டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்திய ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
டாஸை வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ராகுல் முதல் பந்தையே பவுண்டரியுடன்தான் தொடங்கியிருந்தார். ஆனாலும், இந்திய அணிக்கு மோசமான தொடக்கமே வாய்த்திருந்தது. ராகுல் ஐந்தே ரன்களில் க்ரிஸ் வோக்ஸின் வீசிய ஷார்ட் பாலில் எட்ஜ் ஆகி வெளியேறினார். ரோஹித் 28 பந்துகளில் 27 ரன்களை மட்டுமே எடுத்து ஜோர்டனின் பந்தில் அவுட் ஆகியிருந்தார். ரொம்பவே மோசமான தொடக்கமே இந்திய அணிக்குக் கிடைத்திருந்தது.

ஓவருக்கு 6 ரன்கள் என்ற அளவில்தான் ஸ்கோர் செய்து வந்தனர். விராட் கோலியும் ஹர்திக் பாண்டியாவும் நின்று ஆடினர். விராட் கோலி நிதானமாக ஆடி 40 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ஜோர்டனின் பந்தில் அவுட் ஆகியிருந்தார். கடைசி வரை கோலி நின்றிருக்க வேண்டும். அப்படி நிற்காமல் போனது பின்னடைவாகவே இருந்தது. ஹர்திக் பாண்டியா மட்டும் கடைசி சில ஓவர்களில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 33 பந்துகளில் 63 ரன்களை அவர் எடுத்திருந்தார். ஹர்திக்கின் ஆட்டத்தால் மட்டுமே இந்திய அணி கொஞ்சம் டீசண்ட்டாக 168 ரன்களை எடுத்தது.
இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் டார்கெட். பௌலிங்கில் இந்திய அணி கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இங்கிலாந்து அணியின் ஓப்பனர்களான பட்லரும் ஹேல்ஸூமே ஆட்டத்தை மொத்தமாக முடித்துவிட்டனர். இந்திய அணியின் எந்த பௌலராலுமே இந்தக் கூட்டணியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விக்கெட் எடுக்கவில்லை என்பதைத் தாண்டி விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்புகளையே எங்கேயும் ஏற்படுத்தவில்லை. பட்லரும் ஹேல்ஸூம் எங்கேயும் திணறவில்லை. தொடக்கத்திலிருந்தே ஒரே சீராக ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் எடுத்துக் கொண்டே இருந்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் 16 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி டார்கெட்டை எட்டியது. இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமானதொரு தோல்வியை அடைந்துள்ளது.

கடைசியாக இந்திய அணி 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது. அதன்பிறகு, எந்தப் பெரிய தொடரையும் இந்திய அணி வெல்லவே இல்லை. பல தொடர்களில் நாக் அவுட் வரை சென்று சொதப்பினார்கள். இந்த உலகக்கோப்பையும் அந்த வரிசையில் இணைகிறது. மீண்டும் மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.