Published:Updated:

NZ v PAK முதல் அரையிறுதி: மீண்டும் `92 கனவில் பாகிஸ்தான்; நியூசிலாந்து அதற்குத் தடைபோடுமா?

பாபர் அசாம் & ரிஸ்வான் ( Pakistan Cricket )

1992-ல் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி மெல்பெர்னில் வைத்தே உலகக்கோப்பையை வென்றிருந்தது. இந்த முறையும் இறுதிப்போட்டியில் மெல்பெர்னில் வைத்து அதேமாதிரியானதொரு சம்பவத்தை நிகழ்த்த வேண்டும் என்பது பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

NZ v PAK முதல் அரையிறுதி: மீண்டும் `92 கனவில் பாகிஸ்தான்; நியூசிலாந்து அதற்குத் தடைபோடுமா?

1992-ல் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி மெல்பெர்னில் வைத்தே உலகக்கோப்பையை வென்றிருந்தது. இந்த முறையும் இறுதிப்போட்டியில் மெல்பெர்னில் வைத்து அதேமாதிரியானதொரு சம்பவத்தை நிகழ்த்த வேண்டும் என்பது பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Published:Updated:
பாபர் அசாம் & ரிஸ்வான் ( Pakistan Cricket )
டி20 உலகக்கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அரையிறுதிப் போட்டிகள் நாளை முதல் தொடங்கவிருக்கின்றன. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதவிருக்கின்றன. வெற்றிக்கோப்பையைத் தட்டித் தூக்கி அரியாசனத்தில் அமரும் வாய்ப்பைக் கொடுக்கப்போகும் அந்த இறுதிப்போட்டிக்கு முதல் ஆளாகத் தகுதிப்பெறப்போவது எந்த அணி?
T20 World Cup 2022 - அரையிறுதிப் போட்டிகள்
T20 World Cup 2022 - அரையிறுதிப் போட்டிகள்

நியூசிலாந்து அணி இந்தத் தொடரை மிகச்சிறப்பாகவே தொடங்கியது. முதல் போட்டியிலேயே தொடரை நடத்தும் நாடான ஆஸ்திரேலியாவை ஆல் அவுட்டாக்கி பெரிய வித்தியாசத்தில் வென்றிருந்தது. இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளையும் நியூசிலாந்து சுலபமாகவே தோற்கடித்திருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் தடைபட்டிருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை மட்டுமே நியூசிலாந்து தோற்றிருந்தது. சூப்பர் 12 சுற்றிலிருந்து முதல் அணியாக நியூசிலாந்தே அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது.

இன்னொரு பக்கம் பாகிஸ்தான் அணி இந்தத் தொடரை ரொம்பவே சொதப்பலாகத்தான் தொடங்கியிருந்தது. கடந்த உலகக்கோப்பையில் முதல் போட்டியிலேயே இந்திய அணியை தோற்கடித்திருந்தது. இந்த உலகக்கோப்பையில் அப்படியே தலைகீழாக இந்திய அணியிடம் முதல் போட்டியிலேயே வீழ்ந்திருந்தது. இரண்டாவது போட்டியில் இன்னும் பெரிய அதிர்ச்சி பாகிஸ்தானுக்கு காத்திருந்தது. ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானை புரட்டி எடுத்தது. 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புகள் அத்தோடு முடிந்தது என்றே அனைவரும் நினைத்தனர். பாகிஸ்தான் அணிக்கே கூட பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால், அதிசயம் நடந்தது. அடுத்த மூன்று போட்டிகளிலுமே பாகிஸ்தான் வென்றது. தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இது பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைய அந்த அணி அரையிறுதிக்குத் தகுதிப்பெற்றது.

Newzealand
Newzealand
ICC

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளுமே வெகு சமீபத்தில், அதாவது இந்த உலகக்கோப்பைக்கு முன்பாக ஒரு முத்தரப்பு டி20 தொடரில் ஆடியிருந்தனர். வங்கதேசம் - நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட இந்த முத்தரப்பு தொடர் நியூசிலாந்தில் வைத்து நடைபெற்றிருந்தது. இந்தத் தொடரை பாகிஸ்தான் அணியே வென்றிருந்தது.

இறுதிப்போட்டி உட்பட இந்தத் தொடரில் மட்டும் மூன்று போட்டிகளில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் மோதியிருந்தன. மூன்றில் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தானே வென்றிருந்தது. இந்த ரெக்கார்ட்படி பார்த்தால் பாகிஸ்தானின் கை கொஞ்சம் ஓங்கியே இருக்கிறது.
இந்த அரையிறுதிப்போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் மட்டும் மொத்தம் 6 போட்டிகள் இந்த சிட்னி மைதானத்தில் நடைபெற்றிருக்கின்றன. இந்த 6 போட்டிகளில் 5 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியே வென்றிருக்கிறது.

ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சேஸ் செய்த அணி வென்றிருக்கிறது. இலங்கைக்கு எதிராக கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் சேஸ் செய்த இங்கிலாந்து அணி சிரமப்பட்டுதான் டார்கெட்டை எட்டியது. முதலில் பேட் செய்யும் அணிகள் சராசரியாக 180 ரன்களை எடுத்திருக்கின்றனர். ஆக, இந்த அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்யும் அணி 180 ரன்களை எடுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கக்கூடும்.

இதே சிட்னியில் இதே 6 போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் 44 விக்கெட்டுகளையும் ஸ்பின்னர்கள் 26 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கின்றனர். ஆக, இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செல்லுத்தக்கூடும். நியூசிலாந்து அணியில் போல்ட், சவுதி, ஃபெர்குசன் என அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசி வருகின்றனர். பாகிஸ்தான் அணியில் ஷாகீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, வாசீம், ஹரீஸ் ராஃப் என ஒரு மிரட்டலான வேகப்பந்து வீச்சு கூட்டணி இருக்கிறது.

போல்ட்
போல்ட்

நியூசிலாந்து அணி சூப்பர் 12 சுற்றில் 4 போட்டிகளில் ஆடியிருக்கிறது. இந்த 4 போட்டிகளில் எதிரணியின் 40 விக்கெட்டுகளில் 35 விக்கெட்டுகளை நியூசிலாந்து பௌலர்கள் வீழ்த்தியிருக்கின்றனர். சான்ட்னர், சோதி என ஸ்பின்னர்களும் முக்கிய கட்டத்தில் விக்கெட் வீழ்த்துவது அந்த அணிக்குப் பலமாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியிலுமே ஷதாப் கான் எல்லாம் மிகச்சிறப்பாகவே வீசி வருகிறார். ஆக, இந்தப் பந்துவீச்சு விஷயத்தில் இரு அணிகளும் சமபலத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

பேட்டிங் என வரும்போது இரு அணிகளிடமுமே சில குறைகள் இருக்கிறது. பாகிஸ்தான் அணி அவர்களின் ஓப்பனர்களான பாபர் அசாமையும் ரிஸ்வானையுமே அதிகம் நம்பியிருந்தது. அவர்கள் இருவருமே இந்தத் தொடரில் அத்தனை சிறப்பாக ஆடவில்லை.

5 போட்டிகளில் ரிஸ்வான் 103 ரன்களையும் பாபர் அசாம் 39 ரன்களையும் மட்டுமே எடுத்திருக்கின்றனர். இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க சறுக்கல்களுக்கும் இவர்களின் சொதப்பலே மிக முக்கிய காரணமாக இருந்தது.
பாபர் அசாம் & ரிஸ்வான்
பாபர் அசாம் & ரிஸ்வான்
Pakistan Cricket

இருவருமே சொதப்புவதால் பேட்டிங்கில் பாகிஸ்தானுக்கு ஒரு மொமண்டம் கிடைப்பதே இல்லை. இவர்கள் இருவருமே அரையிறுதியில் ஃபார்முக்குத் திரும்பியாக வேண்டும்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரைக்கும் ஆடியிருக்கும் 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பவர்ப்ளேக்குள்ளாகவே 50 ரன்களைக் கடந்திருக்கின்றனர். மற்ற இரண்டு போட்டிகளிலும் பவர்ப்ளேயில் சுமாராகவே ஆடியிருக்கின்றனர். சிறப்பாக ஆடிய இரண்டு போட்டிகளிலுமே ஃபின் ஆலன் ஒரு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் சரியாக ஆடாவிட்டால் நியூசிலாந்துக்கு மந்தமான தொடக்கமே கிடைக்கிறது. ஓப்பனிங்கில் ஆலன் என்றால் மிடில் ஆர்டரில் க்ளென் பிலிப்ஸ் வெழுத்தெடுக்கிறார். இவர்கள் இருவரும்தான் நியூசிலாந்து அணியின் துருப்புச் சீட்டுகள். இவர்களைத் தவிர கான்வே ஒரே ஒரு போட்டியில்தான் நன்றாக ஆடியிருக்கிறார். வில்லியம்சன் கடைசி போட்டியில்தான் ஃபார்முக்கே வந்திருக்கிறார். அரையிறுதியில் இவர்களும் சிறப்பாக ஆடியாக வேண்டும்.

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் - ரிஸ்வான் என இருபெரும் வீரர்கள் சரியாக ஆடாதபட்சத்திலும் அந்த அணி கடைசி 3 போட்டிகளில் வென்றிருக்கிறது. காரணம், முகமது ஹாரிஸ், இஃப்திகார், ஷதாப் கான் ஆகியோர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக ஆடி வருகின்றனர். ஷதாப் கான் ஒரு ஆல்ரவுண்டராக கேம் சேஞ்சராக மிளிர்கிறார்.

இளம் வீரராக அறிமுக உலகக்கோப்பையிலேயே முகமது ஹாரிஸ் அதிரடியாக வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார். அரையிறுதிப்போட்டியில் அதிக கவனத்தை ஈர்த்த வீரராக ஹாரீஸ் இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
Imran Khan
Imran Khan
Twitter

1992-ல் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி மெல்பெர்னில் வைத்தே உலகக்கோப்பையை வென்றிருந்தது. இந்த முறையும் இறுதிப்போட்டியில் மெல்பெர்னில் வைத்து அதேமாதிரியானதொரு சம்பவத்தை நிகழ்த்த வேண்டும் என்பது பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. எப்போதும் குறைந்தபட்சமாக நாக் அவுட் வரையாவது சென்றுவிடும் நியூசிலாந்து இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அந்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமெனில், முதலில் அரையிறுதி என்னும் தடையைத் தாண்டியாக வேண்டும்.

எந்த அணி அரையிறுதியை வெற்றிகரமாகக் கடக்கப்போகிறது?உங்கள் கருத்தை கமென்ட்டில் சொல்லுங்கள்.