Published:Updated:

'Please Update and Restart' - ஆதிகாலத்து அணுகுமுறையிலிருந்து விடுபடுமா இந்திய அணி?

Team India ( BCCI )

இந்தியா 2007 உலகக்கோப்பை தொடரில் தான் ஒரு ஓவருக்கு அதிகபட்சமாக 8.64 என்ற ரன்களை எடுத்து இருக்கிறது. மற்றதில் எல்லாம் அதற்கு குறைவு தான். வெற்றியும் 2007 தொடரில் தான் கிடைத்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

'Please Update and Restart' - ஆதிகாலத்து அணுகுமுறையிலிருந்து விடுபடுமா இந்திய அணி?

இந்தியா 2007 உலகக்கோப்பை தொடரில் தான் ஒரு ஓவருக்கு அதிகபட்சமாக 8.64 என்ற ரன்களை எடுத்து இருக்கிறது. மற்றதில் எல்லாம் அதற்கு குறைவு தான். வெற்றியும் 2007 தொடரில் தான் கிடைத்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

Published:Updated:
Team India ( BCCI )

இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் தோல்வியுற்று வெளியேறி ஒரு வாரம் ஆகிவிட்டது. அதன் பின்பு ஐ.பி.எல் தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கான அறிவிப்புகள், அடுத்த நியூசிலாந்து தொடர் போன்று கிரிக்கெட் உலகம் அடுத்த வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டது. சரி, இந்த உலகக்கோப்பை போனால் அடுத்த உலகக்கோப்பை என்று வழக்கம் போல கிரிக்கெட் ரசிகர்கள் ஓய்ந்துவிடவில்லை.

இந்திய அணி டி20 ஆடும் விதத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்தே தீர வேண்டும் என்கிற கருத்தை ரசிகர்கள் வலுவாக முன்வைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
Team India
Team India
ICC

டி20 கிரிக்கெட் மிக வேகமாக வளர்ந்து வரும் ஃபார்மட். மிகக் குறுகிய காலத்தில் தன்னை மெருகேற்றி தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே செல்லும் ஃபார்மட் இது. 2007 உலகக்கோப்பை இறுதியில் இந்தியா வெற்றி பெற்ற போது எடுத்திருந்த ஸ்கோர் 157. ஆனால் தற்போது இதை வெற்றி இலக்காக நிர்ணயித்தால் அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற அனுபவம் குறைந்த அணிகள் கூட எளிதாக வென்று விடும். இதுதான் டி 20 கிரிக்கெட் அடைந்திருக்கும் அப்டேட். தற்போதைய காலக்கட்டத்தில் எதிரணியைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த ஸ்கோர் எதுவென்று கேட்டால் 200 என்று சொல்வது தான் நியாயமாக இருக்கும்.

சரி இந்த 200 என்ற ஸ்கோரை எட்ட வேண்டுமென்றால் ஒரு அணி எப்படி இருக்க வேண்டும்? குறைந்தது எட்டு பேர் பேட்டிங் பிடிக்கும் திறனுடன் இருத்தல் வேண்டும். பேட்டிங் பிடிக்கும் திறன் என்றால் ஒரு ரன் ஓடி மறு பக்கம் வருவது கிடையாது. சிக்சர்கள் அடித்து ரன்களை அதிகப்படுத்தும் வித்தை தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஏழாவது வீரராக சிக்சர் மன்னன் லிவிங்ஸ்டன் களம் இறக்கியிருந்தார். ஆனால் அரை இறுதியில் இந்தியாவோ அதே ஏழாவது இடத்தில் அஷ்வினை களம் இறக்கியிருந்தது.
Liam Livingston | லிவிங்ஸ்டன்
Liam Livingston | லிவிங்ஸ்டன்
AP

கடைசி இரண்டு ஓவர்களில் களத்தில் லிவிங்ஸ்டன் இருப்பதற்கும் அஷ்வின் இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டு? லிவிங்ஸ்டனை கடந்தும் அடுத்ததாக களமிறங்க சாம் கரன், கிறிஸ் வோக்ஸ் போன்ற வீரர்கள் பெவிலியனில் இருந்தனர்.

அடுத்தது டி20 போட்டிகளில் விளையாடும் முறை. 120 பந்துகளில் 200 ரன்கள் எடுக்க முதல் எட்டு வீரர்கள் ஆளுக்கு 25 ரன்கள் எடுத்தாலே போதும். சில நேரங்களில் ஒரு வீரர் ரன் எடுக்காமலே வெளியேறி விடுவார். சில நேரங்களில் அதே வீரர் அரைசதம் அடிப்பார்.

இதெல்லாம் அந்த நாளை பொறுத்தது. இது ஸ்கோரில் பெரிய மாற்றத்தை கொண்டு வராது. எது ஸ்கோர், வெற்றி, தோல்வி என அனைத்திலும் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றால் ஒரு வீரர் எத்தனை பந்துகளை பிடித்து எத்தனை ரன்களை அடிக்கிறார் என்பதுதான். 25 ரன்கள் அடிக்க 12 பந்துகள் எடுத்துக் கொள்ளும் வீரர் தான் டி20 இல் சூப்பர்ஸ்டார். அதே 25 ரன்களை எடுக்க ஒருவர் 20 பந்துகளை எடுத்தால் அணியின் ஸ்கோரை அது பாதிப்பது மட்டுமல்லாது பின் வரும் வீரர்களுக்கான வாய்ப்பையும் அது கெடுத்து விடுகிறது.

சரி எல்லா வீரர்களும் இப்படி அதிரடியாக தான் விளையாட வேண்டுமா என்றால் இல்லை தான். ஒரு நிதானமாக ஆடும் வீரரை சுற்றி அதிரடி வீரர்கள் இருக்குமாறு அணியைக் கட்டமைக்க வேண்டும்.

Stokes
Stokes
ICC

இங்கிலாந்து ஸ்டோக்ஸ் அல்லது மலானை சுற்றி பட்லர், ஹேல்ஸ், சால்ட், மொயீன், லிவிங்ஸ்டன் என வைத்திருப்பது போல. நிதானமான வீரர் என்றாலும் குறைந்தது அவர் அவுட் ஆகும் போது 150 ஸ்ட்ரைக் ரேட் இருந்தால் அணி நல்ல நிலையில் இருக்கும். Anchor (தொடர் விக்கெட்டுகள் விழாமல் காக்கும் பொறுப்பு) என்பதற்காக ஒரு பவுண்டரி அடித்து விட்டு இரண்டு மூன்று பந்துகள் ரன் எடுக்காமல் விட்டுவிட்டால் சிக்கல் தான்.

இப்போது இந்திய அணியில் இருக்கும் பிரதான பிரச்சனை இது தான்.

ஒரே ஒரு anchor வீரர் இருப்பதற்கு பதிலாக மூன்று பேர் இருக்கிறார்கள். அதுவும் முதல் மூன்று வீரர்களாக இருக்கிறார்கள். இவர்களின் அதிரடியற்ற தற்காப்பு ஆட்டமுறை பின்வரும் சூர்யகுமார், ஹர்திக் போன்றோர் மேல் பெருத்த பாரத்தை ஏற்றி வைக்கிறது.
கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

இந்த நிதான அணுகுமுறை காரணமாக பத்து ஓவர்களில் வெறும் 60 ரன்கள் தான் பெற முடிகிறது. எல்லா பந்தையும் எப்படி அடிக்க முடியும் என்ற கேள்வி நியாயம் தான். பவர்பிளேயில் கிடைக்கும் 36 பந்துகளில் 4 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் வந்தாலே நாற்பது ரன்கள் வந்துவிடும். ஆனால் இந்தியா அரையிறுதியில் வெறும் 39 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே இந்தியா இழந்திருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் முறை என்ன? முடிந்தவரை பந்தை பழையதாக்கி அதன் பின்பு ரன்கள் எடுப்பது தான். யாராவது டெஸ்ட் போட்டியில் முதல் ஐந்து ஓவர்களில் ரன்னே வரவில்லை என அடிக்க நினைத்து அவுட் ஆனால், "ச்சே...ரன்னே வரலனு தான் ப்பா அடிக்க நெனச்சு அவுட் ஆயிட்டான்" என கொஞ்சுவோமா என்ன? "டெஸ்ட்டில் போய் ஏன் இப்படி அடிக்க நினைக்கிறான்" என்று தானே விமர்சிப்போம்? அதே போல தான் டி20 போட்டிகளும். டெஸ்ட்டில் எப்படி எடுத்த உடன் ரன் சேர்க்கக் கூடாதோ அதற்கு அப்படியே தலைகீழாக டி20யில் எடுத்த உடன் ரன்களை சேர்க்க வேண்டும்.

விக்கெட் விழுந்தாலும் ரன் சேர்ப்பதில் தான் கவனம் இருக்க வேண்டும் தவிர விக்கெட்டை பாதுகாப்பதில் இருக்கக் கூடாது. டெஸ்ட்டில் தான் பத்து விக்கெட் விழும் வரை ஆட முடியும். டி20 போட்டிகளில் 20 ஓவர் முடியும் வரைதான் ஆட்டமே!

செட் ஆகிவிட்டு பிறகு அடிக்கும் உக்தி எல்லாம் ஒரு நாள் போட்டிகளில் தான் பயன்படும். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை ஏற்கனவே செட் ஆன வீரர்கள் தான் களமிறக்கப்பட வேண்டும். இருக்கிற 120 பந்துகளில் செட் ஆக என ஆளுக்கு 10 பந்துகள் எடுத்துக் கொண்டால் எப்படி? நன்றாக கவனித்து பார்த்தால் இந்தியா போன்ற பல நிதான வீரர்களைக் கொண்ட அணிகள்தான் நியூசிலாந்தும் பாகிஸ்தானும். இந்த இரு அணியுமே இந்தியா போல நாக்-அவுட் போட்டிகளில் தடுமாறுவதைக் காண முடியும். சுற்றிலும் அதிரடி வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தான் டி20 கிரிக்கெட்டை சரியாக அணுகுபவை.

இந்த முறைக்கு ஏற்றவாறு வீரர்களைக் கண்டறிந்து ஆட வைத்தால் தான் மற்றுமொரு டி20 கோப்பையை இந்திய அணி வெல்ல முடியும். சாம்சன், திரிப்பாதி, ப்ரித்வி ஷா, கிஷன் போன்ற வீரர்களை மெருகேற்ற வேண்டியது பிசிசிஐ-யின் கடமை.

Prithivi Shaw
Prithivi Shaw
IPL
கடந்த எட்டு உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா 2007 உலகக்கோப்பை தொடரில் தான் ஒரு ஓவருக்கு அதிகபட்சமாக 8.64 என்ற ரன்களை எடுத்து இருக்கிறது. மற்றதில் எல்லாம் அதற்கு குறைவு தான். வெற்றியும் 2007 தொடரில் தான் கிடைத்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த உலகக்கோப்பை இறுதியில் நசீம் ஷா ஓவரில் வரிசையாக மூன்று முறை பந்தை தொடவே முடியாமல் போனாலும் அடுத்த பந்தில் பட்லர் தைரியமாக ஸ்கூப் ஷாட் மூலம் சிக்சர் அடித்தார். ஒருவேளை அவுட் ஆகிவிட்டால் என்ன செய்வது? என்று பட்லர் நினைத்திருந்தால் பாகிஸ்தானிடம் கோப்பையை இங்கிலாந்து பறிகொடுத்திருக்கும். பட்லரிடமும் இங்கிலாந்திடமும் இருக்கும் துணிச்சலும் அவர்களி ஆழமான அணிக்கட்டமைப்பும்தான் இந்திய அணிக்கு இப்போது தேவைப்படுகிறது. அதுமட்டுமே டி20 க்களில் இந்திய அணிக்கு பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும்.

Please Update and Restart your system, India!