Published:Updated:

T20 WC Final: ரிவென்ஜ் எண்ணத்தில் நியூசிலாந்து, முதல் கோப்பைக்குப் போராடும் ஆஸி! வெற்றி யாருக்கு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உலகக்கோப்பையுடன் ஃபின்ச் & வில்லியம்சன்
உலகக்கோப்பையுடன் ஃபின்ச் & வில்லியம்சன் ( ICC )

ஆஸ்திரேலியா அணி 5 முறை ஓடிஐ உலகக்கோப்பைகளை வென்றிருக்கிறது. ஆனால், ஒரு முறை கூட டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை. அந்த ஏக்கத்தைப் போக்கும் வாய்ப்பாக இந்தக் இறுதிப்போட்டி அமைய வேண்டும் என ஆஸ்திரேலியா எதிர்பார்க்கிறது.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதவிருக்கின்றன. இரண்டு அணிகளுமே இதற்கு முன் டி20 உலகக்கோப்பையை வென்றதே இல்லை என்பதால் முதல் முறையாக சாம்பியனாகும் உத்வேகத்தோடு முட்டி மோத போகின்றனர். இந்நிலையில் இரண்டு அணிகளின் சாதக பாதகங்கள் குறித்த ஒரு அலசல் இங்கே...

இரண்டு அணிகள் குறித்து பார்ப்பதற்கு முன்பாக மைதானத்தைப் பற்றி பார்த்தாக வேண்டும். இந்த இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் துபாய் மைதானத்தில் நடைபெற்றிருக்கும் 12 போட்டிகளில் 11 போட்டிகளில் ஸ்கோரை சேஸ் செய்த அணியே வென்றிருக்கிறது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வென்றிருக்கிறது. ஆக, டாஸை வென்று சேஸ் செய்வதற்கே இரண்டு அணிகளும் விரும்பும். டாஸை வென்று சேஸ் செய்யும் அணி வென்றுவிடும் என்பது முன்பே தெரிந்துவிடுகிறதே? ஆம், ஆனால் இங்கே முதலில் பேட் செய்யும் அணி வெல்லவே முடியாது என்றில்லை. இந்த உலகக்கோப்பையில் ஒரே ஒரு போட்டியில் முதலில் பேட் செய்த அணி வென்றிருக்கிறதல்லவா? அது நியூசிலாந்துதான். ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்து 172 ரன்களை எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றிருக்கும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இரண்டு அணிகளுமே பலமான அணிகள் என்பதால் எந்த அணி முதலில் பேட் செய்தாலுமே 170 என்பது டிஃபண்ட் செய்யக்கூடிய ஸ்கோராக இருக்காது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்
நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனின் இறுதிப்போட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்து 192 ரன்களை எடுத்திருக்கும். டார்கெட்டை சேஸ் செய்த கொல்கத்தா அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும்.

எனவே முதலில் பேட் செய்யும் அணி குறைந்தபட்சமாக 180+ ஸ்கோரை எடுத்தால்தான் டார்கெட்டை டிஃபண்ட் செய்யும் அணியும் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கும்.

இந்த தொடரை பொறுத்தவரைக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இரண்டு அணிகளுமே ஒரே மாதிரியாகவே பெர்ஃபார்ம் செய்திருக்கின்றனர். இரண்டு அணிகளும் க்ரூப் சுற்றில் நான்கு போட்டிகளில் வென்று ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றிருந்தனர். அரையிறுதி போட்டியில் டேபிள் டாப்பர்களாக இருந்த இங்கிலாந்தையும் பாகிஸ்தானையும் வீழ்த்தியிருக்கின்றனர். அதுவும் ஒரே மாதிரியாக ஒரு ஓவரை மீதம் வைத்து!

ஆஸ்திரேலிய அணி இந்த தொடருக்குள் நுழைவதற்கு முன் அந்த அணியின் மீது எதிர்பார்ப்புகளை விட விமர்சனங்களே அதிகம் இருந்தது. தொடர்ச்சியாக 5 டி20 தொடரில் தோற்றிருந்தார்கள். அதிகமான 30+ வயதுடைய வீரர்களை கொண்டிருந்த அணியாக இருந்தது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தட்டுத்தடுமாறி வென்றார்கள். இங்கிலாந்துக்கு எதிராக மொத்தமாக சொதப்ப, பட்லர் மரண அடி கொடுத்திருந்தார். திடீரென க்ரூப் சுற்றில் வீறுகொண்டு எழுந்து இலங்கை அணி கொஞ்சம் டென்ஷன் படுத்தியது. இதையெல்லாம் தாண்டி அரையிறுதிக்கு வந்த அணியை ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து மேத்யூ வேட் இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்திருக்கிறார்.

டாஸை வென்று சேஸ் செய்வதன் முக்கியத்துவத்தை ஆஸ்திரேலிய அணி முழுமையாக உணர்ந்திருக்கிறது. ஆடியிருக்கும் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் ஃபின்ச் டாஸை வென்று ஆஸ்திரேலியா ஸ்கோரை சேஸ் செய்திருக்கிறது. அந்த 5 போட்டியிலுமே ஆஸ்திரேலியா வென்றிருக்கிறது. மேலும், ப்ளேயிங் லெவனிலுமே முதலிலிருந்தே ஒரு தெளிவு இருக்கிறது. பௌலிங்கை விட பேட்டிங்கை முழுமையாக நம்பி அதிகப்பட்டியான பேட்ஸ்மேன்களை உள்ளடக்கிய அணியாகவே களமிறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

வார்னர், ஃபின்ச், மார்ஸ், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், வேட், பேட் கம்மின்ஸ் என ப்ளேயிங் லெவனில் 8 பேர் நன்றாக பேட்டிங் ஆடக்கூடியவர்கள். கம்மின்ஸோடு சேர்த்து 4 மெயின் பௌலர்கள் மட்டுமே. ஆல்ரவுண்டர்களை வைத்து மீதமுள்ள ஓவர்களை சமாளித்துக் கொள்வார்கள்.
ஸ்டாய்னிஸ் & வேட்
ஸ்டாய்னிஸ் & வேட்
cricket.com.au
PAK v AUS: ஹசன் அலியின் கேட்ச் ட்ராப் மட்டும்தான் பிரச்சனையா? பாகிஸ்தான் கோட்டைவிட்ட அந்த ஒரு ஓவர்!

இந்த தொடரில் ஒரே ஒரு முறை இங்கிலாந்துக்கு எதிராக இந்த ஃபார்முலாவை மாற்றி பார்த்தனர். மார்ஸை பென்ச்சில் வைத்துவிட்டு அவருக்கி பதில் ஆஸ்டன் அகரை ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டு வந்தார்கள். அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மொத்தமாக சொதப்பியது. பட்லர் அடித்து வெளுக்க 11 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி ஸ்கோரை சேஸும் செய்தது. அந்த போட்டியோடு அகரை பென்ச்சில் வைத்துவிட்டு மீண்டும் பழைய ஃபார்முலாவிற்கு திரும்பினர். இந்த அடர்த்தியான பேட்டிங் லைன் அப்பே அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை காப்பாற்றியிருக்கவும் செய்தது.

இதுவரை வார்னர் 236 ரன்களை எடுத்திருக்கிறார். ஃபின்ச் 130 ரன்களை எடுத்திருக்கிறார். இவர்களை தாண்டி யாரும் பெரிதாக சோபிக்கவில்லை எனினும் மிட்செல் மார்ஸ், ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் என ஒவ்வொரு போட்டியிலும் எதோ ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேக்ஸ்வெல், ஸ்மித் மாதிரியான வீரர்கள் மட்டுமே குறிப்பிட்டு சொல்லும் வகையில் ஒரு இன்னிங்ஸை கூட ஆடவில்லை. இறுதிப்போட்டியில் இவர்களும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் எந்த தடுமாற்றமும் இன்றி ஆஸ்திரேலிய அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.

5 வது பௌலர் என குறிப்பிட்டு சொல்லும் வகையில் பௌலர் இல்லாமல், மேக்ஸ்வெல், மார்ஸ், ஸ்டாய்னிஸ் என ஆல்ரவுண்டர்களை வைத்து சமாளிப்பது ஆஸ்திரேலியாவிற்கு பிரச்னையாக அமைய வாய்ப்பிருக்கிறது. அரையிறுதி போட்டிகள் ஒரே ஓவரில் தலைகீழாக மாறியதை பார்த்திருப்போம். எனவே, இந்த ஆல்ரவுண்டர்கள் வீசும் 4 ஓவர்கள் முக்கியமானதாக அமையும்.

ஆடம் ஷம்பா இந்த தொடரில் மட்டும் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 6 க்கும் கீழ் இருக்கிறது. மிடில் ஓவர்களில் ஷம்பா வீசும் 4 ஓவர்கள் நியூசிலாந்தின் ரன்ரேட்டை பெரிதாக குறைக்கும். மேலும் இவரை அட்டாக் செய்ய டெவான் கான்வே மாதிரியான இடக்கை பேட்ஸ்மேன் காயம் காரணமாக இல்லாமல் போனது நியூசிலாந்துக்கு பின்னடைவே.

பவர்ப்ளேயில் ஹேசல்வுட்டின் டெஸ்ட் மேட்ச் லைன் & லெந்த் பௌலிங்கும் டெத்தில் துல்லியமாக வீசும்பட்சத்தில் ஸ்டார்க்கின் பௌலிங்கும் வலுவானதாக இருக்கும்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரைக்கும் ஆஸ்திரேலியாவிற்கு முரணான ஃபார்முலாவை கொண்டிருக்கின்றனர். முதலில் நியூசிலாந்து அணியும் ஜிம்மி நீஷமோடு சேர்த்து 5 மெயின் பௌலர்கள் என்ற கணக்கில் கூடுதலாக டிம் சீஃபர்ட்டை அணியில் சேர்த்து பேட்டிங்கை பலப்படுத்தியிருந்தது.

ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு சீஃபர்ட்டை பென்ச்சில் வைத்து, ஆடம் மில்னேவை ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டு வந்து பௌலிங்கை பலப்படுத்தினார்கள். பந்துவீச்சுதான் அவர்களின் பலமான அம்சமாகவும் மாறியிருக்கிறது.

நியூசிலாந்து
நியூசிலாந்து
Blackcaps
லெக் ஸ்பின்னர் இஷ் சோதி விக்கெட்டுகளை வாரி குவிக்கிறார். டிம் சவுத்தி எக்கானமி ரேட்டை 6 க்குள் வைத்துக் கொண்டு வித்தை காண்பிக்கிறார். போல்ட் வழக்கம் போல தன் வேலையை கச்சிதமாக செய்கிறார். எக்ஸ்ட்ரா பௌலரான ஜிம்மி நீஷம் பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே பட்டையை கிளப்புகிறார்.

இரண்டு அணிகளுமே இதற்கு முன் 2015 ஓடிஐ உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தன. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியே வென்றிருந்தது. இந்த தொடரின் அரையிறுதியில் 2019 உலகக்கோப்பை தோல்விக்காக இங்கிலாந்தை ரிவென்ச் எடுத்த ப்ளாக் கேப்ஸ் இறுதிப்போட்டியில் 2015 உலகக்கோப்பைக்காக்ச் ரிவென்ச் எடுப்பார்களா எனும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா அணி 5 முறை ஓடிஐ உலகக்கோப்பைகளை வென்றிருக்கிறது. ஆனால், ஒரு முறை கூட டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை. அந்த ஏக்கத்தை போக்கும் வாய்ப்பாக இந்தக் இறுதிப்போட்டி அமைய வேண்டும் என ஆஸ்திரேலியா எதிர்பார்க்கிறது.

வெல்லப்போவது யார்?

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு