Published:Updated:

IND v ENG: ஏமாற்றம் மட்டுமே தொடர்கதை; இங்கிலாந்திடம் சரணாகதி அடைந்த இந்தியா; காரணம் என்ன?

IND vs ENG ( AP )

இந்தப் போட்டியில் மட்டுமில்லை. இந்த உலகக்கோப்பைத் தொடர் முழுவதுமே இந்திய அணி ரொம்பவே மந்தமாகத்தான் தனது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறது.

Published:Updated:

IND v ENG: ஏமாற்றம் மட்டுமே தொடர்கதை; இங்கிலாந்திடம் சரணாகதி அடைந்த இந்தியா; காரணம் என்ன?

இந்தப் போட்டியில் மட்டுமில்லை. இந்த உலகக்கோப்பைத் தொடர் முழுவதுமே இந்திய அணி ரொம்பவே மந்தமாகத்தான் தனது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறது.

IND vs ENG ( AP )
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக, "இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை காண எங்களுக்கு விருப்பமில்லை. அதை அத்தனை சுலபமாக நிகழவிடமாட்டோம்" என்பது போலப் பேசியிருந்தார். பேசியதோடு மட்டுமல்லாமல் அதை செய்தும் காண்பித்திருக்கிறது ஜாஸ் பட்லர் & கோ. இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையின் நாக் அவுட்டில் வந்து சொதப்பியிருக்கிறது. மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. என்ன நடந்தது? இந்திய அணி எங்கே சொதப்பியது?
IND vs ENG
IND vs ENG
AP

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 168 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஒட்டுமொத்தமாக ஒரு பாசிட்டிவ்வான மனநிலையை இந்திய அணியின் பேட்டிங் பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கவே இல்லை. போட்டிக்குப் பிறகு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பேசுகையில், "இந்திய அணி தொடக்கக்கட்டங்களில் பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தையே போடவில்லை. ரொம்பவே தற்காப்பாகத்தான் ஆடினார்கள்" எனக் கூறியிருந்தார். இந்தப் போட்டியில் பவர்ப்ளேயில் இந்திய அணி 38 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஒரு விக்கெட்டையும் இழந்திருந்தது. இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்திருந்தாலும் ராகுல் 5 ரன்களிலேயே அவுட் ஆகியிருந்தார். அதன்பிறகு கோலியும் ரோஹித்துமே கூட பெரிதாக வேகமெடுக்கவில்லை. 10 ஓவர்களைக் கடக்கும் வரைக்குமே இந்திய அணியின் ரன்ரேட் 6-ஐ சுற்றித்தான் இருந்தது. ரோஹித்தும் 28 பந்துகளில் 27 ரன்களை எடுத்து அவுட் ஆகிவிட்டார்.

ஷேன் வாட்சன் குறிப்பிட்டது இந்த மந்தமான தொடக்கத்தைத்தான். இந்தப் போட்டியில் மட்டுமில்லை. இந்த உலகக்கோப்பைத் தொடர் முழுவதுமே இந்திய அணி ரொம்பவே மந்தமாகத்தான் இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக சராசரி பவர்ப்ளே ரன்ரேட் என்பது 8.6 ஆக இருக்கிறது. ஆனால், இந்திய அணியின் சராசரி பவர்ப்ளே ரன்ரேட்டோ 6-ஐ சுற்றிதான் இருக்கிறது. ரோஹித் மற்றும் ராகுல் இருவருமே ரொம்பவே மெதுவாகத்தான் ஆடி வந்தனர். ஒரு 50+ பார்ட்னர்ஷிப்பை கூட இருவரும் அமைக்கவில்லை. எல்லா போட்டியிலும் பவர்ப்ளேக்குள்ளாகவே இந்த பார்ட்னர்ஷிப் உடைந்திருக்கவும் செய்கிறது.

விராட் கோலி | IND vs ENG
விராட் கோலி | IND vs ENG

இந்தp பிரச்சனை சூப்பர் 12 சுற்றோடு முடியாமல் அரையிறுதிப்போட்டி வரை தொடர்ந்ததும் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இந்த உலகக்கோப்பை மட்டுமில்லை. 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு இந்திய அணி எந்தத் தொடரிலெல்லாம் கோப்பையை நெருங்கி வந்ததோ அங்கெல்லாம் நாக் அவுட்டில் இந்திய அணியின் ஓப்பனர்கள் பெரும்பாலும் சொதப்பியிருக்கிறார்கள். அந்தச் சோகம் இங்கேயும் தொடர்ந்திருக்கிறது.

விராட் கோலி சிறப்பாக ஆடினாலும் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி நேரத்தில் ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தியதை போல இங்கே அவரால் செய்ய முடியவில்லை. 40 பந்துகளில் 50 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஹர்திக்கின் இன்னிங்ஸ் மட்டுமே ஒரே ஆறுதலாக இருந்தது.

IND vs ENG
IND vs ENG
AP

பேட்டிங்கில் இந்திய அணி திட்டமிடலிலும் ஒரு சிறிய சொதப்பலை அரங்கேற்றியிருந்தது. கடைசிக்கட்ட ஓவர்களில்தான் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டிருந்தார். ரிஷப் பண்டை ப்ரமோட் செய்து கொஞ்சம் மேலே ஏற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், இங்கிலாந்து சார்பில் அடில் ரஷீத்தும் லிவிங்ஸ்டனும் ஸ்பின்னர்களாக வீசியிருந்தனர். அடில் ரஷீத்தின் எக்கானமி 5 ஆகவும் பார்ட் டைமர் லிவிங்ஸ்டனின் எக்கானமி 7 ஆகவும் மட்டுமே இருந்தது. ரிஷப் பண்ட் மேலே ஆடி ஸ்பின்னர்களைத் துணிவோடு எதிர்கொண்டிருந்தால் இந்திய அணிக்கு ஒரு சரியான மொமண்டம் கிடைத்திருக்கக்கூடும். இந்திய அணி தவறவிட்ட நல்வாய்ப்பு அது.

பேட்டிங்கில் இத்தனை சொதப்பல்கள் எனில், பௌலிங் மொத்தமுமே சொதப்பல்தான். இம்மியளவு கூட இந்திய அணி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஜாஸ் பட்லரும் அலெக்ஸ் ஹேல்ஸூமே மொத்தமாக முடித்துவிட்டார்கள். பவர்ப்ளேயில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் இருவரின் பெரும்பலமும் ஸ்விங்தான். ஆனால், அது அத்தனை சிறப்பாக ஒர்க் அவுட் ஆகவில்லை. அர்ஷ்தீப்புக்கு பவர்ப்ளேயில் ஒரே ஒரு ஓவர்தான் கொடுக்கவும்பட்டது.
IND vs ENG
IND vs ENG
AP

இந்த உலகக்கோப்பையின் இரண்டு அரையிறுதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் ஓப்பனிங் கூட்டணி வலுவாக ஸ்கோர் செய்த அணியே வென்றிருக்கிறது. நியூசிலாந்து vs பாகிஸ்தான் போட்டியில் நியூசிலாந்தின் ஓப்பனர்கள் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. பாகிஸ்தானில் பாபர் அசாமும் ரிஸ்வானும் நிலைத்து நின்று அதிரடி காட்டினார்கள். பாகிஸ்தானும் போட்டியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இங்கே இந்தப் போட்டியிலும் அதே கதைதான். ரோஹித்தாலும் ராகுலாலும் முடியாததை ஜாஸ் பட்லரும் ஹேல்ஸூம் செய்து காண்பித்துவிட்டார்கள்.

இந்தக் கூட்டணியை முறிக்க முடியாமல் போனதற்கு இந்திய அணியின் லெவன் தேர்வின் மீதும் கேள்விகளை எழுப்ப முடியும். இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தத் தொடரில் இதுவரை, அதாவது இந்த அரையிறுதிக்கு முன்பு வரை ஆடியிருக்கும் போட்டிகளில் 10 ஸ்பின்னர்களை மொத்தமாக எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த 10 ஸ்பின்னர்களில் 9 ஸ்பின்னர்களின் எக்கானமி ரேட் 6க்கும் கீழ் அல்லது 6ஐ சுற்றித்தான் இருக்கிறது. அயர்லாந்தைச் சேர்ந்த டெலனியின் எக்கானமி ரேட் மட்டும்தான் 9க்கும் மேல் இருக்கிறது. ஆக, அவரை மட்டும்தான் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்திருக்கிறார்கள்.

ஹர்திக் பாண்டியா | IND vs ENG
ஹர்திக் பாண்டியா | IND vs ENG
அதேநேரத்தில், அப்படியே இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின்னர்களின் பர்ஃபாமென்ஸை எடுத்துப் பார்ப்போம். அக்ஸர் படேல் 4 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்திருந்தார். இதில் ஆட்டம் உயிர்ப்போடு இருந்த சமயத்தில் வீசிய முதல் 3 ஓவர்களில் மட்டும் 28 ரன்களைக் கொடுத்திருந்தார். அதாவது எக்கனாமி ரேட் 9க்கும் மேல். அஷ்வின் இரண்டு ஓவர்களை மட்டுமே வீசியிருந்தார். 27 ரன்களைக் கொடுத்திருந்தார். எக்கானமி ரேட் 13.5 ஆக இருந்தது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஸ்பின் சறுக்கலை மனதில் வைத்துதான் அக்ஸர் படேலை ரோஹித் நான்காவது ஓவரிலேயே அழைத்திருந்தார். அஷ்வினும் பவர்ப்ளே முடிந்தவுடனேயே வீசியிருந்தார். ஆயினும் அவர்களால் ரோஹித் எதிர்பார்த்த ரிசல்ட்டைக் கொடுக்க முடியவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தத் தொடரில் எதிர்கொண்ட ஸ்பின்னர்களில் அதிக சேதாரமடைந்திருப்பது இந்திய அணியின் ஸ்பின்னர்கள்தான். இந்த இடத்தில்தான் பென்ச்சில் அமர்ந்திருக்கும் சஹாலை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.

கடந்த உலகக்கோப்பையில் சஹாலை அணியிலேயே எடுக்காமல் சொதப்பினார்கள். இந்த உலகக்கோப்பையில் அவரை அணியில் எடுத்தும் பயன்படுத்தாமல் சொதப்பியிருக்கிறார்கள். அவர் லெவனில் இருந்திருக்கும்பட்சத்தில் கொஞ்சம் ரன்கள் போயிருந்தாலும் விக்கெட்டுக்கான வாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொடுத்திருப்பார். இந்திய அணி இத்தனை மோசமான தோல்வியையும் தவிர்த்திருக்க முடியும்.

இங்கிலாந்து அணி | IND vs ENG
இங்கிலாந்து அணி | IND vs ENG
தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் கூறினாலும் தோல்வி தோல்விதான். அதுவும் இந்திய அணி உலகக்கோப்பையின் நாக் அவுட்களில் அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடர்ந்து சொதப்புவது ஜீரணிப்பதற்குக் கடினமானதே. ஒரு முறை ஏமாற்றமென்றால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையுமா?