Published:Updated:

T20 WC: பேட்டிங் vs பௌலிங்; சம வாய்ப்பு - சம போட்டி; முன்னுதாரணமாக மாறிய ஆஸ்திரேலிய மைதானங்கள்!

MCG ( MCG )

ஒரு சார்பாய் இல்லாமல் பேட்ஸ்மேனிலிருந்து பௌலர் வரை எல்லோருக்கும் சமவாய்ப்பளிக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளம், வரவேற்பைப் பெற்றுள்ளதோடு டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த உலகக்கோப்பையாக 2022 தொடரை கருத வைத்துவிட்டது.

T20 WC: பேட்டிங் vs பௌலிங்; சம வாய்ப்பு - சம போட்டி; முன்னுதாரணமாக மாறிய ஆஸ்திரேலிய மைதானங்கள்!

ஒரு சார்பாய் இல்லாமல் பேட்ஸ்மேனிலிருந்து பௌலர் வரை எல்லோருக்கும் சமவாய்ப்பளிக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளம், வரவேற்பைப் பெற்றுள்ளதோடு டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த உலகக்கோப்பையாக 2022 தொடரை கருத வைத்துவிட்டது.

Published:Updated:
MCG ( MCG )
"Preparation of a Pitch involves Science and reading it is an art".

எந்த ஆடுகளத்தின் உருவாக்கத்தில் அறிவியலும், தொழில்நுட்பமும் கைகோத்து பங்குகொள்கிறதோ, அக்களச் சூழலை வாசித்தறிதல் என்பதே ஒரு கலைதான். ஆஸ்திரேலிய களத்திலோ இவற்றோடு அழகியலும் சமத்துவமும் கூடுதலாகக் கைகோத்துக் கொள்கின்றன.

ஒரு சார்பாய் இல்லாமல் பேட்ஸ்மேனிலிருந்து பௌலர் வரை, அதிலும் வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர் என எல்லோருக்கும் சமவாய்ப்பளிக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளம், வரவேற்பைப் பெற்றுள்ளதோடு டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த உலகக்கோப்பையாக 2022 தொடரை கருத வைத்துவிட்டது. இத்தொடர் முழுவதிலும் பேட்டுடனும், பாலுடனும் தனித்தனியாக நட்புப் பாராட்டிய களம், அவற்றுக்குள் கலகத்தை உருவாக்கி, அதனை ஆர்வத்தைத் தூண்டுமாறு காட்சிப்படுத்தியது. விக்ரம் வேதாவாக, பேட்டும் பாலும் தொடர்முழுவதும் ஒன்றுக்கு ஒன்று ஈடுகொடுக்க, விஷமத்தோடு ஆஸ்திரேலிய பிட்ச் அதற்கு வழிவகை செய்து வேடிக்கை பார்த்தது.

கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை, சுவாரஸ்யத்தின் சுவடுகூட தெரியாமல் நகர்ந்தது. பொதுவாக, நாணய சுழற்சியில்கூட 50 : 50 வாய்ப்பு தலை விழவும், பூ விழவும் உண்டென்று நிகழ்தகவு நிறுவுகிறது. ஆனால், கடந்த முறையோ டாஸை வென்ற அணிகள்தான் 70 சதவிகிதம் போட்டிகளை வென்றிருந்தன.

டி-20 உலகக்கோப்பை
டி-20 உலகக்கோப்பை
சாம்பியனாக மகுடம் சூட்டிய ஆஸ்திரேலியாவே, ஆடிய ஏழு போட்டிகளில் ஆறில் டாஸை வென்று போட்டியையும் வென்றிருந்தது. இங்கிலாந்துடனான ஒரு போட்டியில் மட்டுமே டாஸையும் போட்டியையும் தோற்றிருந்தது.

உலகக்கோப்பைக்கு முன்னதாக அரபு மண்ணில் நடந்த ஐபிஎல்லை வைத்தே ரிக்கி பாண்டிங், கோலி உள்ளிட்டோர் பிட்ச் ஸ்லோவாக இருக்கிறதென்றும் இதுவே உலககோப்பையில் தொடர்ந்தால் லோ ஸ்கோரிங் ஒன்சைடட் கேம்கள் ஆர்வத்தைக் குலைக்கும் என்றும் கூறியிருந்தனர். அதன்பின்னர் உலகக்கோப்பைக்காக சற்றே மேம்படுத்தப்பட்டிருந்தாலும் பனிப்பொழிவு வில்லனாக உட்புகுந்தது. முதலில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கிறதென்று இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியிருந்தார். ஆக, டாஸ் வெல்லும் அணிகள் அத்தனையும் பௌலிங்கைத் தேர்ந்தெடுத்து பின் ஸ்கோரை சுலபமாக சேஸும் செய்து சகலத்தையும் சாதகமாக்கின.

இதனாலேயே கடந்தமுறை முதலில் பௌலிங் செய்த அணி 70% போட்டிகளை வென்றிருந்தது.

இதனாலேயே கடந்தமுறை முதலில் பௌலிங் செய்த அணி 70% போட்டிகளை வென்றிருந்தன. இம்முறை அது 44% ஆகக் குறைந்துள்ளது. இம்முறை இரண்டாவது பாதியில் ஆறுமுறை அணிகள் ஆல்அவுட் செய்யப்பட்டிருக்கக் கடந்த முறையோ ஒருமுறை மட்டுமே அது அரங்கேறியது. ஆக, அந்தளவு பிற்பாதியில் பௌலிங், ஃபீல்டிங் இரண்டுமே கடினமாகின. எனவே, எதிரணிக்கு எல்லாமே எதிராக டாஸோடே போட்டியும் முடிந்தே போனது.

இப்புள்ளியிலேயே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் மாறுபட்டிருந்தன. டாஸ் முக்கியமான ஒரு காரணியாக அமையவேயில்லை. சூப்பர் 12 மற்றும் நாக்அவுட்டில் முடிவு எட்டப்பட்ட 29 போட்டிகளில் டாஸ் வென்ற அணி 45% போட்டிகளையே வென்றிருந்தது. குறிப்பாக இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு குறுக்கிடவே இல்லை என்பதால் ஃபீல்டிங் செய்யும் அணியும் போரிட முடிந்தது.

கடந்தமுறை 33 போட்டிகளில் இரண்டாவது பாதியில் 132 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்திருந்தன. இம்முறையோ 29 போட்டிகளிலேயே 179 விக்கெட்டுகள் விழுந்திருந்தன. ஆக, அணிகள் டாஸை இழந்தாலும் விழாத பக்கத்திலிருந்த தங்களது வாய்ப்புகளை இதுதான் தேட வைத்தது.
MCG
MCG
MCG

இது ஒன்றும் ஆஸ்திரேலியாவுக்குப் புதிதல்ல. Geelong தவிர்த்த எல்லா மைதானங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணியும் முதலில் பௌலிங் செய்யும் அணியும் வென்றிருப்பதற்கான சதவிகிதம் எப்போதுமே அருகருகேதான் இருக்கும்.

சரி, அப்படி என்ன சிறப்பான உட்பொருள்களால் ஆஸ்திரேலிய ஆடுகளம் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறது?!

பவுன்ஸ் மற்றும் வேகத்திற்கு ஆஸ்திரேலியா எப்போதும் பிரபலம். மண்ணில் 50 சதவிகிதம் களிமண் கலந்திருப்பது அதனைக் கடினத்தன்மையுடையதாக மாற்றுகிறது. போதாக்குறைக்கு பிட்சின் ஓர் அடுக்கு புல்லும் வேகத்துக்கு உதவுகிறது.

பொதுவாக பௌலரின் கையிலிருந்து விடுவிக்கப்படும் பந்துகள் காற்றினால் சற்றே வேகத்தை இழக்கும், பின் தரையைத் தொடுகையில் வேகத்தில் சற்றே மாறுபாடுகள் ஏற்படும். இந்த வேக மாறுபாடு மணிக்கு 20 கிமீ அளவு மட்டுமே இருந்தால் அது ஃபாஸ்ட் பிட்ச் கணக்கில் வரும். ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பிட்சுகள் இந்த வகையானவைதான்.
Shaheen
Shaheen
SCG

ஃபாஸ்ட் பௌலிங்கின் விஷப்பற்கள் அதிவேகம், பவுன்ஸ், ஸ்விங்க், சீம் மூவ்மெண்ட் ஆகியவை. ஆஸ்திரேலிய கண்டிஷன்களில் பந்து இங்கிலாந்து அளவிற்கு ஸ்விங் ஆகாது. இம்முறை தொடக்க ஓவர்களில் மட்டுமே பந்து நன்றாக ஸ்விங்காகி இன்ஸ்விங், அவுட்ஸ்விங் என பேட்ஸ்மேனை அவதிப்பட வைத்தது. அதேபோல் சீம் மூவ்மென்ட்டும்கூட ஓரளவே இருந்தது. ஆனால், எக்ஸ்ட்ரா பவுன்ஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு வலைவிரித்தது. ரன்னர் அப்பான பாகிஸ்தானின் அத்தனை பேரும் இந்த பவுன்ஸுக்குச் சற்றே திணறினர். இறுதிப்போட்டியில் இஃப்திகார், ஸ்டோக்ஸிடம் விழுந்ததுகூட இந்தக் கூடுதல் பவுன்ஸால்தான். அதேபோல் இரண்டாவது பாதி ஆட்டங்களில் பிட்ச்கள் பெரியளவிற்கு ஸ்லோவாகவில்லை.

வேகப்பந்து வீச்சுக்கு மட்டுமல்ல, ஸ்பின்னர்களுக்கும் அங்கே சாதகமான அம்சங்கள் இருந்தன. ராசா உள்ளிட்ட ஆஃப் ஸ்பின்னர்களும் ஆதில் ரஷித், ஹசரங்கா, ஷதாப் கான் உள்ளிட்ட லெக் ஸ்பின்னர்களும் கோலோச்சினர். பொதுவாக ஆடுகளம் நேசக்கரம் நீட்டாத சமயத்தில் மணிக்கட்டை முறுக்கி இவர்கள் மாயம் செய்ய வேண்டியதிருக்கும். ஆனால், ஆஸ்திரேலியா அத்தகைய சிரமத்தை வைக்கவேயில்லை. பாபரை வீழ்த்திய ஆதில் ரஷித்தின் கூக்ளி போல திருப்புமுனைகளை ஸ்பின்னர்களின் டர்ன் ஆகும் பந்துகள் கொண்டுவந்தன.

டி20-க்குத் தேவைப்படும் வேரியஷன்களும் வேகமும் இல்லாத பௌலர்களும் சாதித்தனர். அசாத்திய சாமர்த்தியமும் வியூகங்களுமே அதற்குப் போதுமானதாக இருந்தன. சரியான லைன் அண்ட் லென்த் மட்டுமே விக்கெட்டுகளுக்கான சாவி. இது குறித்து ஸ்டெய்ன், இப்படிச் சொல்லியிருந்தார்.

வேகப்பந்து வீச்சாளருக்கு லைனைவிட லென்த்தே முக்கியம். பந்து எந்தளவு பவுன்ஸ் ஆகிறது என்பதைப் பொறுத்து ஆஃப் ஸ்டம்பைத் தகர்ப்பதற்குரிய லென்த் மாறுபடும். இந்தியாவில் நல்ல டெலிவரியாக இருப்பது இங்கே ரன்களை வழங்கும் டெலிவரி ஆகலாம், கவனம் தேவை!
ஸ்டெய்ன்
SCG
SCG
SCG

லாங் பவுண்டரியின் வெவ்வேறு அளவீடுகளை மனதில் நிறுத்தியே பௌலர்கள் லென்த்தை மாற்றினர். ஷார்ட் லென்த்தில் பந்துகளை வீசி, புல் ஷாட்டாட பேட்ஸ்மேனைத் தூண்டி, சில விக்கெட்டுகளை விழவைத்தனர். சமயங்களில் லென்த்தை மாற்றியமைத்து பேக் ஆஃப் லென்த்தில் வேகத்தைக் கூட்டிகுறைத்தும் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பௌலர்கள் செய்ததைப் போல் விக்கெட் வேட்டையாடினர். யார்க்கர்களை விட ஸ்லோ பால்கள் வீழ்த்தின. இவை எல்லாமே பவுண்டரி லைன்களின் மாறுபாட்டாலும்தான் என்றாலும், அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்தியதாலும் நேர்ந்தவை.

ஆஸ்திரேலியாவின் ஏழு பிட்ச்களும் வானவில்லின் வண்ணங்களைப் போல வெவ்வேறு தன்மையுடையதாக இருந்தன. பெர்த்துக்கு வேகமென்றால், அடிலெய்டும், கப்பாவும் பேட்ஸ்மேனுக்கும் சற்றே ஸ்பின்னருக்கும் கருணை காட்டின. ஹோபர்டோ யார் பக்கமென சற்றே ஊகிக்க முடியாததாகவே இருந்தது. இதுவும் போட்டியை சவாலானதாக மாற்றியது.

பேட்ஸ்மேன்களுக்கு அப்படியெனில் சரிசம வாய்ப்பே அமையவில்லையா என்றால், ஆடுகளம் பேட்ஸ்மேனை நிரம்பவே பரிசோதித்தது. டெக்னிக்கலாகப் பலமில்லாதவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஃபுட் வொர்க்கிலிருந்து லைன் அண்டு லென்த்தைக் கணித்தறிவதுவரை, பேட்ஸ்மேன்கள் எல்லாப் பிரிவிலும் தேர்வெழுதினர். ஸ்கொயர் பவுண்டரி, ஸ்ட்ரெய்ட் பவுண்டரியின் அளவீடு குறித்தும், வீசப்படும் பந்தின் வேகம் குறித்தும் மனதுக்குள் கணக்குகள் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

ராஃபின் பந்தில் கோலி அடித்த அந்த சிக்ஸர் குறித்து சிலாகிக்கப்படுவதும் அதனால்தான். களம் வைத்தத் தேர்வில் தேர்ச்சியுற்றவர்கள்தான் அரைசதங்களுக்கும், சதங்களுக்கும் சொந்தக்காரர்கள் ஆனார்கள். பௌலர்களுக்கு எதிராக சரணடைந்தது போல் நிற்காமல் கிரீஸைப் பயன்படுத்தியோ, இறங்கி வந்து பந்தை எதிர்கொண்டோ ரன்களைக் களவாடினார்கள்.

Virat Kohli
Virat Kohli
Hotstar
பேட்ஸ்மேன்களது கரங்கள் மட்டுமே ஓங்கிக் கொண்டிருப்பது அழகல்ல. ஆஸ்திரேலியா போல சரிசமானமான பிட்ச்கள் எல்லாப் பக்கமும் உருவாக்கப்பட வேண்டும். இது பேட்டுக்கும் பந்துக்குமிடையேயான டி20 ஃபார்மேட் கொண்டு வந்திருக்கும் இடைவெளியை நிரப்பும். கிரிக்கெட்டின் எதிர்காலமாக இருக்கப் போகும் டி20-களால் கிரிக்கெட்டின் ஆன்மா அழியாமலும் பார்த்துக் கொள்ளும்.