

8 புள்ளிகளை சூப்பர் 12-ல் வென்றுள்ள ஒரே அணியென்ற பெருமையோடு இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ரோஹித் ஏற்கெனவே கூறியதைப் போல அவர்களது டிஃபெண்டிங் திறனையும் இப்போட்டி பரிசோதிக்க உதவியது.

Team India
Team India
ICC

இந்த வெற்றி மூலமாக தனது அரையிறுதி எதிரணியாக இங்கிலாந்தைத் தேர்ந்தெடுத்துள்ளது இந்தியா.

சூப்பர் 12 -ல் நிகழ்த்திய மாயங்கள், அரையிறுதிலும் தொடருமா?