Published:Updated:

IND v BAN: ஃபார்முக்கு வந்த ராகுல்; நம்பிக்கை நாயகனான அர்ஷ்தீப்; வங்கதேசத்தை வென்றது இந்தியா!

ராகுல் ( BCCI )

பொதுவாகவே ராகுல் வலுக் குறைந்த அணிகளுக்கு எதிராக மட்டும்தான் அடிப்பார் என்று விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எந்த அணியுமே வலுக் குறைந்த அணி கிடையாது.

IND v BAN: ஃபார்முக்கு வந்த ராகுல்; நம்பிக்கை நாயகனான அர்ஷ்தீப்; வங்கதேசத்தை வென்றது இந்தியா!

பொதுவாகவே ராகுல் வலுக் குறைந்த அணிகளுக்கு எதிராக மட்டும்தான் அடிப்பார் என்று விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எந்த அணியுமே வலுக் குறைந்த அணி கிடையாது.

Published:Updated:
ராகுல் ( BCCI )
உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதினாலே விறுவிறுப்புக்குச் சற்றும் பஞ்சம் இருக்காது. 2007 உலகக்கோப்பை, 2016 டி20 உலகக்கோப்பை என பல சீட்-எட்ஜ் திரில்லர்களை இந்த இரண்டு அணிகளும் வழங்கியுள்ளன. இன்றும் அது போலவே, அதிரடி துவக்கம், திடீர் திருப்பங்கள், மழை குறுக்கீடு என அத்தனை அம்சங்களும் நிறைந்த அருமையான கிரிக்கெட் போட்டியை இந்த இரண்டு அணிகளும் கொடுத்திருக்கின்றன.

Adelaide
Adelaide
BCCI

இந்த ஆட்டத்திற்கான டாஸ் போட்ட உடனேயே பல இந்திய ரசிகர்களின் முகங்களில் சோக ரேகை பரவத் தொடங்கிவிட்டது. காரணம் கே.எல்.ராகுல் அணியில் நீடித்ததுதான். ஆரம்பத்ததிலிருந்தே ராகுலின் ஆட்டம் சிறப்பாக இல்லை. தொடர்ந்து மூன்று போட்டிகளில் சொதப்பிய காரணத்தினால் ராகுலுக்குப் பதிலாக வேறு வீரர் இடம் பெறுவார் என்று பலரும் நினைத்த நிலையில் ஹூடாவுக்குப் பதில் அக்ஸர் பட்டேல் மட்டும்தான் ஒரே ஒரு மாற்றம் என்று கூறிச் சென்றார் கேப்டன் ரோஹித். வங்கதேச அணி டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்த உலகக்கோப்பையில் அடிலெய்டு மைதானத்தில் இதுதான் இரண்டாவது போட்டி. ஆஸ்திரேலிய நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு மைதானமும் ஒரு மாதிரியாக இருக்கும். பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு முழுமையாக ஒத்துழைக்கும். அதே நேரம் சிட்னி மைதானம் சிறிது சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும். இந்த மைதானம் அளவீடுகளில் வித்தியாசமானது. வலது இடது பக்கம் குறைந்த தூரமும் நேராக அதிக தூரமும் கொண்ட மைதானம்.

முதல் ஓவரைச் சற்று பார்த்து விளையாடிய ராகுல் இரண்டாம் ஓவரின் ஐந்தாம் பந்தில் ஒரு இமாலய சிக்ஸரைப் பறக்கவிட்டார். அதற்கு அடுத்த ஓவரில் ரோஹித் அவுட் ஆன பிறகும் பொறுமையாக ஆடுவோம் என்றெல்லாம் இல்லாமல் மீண்டும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அடிக்க உண்மையிலேயே `நாயகன் மீண்டும் வந்துவிட்டதாக' நம்பிக்கை அளித்தார்.
KL Rahul
KL Rahul
BCCI
விராட் கோலியுடன் இணைந்து அவர் அமைத்த 67 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முதல் வெற்றி. 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார் ராகுல்.

பொதுவாகவே ராகுல் வலுக் குறைந்த அணிகளுக்கு எதிராக மட்டும் தான் அடிப்பார் என்று விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை எந்த அணியுமே வலுக் குறைந்த அணி கிடையாது. ஒருவேளை இன்று ராகுல் அடிக்காமல் விட்டிருந்தால் இந்தியாதான் வலுக் குறைந்த அணியாக மாறியிருக்கும்.

இத்தனை விமர்சனங்களுக்குப் பிறகும் அவரை அணியிலிருந்து நீக்காமல் அவருடைய தன்னம்பிக்கையை அதிகரித்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரையும் பாராட்டலாம்.
Kohli
Kohli
BCCI

கோலி கதையும் இதேதான். ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பு வரை அவர் அணியில் இடம்பெற வேண்டுமா என்று கேட்டவர்களை எல்லாம் இந்தத் தொடரில் வாயடைக்க வைத்துவிட்டார். இன்று கோலியும் ஒரு அரை சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கூடவே இந்திய அணியின் பந்தயக் குதிரையான சூரியகுமார் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்துச் செல்ல இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் எப்போதும் விக்கெட்டுடன் தொடங்கும் அர்ஷ்தீப் இந்த முறை மூன்று பவுண்டரிகளுடன் தனது ஓவர் கணக்கைத் தொடங்கி அதிர்ச்சி அளித்தார். 180 ரன்களை அடித்ததற்கு பிறகு இந்தியா மிக எளிதாக வெற்றி பெறும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தவர்களின் எதிர்பார்ப்பை எல்லாம் எல்லாம் அடித்துவிட்டு புதுக் கணக்கு எழுதத் துவங்கினார் வங்கதேச ஓப்பனர் லிட்டன் தாஸ்.

பவர்ப்ளே ஓவர்களில் ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் இருவரும் ஆளுக்கு 16 ரன்களை ஒரே ஓவரில் விட்டுக்கொடுக்க, 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களைக் கடந்தது வங்கதேசம்.
Liton Das
Liton Das
BCCI

இந்தியாவுக்கு இதெல்லாம் புதியதில்லை... வரும் ஓவர்களில் ஆட்டத்தை இறுக்கிப் பிடித்து விடலாம் என்று நினைத்திருந்த நிலையில் அடுத்த ஓவர் முடிவில் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி.

ஆஸ்திரேலியாவின் அழையா விருந்தாளியான மழை இங்கும் வந்துவிட்டார். சுமார் 50 நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. இந்த நிலையில் வங்கதேசம் DLS முறைப்படி 17 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஒருவேளை மழை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனால் வங்கதேசம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதுதான் இந்தியாவுக்கு அப்போது இருந்த இடியாப்பச் சிக்கல். ஆனால் ஒரு வழியாக மழை இரக்கம் காட்ட, DLS முறைப்படி 16 ஓவர்களில் 151 ரன்கள் என்று இலக்கு மாற்றப்பட்டது. மழை நின்று ஆட்டம் தொடங்கிய முதல் பந்தியிலேயே வழுக்கி விழுந்தார் லிட்டன் தாஸ். அடுத்த பந்தில், ராகுலின் துல்லிய த்ரோவால் ரன் அவுட் ஆனார். மைதானம் ஆட்டத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்பது போல நடுவரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டே பெவிலியன் சென்றார். கூடவே வங்கதேச அணியின் வெற்றிக்கான வாய்ப்பும் சென்றுவிட்டது.

இந்த விக்கெட்டுக்குப் பிறகு ஆட்டத்தை மிக வேகமாகவே தங்கள் பக்கம் இந்திய அணி திருப்பி விட்டது. அதுவும் குறிப்பாக அர்ஷ்தீப் ஒரே ஓவரில் இரண்டு விக்கெடுகளை எடுக்க கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றி உறுதியானது. கடைசி கட்டத்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் சிறிது பயம் காட்டினாலும் 20 ரன்களை எளிமையாகக் கட்டுப்படுத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் அர்ஷ்தீப் சிங். இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

Team India
Team India
BCCI
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஏறக்குறைய அரையிறுதி சுற்றுக்குத் தகுதிப்பெற்றுவிட்டது. அதற்கு முன்பு இன்னமும் ஒரே ஒரு போட்டி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக உள்ளது. இந்திய அணி அந்தப் போட்டியையும் வென்று முழுக்க முழுக்க பாசிட்டிவ்வான மனநிலையோடு அரையிறுதிக்குச் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.