Published:Updated:

காத்திருந்து வேட்டையாடிய மிட்செல்; இங்கிலாந்தைப் பழிதீர்த்து இறுதிப்போட்டிக்கு நுழைந்த நியூசிலாந்து!

டேரில் மிட்சேல் | Daryl Mitchell ( KAMRAN JEBREILI | AP )

குப்திலோ வில்லியம்சனோ வில்லன்களாக மாறலாம் என நினைத்த இங்கிலாந்தின் இதயத் துடிப்புக்கு, மிட்செல் மௌன அஞ்சலி செலுத்திவிட்டார்.

காத்திருந்து வேட்டையாடிய மிட்செல்; இங்கிலாந்தைப் பழிதீர்த்து இறுதிப்போட்டிக்கு நுழைந்த நியூசிலாந்து!

குப்திலோ வில்லியம்சனோ வில்லன்களாக மாறலாம் என நினைத்த இங்கிலாந்தின் இதயத் துடிப்புக்கு, மிட்செல் மௌன அஞ்சலி செலுத்திவிட்டார்.

Published:Updated:
டேரில் மிட்சேல் | Daryl Mitchell ( KAMRAN JEBREILI | AP )
தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி, அரையிறுதிக்கு முதல் ஆளாக முன்னேறிய அணி என்பது மட்டும் இறுதிப் போட்டியில் ஓர் இடத்தை உறுதி செய்யாது என சொல்லாமல் சொல்லி, இங்கிலாந்தை வெறி கொண்டு வெளியேற்றியுள்ளது,என்பலாந்து.

இரண்டாவது சுற்று:

New Zealand Cricket Team
New Zealand Cricket Team
AP

2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மிஞ்சிய, நியூசிலாந்துக்கும், இங்கிலாந்துக்கும் இடையேயான தீர்க்கப்படாத கணக்குக்கான, பழிவாங்கும் படலமாகத்தான் இந்த நாக் அவுட் போட்டியை ரசிகர்கள் பார்த்தனர். டாஸை வென்றது, நியூசிலாந்துக்குச் சாதகமாகப் பார்க்கப்பட்டதுதான். எனினும், டி20-ல் ஏகாதிபத்தியம் செய்து வரும் இங்கிலாந்து, இத்தொடரின் தொடக்கம் முதலே, டேபிள் டாப்பராகவே, ஆதிக்கம் செலுத்தி வருவதும், ரணமான நினைவுகள் தந்த அப்போட்டியில் அம்பயர்களாக இருந்த, அதே குமார் தர்மசேனா மற்றும் மரெய்ஸ் எராஸ்மஸ் இருவரும் இப்போட்டியிலும் அம்பயர்களாக அமைந்ததும், சரியான சகுனம் இல்லையோ என சற்றே நியூசிலாந்து ரசிகர்களின் நம்பிக்கையை ஆட்டங் காணச் செய்தது. ஆனால், நிமித்தங்கள் எல்லாம் உண்மையில்லை என நிருபித்துவிட்டது நியூசிலாந்து.

பை பை பட்லர்:

Jos Butler | ஜாஸ் பட்லர்
Jos Butler | ஜாஸ் பட்லர்
AP

இலங்கைக்கு எதிரான போட்டியில், பட்லரின் சதம், அவருக்கான தனி பிளானோடு களமிறங்க வேண்டுமென, நியூசிலாந்துக்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தது. லாரா, போட்டிக்கு முன்பான பேட்டியில், "பட்லரின் விக்கெட்தான், நியூசிலாந்து, ஃபைனலுக்கு நுழைவதற்கான வழி", எனக் குறிப்பிட்டிருந்தார். ஒருவழியாக சோதி, ரசிகர்கள் வயிற்றில், பட்லரின் விக்கெட்டோடு, பால் வார்த்தார். இந்தத் தொடரில், சோதி முதல் ஓவரை, விக்கெட்டோடு தொடங்காதது, இதுவே முதல் முறையாக இருந்தாலும், இப்போட்டியில், எடுத்த முதல் விக்கெட்டே, ஃபைனலுக்கான டிக்கெட்டாக இருக்கும் என்ற நம்பிக்கையைத் தந்தார். அங்கேதான் விதைக்கப்பட்டது, நியூசிலாந்தின் வெற்றிக்கான வித்து.

சவுத்தி என்னும் சாம்பியன்:

இத்தொடர் முழுவதுமே, வில்லியம்சனின் இன்னொரு கையாக, சவுத்தி இருந்து வந்திருக்கிறார். இந்தக் காரணத்துக்காகவே, பவர் பிளேயிலேயே, அவரை மூன்று ஓவர்களை வீச வைத்து விட்டார் வில்லியம்சன். அதில், 9 பந்துகளை டாட் பால்களாக ஆக்கி, நெருக்கடி தந்திருந்தார், சவுத்தி. அதற்கடுத்த ஓவரில், மில்னேவின் பந்தில், பேர்ஸ்டோ விழுந்ததற்கு, இந்த அழுத்தமும் காரணம். ஒட்டுமொத்தமாக, ஆறு போட்டிகளில், 8 போட்டிகளை எடுத்துள்ள சோதியின் எக்கானமி, இத்தொடரில், வெறும், 5.75 மட்டுமே. அதுவும் அதிமுக்கியமான இப்போட்டியில், மற்றவர்களது எக்கானமி எல்லாம் எட்டைத் தாண்டி எகிறியிருக்க, சோதி மட்டும், வெறும், 24 ரன்களைக் கொடுத்திருந்தார்.

மலான் மேஜிக்:

Dawid Malan | டேவிட் மலான்
Dawid Malan | டேவிட் மலான்
AP

டி20-ல், நியூசிலாந்துக்கு எதிரான மலானின் டிராக் ரெக்கார்ட், மலைக்கச் செய்யக் கூடியது. இதற்கு முன்னதாக, டி20-ல், எதிர்கொண்ட ஆறு போட்டிகளில், மூன்று அரை சதத்தையும், ஒரு சதத்தையும் அடித்திருந்தார் மலான். இப்போட்டியிலும், அந்த அதிரடி தொடர்ந்தது. ஆஃப் சைடில் ஆதிக்கம் செலுத்திய அவர், 66 சதவிகிதம் ரன்களை, அந்த ஜோனிலேயே எடுத்திருந்தார். டீப் மிட் விக்கெட்டில், புல்லட்டாக அவர் அனுப்பிய அந்த சிக்ஸரோடு அவர் சேர்ந்திருந்த, 41 ரன்களும், மொயின் அலியுடனான அவரது 50+ பார்ட்னர்ஷிப்பும்தான், பட்லரை இழந்ததால், இங்கிலாந்தின் பக்கம் ஏற்பட்ட அதிர்வலைகளை அடக்கின.

முக்கிய அரைசதம்:

Moeen Ali | மொயின் அலி
Moeen Ali | மொயின் அலி
KAMRAN JEBREILI | AP

டி20 ஃபார்மெட்டுக்கு ஒத்துவருவாரா என விமர்சிக்கப்பட்ட மொயின் அலி, சிஎஸ்கே நாட்களுக்குப் பிறகாகவே, அந்தக் கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்துக் கொண்டுள்ளார். இப்போட்டியில், ஸ்டம்ப் லைனில் வந்த பந்துகள் மட்டுமே, அவரிடமிருந்து தப்பிப் பிழைத்தன. லெக் சைடிலோ, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியாகவோ வீசப்பட்ட பந்துகளில் பெரும்பாலானவை, பவுண்டரி லைனுக்கு வெளியே பாய்ந்தன. இங்கிலாந்தின் சார்பில், டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டி ஒன்றில், அரைசதம் அடித்த முதல் இடக்கை இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும், மொயின் பெற்றார். மத்திய ஓவர்களில் மலானுடனும், டெத் ஓவர்களில் லிவிங்ஸ்டனுடனான அவரது இரண்டு பார்ட்னர்ஷிப்புகளும்தான், இங்கிலாந்தை, 150 ரன்களைத் தாண்டி, சவாலான இலக்கை நிர்ணயிக்க வைத்தது.

இரண்டாவது பாதி:

முதல் பத்து ஓவர்களில், கட்டுக்கோப்பாகப் பந்துகள் வீசி, 67 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தது, நியூசிலாந்து. ஆனால், இரண்டாவது பாதியில், 99 ரன்களை, அள்ளிக் கொடுத்து விட்டனர். அபுதாபியில், இத்தொடரில், கடைசி பத்து ஓவர்களில், சராசரியாக அணிகள், 105 ரன்களைச் சேர்த்திருக்கின்றனர் என எண்கள் சொல்லுகின்றன. இதை முன்கூட்டியே கணித்து, இன்னமும் சற்றே கவனத்தோடு நியூசிலாந்து பந்து வீசி இருக்கலாமோ என்ற எண்ணத்தை எழ வைத்தது.

ஷாக் தந்த ஓக்ஸ்:

Chris Woakes | கிறிஸ் ஓக்ஸ்
Chris Woakes | கிறிஸ் ஓக்ஸ்
AP

சவுத்தி, முதல்பாதியில் செய்ததை, இரண்டாவது பாதியில், வோக்ஸ் செய்து கொண்டிருந்தார். பவர்பிளேயில், மூன்று ஓவர்களை வீசி, அதிலும், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிரடி காட்டி இருந்தார். அச்சமயத்தில், 16 ரன்களை மட்டுமே கொடுத்து, அவர் விக்கெட் மெய்டனெல்லாம் எடுத்திருந்தாலும், அதில் ஒன்று அபாயமான வில்லியம்சனின் விக்கெட்டாகவே இருந்தாலும், இத்தொடரில், டெத் ஓவர்களில், அவரது எக்கானமி 18. இது நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை, இறுதியில் ஒருகை பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தைத் தந்தது. அவரும் இறுதியில், தான் பவர் பிளேயில் தந்த அதிர்ச்சியை, திரும்ப வாங்கிச் சென்றார்.

பரிதாப பவர்பிளே:

பவர்பிளேயிலேயே போட்டி முடிந்து போனதாக, சோகக் கீதம் இசைக்க வைத்தது, நியூசிலாந்தின் மந்தமான தொடக்கம். 36 ரன்கள் மட்டுமே வந்து சேர்ந்து, போட்டி ஒன் சைட் கேமாகவே நகரப் போகிறதோ என சலிப்பை ஏற்படுத்தின. அதிலும் முக்கிய வீரர்களின் ஆட்டமிழப்பு, அவர்களது கோப்பைக் கனவை ஆட்டங்காண வைத்து விட்டது. இங்கிலாந்தும் ஏறக்குறைய, இறுதிப் போட்டிக் கனவு உயிர் பெற்று விட்டதாகவே எண்ணியது. ஆனால், அது வெறும் தோற்றப் பிழையாகவே மாறியது.

ஆல்ரவுண்டர் லிவிங்ஸ்டன்:

Liam Livingston | லிவிங்ஸ்டன்
Liam Livingston | லிவிங்ஸ்டன்
AP

பேட்டிங்கின் போது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய லிவிங்ஸ்டனின் பௌலிங் ஸ்பெல்தான், இங்கிலாந்தை, போட்டியை வென்று விட்டதாக, 15 ஓவர்களிலேயே இறுமாப்புக் கொள்ள வைத்தது. 5.5 எக்கானிமியோடு, இலவச இணைப்பாக இரண்டு விக்கெட்டுகளையும் பெற்று கொண்டு, 'இங்கிலாந்துக்கு ஜெயம்', என ஏறக்குறைய உறுதி செய்திருந்தார், லிவிங்ஸ்டன். ஆனால் காட்சிகள் மாறத் தொடங்கியது, அதற்குப் பின்புதான்.

மிட்செல் - கேம் சேஞ்சர்:

Daryl Mitchell | டேரில் மிட்சேல்
Daryl Mitchell | டேரில் மிட்சேல்
AP

ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிட்செல்லின் இன்னிங்ஸ்தான், சகலத்தையும் மாற்றியது. முதல் ஓவரிலிருந்து, இறுதி ஓவர் வரை, களத்தில் நின்று காரியமாற்றி இருந்தார். முதல் பத்து ஓவர்களில், 100-க்குக் கீழாகவே இருந்த அவரது ஸ்ட்ரைக்ரேட், 15-வது ஓவரின் முடிவில், 125 ஆகி, இறுதியில், 153 ஆக உச்சம் தொட்டது. தனது இன்னிங்ஸின் கியரை, ஒன்று, இரண்டு, மூன்று என ஒவ்வொன்றாக மாற்றி, கூடவே சேர்த்து, ஆட்டத்தின் லகானையும், தனது கைக்குக் கொண்டு வந்தார். குப்திலோ வில்லியம்சனோ வில்லன்களாக மாறலாம் என நினைத்த இங்கிலாந்தின், இதயத் துடிப்புக்கு, மிட்செல், மௌன அஞ்சலி செலுத்தி விட்டார்.

முக்கியமாக, 20-வது ஓவர் வரை கூட போட்டியைத் தொடர விடாது, பவர் பிளேயில் தன்னைத் திணற அடித்த வோக்ஸை, மிட்செல் திருப்பி அடித்ததுதான், ஹை லைட்டே. அந்த பேக் டு பேக் சிக்ஸர்கள் எல்லாம், இங்கிலாந்து வீரர்களை, சில நாட்கள் தூங்க விடாமல் தொந்தரவு செய்யுமளவு கலங்கடித்து விட்டது. அந்த ஓவரில் மட்டும், தான் சந்தித்த ஐந்து பந்துகளுக்கு, 19 ரன்களைக் கசையடிகளாகக் கொடுத்திருந்தார் மிட்செல்.

பதறவைத்த 17-வது ஓவர்:

போட்டியையே கண்ணாடி பிம்பமாகத் திருப்பியது, ஜோர்டான் வீசிய இந்த ஓவர்தான். இரண்டு வொய்டுகள், இரண்டு சிக்ஸர்கள், கேட்ச் மிஸ் என பல நாடகக் காட்சிகள் அரங்கேறின. இந்த ஓவர் முழுவதிலும், நீசம்தான் பந்துகளை எதிர் கொண்டார். 6 பந்துகளில், 19 ரன்களைக் குவித்து, இங்கிலாந்தைக் கதிகலங்க வைத்து விட்டார். லெக் பை மற்றும் வொய்டோடு மொத்தமாக வந்து சேர்ந்த 23 ரன்கள்தான், வென்று விடலாம் என்ற நிலையை நோக்கி, நியூசிலாந்தை நகர்த்தியது.

New Zealand Cricket Team
New Zealand Cricket Team
AP

ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்தின் பக்கத்தைத்தான், வெற்றிக்கான மீட்டரின் முள் காட்டிக் கொண்டிருந்தது. ஆனால், வில்லியம்சன் பொதுவாகக் காட்டும் அதே பொறுமையையும், இறுதி வரை நின்று செயல் முடிக்கும் தீரத்தையும், தனக்குள் புகுத்தி, காலத்திற்காகக் காத்திருந்து, இறுதியில் இங்கிலாந்தின் இறுதியுரையை எழுதி, வின்னிங் ஷாட்டாக பவுண்டரியையும் அடித்து, முற்றுப்புள்ளியையும் வைத்து விட்டார் மிட்செல்.

2019 வலியைத் திருப்பித் தந்ததோடு, இறுதிப் போட்டிக்கும், முதல் ஆளாக முன்னேறியுள்ளது நியூசிலாந்து.

அவர்களோடு மோத, மீதமுள்ள ஒரு ஸ்லாட்டை நிரப்பப் போவது ஆஸ்திரேலியாவா, இல்லை பாகிஸ்தானா என்பது, இன்னமும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.