Published:Updated:

Virat Kohli: காலத்துக்கும் நின்று பேசும் அந்த ஒரு சிக்ஸர்; அதில் அப்படியென்ன ஸ்பெஷல்?

Virat Kohli ( Hotstar )

சமகாலத்தின் மிகச்சிறந்த பேட்டர் தான்தான் என்பதை இன்னும் ஒருமுறை உலகுக்கு இந்த ஷாட் மூலம் சொல்லியிருக்கிறார் கோலி.

Virat Kohli: காலத்துக்கும் நின்று பேசும் அந்த ஒரு சிக்ஸர்; அதில் அப்படியென்ன ஸ்பெஷல்?

சமகாலத்தின் மிகச்சிறந்த பேட்டர் தான்தான் என்பதை இன்னும் ஒருமுறை உலகுக்கு இந்த ஷாட் மூலம் சொல்லியிருக்கிறார் கோலி.

Published:Updated:
Virat Kohli ( Hotstar )
குறள் 975: பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்.

விளக்கம்: எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்!

எடுத்துக்காட்டு: வெற்றிக்கு 8 பந்துகளில் 28 ரன்கள் தேவை. 19-வது ஓவரை வீசிக்கொண்டிருப்பவர் ஹாரிஸ் ராஃப். ஏற்கெனவே இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேன்கள் மூவரின் விக்கெட்களை வீழ்த்தி சீறிபாய்ந்து வந்துகொண்டிருந்தார். இந்திய ரசிகர்களால் நிரம்பி வழிந்த MCG-யை மயான அமைதி சூழ்ந்தது. கடைசி ஓவர் வீச வருவது ஸ்பின்னர் நவாஸ்தான் என்றாலும் 20 ரன்களுக்கு மேல் அடிப்பது என்பது சாத்தியமா என்று யோசிக்கத்தொடங்கியிருந்தனர். அப்போதுதான் வள்ளுவர் சொன்ன அந்த அருமை உடைய செயலை ஆற்றினார் கோலி. சீறிப்பாய்ந்து வந்த ஹாரிஸ் ராஃப் குட் லென்த்துக்கும் ஷார்ட் லென்த்துக்கும் இடையில் சிறப்பான ஒரு பந்தை வீச, சற்று பின்னே நகர்ந்து பௌலரின் தலைக்கு மேல் நேராக லாங்க் ஆனில் சிக்ஸர் அடித்தார்!
விராட் கோலி
விராட் கோலி
ICC

கிரிக்கெட் பயிற்சிக்கு சென்ற அனைவருக்குமே இந்த ஷாட்டின் சிறப்பு நன்கு புரியும். ஜாலியாக கல்லி கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் நீங்கள் முறையான கிரிக்கெட் பயிற்சியில் சேர்ந்தால் எல்லா பயிற்சியாளர்களுமே முதலில் ஒன்றைத்தான் சொல்வார்கள். பந்தை நேராக ஆட வேண்டும். கல்லி கிரிக்கெட்டில் லெக் சைடில் சிக்ஸர் அடிக்க பேட்டை சுழற்றிய அனைவருக்கும் நேராக ஆடுவது என்பது அவ்வளவு கடினமாக இருக்கும். முறையான கிரிக்கெட்டிங் ஷாட்களாக கருதப்படும் ஸ்ட்ரைட் ட்ரைவ், கவர் ட்ரைவ், ஆன் டிரைவ் ஆடுவதற்கே அந்தப் பயிற்சி பெரிதும் உதவும். அடித்து ஆட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் சர்வதேச வீரர்களே மீண்டும் கல்லி கிரிக்கெட் ஸ்டைலுக்கு மாறிவிடுவதை பார்க்க முடியும். ஓவர்-பிட்ச் செய்யப்பட்டு ஸ்லாட்டில் போடப்படும் பந்தை மட்டுமே நேராக சிக்ஸருக்குத் தூக்குவார்கள் பேட்ஸ்மேன்கள். அதனால்தான் இந்த விராட் கோலி சிக்ஸர் ரொம்பவே ஸ்பெஷல்.

இது வெற்று புகழ்ச்சி அல்ல, இதற்கு ஆதாரமாக தரவுகளும் இருக்கின்றன. டிவி ஒளிபரப்புக்காக கிரிக்கெட் தரவுகளை சேகரித்து ஆய்வுசெய்யும் 'Cricviz' நிறுவனம் வெளியிட்ட தகவல் இது.

10 மீட்டர் அல்லது அதை விட ஷார்ட்டான லென்த்தில்; மணிக்கு 130 கிலோமீட்டருக்கு அதிகமான வேகத்தில் டி20 போட்டிகளில் இதுவரை 27,373 பந்துகளே வீசப்பட்டுள்ளன. அதில் 1,369 பந்துகள் (5%) மட்டுமே வீரர்களால் Front Foot-ல் ஆடப்பட்டிருக்கின்றன. அதில் 148 பந்துகள் (0.5%) மட்டுமே நேராக V திசையில் ஆடப்பட்டிருக்கின்றன. அதில் 16 பந்துகள் (0.0005%) மட்டுமே சிக்ஸருக்குச் சென்றிருக்கின்றன. அப்படி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே உலகக்கோப்பையில் அடிக்கப்பட்டிருக்கிறது. ஹாரிஸ் ராஃப் வீசிய 19-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் கோலி அடித்த சிக்ஸர்தான் அது!
Virat Kohli
Virat Kohli
Disney+ Hotstar

இந்தப் பந்தில் எல்லோரும் ஆடுவது போல் லெக் சைடில் புல் ஷாட் ஆடியிருக்கலாம். இல்லை சற்று நகர்ந்து ஆஃப் சைடில் பாயின்ட் திசையில் கட் செய்திருக்கலாம். இல்லை கொஞ்சம் பொறுமையாகப் பந்தை வரவிட்டு Third man-க்கு கட் செய்திருக்கலாம். இப்படி அந்த இடத்தில் வீசப்படும் பந்திற்கு அவ்வளவு ஷாட்கள் இருக்கின்றன. சராசரி பேட்டர் அதில் ஏதேனும் ஒன்றைத்தான் ஆடியிருப்பார். ஆனால், விராட் கோலி சராசரி பேட்டர் இல்லையே! சமகாலத்தின் மிகச்சிறந்த பேட்டர் தான்தான் என்பதை இன்னும் ஒருமுறை உலகுக்கு இந்த ஷாட் மூலம் சொல்லியிருக்கிறார் கோலி.

இன்னொன்றையும் மறந்துவிடக்கூடாது. இது ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி, மைதானத்தில் 90,000 ரசிகர்கள்; வெளியில் கோடிக்கணக்கான ரசிகர்கள்... ஆனாலும் இப்படி ஒரு ஷாட் ஆடுவதில் எந்தத் தயக்கமோ அவநம்பிக்கையோ கோலியிடம் இல்லை. கோலி இந்த சிக்ஸர் அடிக்கும் போது மறுமுனையில் இருந்த ஹர்திக் பாண்டியா மட்டும் மெய்மறந்து போகவில்லை, போட்டியைப் பார்த்த அனைவருமே மெய் மறந்துபோயிருந்தனர். வெற்றியா, தோல்வியா என்ற பதற்றத்தில் இருக்கும் ரசிகனை மெய்மறக்கச்செய்வது சாதாரண விஷயமல்ல.

சமீபகாலங்களில் கோலியின் ஃபார்ம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அவரது ஆட்டத்தின் அளவீடே சதங்களாக இருக்கும் அளவுக்கு சதங்கள் அடித்திருக்கிறார். ஆனால், அனைவரும் அடித்துவிட முடியும் சதங்களை வைத்து கோலியை மதிப்பிடுவதே தவறு. புள்ளிவிவரங்களில் வீரர்களை மதிப்பிட கணினிகள் போதுமே மனிதர்கள் எதற்கு? இது போன்ற பேரனுபவங்களை, விழிகளிலிருந்து என்றும் நீங்காத ஷாட்களை நமக்கு தருவதால்தான் அவரை நாம் G.O.A.T என்கிறோம்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் கோலியைப் பற்றி பேச அபாரமான இன்னிங்ஸ் பல இருக்கும். அதில் எது சிறந்தது என்று தேர்ந்தெடுப்பது கூட கடினமாக இருக்கும். ஆனால், ஒயிட் பால் கிரிக்கெட்டில் கோலி ஆடிய சிறந்த ஷாட்களைப் பற்றி யோசித்தால் இந்த சிக்ஸர் மட்டுமே நினைவுக்கு வரும்.