உலகக்கோப்பையின் முதல் சுற்றில் இலங்கையும் நெதர்லாந்தும் விளையாடிய
போட்டி. நெதர்லாந்தின் வெற்றி வாய்ப்புகள் மங்கிப் போய்விட்டன.
போட்டியின்போது காயமடைந்த நெதர்லாந்து வீரர் வான் டேர் மெர்வ் பேட்டிங்
ஆட வந்தார். கொஞ்சம் கூட நடக்க முடியாமல் இருந்த மெர்வ் போட்டியின்
முடிவை மாற்ற போகாத ஒரு ரன்னுக்காக வலியை பொறுத்து கொண்டு ஓடினார். அது ஒரு வீரரின் போராட்ட குணம் மட்டும் அல்ல. இந்த சுற்றில் விளையாடிய ஒவ்வொரு அசோசியேட் அணிகளின் போராட்ட குணமும் இப்படித்தான் இருந்தது.

போட்டியின் முடிவுகளை பற்றி சிறிதும் யோசிக்காமல் கடைசி வரை ஒவ்வொரு அணியும் முழுமையாகப் போராடின. அதன் விளைவுதான், இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. இலங்கை அணி ரொம்பவே போராடி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெற்றிருக்கிறது.
நடக்க கூட முடியாமல் வலியில் துடித்துக்கொண்டிருந்த வான் டேர் மெர்வ் அணிக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு ரன் ஓடினார். அந்த ஒரு ரன் போட்டியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்காது. அப்படி இருந்தும் அவர் ஓடியது கிரிக்கெட் மீதான பேரன்பை காட்டுகிறது. வலியை மறந்து மெர்வ் போராடினர்!ஹர்ஷா போக்லே
பெரிய அணிகளுடன் ஒப்பிடும்போது இந்தத் தொடருக்கு முன்பாக இந்த சிறிய அணிகள் விளையாடியுள்ள போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவே. கடந்த உலககோப்பைக்கும் இந்த உலககோப்பைக்கும் இடையில் சில பெரிய அணிகள் விளையாடியுள்ள போட்டிகளின் எண்ணிக்கை:
இந்தியா - 34 | பாகிஸ்தான் - 25 | இங்கிலாந்து - 21 | ஆஸ்திரேலியா - 17
இப்படி பெரிய நாடுகள் நிறைய டி20 போட்டிகள் விளையாடிய கையுடன்
உலகக்கோப்பையைத் தொடங்குகிறார்கள். ஆனால் அசோசியேட் அணிகளின் நிலைமை இதிலிருந்து முற்றிலும் முரணானது. கடந்த உலககோப்பைக்கும்
இந்த உலககோப்பைக்கும் இடையில் சிறிய அணிகள் விளையாடியுள்ள போட்டிகளின் எண்ணிக்கை:
ஸ்காட்லாந்து - 2 | நமீபியா - 8 | நெதர்லாந்து - 8
ஜிம்பாவே, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மட்டுமே
ஏறக்குறைய 10 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அவர்கள் விளையாடியதில்
பெரும்பாலான தொடர்கள் அவர்களை போன்ற சிறிய அணிகளுக்குள் தான். ஒரு சில போட்டிகள் மட்டும் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படியான சூழலில் தான் அசோசியேட் அணிகள் உலகக்கோப்பைத் தொடருக்கு உள்ளே வந்தனர். இதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொடங்கி பல பிரச்னைகளையும் சந்திக்கிறார்கள்.
ஒரே ஆடுகளத்தில் காயமடைந்த வீரர் ஒருவரும் காயமடையாத வீரரும் ரன் எடுக்க ஓடுவதில் எவ்வளவு வித்தியாசம் இருக்கும்? அதுதான் பெரிய அணிகளுக்கும் அசோசியேட் அணிகளுக்கும் இடையில் இருந்த வித்தியாசம்.
இந்த உலகக்கோப்பையில் தான் முதல் முறையாக முதல் சுற்றில் விளையாடிய
அனைத்து அணிகளும் குறைந்தது ஒரு வெற்றியை பெற்றுள்ளது. முதல் சுற்றின்
முதல் நாளிலேயே ஆசியக்கோப்பை சாம்பியன்ஸான இலங்கையை வென்றது நமீபியா. கடைசி நாளில் அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸை வென்று சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இப்படி தொடக்கம் முதல் இறுதிவரை எவ்வளவோ சிறப்பான விஷயங்களை இந்த 6 நாட்கள் தந்துள்ளன.

குரூப் பி-யில் ஜிம்பாவே மற்றும் அயர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி
பெற்றுள்ளன. ஜிம்பாவே அணி டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல்
முறையாக சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
சமீபத்தில் ஜிம்பாவே அணியைப் பற்றிப் பேசினால் அதில் ராசாவுக்கே பெரும் பங்கு இருக்கும். இந்தச் சுற்றிலும் சிறப்பாக செயல்பட்டு இந்த வரலாற்று சாதனைக்கும் முக்கியக் காரணமாய் இருந்துள்ளார் ராசா.
அயர்லாந்து அணி ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆடிய
போட்டியில் ஏறக்குறைய தொடரை விட்டு வெளியேறும் நிலையிலிருந்தது. 10
ஓவரில் 65-4 என்னும் இடத்திலிருந்து 174 ரன்களை அதே 4 விக்கெட்
இழப்பிற்கு 19 ஒவரில் சேஸ் செய்தது அயர்லாந்து. `வாழ்வா! சாவா?' போட்டியில்
கர்டிஸ் காம்ப்ஹர் ஆடிய அந்த மாபெரும் இன்னிங்ஸ் மீண்டும் அணிக்கு
நம்பிகையைக் கொடுத்தது. அந்த நம்பிக்கையைத் தக்கவைத்து அடுத்த போட்டியில்
வெஸ்ட் இண்டீஸை எளிதில் வென்று இப்போது அடுத்த சுற்றில் விளையாடக்
காத்திருக்கிறது அயர்லாந்து.
குரூப் ஏ-வில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி
பெற்றுள்ளது. இலங்கை முதல் போட்டியில் சற்று சறுக்கினாலும் அடுத்த இரண்டு
போட்டிகளை வென்று சூப்பர் 12 சுற்றில் காலடி எடுத்து வைத்துள்ளது.
அதுவும் அவ்வளவு எளிதாக நடக்கவில்லை.
கார்த்திக் மெய்யப்பனின் அபாரமான ஹாட்-ட்ரிக்கெல்லாம் வழியில் பெரும் தடையாக வந்து நின்றது.

நெதர்லாந்து இரண்டு த்ரில் போட்டிகளை வென்றது. அதில் மூன்று போட்டிகளிலும் ஆல் ரவுண்டராக கலக்கி அடுத்த சுற்றுக்கு வழி வகுத்தவர் பாஸ் டி லீட். நமீபியாவின் கடைசி போட்டியில் வெற்றிக்கு கடைசி வரை போராடிய டேவிட்
வெயிஸ், வெற்றியை பெற்றுத் தராவிட்டாலும் அணியின் உத்வேகத்தை களத்தில்
காட்டாமல் வெளியே செல்லவில்லை. அதே போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி
உலகக்கோப்பை வரலாற்றில் தன் முதல் வெற்றியை பெற்றது.
நமீபியாவுக்கு வருந்துவதா இல்லை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மகிழ்வதா? இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு நமக்கு ஏற்படுத்தும் இந்த உணர்வு தான் விளையாட்டின் கரு!

இதற்கு மேல் தகுதி பெற்ற மூன்று அசோசியேட் அணிகளும் தொடரில் ஒரு வெற்றியாது பெறுவார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், இந்த சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற எல்லா அணிகளும் காட்டிய போராட்ட குணமே நம் மனதில்
நிலைத்திருக்கும். இதுவே காயமடைந்தபோதும் களத்தில் ரன் ஓடிய அசோசியேட்
அணிகளுக்குக் கிடைத்த வெற்றி. அவர்கள் ஆட்டத்திலும் வெல்லும் காலம் வரும்.
கிரிக்கெட் மீதான தீரா காதல் அந்த இடத்திற்கு அவர்களை கொண்டு செல்லும். அதன் சிறிய தொடக்கம் தான் தற்போது சிறிய அணியால் நிகழ்ந்துள்ள வெஸ்ட் இண்டீஸின் வெளியேற்றம்!