Published:Updated:

T20 World Cup:`Heroes of England' - இங்கிலாந்தை வெல்ல வைத்த அந்த ஐவர் கூட்டணி!

Sam Curran ( ICC )

வெறும் எண்ணாக பார்த்தால் இந்தத் தொடரில் அடில் ரஷீத்தின் பங்களிப்பின் வீரியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே அடில் ரஷீத் வீழ்த்தியிருக்கிறார்.

T20 World Cup:`Heroes of England' - இங்கிலாந்தை வெல்ல வைத்த அந்த ஐவர் கூட்டணி!

வெறும் எண்ணாக பார்த்தால் இந்தத் தொடரில் அடில் ரஷீத்தின் பங்களிப்பின் வீரியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே அடில் ரஷீத் வீழ்த்தியிருக்கிறார்.

Published:Updated:
Sam Curran ( ICC )
இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டங்களில் திளைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த அணிக்காக சிறப்பாக செயல்பட்டு உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த சில வீரர்களை பற்றி இங்கே..
ஜாஸ் பட்லர் + அலெக்ஸ் ஹேல்ஸ் :

இங்கிலாந்து அணி இந்தத் தொடரை அத்தனை சிறப்பாக தொடங்கியிருக்கவில்லை. தொடக்கத்தில் கொஞ்சம் சுமாராகத்தான் ஆடியிருந்தார்கள். ஆஃப்கானிஸ்தான் அணியுடனான முதல் போட்டியிலேயே 110 ரன்களை சேஸ் செய்யப் போராடியிருந்தார்கள். அயர்லாந்துடன் தோற்றிருந்தார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டம் மழையால் தடைபட்டுவிட்டது. இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பே கேள்விக்குள்ளாகிப் போனது. அந்த இக்கட்டான சமயத்தில்தான் பொறுப்பு மொத்தத்தையும் அலெக்ஸ் ஹேல்ஸ் + ஜாஸ் பட்லர் கூட்டணி ஏற்றுக்கொண்டது. அதிரடியான தொடக்கங்களை கொடுத்ததோடு நின்று நல்ல பார்ட்னர்ஷிப்பும் அமைத்திருந்தனர்.

சூப்பர் 12 சுற்றில் வென்றே ஆக வேண்டிய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இருவரும் இணைந்து 81 ரன்களை எடுத்திருந்தனர். அதற்கடுத்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இருவரும் இணைந்து 75 ரன்களை எடுத்துக் கொடுத்தனர். அரையிறுதியில் இந்தியாவிற்கு எதிராக போட்டியையே மொத்தமாக முடித்துவிட்டனர். இருவரும் இணைந்து 170 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துவிட்டனர்.

கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டிகளில் இவர்கள் கொடுத்த அதிரடியான தொடக்கம் பிற்பகுதியில் இங்கிலாந்தின் சறுக்கல்களையும் தடுமாற்றங்களையும் சமாளிப்பதாக அமைந்திருந்தது.

Buttler & Hales
Buttler & Hales
Twitter
மொத்தமாக, ஜாஸ் பட்லர் 225 ரன்களை 144 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். ஹேல்ஸ் 212 ரன்களை 147 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார்.

இயான் மோர்கனுக்குப் பிறகு ஜாஸ் பட்லர் இப்போதுதான் கேப்டன் ஆகியிருக்கிறார். கேப்டன் ஆகி சில மாதங்களிலேயே நடந்த இந்த உலகக்கோப்பையில் கொஞ்சம் சறுக்கியிருந்தாலும் எக்கச்சக்க விமர்சனங்களை அவர் சந்திக்க நேர்ந்திருக்கும். ஜாஸ் பட்லர் ரொம்பவே பொறுப்பாக செயல்பட்டு அந்த அபாயங்களில் இருந்தெல்லாம் தப்பித்துவிட்டார். அதேமாதிரிதான் ஹேல்ஸூம் ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கிறார். களத்திற்கு வெளியே ஹேல்ஸை பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தன. அணியிலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். பேர்ஸ்ட்டோ காயமடைந்ததால் அவருக்கு மாற்றாகத்தான் அணிக்குள்ளேயே வந்தார். தவிர்க்க முடியாத தடத்தை பதித்துவிட்டே சென்றிருக்கிறார்.

அடில் ரஷீத்:

வெறும் எண்ணாக பார்த்தால் இந்தத் தொடரில் அடில் ரஷீத்தின் பங்களிப்பின் வீரியத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே அடில் ரஷீத் வீழ்த்தியிருக்கிறார். கொஞ்சம் நுணுக்கமாக அவரின் ஸ்பெல்களுக்குள்ளும் இந்த 4 விக்கெட்டுகளுக்கும் சென்று பார்த்தாக வேண்டும். பதும் நிஷாங்கா, சூர்யகுமார் யாதவ், பாபர் அசாம், முகமது ஹாரீஸ் இந்த நால்வரையும்தான் அடில் ரஷீத் வீழ்த்தியிருந்தார். இந்தப் பெயர்களை வைத்தே அந்த விக்கெட்டுகளின் கனத்தை நம்மால் உணர முடியும். அதுவும் வென்றே ஆக வேண்டிய போட்டிகளில் மிக முக்கியமான தருணங்களில் இந்த விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

சூப்பர் 12 சுற்றில் இலங்கைக்கு எதிரான அந்தக் கடைசி போட்டியில் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து பதும் நிஷாங்காவின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இலங்கை சார்பில் அந்தப் போட்டியில் பதும் நிஷாங்கா மட்டுமே நின்று அரைசதம் அடித்திருந்தார். அவர் கடைசி வரை நின்றிருந்தால் இலங்கை கூடுதலான ஸ்கோரை எடுத்திருக்கக்கூடும். இங்கிலாந்தின் சேஸிங்கும் சிரமமாகியிருக்கும். ஆனால், அடில் ரஷீத் சரியான சமயத்தில் நிஷாங்காவை வீழ்த்தி அசத்தினார். இந்தியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் முதுகெலும்பான சூர்யகுமார் யாத்வ் பெரிய தாக்கம் ஏற்படுத்துவதற்கு முன்பே அவரை வீழ்த்தியிருந்தார்.

அடில் ரஷீத்
அடில் ரஷீத்
ECB
இறுதிப்போட்டியில் நன்கு செட்டில் ஆகி பெரிய இன்னிங்ஸ் ஆட ஆயத்தமான பாபர் அசாமை ஒரு எதிர்பாரா கூக்ளியில் வீழ்த்தியிருந்தார். அதுபோக பாகிஸ்தானுக்கு நம்பர் 3 இல் இறங்கி அதிரடியாக ரன்ரேட்டை உயர்த்திவிடும் முகமது ஹாரிஸின் விக்கெட்டையுமே அடில் ரஷீத்தான் வீழ்த்தினார்.

விக்கெட்டுகளைத் தாண்டி அவர் வீசும் ஓவர்களுக்குப் பிறகு எதிரணியின் ரன்ரேட் அப்படியே கவிழ்ந்ததையும் பார்க்க முடிந்தது. இந்த உலகக்கோப்பையில் போட்டிகளின் ஹைலைடஸ் கட்டை பார்த்தால் அதில் அடில் ரஷீத்தின் பங்களிப்பு சில நொடிகளுக்கே இருக்கும். ஆனால், அவர் ஏற்படுத்திய தாக்கம் ரொம்பவே பெரிது.

சாம் கரன்:

இந்தத் தொடரில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சுப் படைதான் கொஞ்சம் சுமாரானதாக மதிப்பிடப்பட்டது. ஆர்ச்சர் மாதிரியான அபாயகரமான பௌலர் இல்லை. வருடம் முழுக்க நம்பி உலகக்கோப்பைக்காகத் தயார் செய்த டாப்ளே காயம் காரணமாக வெளியேறிவிட்டார். போட்டிகள் தொடங்கிய பிறகு வேகப்புயல் மார்க்வுட்டும் காயமடைந்தார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் விஷயத்தில் இங்கிலாந்துக்கு சோதனை மேல் சோதனையாகத்தான் இருந்தது. ஆனால், சாம் கரன் அந்த சோதனைகளுக்கெல்லாம் விடையாக வந்தார். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அற்புதமான பெர்ஃபார்மென்ஸை கொடுத்திருக்கிறார். இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனும் அவர்தான். இந்தத் தொடரின் தொடர்நாயகனும் அவர்தான்.
Sam Curran
Sam Curran
ECB

மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்த 13 விக்கெட்டுகளில் 9 விக்கெட்டுகள் 16-20 இந்த டெத் ஓவர்களில் வந்தவை. டெத் ஓவர்களில் சாம் கரனின் எக்கானமி 6.5 மட்டுமே. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 5 விக்கெட் ஹாலோடுதான் தொடங்கினார். இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தானின் ரிஸ்வான், மசூத், நவாஸ் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். துணைக் கதாப்பாத்திரமாகவே பார்த்துப் பழக்கப்பட்ட சாம் கரனை முதன்மை நாயகனாக நின்று அசத்தியது இந்த உலகக்கோப்பையின் ஹைலைட்களில் ஒன்று.

ஸ்டோக்ஸ்:

கடைசி சில ஆண்டுகளில் இங்கிலாந்து அணியின் மதிப்புமிக்க அதிமுக்கியமான தருணங்கள் அத்தனையிலும் ஸ்டோக்ஸே ஒரு பெரும் தடத்தை பதித்திருக்கிறார். 2019 ஓடிஐ உலகக்கோப்பையின் ஹீரோ அவர்தான். ஹெட்டிங்லி டெஸ்ட்டில் தனியாளாக கலக்கி ஆஸஸிலும் ஹீரோவானார். இப்போது டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியிலுமே மிக முக்கியமான ஒரு இன்னிங்ஸை ஸ்டோக்ஸ் ஆடியிருக்கிறார். 49 பந்துகளில் 52 ரன்களைத்தான் எடுத்திருந்தார். ரொம்பவே சுமாரான இன்னிங்ஸ் போல தோன்றும். ஆனால், இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு அதுதான் தேவைப்பட்டது. பாகிஸ்தான் பௌலர்களின் ஆதிக்கத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தார். இங்கிலாந்தின் வெறெந்த வீரரிடமும் இந்த பக்குவத்தை எதிர்பார்த்திருக்க முடியாது. பாகிஸ்தான் பௌலர்களின் அட்டாக்கில் டெம்ப்ட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்திருப்பர். ஆனால், ஸ்டோக்ஸ் அதைச் செய்யவில்லை. இந்த மாதிரியான தருணங்களிலேயே நின்று பழக்கப்பட்டவர் என்பதால் உலகக்கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. இந்தத் தொடரில் ஸ்டோக்ஸ் 110 ரன்களைத்தான் எடுத்திருந்தார். இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியதை போன்றே இலங்கைக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை ஆடியிருந்தார்.

ஸ்டோக்ஸ் |PAKvENG
ஸ்டோக்ஸ் |PAKvENG
ICC
சூப்பர் ஹீரோ ஸ்டோக்ஸின் இன்னொரு வெற்றிகரமான சாகசப்பயணமாகவே இந்த உலகக்கோப்பை அமைந்திருந்தது.
இந்த ஐவரும்தான் இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் சூப்பர் ஹீரோஸ்!