Published:Updated:

IND v PAK - Arshdeep Singh: வெற்றியைச் சாத்தியப்படுத்தியவன்; கோலி மட்டுமல்ல அர்ஷ்தீப்பும் ஹீரோதான்!

Arshdeep Singh ( ICC )

இத்தனை நாள்களாக பாபர் அசாம் + ரிஸ்வான் கூட்டணி பற்றிக் கொடுக்கப்பட்ட அத்தனை பில்டப்களையும் வெறும் பத்தே நிமிடங்களில் சுக்குநூறாக உடைத்துப் போட்டார் அர்ஷ்தீப் சிங். இது எப்படிச் சாத்தியமானது?

IND v PAK - Arshdeep Singh: வெற்றியைச் சாத்தியப்படுத்தியவன்; கோலி மட்டுமல்ல அர்ஷ்தீப்பும் ஹீரோதான்!

இத்தனை நாள்களாக பாபர் அசாம் + ரிஸ்வான் கூட்டணி பற்றிக் கொடுக்கப்பட்ட அத்தனை பில்டப்களையும் வெறும் பத்தே நிமிடங்களில் சுக்குநூறாக உடைத்துப் போட்டார் அர்ஷ்தீப் சிங். இது எப்படிச் சாத்தியமானது?

Published:Updated:
Arshdeep Singh ( ICC )

டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. சேஸிங்கில் கோலி ஒரு முரட்டுத்தனமான இன்னிங்ஸை ஆடி இந்திய அணியை வெல்ல வைத்திருக்கிறார். அக்ரசன், ஆதிக்கம் எனப் பழைய துடிப்பான கோலியின் அத்தனை குணாதிசயங்களும் இந்த இன்னிங்ஸில் வெளிப்பட கோலியின் ஆகச்சிறந்த இன்னிங்ஸே இதுதான் என சச்சின் டெண்டுல்கர் தொடங்கி பலரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கோலி ஆடியது ஆகச்சிறந்த இன்னிங்ஸ்தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், கோலியைக் கடந்து இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங்கின் பெர்ஃபார்மன்ஸூம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரையும் பாராட்டியே ஆக வேண்டும்.
Babar & Rizwan
Babar & Rizwan
PCB

பாகிஸ்தான் அணியின் ஓப்பனர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இந்த இருவரின் விக்கெட்டுகளையும் இந்திய அணியின் பௌலர்கள் எவ்வளவு சீக்கிரம் வீழ்த்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாகும் எனக் கணிக்கப்பட்டது. போட்டிக்கு முன்பாகப் பேசிய அத்தனை முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் இந்த விஷயத்தைத்தான் அதிகமாக, அழுத்தமாகக் கூறியிருந்தனர். இதற்கு வலுவான பின்னணியும் இருக்கிறது.

கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராகத் தோற்ற போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. பாபர் அசாமும் ரிஸ்வானும் மட்டுமே நின்று சேஸ் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வைத்திருந்தனர். கடந்த ஒரு வருடத்திலும் இதேபோன்று பல இன்னிங்ஸ்களை ஆடியிருக்கின்றனர்.

வெகு சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 200+ சேஸிங்கை விக்கெட்டே விடாமல் நின்று வெற்றிகரமாக முடித்திருந்தனர். இவைதான், பாபர் அசாம் + ரிஸ்வான் கூட்டணியை அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பேச வைத்தது.
IND vs PAK
IND vs PAK

இந்த இருவரையும் எப்படியாவது சீக்கிரம் வீழ்த்திவிட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போட்டியில் ரோஹித் சஹாலை பென்ச்சில் வைத்துவிட்டு அஷ்வினை லெவனுக்குள் கொண்டு வந்திருந்தார். பாபர் அசாம், ரிஸ்வான் இருவருமே ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக நல்ல ரெக்கார்ட் வைத்திருக்கவில்லை. சமீபமாக ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர்களின் ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ சுற்றியே இருக்கிறது. இதை மனதில் வைத்துத்தான் இவர்களுக்கு செக் வைக்க அஷ்வினைப் பயன்படுத்த நினைத்தார் ரோஹித். ஆனால், அர்ஷ்தீப் சிங் அவுட் ஆஃப் தி சிலபஸாக வந்து எதிர்பார்த்ததை விடச் சீக்கிரமே வேலையை முடித்தார்.

பயங்கர பில்டப்களோடு வந்திறங்கிய பாபர் அசாம் + ரிஸ்வான் இருவரின் விக்கெட்டையுமே அர்ஷ்தீப் சிங்கே வீழ்த்தியிருக்கிறார்.

முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீச, இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே பாபர் அசாமின் விக்கெட்டை அர்ஷ்தீப் வீழ்த்தியிருந்தார். அதாவது, உலகக்கோப்பையில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே விக்கெட். அதுவும் பாபர் அசாம் கோல்டன் டக் அவுட். அர்ஷ்தீப் சிங் வீசிய இன்ஸ்விங்கரில் செய்வதறியாது பீட்டன் ஆகி lbw ஆன பாபர் அசாம் ரிவியூவை எடுத்திருந்தார். ரிவியூவில் பிட்சிங் இன் லைன், இம்பாக்ட் இன் லைன், விக்கெட்ஸ் ஹிட்டிங் என மூன்று கட்டங்களும் சிவப்பாகப் பளிச்சிட்டன. அர்ஷ்தீப் சிங் ஏற்படுத்தப்போகும் அபாயத்திற்கான சமிக்ஞையாகவே அந்தச் சிவப்பு கட்டங்கள் தோன்றியிருந்தன எனச் சொல்லலாம். அடுத்த ஓவரிலேயே ரிஸ்வானை ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியில் விழ வைத்தார். ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்து ரிஸ்வானும் நான்கே ரன்களில் அவுட் ஆனார்.

Arshdeep
Arshdeep
ICC
இத்தனை நாள்களாக பாபர் அசாம் + ரிஸ்வான் கூட்டணி பற்றிக் கொடுக்கப்பட்ட அத்தனை பில்டப்களையும் வெறும் பத்தே நிமிடங்களில் சுக்குநூறாக உடைத்துப் போட்டார்.

இந்த இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தியதே இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையையும் ஆசுவாசத்தையும் கொடுத்தது. ஒருவேளை அர்ஷ்தீப் சிங் இவர்களின் விக்கெட்டை வீழ்த்தியிராத பட்சத்தில், பாபர் அசாமும் ரிஸ்வானும் நின்று ஆடியிருக்கும் பட்சத்தில் பாகிஸ்தானின் ஸ்கோர் அதிகரித்திருக்கும். பாபர் அசாம், ரிஸ்வான் இருவரின் ஸ்ட்ரைக் ரேட்டுமே தொடக்கத்தில் குறைவாக இருந்தாலும் செட்டில் ஆக ஆக வெளுத்தெடுக்கவே செய்வார்கள். 12 ஓவர்களுக்கு மேல் நிற்கையில் பாபர் அசாமின் ஸ்ட்ரைக் ரேட் 166 ஆக இருக்கிறது. அதே 17 ஓவர்களுக்கு மேல் நிற்கையில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 188 ஆக இருக்கிறது. ரிஸ்வான் 12 ஓவர்களுக்கு மேல் நின்று ஆடுகையில் 145 ஸ்ட்ரைக் ரேட்டையும் 17 ஓவர்களுக்கு மேல் நின்று ஆடுகையில் 161 ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்திருக்கிறார்.

ஆக, கடந்த ஆண்டை போன்றே இருவரின் விக்கெட்டையும் பவர்ப்ளேயிலேயே வீழ்த்தாமல் நிற்க விட்டிருந்தால் பாகிஸ்தான் மாபெரும் ஸ்கோரை எட்டியிருக்கும். பின்னர் இந்திய அணியின் சேஸிங்குமே இன்னும் கடுமையாகியிருக்கும். இதையெல்லாம் நடக்கவிடாமல் தடுத்தவர் அர்ஷ்தீப்பே.
இவர்களோடு அதிரடி ஆட்டக்காரர் ஆசிஃப் அலியின் விக்கெட்டையுமே அவரே வீழ்த்தியிருந்தார். மொத்தமாக 4 ஓவர்களில் 32 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகள்! மூன்றுமே முக்கியமான விக்கெட்டுகள்.

2007 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற போது இந்திய அணிக்காக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பௌலர்கள் ஆர்.பி.சிங் மற்றும் மிடில் ஓவர்களில் இர்ஃபான் பதான். 2011 ஓடிஐ உலகக்கோப்பையை வென்ற போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது ஜாகீர் கான். அதன்பிறகு, இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும்படி இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகவில்லை. நடராஜன் போன்றோர் இன்னும் உலகக்கோப்பைத் தொடர்களில் ஆடவில்லை. ஐ.சி.சி உலகக்கோப்பைத் தொடர்களில் அத்தனை அணிகளும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை சக்திமிகு ஆயுதமாக துருப்புச்சீட்டாக பயன்படுத்த இந்திய அணி மட்டும் சமீபமாக அந்த ஆயுதத்தை கையிலேயே எடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.

Arshdeep
Arshdeep
BCCI

2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஆமிரை வைத்து இந்திய டாப் ஆர்டரைக் காலி செய்த பாகிஸ்தான் கடந்த டி20 உலகக்கோப்பையில் ஷாகின் அஃப்ரிடியை வைத்து அதே வேலையைச் செய்திருந்தது. ஐ.சி.சி நடத்தும் பெரிய தொடர்களில் இந்திய அணியின் சொதப்பல்களுக்கு அப்படியான ஒரு வெறித்தனமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இல்லாததுமே முக்கிய காரணமாக இருந்தது. அந்தக் குறையைப் போக்கும் வகையில் இந்த டி20 உலகக்கோப்பைக்கு அர்ஷ்தீப்பை அழைத்து வந்தார்கள்.

தன்னால் எப்படியான வித்தையை நிகழ்த்த முடியும் என்பதை அர்ஷ்தீப் முதல் போட்டியிலேயே காட்டிவிட்டார். அர்ஷ்தீப் இந்தப் போட்டியின் ஹீரோ மட்டுமில்லை. இந்திய அணிக்காக இந்தத் தொடரின் ஹீரோவாகவுமே உருவெடுப்பார். அதற்கான ட்ரெய்லர்தான் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் செய்திருக்கும் சம்பவம்! வாழ்த்துகள் அர்ஷ்தீப்!