Published:Updated:

`ஹேப்பி தீபாவளி' - A Film by `கிங்' கோலி!

Virat Kohli ( ICC )

கோலி அடித்த பந்துகளை மட்டுமல்ல, கோலியையே அத்தனை பேரும் அண்ணாந்து தான் பார்த்துக் கொண்டிருந்தனர். *'நாயகன் மீண்டும் வரார்' பாடல் பின்னணியில் ஒலிக்கிறது*

`ஹேப்பி தீபாவளி' - A Film by `கிங்' கோலி!

கோலி அடித்த பந்துகளை மட்டுமல்ல, கோலியையே அத்தனை பேரும் அண்ணாந்து தான் பார்த்துக் கொண்டிருந்தனர். *'நாயகன் மீண்டும் வரார்' பாடல் பின்னணியில் ஒலிக்கிறது*

Published:Updated:
Virat Kohli ( ICC )

ஒரு பெரும் பிம்பமுடைய நாயகனும் அவனது எழுச்சியும் இங்கே எப்படி எடுத்தாளப்படுகிறது? கதைகளின் ஆரம்பப்புள்ளியிலேயே அவன் அசாத்தியங்களை நிகழ்த்தி விடுவானா? நிச்சயமாக இல்லை. நாயகனுக்கென்றே சில குறைகள் இருக்கும், அதை நோண்டும் வகையில் எதிர்த் தரப்பிலிருந்து பிரச்னைகள் உண்டாக்கப்படும். நாயகன் தடுமாறுவான், வீழ்வான். எதிராளிகளின் கை ஓங்கும். ஆனால், கதை அத்தோடு முடிந்துவிடாது. நாயகன் கம்பேக் கொடுப்பான். மீண்டெழுவான், சண்டை செய்வான். உச்சக்கட்ட இறுதிக்காட்சியில் இதுவரை வெளிக்காட்டாத உக்கிரத்தை வெளிப்படுத்தி எதிராளிகளை வீழ்த்துவான். இதுபோன்று அவரவர் சிந்தைக்கு ஒப்பப் பல படிநிலைகளால் கட்டமைக்கப்படுவதே நாயகனின் எழுச்சி பயணமாக இருக்கும்.

இங்கே நாயகன் என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் விராட் கோலி என்று கூட எழுதிக்கொள்ளலாம். கோலியின் நேற்றைய எழுச்சி அதற்கு ஒத்ததாகத்தான் இருந்தது.

கோலி நேற்று தடுமாறினார். சில சமயங்களில் பாகிஸ்தான் பௌலர்களின் யூகத்திற்கு இரையாகிப் போனார். வீழ்ந்துவிடுவாரோ எனும் அச்சத்தைக் கொடுத்தார். ஆனால், இறுதியில் அத்தனையையும் மாற்றி தன்னுடைய உச்சக்கட்ட வெறியை வெளிக்காட்டி பாகிஸ்தானை வீழ்த்தினார்.
கோலி
கோலி
ICC

கோலி க்ரீஸூக்குள் வந்தவுடனேயே நேரலையில் ஒரு புள்ளிவிவரம் காட்டப்பட்டது. 2021 முதல் இப்போது வரை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கோலி 17 முறை விக்கெட்டை விட்டிருக்கிறார். இந்த 17 முறைகளில் 15 முறை உள்பக்கமாகத் தன்னை நோக்கித் திரும்பும் பந்துகளுக்கே விக்கெட்டை விட்டிருக்கிறார். அதாவது, நம்முடைய நாயகனுக்கு இன்கம்மிங் டெலிவரியை எதிர்கொள்வதில் கொஞ்சம் சிக்கல் உண்டு. இதே புள்ளியில் நின்று கொண்டு பாகிஸ்தானை உற்று நோக்கினால் அங்கே ஷாகின் அஃப்ரிடியின் பெரும்பலமே பந்தை உள்பக்கமாகத் திருப்புவதுதான். 2020 முதல் பவர்ப்ளேயில் வேகப்பந்து வீச்சாளர்களின் லெந்தை பற்றிப் பார்த்தால், ஷாகீன் ஷா அளவுக்கு யாருமே அத்தனை ஃபுல்லாக அட்டாக்கிங் வீசியிருக்கவில்லை. ஓவர் தி விக்கெட்டில் வந்து ஷாகீன் ஃபுல்லாக வீசி பந்து உள்பக்கமாகத் திரும்பவும் செய்தால் நம்முடைய நாயகன் திணறிவிடுவார். ஆனால், பாருங்கள் அதிர்ஷ்டம் என்பது பல நேரங்களில் நாயகர்களுக்கென்றே பிரத்யேகமாக ஒர்க் அவுட் ஆகும். நேற்று கோலிக்கும் அது நடந்திருந்தது. கோலிக்கு ஷாகீன் ஷா வீசிய முதல் ஓவரில் முதலில் ஷாகீன் ஓவர் தி விக்கெட்டில் வந்துதான் வீசியிருந்தார்.

ஆனால், பந்தை ஷாகீன் ஷாவால் திருப்ப முடியவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கே இயற்கையான அவே லைன் லெந்திலேயே பந்து சென்றது. பந்தைத் திருப்ப முடியாத ஷாகீன் ரவுண்ட் தி விக்கெட்டுக்கு மாறினார். இப்போது ஆங்கிள் இன் டெலிவரியாக வீசினார். இப்போது நம்முடைய நாயகன் திணறினார். ஒரு பந்தை அப்படியே செய்வதறியாது பேடில் வாங்கினார்.

Shaheen Afridi
Shaheen Afridi
பதற்றமடைய வேண்டாம்... அவுட்டெல்லாம் இல்லை! பந்து கொஞ்சம் உயரமாகச் சென்றிருந்தது Wickets Missing! நாயகன் தப்பித்தார்.

ஷாகீன் ஷா தான் கோலிக்கு மாபெரும் வில்லனாக இருப்பார் எனக் கணிக்கப்பட்டது. அவரின் முதல் ஸ்பெல்லை அவர் எப்படியோ கடந்துவிட்டார். ஆனால், இதன் பின்னும் கோலியால் வேகமெடுக்க முடியவில்லை. தொடர்ந்து பதுங்கிக் கொண்டேதான் இருந்தார். ஒரு கட்டத்தில் ஸ்ட்ரைக் ரேட் 50 என்றெல்லாம் குறைந்தது. Win Predictor-ல் பாகிஸ்தான் வெற்றி பெற 85%-மும் இந்தியா வெற்றி பெற 15%-மும் மட்டுமே வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டது. எல்லா கதையிலுமே நாயகன் எதிர்கொள்ளும் முக்கியமான இடம் இது. சரிந்து விழுந்து எழுவதற்கான வழியே இன்றி திக்குமுக்காடி நிற்கும் இடம். இதுதான் கதையின் மிட் பாயிண்ட், அதாவது இடைவேளை! எனில், இதன்பிறகு என்ன நடக்கும்? நாயகனின் எழுச்சிதானே!

வாங்கியதற்கெல்லாம் சேர்த்து பதிலடி கொடுக்கும் படலம் தொடங்கும். இன்னிங்ஸின் இரண்டாம் பாதியில் கோலியும் திருப்பிக் கொடுக்க தயாராகினார்.

42 பந்துகளில் 46 ரன்களை எடுத்திருந்த போது எதிர்த்தரப்பின் முக்கிய துருப்புச்சீட்டான ஷாகீன் ஷா மீண்டும் வந்தார். ஷாகீன் ஷாவைப் பொறுத்தவரைக்கும் இந்த இடம்தான் க்ளைமாக்ஸாக இருக்க வேண்டும், அந்த க்ளைமாக்ஸின் வின்னராக கோலியின் விக்கெட்டை எடுத்து கதையை அத்தோடு முடித்துவிட வேண்டும். ஆனால், கதையின் தன்மையும் போக்கும் ஷாகீன் ஷாவின் எண்ணத்திற்கு மாறாக இருந்தது. அடிவாங்கிய ஹீரோ க்ளைமாக்ஸில் எதிராளியைப் புரட்டி எடுப்பதைப் போல, ஷாகீன் ஷா வீசிய முதல் பந்திலேயே கோலி மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரியை அடித்து அரைசதத்தை எட்டினார்.

Virat Kohli
Virat Kohli
ICC
கோலியின் எழுச்சி தொடங்கியது!

அதே ஓவரில் இன்னும் இரண்டு பவுண்டரிகள். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஷார்ட் பிட்ச்சில் ஆங்கிள் இன்னாக ஷாகீன் வீசிய டெலிவரியை அப்படியே ஷார்ட் ஃபைன் லெக்குக்கும் டீப் ஸ்கொயர் லெக்குக்கும் இடையில் க்ளியர் கட்டாகத் தட்டி விட்டு கோலி பவுண்டரியாக்கினார். ஷாகீனின் வலுவான ஆயுதமே செயலற்று போனது. அவரால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

ஷாகீன் ஷா எதிர்பார்த்ததற்கு மாறாகக் கதை வேறொரு முடிவை நோக்கி நகர்ந்தது. நம்முடைய நாயகன் தன்னுடைய உச்சக்கட்ட வெறித்தனத்தை வெளிக்காட்டும் இடமும் வந்தது.

ஹாரிஸ் ராஃப் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை கோலி பறக்கவிட்டிருந்தார். இந்த இரண்டு சிக்ஸர்கள்தான் பாகிஸ்தானை மொத்தமாகப் பதற வைத்தது. பாகிஸ்தானின் பக்கமிருந்த போட்டியை அப்படியே உருவி இந்தியா பக்கம் கொண்டு வந்தது. 18.5வது பந்தில் கோலி அடித்த அந்த சிக்ஸர் நாயகத்தனத்தின் உச்சம். அதற்கு முந்தைய இரண்டு பந்துகளையுமே கூட ஹாரிஸ் ராஃப் கொஞ்சம் மெதுவாக ஷார்ட் பிட்ச்சாகத்தான் வீசியிருந்தார். ஹர்திக் ஒரு பந்தில் பீட்டன் ஆகி டாட் ஆக்கியிருந்தார். இன்னொரு பந்தில் மிஸ் ஹிட் ஆகி ஒரு ரன் மட்டும் எடுத்திருந்தார்.

விராட் கோலி
விராட் கோலி

வெற்றிக்கான வழியே இதுதான் என ஹாரிஸ் ராஃப் கோலிக்குமே அதே ஸ்லோ ஷார்ட் பிட்ச் டெலிவரியை வீச, கோலி லாங் ஆனின் தலைக்கு மேல் க்ளீன் ஹிட்டாக சிக்ஸராக்கினார். கோலியின் விஸ்வரூபத்தை ராஃபால் அண்ணாந்து மட்டுமே பார்க்க முடிந்தது. அடுத்த பந்தை வீசுவதற்கு முன்பாக ஒரு ஃபீல்டிங் மாற்றம் நடந்தது. ஷார்ட் ஃபைன் லெக் டீப்புக்கு மாற்றப்பட்டு, தேர்டுமேன் வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டார். இப்போது ஹரீஸ் ராஃப் வீசியதும் கொஞ்சம் ஷார்ட் பிட்ச் டெலிவரிதான். அந்த ஃபைன் லெக்கை குறிவைத்து கோலியின் உடம்புக்குள் ராஃப் வீசியிருந்தார். இப்போதும் கோலி அசரவில்லை. ஒரே ஒரு ஃப்ளிக்தான் பந்து ஃபைன் லெக் ஃபீல்டரை தாண்டி பறந்தது.

கோலி அடித்த பந்துகளை மட்டுமல்ல, கோலியையே அத்தனை பேரும் அண்ணாந்துதான் பார்த்துக் கொண்டிருந்தனர். நாயகன் இஸ் பேக்!

இறுதி ஓவரில் ஸ்பின்னர் எனக் கூறி மிதவேகம் வீசிய நவாஸின் பந்துவீச்சில் மேலும் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டு அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். ஆசியக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கோலி சதமடித்த போது அதுதான் அவரின் கம்பேக் எனக் கூறினர். ஆனால், அதெல்லாம் துக்கடா இன்னிங்ஸ்தான். அவரின் அசகாயத்தனத்தை முழுமையாக வெளிக்கொணர வைத்த இந்த இன்னிங்ஸ்தான் கோலியின் ரியல் கம்பேக்! ரியல் 'நாயகன் மீண்டும் வரார்' மோட்.

கோலி ராஃப் ஓவரில் அந்த இரண்டு சிக்ஸர்களை அடித்த போது ஹர்ஷா போக்லே கமென்ட்ரியில்,

விராட் கோலி
விராட் கோலி
Virat Kohli has turning it on in style here at the stadium and it's dancing to his beats.
Harsha Bhogle

என ரசிகர்களின் ஆராவாரத்தை வர்ணித்திருந்தார். இதுதான் நம்முடைய கதையின் க்ளைமாக்ஸ். நாயகன் மீண்டு வந்து வெற்றி திலகம் ஏந்த, மக்கள் எல்லோரும் கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள். Yeah... It's a happy ending!

இந்த வருடத் தீபாவளியின் பிளாக்பஸ்டர் படம் நிச்சயமாக இதுதான். ஹேப்பி தீபாவளி மக்களே!