Published:Updated:

INDvSA: ஸ்விங் Vs பவுன்ஸ்; பெர்த்தில் நடந்த பௌலிங் யுத்தம்; பேட்டிங் அல்ல பிரச்னை!

Arshdeep |INDvSA ( ICC )

INDvSA: துவண்டு போயிருக்கும் 130 கோடி ரசிகர்களின் நம்பிக்கையைத் தட்டி எழுப்ப அர்ஷ்தீப்புக்கு எப்போதுமே ஒரே ஒரு பந்தே போதுமானதாக இருக்கிறது.

INDvSA: ஸ்விங் Vs பவுன்ஸ்; பெர்த்தில் நடந்த பௌலிங் யுத்தம்; பேட்டிங் அல்ல பிரச்னை!

INDvSA: துவண்டு போயிருக்கும் 130 கோடி ரசிகர்களின் நம்பிக்கையைத் தட்டி எழுப்ப அர்ஷ்தீப்புக்கு எப்போதுமே ஒரே ஒரு பந்தே போதுமானதாக இருக்கிறது.

Published:Updated:
Arshdeep |INDvSA ( ICC )
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான சூப்பர் 12 போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியை தென்னாப்பிரிக்க அணி வென்றிருந்தது. இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்திருக்கிறது.

இந்த போட்டியின் 'Talking Point' ஆக என்னவிருக்கிறது என சமூகவலைதளங்களில் கொஞ்சம் காதுகளைக் கொடுத்துக் கேட்டால் சிலவற்றை புரிந்துகொள்ள முடிந்தது.

நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடாத ராகுலை பென்ச்சுக்கு அனுப்ப வேண்டும். தினேஷ் கார்த்திக் அவ்வளவுதான். அவரது கரியரே முடிந்துவிட்டது. தீபக் ஹூடா ஒரு அற்புதமான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார் என இந்திய அணியின் தோல்விக்கு பேட்டர்களின் பக்கம் நின்றே பல குறைகளையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். பேட்டிங் என்பது மட்டுமே விவாதங்களின் மையமாக இருக்கிறது. ஆனால், நேற்றைய போட்டியை ஒரு மீள்பார்வை செய்யும் போது பேட்டர்களுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. ஏனெனில், பேட்டிங்தான் இந்திய அணியின் தோல்விக்குக் காரணமெனில் தென்னாப்பிரிக்க அணியுமே சுமாராகத்தான் பேட்டிங் ஆடியிருந்தது. நல்ல ஃபார்மிலிருந்த டீகாக்கும் ரூஸ்ஸோவும் ரோஹித் - ராகுலை போன்றே தொடக்கத்திலேயே அவுட் ஆகிவிட்டனர். கேப்டன் பவுமா வழக்கம்போல பேட்டிங்கில் ஒன்றுமே செய்யவில்லை. மில்லரும் மார்க்ரமும் மட்டுமே அணியைக் காப்பாற்றினார்கள். அதிலும், மார்க்ரமெல்லாம் பல முறை விக்கெட் இழக்கும் வாய்ப்பிலிருந்து தப்பிப்பிழைத்துதான் அரைசதத்தை கடந்திருந்தார். ஆக, இரண்டு அணிகளுமே பேட்டிங்கில் கடுமையாகத்தான் திணறியிருக்கின்றனர். அப்படியிருக்கையில்,

நேற்றைய போட்டியின் 'Talking Point' ஆக பெரும்பாலான விவாதங்களின் மையமாக 'பேட்டிங்' மட்டுமே இருக்குமெனில், 'பெர்த்' இல் நடைபெற்ற அந்த போட்டியை நாம் முழுமையாக அனுபவிக்க தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது.
Ngidi
Ngidi
ICC
'It's got pace, It's got bounce and It's a test for the batsman...'

என ஆன் ஃபீல்ட் கமெண்ட்டேட்டர் ரவி சாஸ்திரி கேலரியிலிருந்து கனீர் குரலில் வர்ணிக்க அடுத்த நொடியிலேயே இங்கிடி வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரியில் ஹர்திக் பாண்ட்யா ஃபைன் லெக்கில் அடிக்க முற்பட்டு ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியிருந்தார். ரவி சாஸ்திரி புல்லரிக்கும் அனுபவமாக மாற்றிவிட்ட பல முக்கிய தருணங்களில் இதையும் ஒன்றாக இணைத்துக் கொள்ளலாம். விக்கெட்டை இழந்த பிறகு ஹர்திக்கே கொஞ்சம் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருந்தார்.

ஹர்திக் ஷார்ட் பிட்ச் டெலிவரியை சரியாகக் கணித்திருந்தார். ஃபைன் லெக் ஃபீல்டரையும் மனதில் வைத்திருந்தார். அதனால்தான் வலுவாக அடிக்க முற்படாமல், முறையாக ஆஃப் சைடில் கொஞ்சம் நகர்ந்து நிதானமாக வருடும் தொனியில் கட்டுக்கோப்பாக பந்தைத் தட்டிவிட முயன்றார். ஆனாலும் பந்து திமிறி ஃபைன் லெக்கில் கேட்ச்சாக மாறியது. ஹர்த்திக்கிற்கு நாம் எதைத் தவறாக செய்தோம் என்றே புரியவில்லை. ஹர்த்திக்கிற்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சி, நேற்று இரு அணிகளின் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்குமே நிகழ்ந்திருந்தது. பௌலர்கள் பேட்ஸ்மேன்களுக்கு உண்டாக்கிய அந்த மிரட்சியும் குழப்பமுமே நேற்றைய போட்டியின் 'Talking Point' ஆக இருந்திருக்க வேண்டும்.

இந்த உலகக்கோப்பைக்காக இந்திய அணி ரொம்பவே சீக்கிரமாக ஆஸ்திரேலியாவிற்கு பயணித்திருந்தது. அங்கே நேற்றைய போட்டி நடைபெற்ற பெர்த் மைதானத்தில் மட்டுமே 10 நாட்கள் முகாமிட்டிருந்தார்கள். அங்கேயே மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி போட்டிகளிலுமே கூட ஆடியிருந்தனர். இந்த நீண்ட முன் தயாரிப்பிற்கு காரணம் இல்லாமலும் இல்லை. ஆஸ்திரேலிய மைதானங்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கிடைக்கும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பெரும்பலமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுமே பவுன்ஸால் திணறக்கூடும் என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால், அந்த ஆஸ்திரேலிய மைதானங்களிலேயே ஒப்பீட்டளவில் பெர்த்தில்தான் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகும்.

போதுமான முன் தயாரிப்புகளுக்குப் பிறகுமே இந்த பெர்த் மைதானத்தில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவைத் தவிர யாராலுமே சோபிக்க முடியவில்லை. அதேமாதிரிதான், தென்னாப்பிரிக்க அணிக்குமே கூட. போட்டிக்கு முன்பாக கொடுத்த பேட்டி ஒன்றில்

Rabada
Rabada
ICC
இது அந்நிய மைதானம் போன்றே இல்லை. எங்களின் சொந்த மைதானம் போன்ற தன்மையுடனேயே இருக்கிறது.
ரபாடா

என ரபாடா பேசியிருந்தார். தென்னாப்பிரிக்க மைதானங்களின் Pace & Bounce ஐயும் பெர்த் மைதானத்தின் Pace & Bounce ஐயும் ஒப்பிட்டு ரபாடா இவ்வாறாக பேசியிருந்தார். ரபாடாவுக்கு சொந்த மைதானம் எனில் டீகாக்கு மட்டும் இது அந்நிய மைதானாமா? தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களால் சாதிக்க முடிந்ததை அவர்களின் பேட்ஸ்மேன்களால் ஏன் சாதிக்க முடியவில்லை?

டி20 என்பது முழுக்க முழுக்க பேட்டர்களின் ஆட்டம் என்றே நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,

நேற்று பெர்த்தில் நடந்தது பௌலர்களின் ஆட்டம். இல்லை... பௌலர்களின் யுத்தம்!

எதிராளியின் வியூகங்களை முன்னரே அறிந்து நகர முடியாதபடிக்கு திருப்பித் தாக்கும் போர் வீரர்களுக்கு ஒப்பான தீரத்தையே நேற்று இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களும் வெளிப்படுத்தியிருந்தனர்.

பௌலர்களின் ஆட்டம் என்று சொல்வதற்கான காரணத்தை டாஸிலிருந்தே உணர முடிந்தது. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் சரிந்து விழுந்தனர். இப்படி ஒரு சொதப்பல் நடக்கக்கூடும் என முன்பே அனுமானித்ததால்தான் அக்சர் படேலை பென்ச்சில் வைத்துவிட்டு தீபக் ஹூடாவை அழைத்து வந்து ரோஹித் சர்மா பேட்டிங் ஆர்டரை இன்னும் வலுவாக நீட்சியடைய வைத்திருந்தார். திட்டமெல்லாம் ஓகேதான்! ஆனாலும் ரோஹித்தின் படையால் அனுமானித்த வீழ்ச்சியை நிகழவிடாமல் தடுக்க முடியவில்லை.

பர்னல் ஓவர் தி விக்கெட்டில் வந்து வீச முதல் ஓவரையே ராகுல் மெய்டனாக்கிவிட்டார். மன்னிக்கவும்.. இந்த வாக்கிய கட்டமைப்பே தவறு. ராகுல் ரொம்பவே தற்காப்பாக யோசிக்க பர்னல் முதல் ஓவரையே மெய்டனாக்கிவிட்டார்! இதுதான் சரியானதாக இருக்கும்.

ரபாடாவின் ஷார்ட் பிட்ச் டெலிவரியில் சிக்சருடன்தான் ரோஹித் ரன் கணக்கையே தொடங்கினார். ரபாடாவை சமாளித்த ரோஹித்தால் இங்கிடியை சமாளிக்க முடியவில்லை. வீரியமாக வந்து மோதிய ஷார்ட் பாலை அப்படியை மடக்கி அடிக்க முற்பட்டு இங்கிடியிடமே கேட்ச் ஆனார் ரோஹித். அதே ஓவரின் இன்னொரு ஷார்ட் பாலில் ராகுலும் காலி!

Ngidi
Ngidi
ICC
முதல் 10 ஓவருக்குள்ளாக மட்டும் இங்கிடி 3 ஓவர்களை வீசியிருந்தார். அவர் வீசிய இந்த 18 பந்துகளில் 10 பந்துகள் ஷார்ட் பிட்ச்சாக வீசப்பட்டவை. இந்த 10 பந்துகளில் ஒரு 4 பந்துகளில்தான் ரோஹித், ராகுல், கோலி, ஹர்திக் என இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாக சரிந்தது.

4 பந்துகள் சரியாக இலக்கை எட்டியது. மீதமுள்ள 6 பந்துகளும் அந்த 4 பந்துகள் இலக்கை எட்டுவதற்கான ஆயத்த வேலைகளை செய்து கொடுத்திருந்தது. பர்னலின் ஆங்கிள்கள், நோர்கியாவின் வேகம் + பவுன்ஸ் அத்தனையுமே இந்திய அணியை திணறடித்திருந்தது.

தென்னாப்பிரிக்க பௌலர்கள் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை ஒரு ஆயுதமாக எடுத்திருக்க, இந்திய பௌலர்கள் ஸ்விங்கை பெரும் ஆயுதமாக பயன்படுத்தியிருந்தனர். குட்லெந்தில் கொஞ்சம் ஃபுல்லாக வீசி பந்தை மூவ் செய்திருந்தனர்.

துவண்டு போயிருக்கும் 130 கோடி ரசிகர்களின் நம்பிக்கையைத் தட்டி எழுப்ப அர்ஷ்தீப்புக்கு எப்போதுமே ஒரே ஒரு பந்தே போதுமானதாக இருக்கிறது.
Arshdeep
Arshdeep
ICC

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வீசிய முதல் பந்திலேயே பாபர் அசாமை இன்ஸ்விங்கரில் வீழ்த்திய அர்ஷ்தீப் இங்கே டீகாக்கையும் வீசிய முதல் பந்திலேயே வீழ்த்தியிருந்தார். ஒரு அவுட் ஸ்விங்கரில் டீகாக்கை வீழ்த்த, அடுத்தும் ஒரு அவுட் ஸ்விங்கரை ரூஸ்ஸோவுக்கு வீசியிருந்தார். அடுத்து சர்ப்ரைஸாக ஒரு இன்ஸ்விங்கரை இறக்க ரூஸ்ஸோ lbw ஆகினார். வங்கதேசத்திற்கு எதிரான கடந்த போட்டியில் ரூஸ்ஸோவும் டீகாக்கும் இணைந்து 168 ரன்களை எடுத்திருந்தனர். ரூஸ்ஸோ சதமடித்திருந்தார். அப்படிப்பட்ட இருவரை அடுத்த போட்டியிலேயே வெறும் மூன்றே பந்துகளில் அர்ஷ்தீப் காலி செய்திருக்கிறார்

இந்திய அணியின் மற்ற பௌலர்கள் கொஞ்சம் குட் லெந்திலேயே மெயின்டெயின் செய்ய ஹர்திக் பாண்ட்யா மட்டும் வந்த வேகத்திலேயே ஷார்ட் பிட்ச்களாக இறக்கியிருந்தார். அவர் வீசிய 9 வது ஓவரில் மட்டும் மார்க்ரமும் மில்லரும் 4 பந்துகளில் பீட்டன் ஆகியிருந்தனர். ட்ரிங்ஸ் ப்ரேக் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்க கொஞ்சம் அக்ரஸிவ்வாக செல்லலாம் என முடிவெடுத்த போது ஹர்திக்கின் ஓவரையே முதலில் டார்கெட் செய்தனர். ரிஸ்க் எடுத்து ஹர்த்திக்கின் பந்துகளை பவுண்டரிக்களாக்கினர். ஆனால், ஹர்திக் துவண்டுவிடவில்லை. மீண்டு வந்தார். 16 வது ஓவரில் மீண்டும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை வீசி மார்க்ரமின் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார். அங்கிருந்துதான் இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வெற்றி நம்பிக்கை பிறந்தது.

இப்படியாக போட்டி நெடுகிலுமே பௌலர்கள் பேட்டர்களுக்கு எதிராக வலுவான மோதல்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தனர். பேட்டிங்கின் போது கோலி 7 வது ஓவரில் அவுட் ஆகியிருந்தார். பவர்ப்ளே முடிந்துவிட்டதால் அந்த ஓவரில் 5 வீரர்கள் பவுண்டரி லைனில் நிற்கலாம். ஆனால், நான்கு வீரர்களை மட்டுமே பவுண்டரி லைனில் வைத்துவிட்டு கூடுதலாக ஒரு வீரரை வட்டத்திற்குள் ஸ்லிப்பாக நிற்க வைத்து வீரியமாக அட்டாக் செய்திருந்தனர். தென்னாப்பிரிக்கவின் கை ஓங்குவதை தவிர்க்க நினைத்த கோலி இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரி ஆக்கியிருந்தார். உடனே ஸ்லிப் நீக்கப்பட்டது. பவுண்டரி அருகே 5 வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இந்த மோதலில் கோலி வென்றதை போல தோன்றும் ஆனால், அடுத்து

Kohli
Kohli
ICC
உடனடியாக இங்கிடி ஒரு ஷார்ட் பாலை வீச பவுண்டரி அடித்த டெம்போவிலேயே இதையும் பெரிய ஷாட்டாக ஆட கோலி முயல சிறுத்தை சிக்கியது! இந்த Contest ஐயும் இங்கிடியே வென்றார்.

பவுமா வாது 7 வது ஓவரில்தான் ஸ்லிப் வைத்தார். ரோஹித்தோ 11 வது ஓவரிலும் இந்த வேலையை செய்திருந்தார். ஹர்திக்கிற்கு ஸ்லிப் கொடுத்து அட்டாக் செய்ய வைத்திருந்தார்.

இந்த பெர்த் மைதானத்தில் மட்டும் பேட்ஸ்மேன்கள் பின்னே திரும்பி ஸ்லிப்பை பார்த்துவிடவே கூடாது. பார்த்தால் அதிர்ச்சியடைந்து விடுவார்கள். அவர்கள் எங்கோ ஒரு அதி தொலைவில் நிற்பார்கள்.
ரவி சாஸ்திரி

என கூறி 80 களின் வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் குறித்த நினைவுகளையெல்லாம் கூட ரவிசாஸ்திரி பகிர்ந்திருந்தார்.

மொத்தத்தில், நேற்றைய போட்டி ஒரு பௌலிங் பேரானந்தம். அதன் கதாநாயகர்கள் பௌலர்கள் மட்டுமே! ஆக, பேட்ஸ்மேன்களின் கதைகளை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு இரு அணிகளின் பௌலர்களையும் பெர்த் மைதானத்தையும் சில நாட்களுக்கு ஆராதிப்போம்!