Published:Updated:

T20 World Cup: `ஸ்லிப் ஆன சிங்கங்கள்' - கத்துக்குட்டி அணிகளிடம் அடிவாங்கிய பெரிய அணிகள்! - ஒரு அலசல்

West Indies team ( AP )

பெரிய மேடையில், சிறிய தவறுகள்கூட, சரிசெய்ய முடியாத பேரிழப்பாக முடியலாம். இந்த உலகக் கோப்பை தொடரில் சில பெரிய அணிகளுக்கு நடந்திருப்பதும் இதுதான்.

T20 World Cup: `ஸ்லிப் ஆன சிங்கங்கள்' - கத்துக்குட்டி அணிகளிடம் அடிவாங்கிய பெரிய அணிகள்! - ஒரு அலசல்

பெரிய மேடையில், சிறிய தவறுகள்கூட, சரிசெய்ய முடியாத பேரிழப்பாக முடியலாம். இந்த உலகக் கோப்பை தொடரில் சில பெரிய அணிகளுக்கு நடந்திருப்பதும் இதுதான்.

Published:Updated:
West Indies team ( AP )
டி20 ஃபார்மட்டின் அழகே அதன் `கணித்தறிய முடியா நிலை'தான். சீறி வரும் சிங்கமும் மண்டியிடும், சின்ன அணிகள்கூட அந்த நாளை சரியாகப் பயன்படுத்தினால், அரியணை ஏறும்.பெரிய மேடையில், சிறிய தவறுகள்கூட, சரிசெய்ய முடியாத பேரிழப்பாக முடியலாம். இந்த உலகக்கோப்பைத் தொடரில் சில பெரிய அணிகளுக்கு நடந்திருப்பதும் இதுதான்.

சின்ன அணிகள்கூட பெருமளவு சாதிக்க, பெரிய அணிகள் நம்பவே முடியாத தோல்விகளைப் பெற்றுள்ளன. ஏமாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாததுதான் என்றாலும் உலகக் கோப்பைகளில் கிடைக்கும் ஏமாற்றங்கள் அடுத்த உலகக்கோப்பை வரை, வலியைத் தந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட தோல்விகளை இத்தொடரில் சந்தித்து வெளியேறியுள்ள அணிகள் பற்றிய தொகுப்புதான் இது.

மேற்கிந்தியத்தீவுகள்

டி20 உலகக் கோப்பையை இருமுறை முத்தமிட்டுள்ள அதே அணிதான், சூப்பர் 12-ல் ஆடுவதற்கான வாய்ப்பினைக்கூட எட்டாமல் வெளியேறியிருக்கிறது.

கெய்ல், பிராவோ, பொல்லார்ட் உள்ளிட்ட மிகச்சிறந்த ஆளுமைகள் விட்டுச் சென்றிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் ஏற்கெனவே தத்தளித்து வருகிறது மேற்கிந்திய தீவுகள் அணி. இதோடு, இருமுறை ஃப்ளைட்டைத் தவறவிட்ட ஹெட்மயரின் அதிரடியையும் தவறவிட்டது, பேரிடியை இறக்கியது. தங்களது ஸ்டார் ப்ளேயர்களான நரைன் மற்றும் ரசலையும் அணியில் எடுக்காத வாரியத்தின் முடிவும் தவறாக முடிந்தது. ரசலின் ஃபார்மைக் காட்டி வெளியேற்றியதோடு, நரைன் ஆடத்தயாராக இல்லை என்றும் கூறியது. ஆனால் அவரோ, `இன்னமும் அணிக்காக ஆட விரும்புகிறேன்!' என்று கூறினார். ஆக அணியின் தேர்விலேயே குழப்பம் நிலவியது.

வாரியத்திடமிருந்து போதுமான சம்பளம் கிடைக்கப் பெறாததால், உலகில் உள்ள எல்லா டி20 லீக்குகளிலும் வீரர்கள் ஆடுகின்றனர். ஆனால், தேசிய அணியில் ஒருங்கிணைந்து அதே தாக்கத்தைக் கொண்டுவர அவர்களால் முடியவில்லை. அதிக பிரச்சினை, பேட்டிங்கின் பக்கம்தான்.

Andre Russel
Andre Russel
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில், மேயர்ஸ் (130 ) தவிர மற்றவர்களின் ஸ்ட்ரைக் ரேட், 120-க்கும் கீழே உள்ளது. பிரண்டன் கிங் தவிர யாருடைய ஆவரேஜும் 30-ஐத் தாண்டவில்லை.

டாப் 3 வீரர்களை இந்த ஆர்டரில்தான் இறக்க வேண்டுமென்றில்லாமல், கடந்த 15 டி20 போட்டிகளில் பலமுறை மாற்றத்திற்கு உள்ளாக்கியதும், நிலைத்தன்மையை நிலைகுலைய வைத்தது.

பெரும்பாலான மத்திய வரிசை வீரர்கள் ஸ்பின்னை எதிர்கொள்ள வெகுவாகவே திணறுகின்றனர். கைதேர்ந்த ஃபினிஷர்கள் இல்லை, சிறந்த ஸ்பின்னர்கள் இல்லை, அசோஸியேட் அணிகளிடம் காணப்படும் கில்லர் ஸ்ப்ரிட், சற்றும் காணப்படவில்லை.

2016-க்கு முந்தைய டி20 உலகக் கோப்பைகளில், 7.2 ஆக இருந்த பௌலர்களது எக்கானமியின் சராசரி, 2021 - 22 சீசன்களில், 7.9 ஆகக் கூடியிருக்கிறது.
West Indies vs Afghanistan
West Indies vs Afghanistan

அகீல் ஹொசைன், மெக்காய் கூட சிறப்பான ஸ்பெல்களை வீசத்தவற, மேயர்ஸ், ஓடியன் ஸ்மித் போன்ற பார்ட் டைம் பௌலர்களும் அதிக ரன்களுக்கு போயினர், டெத்ஓவர் பௌலிங்கின் நிலையும் அதேதான்.

இவையெல்லாம் சேர்ந்தே, டி20-ல் அவர்களது அணி ஒரு பெரிய மாற்றத்திற்கு ஆயத்தமாக வேண்டுமெனக் காட்டுகிறது.

இலங்கை :

ஆசிய சாம்பியனான பின்பு இலங்கையின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் போட்டியில், நமீபியாவுடன் தோற்ற போதுகூட, ஆஃப்கனுடன் தோற்றுத் தொடங்கிய அதே ஆசியக்கோப்பை ஸ்க்ரிப்ட் என்றே ரசிகர்கள் ஆறுதல்பட்டுக் கொண்டனர். ஆனாலும், அதைத் தாண்டியும் பல குறைபாடுகளும், குழப்பங்களும் தோல்விக்கு அடிக்கல் நாட்டின.

துஷ்மந்த ஷமீர, தனுஷ்க குணதிலக, தில்ஷன் மதுஷங்க என வீரர்கள், ஒருவர் பின் ஒருவராக காயத்தால் வெளியேறியது பின்னடைவானது. அதன்பின் புதிய வீரர்கள் ஒரு அணியாக இணைந்து ஆடுவதிலும் பிரச்சினைகள் எழுந்தன.

ஆசியக்கோப்பையில், நிஷாங்க, குஷால் மெண்டீஸ் அமைத்த அடித்தளத்தில், மிடில் ஓவரில் ரன்களை ஏற்றிச்சென்று, இறுதி ஓவர்களில், ஹசரங்க, ஷனக, ராஜபக்ஷ என யாரோ ஒருவர் அடித்து ரன் ஏற்றினார்கள். அவர்களது ஸ்ட்ரைக்ரேட்டே அதற்கு சாட்சி. இத்தொடரில், நியூசிலாந்துடனான போட்டி தவிர்த்து மற்றவற்றில், ஓப்பனர்கள் இருவரில் யாராவது ஒருவர், குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், மிடில் ஓவர்களில் மிடில் ஆர்டர் தடுமாறியது.

இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை கிரிக்கெட் அணி
AP
டெத் ஓவர்களில், அதிரடியாக ஃபினிஷிங் ரோலை செய்யவும் எல்லோருமே தவறிவிட்டனர். அதுவே 10 - 20 ரன்கள் இறுதியில் குறைவாக வரக் காரணமாகியது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவு, ஃபாஸ்ட் பௌலர்கள் சிறப்பாக பந்து வீசவில்லை. ஸ்பின்னர்களையே இலங்கை பெரிதும் நம்பியிருக்க வேண்டியிருந்தது. டாப் 15 விக்கெட் டேக்கர்களில்கூட, ஹசரங்கவும், தீக்ஷனவும் இடம்பெற்றிருந்தார்களே ஒழிய, வேகப்பந்து வீச்சாளர்கள் யாருமே இடம்பெறவில்லை. ஃபீல்டிங்கிலும் தடுமாற்றம் தெரிந்தது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடனான பெரிய தோல்விகளும், தொடரை விட்டே அவர்கள் வெளியேறக் காரணமாகி விட்டன.

ஆஸ்திரேலியா :

தனது குகையினில் வேட்டைக்குக் காத்திருக்கும் டிஃபெண்டிங் சாம்பியன் என்ற நினைப்பே, ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் அணியாகக் கருத வைத்தது. ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில், தொடர் முழுவதும் இருந்த உயிர்ப்பு ஆஸ்திரேலிய அணியிடமில்லை.

நியூசிலாந்தை 200 ரன்களை அடிக்கவிட்டது, அதை எட்ட முடியாமல் 111 ரன்களுக்கு சுருண்டு, நெகட்டிவ் ரன்ரேட்டோடு சூடுபோட்டுக் கொண்டது என முற்றிலும் கோணலாகத் தொடங்கியது. இலங்கைக்கு எதிரான போட்டியில்கூட ஸ்டோய்னிஸின் அதிரடி கட்டவிழ்க்கப்படாமல் இருந்திருந்தால், தோல்விகூட ஏற்பட்டிருக்கலாம்.

David warner
David warner
AP
வார்னர் - ஃபின்சின் மோசமான ஓப்பனிங், மார்ஷின் அசமந்தமான ஆட்டம், டிம் டேவிட்டுக்கும், வேர்டுக்கும் பெரிதாகக் கிடைக்காத வாய்ப்புகள் என எதுவுமே சரியாக செல்லவில்லை. கேமியோக்களே காணாமல் போயிருந்தன. ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ்கள் மட்டுமே ஆறுதல் அளித்தன.

பௌலிங்கோ மொத்தமாகவே சோபிக்கவில்லை. ஸ்டார் பௌலர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் தலா மூன்று, ஜம்பா, ஹாசில்வுட் தலா ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தனர். ஐபிஎல் போன்ற டி20 லீக்குகளில் ஆடமாட்டேன் என்ற ஸ்டார்க்கின் முடிவு தவறு என்பதை அவரது சர்வதேச டி20 தரவுகள் காட்டுகின்றன. 2020-க்கு பிறகு அவரது எக்கானமி எகிறியிருக்கிறது, ஆவரேஜோ, இருமடங்காகியிருக்கிறது, டி20 லீக்குகளில் தேவையான அனுபவம் பெற்று, இந்த ஃபார்மட்டிற்கு ஏற்றாற் போல், அவர் தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை. இதனாலேயே, அயர்லாந்து பேட்ஸ்மேன்கள்கூட, அவரது பந்துகளை சிதறடித்தனர். இதுதான், அவரை விடுத்து, கேன் ரிச்சர்ட்சனை ஆஃப்கானிஸ்தான் போட்டியில் ஆஸ்திரேலியா ஆடவைக்கக் காரணமானது. ஆனால், அவரது கடைசி ஓவர், ரஷித் கானால் சூறையாடப்பட, அதுவும் அவர்களுக்கு பாதகமாக மாறியது.

கடந்தமுறை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுடன் புள்ளிக்கணக்கில் ஒன்றாக இருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. காரணம், இறுதியில் கிடைத்த மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷுடனான மிகப்பெரிய வெற்றிகள். அதை இத்தொடரில் செய்ய முற்றிலுமாகத் தவறிவிட்டனர்.

ஐயர்லாந்து மற்றும் ஆஃப்கனுக்கு எதிரான போட்டிகளில், டக்கர் மற்றும் ரஷித்தை வெளியேற்ற முடியாமல், தங்களது அரையிறுதிக் கனவுகளை அவர்கள் புதைத்துக் கொண்டிருந்ததை வேடிக்கை மட்டுமே பார்த்தது ஆஸ்திரேலியா. க்ளார்க் கூறியுள்ளதைப் போல, 200 ரன்களைக் குவித்து, அவர்களை 100 ரன்களுக்குள் சுருட்டி, ரன்ரேட் பள்ளத்தாக்கை நிரப்பியிருக்க வேண்டும். விண்டேஜ் ஆஸ்திரேலியா அதைத்தான் செய்திருக்கும். அதை மறந்ததால்தான், டாப் 2 அணிகள் வைத்திருந்த அதே புள்ளியில் இருந்தும், ரன்ரேட்டால் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலியா கோட்டை விட்டிருக்கிறது.

தென்னாப்பிரிக்கா :

கிரிக்கெட் உலகம், ஆன் த ஃபீல்ட், ஆஃப் த ஃபீல்டில் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. ஆனால், உலகக் கோப்பையில் தொடரும் தென்னாப்பிரிக்காவின் வேதனை மட்டும், `முற்றும்' போட முடியாத தொடர்கதையாகி உள்ளது.

1992-ல் மழையால், ஒரு பந்தில், 22 ரன்கள் தேவையென்ற சமன்பாடு தொடங்கிவைத்த சோகம், 1999, 2003, 2015 என ஒவ்வொரு உலக கோப்பையிலும் ஏதோ ஒரு காரணத்தால் தொடர்ந்தது. ஆனால் இம்முறை, தவறுக்கான முழுப்பொறுப்பும் அவர்களுடையதே.
South African cricket
South African cricket

இத்தொடரின் சூப்பர் 12 சுற்றில், பாவுமாவின் ஃபார்மும், விளையாட்டு அணுகுமுறையும் வேண்டுமெனில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், மற்றபடி, அவர்களது ஃபாஸ்ட் பௌலிங் படையே, அரையிறுதிக்கு என்ன, ஃபைனலுக்கே அழைத்துச் செல்லும் எனுமளவு மிரட்டியிருந்தது. ஆனால், மறுபடியும் ஒரு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஒருவேளை ஜிம்பாப்வேவுடனான போட்டி மழையால் தடைபடாமல் போயிருந்தால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், மீண்டும் மழையால், ஓவர்கள் குறைக்கப்பட்டு, டார்கெட் மாற்றியமைக்கப்படாமல் இருந்திருந்தால் எனப் பல `Ifs and Buts'-களை அடுக்கிக் கொண்டே போகலாம், ஆனால், உண்மையில் நெதர்லாந்துடனான தோல்வி ஏற்றுக் கொள்ளவே முடியாதது.

வெறும் 159-தான் இலக்கு, நின்று நிதானமாக ஆடுவோமென்றில்லாமல் வந்த அத்தனை வீரர்களுமே அவசரகதியில் ஆடியதுதான் தோல்விக்கான காரணமாகியது. எல்லாப் பந்துகளும் பவுண்டரிக்கு விரட்டப்பட வேண்டுமென்பதில்லை. சேஸிங்கைத் திட்டமிட்டு, பார்ட்னர்ஷிப்களைக் கட்டமைத்து, இலக்கை நோக்கி அணியை சரியான வேகத்தில் எடுத்துச் சென்றிருக்கலாம். அப்படி ஆடியிருந்தாலே, 13 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு கோப்பையை ஏந்துவதற்கான வாய்ப்பே கைகழுவி இருக்காது.

இந்தியாவைக் கூட சமாளிக்க முடியாதவாறு தாக்கி வீழ்த்தி விட்டு, நெதர்லாந்திடம் மொத்தமாக சரண் புக, தென்னாப்பிரிக்காவால் மட்டுமே முடியும். ஃபார்மட்டுகள் மாறலாம். போட்டிகள் நடத்தப்படும் நாடுகள் மாறலாம். ஆனால் தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு, காயம் வடுவாக மாறும் கால இடைவெளிகூடத் தராமல் தொடர்ந்து வலியைத் தருகிறது, உலககோப்பை வெளியேற்றங்கள்.

டி20 ஃபார்மட்டின் அழகே கணித்தறிய முடியா நிலைதான். சீறி வரும் சிங்கமும் மண்டியிடும், சின்ன அணிகள்கூட அந்த நாளை சரியாகப் பயன்படுத்தினால், அரியணை ஏறும். ஆக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள், அதனை நிறைவேற்றாமல் ஃப்ளாப் ஆவது சிலசமயம் நடந்தேறும்தான், அதேபோன்றதுதான் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவின் தோல்வியும்.

Namibia
Namibia
ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், "இது பெரிய விஷயமல்ல, இத்தோல்வியிலேயே தேங்கியிருக்க முடியாது, அடுத்தடுத்த போட்டிகள் காத்துக் கொண்டிருக்கின்றன", என்று கூறியிருந்தார்.

உண்மையில், இதுவும் சரியான அணுகுமுறைதான். இருப்பினும், தவறுகளைக் கண்டறிந்து அதைக் களைந்தெறிய முயலுவதுதான், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட படுதோல்விகள் தொடராமல் இருக்க உதவும்.