Published:Updated:

ஷேன் வாட்சன்… டி20 கிரிக்கெட்டுக்கு என்றே அளவெடுத்த செய்த ஆளவந்தானின் அற்புதத் தருணங்கள்! #HBDWatto

ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்

போட்டிகளை, தொடர்களை மட்டும் வென்று தருபவர் அல்ல ஷேன் வாட்சன். கோப்பைகளையே தட்டித் தூக்குபவர். கடைசியில், சர்வதேச டி20 போட்டிகளில், ஓய்வை அறிவித்த போதுகூட, நம்பர் 1 வீரராகவே விடைபெற்றார் வாட்சன்.

தொடர் காயங்கள் பல துரத்திய போதும், சோர்வடையாமல், காயங்களுடன் தொடர்ந்து போராடி, கிரிக்கெட் களத்தில் வெற்றிக்கொடியை பறக்கவிட்டவர் ஷேன் வாட்சன். டி20 கிரிக்கெட்டில் தனக்கென்று பெரிய சிம்மாசனத்தை உருவாக்கியவர்.

ஆஸ்திரேலியாவின் ஆகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர், ஷேன் வாட்சன். பவர் ஹிட்டராக, பேட்டிங்கிலும் பலம் காட்டுவார், பௌலராக, ஸ்விங்காலும் மிரட்டுவார். சர்வதேச கிரிக்கெட்டிற்கு அவர் விடைகொடுத்து, வருடங்கள் உருண்டோடி விட்டன. மிட்செல் மார்ஷ், கேமரோன் கிரீன் என அடுத்தடுத்த ஆல்ரவுண்டர்கள், அதன்பின் ஆஸ்திரேலியாவின் ஜெர்ஸியில் ஆடியும் விட்டார்கள்.

எனினும், அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கம், இன்னமும் குறையவில்லை.

ஒயிட் பால் கிரிக்கெட்டில் சாதித்தது போல், டெஸ்ட் கிரிக்கெட்டில் வாட்சன் சாதிக்கவில்லை என்று கூறப்பட்டாலும், 3000 ரன்களையும், 75 விக்கெட்டுகளையும் வீழத்தியுள்ள ஆல்ரவுண்டர்களை கணக்கில் எடுத்தால், வாட்சன் டாப் 10-க்குள்தான் இன்னமும் இருக்கிறார். 2010-ல், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில், அவரது 6/33 எல்லாம், மிரளவைக்கும் ஸ்பெல்‌. அதேபோல் 2013-ல், ஆஷஸ் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த 176 ரன்கள் எல்லாம் அதிரடி சரவெடி.

ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்

டெஸ்ட்டை விடுத்து, அவருடைய லிமிடெட் ஃபார்மட் கிரிக்கெட் களத்தில் காலடி எடுத்து வைத்தால், அவரது பிரம்மிக்கத்தக்க பிரமாண்ட சாதனைகள், நம் கண்முன் விரியும்.

2011-ம் ஆண்டு, வங்கதேசத்தை, வங்கதேசத்தில் வைத்தே சில்லுசில்லுலாய், சிதறச் செய்தார், வாட்சன். வைத்த 230 டார்கெட்டை, 26 ஓவர்களில் எட்டியது ஆஸ்திரேலியா. ஷகிப் தவிர, மற்ற அத்தனை பேரின் பந்துகளையும் இவர் சூறையாட, ஹாடின் மற்றும் பான்ட்டிங், மறுபுறம் கைகட்டி வேடிக்கை மட்டும் பார்க்க, 96 பந்துகளில், 185 ரன்களை வாரிக் குவித்தார் வாட்சன். இதில், 15 பவுண்டரிக்கு சமமாக, 15 சிக்ஸர்களும் வந்திருந்தன.

ஸ்பின்னர்களை மிக அழகாகக் கையாண்டு, ரன்களைச் சேர்ப்பது, வாட்சனுக்கு, கைவந்த கலை. ஐபிஎல் தொடரில் கூட, ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் கணக்கில், வாட்சன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். ஆனால், அன்றைய தினம், ஸ்பின்னர்கள் மட்டுமல்ல, வேகப்பந்து வீச்சாளர்களால் கூட அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பிக்அப் அதிகமுள்ள, பிரேக் பிடிக்காத ஒரு வண்டியின் முன், கட்டிப்போட்டு நிற்க வைத்தால், எப்படி இருக்கும்... அப்படி ஒரு பீதியில் இருந்தனர், வங்கதேச வீரர்கள். 144 பந்துகள் மீதம் இருந்த நிலையில், அன்று அவர் இருந்த வேகத்துக்கு, "இரட்டை சதமா- எளிதானதுதான், முச்சதமா - முயற்சித்துப் பார்க்கலாம்!", என்ற ரீதியில்தான் ஆடினார். ஒருநாள் போட்டிகளில், இன்றைய தேதிவரை, ஆஸ்திரேலியர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராக, இவரது 185 தான் இருக்கிறது.

இப்படி, பல போட்டிகளில், எதிரணிக்கு இடமே கொடுக்காமல், வர்ணிக்கவே முடியாத, பல இன்னிங்ஸ்களை வாட்சன் ஆடியிருக்கிறார். மூச்சுமுட்ட வைத்து அவர் வெளியேற, "ஆஹா ஆட்டமிழந்து விட்டார்!" என எதிரணி மூச்சுவிட்டால், பௌலர் அவதாரத்தில் வந்து, கால்களைக் குறிவைக்கும் யார்க்கரைக் கொண்டு மூச்சையே நிறுத்திவிடுவார்.

ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்

இவ்வளவுக்கும், அவருக்கு எதிராக வீசப்பட்ட விமர்சனங்கள் ஏராளம். எப்படி, இன்சமாம் உல் ஹக் ரன் அவுட் ஆவதை வைத்து கேலிக்கு உள்ளாவாரோ, அதேபோல், எல்பிடபிள்யூ-வில், ஆட்டமிழப்பதற்கென்றே, பேடைக் கட்டி இறங்கியதைப் போல், ஒரு காலகட்டத்தில் ஆடிக் கொண்டிருந்தார் வாட்சன். அச்சமயம், அவர் நான்கில், மூன்று முறை என்னும் கணக்கில், எல்பிடபிள்யூ-விலேயே ஆட்டமிழந்து கொண்டிருந்தார்.

ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் இருள் நிறைந்த ஒரு பலவீனம் இருக்கும் தானே?! வாட்சனின் விக்கெட் ரகசியம் அடங்கிய கருப்புப்பெட்டி, எல்பிடபிள்யூ தான். டெஸ்டில், வாட்சனின் ஃபார்ம், இறுதிக் கட்டங்களில் கேள்விக்குள்ளானதற்கு இதுவும் ஒரு காரணம். காலைப் போன்ற பத்து மடங்கு பெரிய பேடைக் கட்டி ஆடுவது போன்ற கேலிச்சித்திரங்கள் எல்லாம் வரையப்பட்டன. மேலும், டிஆர்எஸ்ஸில், ரிவ்யூவுக்குப் போய், அதிகமுறை தோற்றதும் வாட்சனாகத்தான் இருக்கும். இதைப்பற்றியும் கிண்டல்கள் உலவின. ஆனால், எதற்கும் அசரமாட்டார், வாட்சன். அந்த அசராத அணுகுமுறைதான் அவரது வெற்றிக்குக் காரணம்.

ஐசிசி தொடர்களில், வாட்சன் வேறுமாதிரி மாறுவார். 2006 மற்றும் 2009-ம் ஆண்டுகளில், சாம்பியன்ஸ் டிராபியை ஆஸ்திரேலியா கைப்பற்றியதில், இவரது பங்களிப்பு மிகமிக அதிகம். 2006 தொடரில், ஐந்து போட்டிகளில், 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில், மூன்று ஓவர்களில், 2/11 என பௌலிங்கிலும், 57 ரன்களுடன் பேட்டிங்கிலும் ஜொலித்திருந்தார். அதற்கும்மேல், 2009 அரையிறுதியிலும், இறுதிப் போட்டியிலும் சிறப்பான சம்பவத்தை அரங்கேற்றினார்.

அரையிறுதியில், இங்கிலாந்துக்கு எதிராக சதத்தோடு, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதும், இறுதிப் போட்டியில், ஆட்டமிழக்காமல், 105 ரன்களைக் குவித்ததுமென, அந்த இரண்டு கோப்பைகளையும், ஆஸ்திரேலியா தூக்க, வாட்சனே காரணமாக இருந்தார். அதேபோல், 2015 உலகக் கோப்பையில், காலிறுதிப் போட்டியில், அச்சுறுத்திய பாகிஸ்தானின் மிரட்டல் பந்துவீச்சை மீறி, அவரடித்த அரைசதம்தான், ஆஸ்திரேலியாவின் கணக்கில், இன்னொரு கோப்பையை சேர்த்தது.

ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்

ஒருநாள் போட்டிகளில், ஓப்பனிங்தான் அவரது ஆஸ்தான இடம். சைமன் கேட்டிச்சுடன் இணைந்து, 28 இன்னிங்ஸில் ஆடியுள்ளார் வாட்சன். 54.39 என்னும் அசரவைக்கும் ஆவரேஜோடு, ரன்களைக் குவித்தது இந்த இணை. ஆனாலும், ஓப்பனிங் தவிர்த்து, எந்த பேட்டிங் பொசிஷனில் இறங்கினாலும், அதற்கேற்றாற்போல், தன்னைத் தகவமைத்துக் கொண்டார் வாட்சன். நான்காவது இடம் தவிர, மேலிருந்து கீழ் வரை எந்த இடத்தில் இறங்கினாலும், வாட்சனின் ஸ்ட்ரைக்ரேட் 87-க்குக் கீழ் இறங்கியதே இல்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, டி20-க்கு எனவே, அளவெடுத்துச் செய்த அற்புத ஆல்ரவுண்டர்தான் வாட்சன். இந்தத் தளத்தில், அவர் எட்டாத உயரங்கள் இல்லே, எய்தாத பெருமைகளே இல்லை. கிட்டத்தட்ட 150 வாரங்கள், 'நம்பர் 1' டி20 வீரராக, ஐசிசி தரவரிசைப் பட்டியலில், முதலிடத்திலேயே இருந்தார் வாட்சன். ஆல் ரவுண்டர் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலிலும், ஒரே நேரத்தில், முதலிடத்தில் இருந்த ஒரே வீரர் வாட்சன்தான்.

ஆறு டி20 உலகக்கோப்பைகளில் விளையாடிய ஒரே ஆஸ்திரேலியரான வாட்சன், 2012-ம் ஆண்டு, உலகக்கோப்பையில், தொடர்ச்சியாக, நான்கு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ஐசிசி நடத்தும் தொடர்களில், இந்தச் சாதனையை, அதற்கு முன்பும் யாரும் செய்யவில்லை. அதற்குப் பின்பு, இன்றுவரையும், யாரும் இதை நிகழ்த்திக் காட்டவில்லை. 249 ரன்களோடு, 11 விக்கெட்டுகளோடு, அந்தத் தொடரின் தொடர் நாயகனாகவும், வாட்சனேதான் இருந்தார். அவர் செய்ததெல்லாமே, பெரிய பெரிய சம்பவங்கள்தான்.

ஷேன் வாட்சன் - தோனி
ஷேன் வாட்சன் - தோனி

போட்டிகளை, தொடர்களை மட்டும் வென்று தருபவர் அல்ல வாட்சன். கோப்பைகளையே தட்டித் தூக்குபவர். கடைசியில், சர்வதேச டி20 போட்டிகளில், ஓய்வை அறிவித்த போதுகூட, நம்பர் 1 வீரராகவே விடைபெற்றார் வாட்சன்.

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள் என உலகத்தில் எங்கெல்லாம் டி20 தொடர்கள் நடக்கிறதோ, அங்கெல்லாம், வாட்சன் இருப்பார். பிக் பாஷ் லீக்கில், மைக்குகள் இன்னமும் இவருடைய சாதனைகளைக் கமன்டேட்டர்கள் கூறக் கேட்கின்றன. நடப்பு சீசனில்கூட, பாகிஸ்தான் லீக்கில், கிளாடியேட்டர் ஒரு போட்டியில் தோற்றால், அந்த அணி ரசிகர்கள், வாட்சன் இருந்திருந்தால், நிலைமையே வேறு என ட்விட்டரில், டிரெண்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஐபிஎல்-ல் ராஜஸ்தான், ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்காக ஆடிய வாட்சன், முதல் சீசனிலேயே, ராஜஸ்தானுக்காக, கோப்பையை வென்று தந்தார். அத்தொடர் முழுவதும் விக்கெட் வேட்டையிலும், ரன் குவிப்பிலும் வாட்சன் ஈடுபட, ஷேன் வார்னேயின் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், கோப்பையை வெல்ல, தொடர் நாயகன் விருதை, வாட்சன் வென்றார். 2013-ஆம் ஆண்டிலும், தொடர் நாயகன் விருது, தேடித்தேடி வாட்சனிடமே சென்றது.

மற்ற அணிகளுக்காக ஆடியதை விட, இன்னமும் உணர்வுப்பூர்வமானதாக, வாட்சன் பார்ப்பது, சிஎஸ்கேவுக்காக ஆடியதைத்தான். ஏனெனில், தனது கரியரின் இறுதியாண்டுகளில், வாட்சன் கோலோச்சியதும் அங்கேதான், மெகா, மகா சாதனைகளை நிகழ்த்தியதும் அங்கேதான்.

வாட்சன் - தோனி
வாட்சன் - தோனி

ஓய்வறித்த பின்னும், சிஎஸ்கே ரசிகர்கள், வாட்சனை, வெற்றித்திரு மகனாகத்தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், களத்தில் நின்று, ஒற்றை ஆளாய் போராடி, எத்தனையோ தருணங்களில், அணியைக் கரை சேர்த்திருக்கிறார்.

குறிப்பாக, 2018 ஃபைனலில் இவரடித்த மரண அடியை, சன்ரைசர்ஸ் என்றுமே மறக்க முடியாது. 179 ரன்கள் என்னும் இலக்கை நோக்கி, சிஎஸ்கே இறங்க, அன்றைய நாளில், ஐபிஎல்-ல் தனது லைஃப்டைம் இன்னிங்ஸை வாட்சன் ஆடினார். ஓப்பனராக இறங்கி, 57 பந்துகளை, மைதானத்தின் எல்லா திசைகளிலும் பறக்கவிட்டு, 117 ரன்களை குவித்தார். சந்தீப் ஷர்மா, கவுல் என எல்லாருடைய பந்துகளும், நையப் புடைக்கப்பட்டு, பவுண்டரி லைனுக்கு அப்பால், தரையிரக்கப்பட, ஒரே வீரராக நின்றே அணியை மகுடம் தரிக்க வைத்தார் வாட்சன்‌. இரண்டாண்டு வலிக்கும், காயத்துக்கும் சேர்த்து மருந்து போட்டது, அவருடைய சதம்.

ஆக்ஷன் காட்சிகளை 2018 ஃபைனலில் அரங்கேற்றினார் என்றால், 2019 ஃபைனலில், சென்ட்டிமென்ட் காட்சிகளை காட்டினார். முழங்காலில் அடிபட, ரத்தம் வழிய, அன்றைய இன்னிங்ஸை ஆடிய வாட்சன், கண்ட அத்தனை கண்களையும் கலங்க வைத்தார். மற்ற வீரர்கள் அனைவரும், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தும், 59 பந்துகளில், 80 ரன்களைக் குவித்தார் வாட்சன். அன்றைய தினம், போட்டியின் இறுதி நிமிடங்களில், அவருடைய ரன்அவுட் மட்டும் நேராமல் இருந்திருந்தால், ஒரு ரன் வித்தியாசத்தில், சிஎஸ்கே அன்று தோல்வியைத் தழுவியும் இருக்காது, இன்னொரு கோப்பையை நழுவவும் விட்டுமிருக்காது‌. அன்று சிஎஸ்கே ரசிகர்கள் சிந்திய கண்ணிரீல் சில துளிகள், அவர் சிந்திய ரத்தத்துக்காக உதிர்க்கப்பட்டதும்தான்.

இதுதான், இந்த அர்ப்பணிப்புதான், வாட்சனின் வெற்றிக்கதைகளுக்குக் காரணம். டி20-ல் ரன்களைக் குவிக்கும் பேட்ஸ்மேன்கள் பலர் வரலாம், விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டும் பௌலர்கள் சிலர் வரலாம். ஆனால், கம்ப்ளீட் பேக்கேஜாக, அணிக்கு எல்லாமுமாக, இவர் போன்ற, இன்னொரு டி20 ஆல்ரவுண்டர் கிடைப்பது மிக மிக அரிதே!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷேன் வாட்சன்!

அடுத்த கட்டுரைக்கு