Published:Updated:

ICC T20 WC: `சொன்னீங்களே... செஞ்சீங்களா?' இந்த 3 கேள்விகளுக்குப் பதில் இருக்குதா ரோஹித் - டிராவிட்?

Team India - Rohit Sharma and Rahul Dravid

'சொன்னீங்களே... செஞ்சீங்களா?' என அரசியல்வாதிகளிடம் கேட்கும் பாணியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித்திடமும் பயிற்சியாளரான டிராவிட்டிடமும் 3 முக்கிய கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.

Published:Updated:

ICC T20 WC: `சொன்னீங்களே... செஞ்சீங்களா?' இந்த 3 கேள்விகளுக்குப் பதில் இருக்குதா ரோஹித் - டிராவிட்?

'சொன்னீங்களே... செஞ்சீங்களா?' என அரசியல்வாதிகளிடம் கேட்கும் பாணியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித்திடமும் பயிற்சியாளரான டிராவிட்டிடமும் 3 முக்கிய கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.

Team India - Rohit Sharma and Rahul Dravid
டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி படுமோசமாகத் தோற்று தொடரை விட்டு வெளியேறியிருக்கிறது. இந்திய ரசிகர்களுக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இச்சூழலில், 'சொன்னீங்களே... செஞ்சீங்களா?' என அரசியல்வாதிகளிடம் கேட்கும் பாணியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித்திடமும் பயிற்சியாளரான டிராவிட்டிடமும் 3 முக்கிய கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.

1. பவர்ப்ளே பரிதாபம்:

பவர்ப்ளேயின் 6 ஓவர்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் இந்த அணுகுமுறை நல்ல பலனைக் கொடுக்கும். சில முறை அது தவறிப்போகும். ஆனால், இதில்தான் ஆட்டத்தின் சுவாரஸ்யமே இருக்கிறது. இதுதான் நமக்கான சவாலே. ஒன்றிரண்டு வீரர்கள் மட்டுமில்லை. ஒட்டுமொத்த அணியுமே இந்த அணுகுமுறைக்குப் பழகியாக வேண்டும். அணி எந்தத் திசையை நோக்கி செல்கிறதென்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ரோஹித் சர்மா

ஜூலை 7-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கின் போது பவர்ப்ளேயில் 60+ ரன்களை ஸ்கோர் செய்திருந்தது. இந்திய அணியின் இந்த அதிரடியான அணுகுமுறையை குறிப்பிட்டு போட்டிக்கு பிறகான நிகழ்வில் கேட்கப்பட்டப் போதுதான் கேப்டன் ரோஹித் மேற்குறிப்பிட்டவாறு பேசியிருந்தார்.

Rohit - Rahul |IND v SA
Rohit - Rahul |IND v SA
ICC

கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்று கோலி, ரவி சாஸ்திரி என பழைய செட்டப் மாறி ரோஹித், ராகுல் என புது செட்டப் வந்த பிறகு, டி20 ஆட்டத்தை அணுகும் விதத்தில் எக்கச்சக்க மாற்றங்கள் வரத் தொடங்கின. டி20 யின் நவீன ட்ரெண்ட்டுக்கு ஏற்ப இந்திய அணியும் முதல் பந்திலிருந்தே அடித்து வெளுக்கும் அட்டாக்கிங் பாணிக்கு மாறத் தொடங்கியது. அதுதான் இந்திய அணியின் உலகக்கோப்பைக்கான புதிய திட்டமாகவும் பார்க்கப்பட்டது. ரோஹித்தும் டிராவிட்டுமே இந்த அணுகுமுறையை பல இடங்களில் குறிப்பிட்டு பேசியிருக்கின்றனர். இதுதான் இந்திய அணியின் புதிய சக்சஸ் ஃபார்முலாவாகவும் பார்க்கப்பட்டது. 2022-ல் இந்த உலகக்கோப்பைக்கு முன்பு வரை ஆடிய அத்தனை ஆட்டங்களிலும் இந்த அட்டாக்கிங் அணுகுமுறையையே இந்திய அணி பின்பற்றியிருந்தது.

இந்த உலகக்கோப்பைக்கு முன்பு இந்த ஆண்டில் இந்திய அணியின் சராசரி பவர்ப்ளே ஸ்கோர் 51.38, சராசரி ரன்ரேட் 8.56. அதேநேரத்தில் முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் சராசரி ஸ்கோர் 85+ ஆக இருந்தது. சராசரி ரன்ரேட் 8.5.

சிலபஸ் மொத்தத்தையும் கரைத்து குடித்துவிட்டு தேர்வில் சென்று அத்தனையும் மறந்துவிட்டால் எப்படியிருக்கும்? அதே கதைதான் இந்திய அணிக்கும் நடந்திருக்கிறது. உலகக்கோப்பையை மனதில் வைத்து 'Going all out' அணுகுமுறையை வருடம் முழுவதும் பின்பற்றிவிட்டு உலகக்கோப்பையில் வந்து அதை அப்படியே மறந்துவிட்டார்கள்.

இந்த உலகக்கோப்பையில் பவர்ப்ளேயில் இந்திய அணியின் சராசரி ஸ்கோர் 36.1 மட்டுமே. சராசரி பவர்ப்ளே ரன்ரேட் 6.02 மட்டுமே. இந்த உலகக்கோப்பையில் முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் சராசரி ஸ்கோர் 66.5 மட்டுமே. சராசரி ரன்ரேட் 6.65 மட்டுமே.

இதைத்தான் ஹர்ஷா போக்லேவும் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய அணி பழைமைவாத கிரிக்கெட்டை ஆடி வருகிறது. அதிலிருந்து விடுபட வேண்டுமென எண்ணினார்கள். அதற்கான திட்டங்களையும் வகுத்தார்கள். ஆனால், அதை இருதரப்பு தொடர்களில் மட்டுமே அப்ளை செய்தார்கள்.
ஹர்ஷா போக்லே
அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுவோம். முதல் பந்திலிருந்தே அட்டாக் செய்வோம்னு சொன்னீங்களே ரோஹித்... செஞ்சீங்களா?

ஓப்பனிங் வேற ஆளே இல்லையா?

விராட் கோலியையும் ஒரு ஓப்பனிங் ஆப்சனாகத்தான் பார்க்கிறோம். அவர் எங்களின் மூன்றாவது ஆப்சன்!
ரோஹித் சர்மா

உலகக்கோப்பைக்கு முன்பாக நடந்த ஆஸ்திரேலிய தொடருக்கு முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்தான் கேப்டன் ரோஹித் இவ்வாறு பேசியிருந்தார்.

கோலியை மட்டுமில்லை. இந்த ஆண்டில் எக்கச்சக்க வீரர்களை இந்திய அணி ஓப்பனிங் ஆப்சனாகப் பார்த்திருக்கிறது. சிலரை முயன்றும் பார்த்திருந்தார்கள்.

ரோஹித் & பண்ட்
ரோஹித் & பண்ட்
BCCI
இஷன் கிஷன் மட்டும் 14 போட்டிகளில் ஓப்பனராக களமிறங்கியிருந்தார். ருத்துராஜ் 6 போட்டிகளிலும் சூர்யகுமார் 4 போட்டிகளிலும் ரிஷப் பண்ட் 3 போட்டிகளிலும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். இவர்கள் போக ஸ்ரேயாஸ் ஐயரும் தீபக் ஹூடாவுமே கூட ஓப்பனர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர்.

இத்தனை ஆப்சன்களை முயன்றுவிட்டு கடைசியில் அதே பழைய ராகுலிடமும் ரோஹித்திடமும் வந்து செட்டில் ஆனார்கள். ராகுல் முதல் 3 போட்டிகளிலும் ஒன்றுமே செய்யவில்லை. அப்போதே அவர் அணியில் தொடருவாரா என்னும் கேள்வி எழுந்தது. ஆனால், ரோஹித்தும் டிராவிட்டும் ராகுல்தான் எங்களின் ஒரே ஆப்சன் என ஒற்றைக் காலில் நின்றார்கள். ராகுலும் வங்கதேசத்துக்கும் ஜிம்பாப்வேக்கும் எதிராக அரைசதம் அடித்தார். ஆனால், அதனால் என்ன பிரயோஜனம்? அடித்தே ஆக வேண்டிய அரையிறுதியில் மொத்தமாகச் சொதப்பிவிட்டாரே!

மற்ற எல்லாரையும் விட்டுவிடுங்கள். சூர்யகுமார், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா இந்த ஓப்பனிங் ஆப்சன் எல்லாம் உலகக்கோப்பை அணியில்தான் இருந்தார்கள். அவர்களை ஒரு போட்டியிலாவது ஓப்பனர்களாக ஆக்கியிருக்கலாம் அல்லது விராட் கோலியையாவது ஓப்பனராக முயன்றிருக்கலாம். ராகுல் மற்றும் ரோஹித்தே இந்த ஆண்டு முழுவதும் ஓப்பனர்களாக இருந்திருந்தால், இந்திய அணி புதிதாக யாரையும் முயன்று பார்க்காமலேயே இருந்திருந்தால் நமக்கு இந்த கேள்வியே எழுந்திருக்காது.

ஆனால், இத்தனை பேரை முயன்று பார்த்தும் கடைசியில் ஓட மறுக்கும் இரு குதிரைகள்தான் இந்திய அணிக்கு ஓப்பனர்களாக இறக்கப்பட்டனர் என்னும்போது இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. சொன்னீங்களே... செஞ்சீங்களா?

சஹால் எங்கே?

பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னை முழுமையாக நம்புகிறார். என்னுடைய திறனை வெளிப்படுத்துவதற்கான முழு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.
டிராவிட் சொல்லியதாக சஹால் சொன்னது!
Chahal
Chahal

இந்த ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரு போட்டிக்குப் பிறகான நிகழ்வில் சஹால் இப்படிப் பேசியிருந்தார். இப்போது உலகக்கோப்பை முடிந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் சஹாலிடம் மைக்கை நீட்டினால் இதே வார்த்தைகளை இதே உறுதியோடு சொல்வாரா என்பது சந்தேகமே. சஹால் மாதிரியான ஒரு வீரரை கடந்த உலகக்கோப்பையில் அணியில் எடுக்காமலேயே சொதப்பினார்கள். இந்த முறை அணியில் எடுத்தும் சொதப்பியிருக்கிறார்கள். உலகக்கோப்பையின் 6 போட்டிகளிலும் பென்ச்சில் வைக்கும் அளவுக்கு முக்கியமற்ற வீரரா சஹால்? இந்த ஆண்டில் மட்டும் 18 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரை விட சுமாராகவே ஆடியிருக்கும் அஷ்வினுக்கும் அக்ஸருக்கும் அணியில் இடமிருந்தது. ஆனால், சஹாலுக்கு இடமில்லை. இந்த இடத்தில்தான் அணியின் அந்த அட்டாக்கிங் அணுகுமுறை எங்கே போனது என்னும் கேள்வியை மீண்டும் கேட்க வேண்டியிருக்கிறது. அக்ஸர், அஷ்வின், சஹால் மூன்று பேரில் அக்ரஸிவ்வான அட்டாக்கிங் அணுகுமுறையின்படி பார்த்தால் சஹால்தான் இந்திய அணியின் முதல் சாய்ஸாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் கருத்திலேயே கொள்ளப்படவில்லை. எனில், இந்த ஆண்டு முழுவதும் வரிந்து கட்டிக்கொள்ள நினைத்த அட்டாக்கிங் அணுகுமுறையால் என்ன பயன்?

அதேதான் மீண்டும்... சொன்னீங்களே செஞ்சிங்களா?

இந்திய அணி இந்த ஆண்டில் உலகக்கோப்பையை மனதில் வைத்து தங்களுக்கென ஒரு தனி பாதையை வகுத்து பயணித்துக் கொண்டிருந்தது. இலக்கை எட்டும் சமயத்தில் அந்தப் பாதையிலிருந்து தாமாகவே விலகி திக்குத்திசை தெரியாமல், சொல்லப்போனால் பழைய திசையிலேயே போய் சொதப்பியிருக்கின்றனர்.

Dravid
Dravid
இச்சமயத்தில் இந்திய அணியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கமென்ட் செய்யுங்கள்.