Published:Updated:

கம்பேக் கிங் டேவிட் வார்னர்: அணிக்காகத் தண்ணீரும் தூக்குவான்... உலகக்கோப்பையும் வெல்வான்!

சிலர் அப்படித்தான்... எவ்வளவு வீழ்ந்தாலும் வீழ்ச்சியை மறக்கடிக்கும் அளவுக்கு கம்பேக் கொடுப்பார்கள். டேவிட் வார்னரும் அப்படியே!

90களில் வெளியான ரஜினி படங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவற்றின் மையக்கதை என்னவாக இருந்தது? முதல் பாதியில் ஹீரோவான ரஜினிகாந்த் ஏழையாக வஞ்சிக்கப்படுபவராக, புறக்கணிக்கப்படுபவராக, ஏமாற்றப்படுபவராக இருப்பார். அதே ரஜினிகாந்த் இரண்டாம் பாதியில் பெரும்பணக்காரராக மாறி ரிவென்ச் எடுப்பார். கிட்டத்தட்ட ரஜினிகாந்த்தின் அந்தக் காலத்து படங்களுக்கு ஒப்பானதாகவே டேவிட் வார்னரின் கடைசி 2 மாதங்கள் அமைந்திருந்தன.

ஃபார்ம் அவுட் ஆகியிருந்தார். சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பதவியை பிடுங்கி இன்னொருவரின் கையில் கொடுத்து வஞ்சித்தது. இத்தனைக்கும் அந்த அணி வென்றிருக்கும் ஒரே ஒரு கோப்பையும் டேவிட் வார்னர் வென்று கொடுத்ததே. அதையெல்லாம் மறந்துவிட்டு கேப்டன் பதவியை பறித்ததோடு மட்டுமல்லாமல், அணியை விட்டே ஓரங்கட்டினார்கள். ஒரு ஸ்டார் வீரரை அவரின் திறன் மீது அவருக்கே சந்தேகம் எழும் அளவுக்கு மட்டம் தட்டியிருந்தனர். ஆனால், இப்படியான வீழ்ச்சிகளை சந்திப்பதெல்லாம் வார்னருக்கு ஒன்றும் புதிதில்லையே!

Ball Tampering பிரச்சனையில் ஒரு வருடம் தடையை அனுபவித்துவிட்டு மீண்டு வந்து ஐபிஎல்-ல் ஆரஞ்சு கேப்பை அடித்தவர். டான் ப்ராட்மேனின் சாதனையை முறியடித்து ஆஸ்திரேலிய அணிக்காக முச்சதத்தை அடித்தவர். 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்களை அடித்தவர். இது அத்தனையும் அவர் கரியரின் உச்சபட்ச வீழ்ச்சியாக பார்க்கப்பட்ட Ball Tampering சர்ச்சைக்கு பிறகே அரங்கேறியது.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

2017-ல் புனே அணி தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது. ஆனால், அடுத்த ஆண்டே தோனி சிஎஸ்கேவுக்கு கேப்டன் ஆனார். கோப்பையை வென்று கொடுத்தார். கேப்டன் என்பதைத் தாண்டி பேட்ஸ்மேனாக கூட தோனியின் பெஸ்ட் சீசன் அதுதான். சிலர் அப்படித்தான்... எவ்வளவு வீழ்ந்தாலும் வீழ்ச்சியை மறக்கடிக்கும் அளவுக்கு கம்பேக் கொடுப்பார்கள். டேவிட் வார்னரும் அப்படியே!

இதே துபாயில் கடந்த மாதத்தில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு கேலரியில் அமர்ந்து அந்த அணிக்காக வார்னர் கொடியசைத்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அதே துபாயில் ஆஸ்திரேலிய வீரர்களின் கையில் உலகக்கோப்பை தவழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணமான டேவிட் வார்னர் தொடர் நாயகன் விருதோடு கம்பீரமாக நிற்கிறார்.

இந்தத் தொடரில் மட்டும் வார்னர் 289 ரன்களை அடித்திருக்கிறார். அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் பாபர் அசாம் 303 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். வார்னருக்கு இரண்டாவது இடம். ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களை அடித்தவர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

89*, 49, 53 கடைசி 3 போட்டிகளில் வார்னரின் ஸ்கோர் இதுவே. வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக நல்ல ரன்ரேட்டோடு வென்றே ஆக வேண்டிய போட்டியில் 56 பந்துகளில் 89 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருந்தார். அரையிறுதியில் பாகிஸ்தானின் அபாயகரமான பந்துவீச்சுக்கு எதிராக 49 ரன்களை எடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருந்தார். ஷதாப் கானுக்கு எதிராக அவர் அவுட்டானபோது ரிவ்யூ எடுத்திருந்தால், அவரே நின்று மேட்ச்சையும் முடித்து கொடுத்திருப்பார்.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்
KAMRAN JEBREILI

அதேமாதிரி, நேற்று நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் 53 ரன்களை எடுத்திருந்தார். வார்னர் அவுட்டானபோது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 12.2 ஓவர்களில் 107-2 என்ற நிலையில் இருந்தது. ஏறக்குறைய போட்டியை ஆஸ்திரேலியாவின் கைக்கு மாற்றிவிட்ட பிறகே வார்னர் அவுட் ஆகியிருந்தார். இந்தத் தொடரில் மொத்தமாக ஆஸ்திரேலியா 7 போட்டிகளில் ஆடி 6 போட்டிகளில் வென்றிருக்கிறது. இந்த 6 போட்டிகளில் 4-ல் வார்னர் அட்டகாசமாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறார். அவரின் பெர்ஃபார்மென்ஸை மட்டும் எடுத்துவிட்டு பார்த்தால் ஆஸ்திரேலியா ஓர் அணியாக பெரிதாக பெர்ஃபார்மே செய்திருக்காது.

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் கூட மிட்செல் மார்ஸ்தான் 77* என அதிக ரன்களை எடுத்திருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. ஆனால், மார்ஸின் ஆட்டம் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக மாற அடிப்படை காரணமாக அமைந்தது வார்னரின் இன்னிங்ஸே! நியூசிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர் மற்றும் இஷ் சோதி என இரண்டு ஸ்பின்னர்கள் இருந்தனர். ஒருவர் இடக்கை ஸ்பின்னர், இன்னொருவர் லெக் ஸ்பின்னர். இருவருமே இந்தத் தொடரில் சிறப்பாக வீசி வருகின்றனர். இஷ் சோதி சிறப்பாக விக்கெட்டுகளோடு எக்கனாமிக்கலாகவும் வீச, சாண்ட்னர் அவருக்கு காம்பீளிமெண்ட் செய்யும் வகையில் கட்டுக்கோப்பாக வீசுவார். இருவரும் பவர்ப்ளே முடிந்த பிறகே வீசுவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரைக்கும் இந்தத் தொடரில் 27 விக்கெட்டுகளை இழந்திருக்கின்றனர். இந்த 27 விக்கெட்டுகளின் 12 விக்கெட்டுகள் ஸ்பின்னர்களுக்கு எதிராக வந்தவை. அந்த 12 விக்கெட்டுகளில் 9 விக்கெட்டுகள் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக வந்தவை. பெரும்பாலும் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரே ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆட்டம் கண்டிருந்தது. நியூசிலாந்தில் இரண்டு ஸ்பின்னர்கள் இருப்பதால் ஆஸியின் மிடில் ஓவர்கள் மந்தமாகும் வாய்ப்பிருந்தது. ஆனால், அதற்கு தடையாக இருந்தது வார்னரே!
டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

இடக்கை பேட்ஸ்மேனான வார்னர், இடக்கை ஸ்பின்னர் + லெக் ஸ்பின்னர் கூட்டணியை எதிர்கொண்டால் ஆஸ்திரேலியா இவர்களிடமிருந்து தப்பித்துவிடலாம் என்ற சூழலில், அணி எதிர்பார்த்ததை போன்றே நின்று சிறப்பாக ஆடினார். மிடில் ஓவர் வரை அவர் நிற்பதற்குக் காரணமாக அமைந்தது அவரின் பவர்ப்ளே அணுகுமுறை. போல்ட்டின் ஸ்விங்கை எதிர்கொள்ள முடியாமல் ஃபின்ச் க்ரீஸை விட்டு இறங்கி இறங்கிவந்து ஆடி அவுட்டாக ஆஸ்திரேலியா தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது.

அந்தச் சமயத்தில் போல்ட் இடக்கை பந்துவீச்சாளராக இருந்தபோதும் அவரின் பந்தில் ரிஸ்க் எடுக்காமல் சவுத்தியை மட்டுமே வார்னர் அட்டாக் செய்தார். இதன்மூலம் பந்தை ஸ்விங் செய்த போல்ட்டின் ஓவரில் விக்கெட் விழுவதற்கான வாய்ப்பைக் குறைத்தார். மிடில் ஓவர்களில் இஷ் சோதியை குறிவைத்து அட்டாக் செய்தார். சோதி வீசிய 9வது ஓவரில் மட்டும் 17 ரன்கள் வந்திருந்தன. வார்னர் மட்டும் பவுண்டரி, சிக்சர்களுடன் 16 ரன்களை அடித்திருந்தார். அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் சென்று கொண்டிருந்த ஆட்டத்தை ஆஸ்திரேலியா பக்கமாக திருப்பிய முதல் ஓவர் இதுதான்.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்
KAMRAN JEBREILI

அரைசதம் அடித்து சிறப்பாக ஆடிய வார்னர் ட்ரெண்ட் போல்டுக்கு எதிராக 7 பந்துகளில் 1 ரன்னை மட்டுமே எடுத்திருந்தார். 13வது ஓவரில் போல்டிடமே விக்கெட்டையும் விட்டிருந்தார். வார்னரை கட்டுப்படுத்திய ஒரே பௌலர் ட்ரெண்ட் போல்ட்தான். பவர்ப்ளேயிலேயே அடித்து ஆடுகிறேன் என ட்ரெண்ட் போல்டின் ஓவர்களில் பேட்டை விட்டிருந்தால் அங்கேயே அவரின் விக்கெட் விழுவதற்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும். அதன்பிறகு, மிடில் ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கிறேன் என மேக்ஸ்வெல் lbw ஆகியிருப்பார். ஆங்கர் இன்னிங்ஸ் ஆடுகிறேன் என ஸ்மித் உருட்டியிருப்பார். ரன்ரேட் அழுத்தத்தில் மிட்செல் மார்ஸ் ரிஸ்க் எடுத்து விக்கெட்டை விட்டிருப்பார்.

T20 World Cup Final: வின்டேஜ்  வில்லியம்சன்; வதம் செய்த வார்னர்; நிரூபித்த ஆஸ்திரேலியா! | NZ v AUS
ஆனால், இது எதுவுமே நடக்கவில்லை. வார்னர் நின்றார். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை எதிர்கொண்டு மிட்செல் மார்ஸுக்கும் அணிக்கும் அழுத்தம் ஏறாமல் பார்த்துக் கொண்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியிலுமே அப்படித்தான். இடக்கை ஸ்பின்னரான இமாத் வாசிம் + லெக் ஸ்பின்னரான ஷதாப் கான் கூட்டணியை வார்னர் நின்று சிறப்பாக எதிர்கொண்டிருந்தார். வார்னர் ஷதாப் கானின் பந்தில்தான் அவுட் ஆனார். ஆனால், அதுவும் கூட ரிவியூவ் எடுத்திருந்தால் தப்பித்திருப்பார். மிட்செல் மார்ஸ் இந்தத் தொடரில் இரண்டு அரைசதங்களை அடித்திருக்கிறார். இரண்டுமே வென்றே ஆக வேண்டிய போட்டியில் வந்தவை. ஒன்று நேற்று நடந்த இறுதிப்போட்டி. இன்னொன்று வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக சூப்பர் 12 சுற்றின் கடைசிப்போட்டி. இரண்டுமே அட்டகாசமான இன்னிங்ஸ்கள். இந்த இரண்டு இன்னிங்ஸ்களிலுமே வார்னரும் அரைசதம் அடித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக 89*, நியூசிலாந்துக்கு எதிராக 53. ஷான் மார்ஸின் சிறப்பான இன்னிங்ஸ்களுக்கு வார்னர் தோள் கொடுத்ததும் மிக முக்கிய காரணம். அபாயகரமான பௌலர் என்றால் அவர் ரிஸ்க் எடுத்துக் கொள்வார். டாட் ஆடி ரன்ரேட் அழுத்தத்தை அதிகரித்துவிட மாட்டார்.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்
KAMRAN JEBREILI

ஒட்டுமொத்தமாக வார்னர் இந்தத் தொடரில் அடித்த 289 ரன்களுமே அவர் அவருக்காக அவரை நிரூபித்துக் காண்பிப்பதற்காக அடித்த ரன்கள் இல்லை. அணிக்காக அணியின் வெற்றிக்காக அனைத்து வீரர்களும் சேர்ந்து உலகக்கோப்பையை கையிலேந்தும் அந்தத் தருணத்திற்காக அடித்த ரன்கள்.

இனி இந்த அணியிலேயே உனக்கு இடம் கிடையாது என ஒதுக்கப்பட்ட பிறகும் கூட, வீரர்களுக்காக வாட்டர் பாட்டில் தூக்கியவரிடமும், கேலரியில் அமர்ந்து சாதாரண ரசிகனாக அணியின் கொடியை அசைத்துக் கொண்டிருந்தவரிடமும் வேறென்ன எதிர்பார்க்க முடியும்! எல்லாமே அணிக்காகதானே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு