Published:Updated:

பிக்பேஷ் லீகின் சாம்பியனான சிட்னி சிக்சர்ஸ்... பெர்த் ஸ்காசர்ஸ் வீழ்ந்தது எப்படி?! #BBLFinal

சிட்னி சிக்சர்ஸ்
சிட்னி சிக்சர்ஸ்

சிட்னி சிக்சர்ஸும் பெர்த் ஸ்காசர்ஸும் ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளைப் போன்றது. இரண்டு அணிகளுக்கும் இடையே அப்படி ஒரு கடுமையானப்போட்டி இருக்கிறது. இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் மூன்று முறை இறுதிப்போட்டியில் மோதியுள்ளன.

ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்ட டி20 தொடர் ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக். இரண்டு மாதமாக நடைபெற்று வந்த பிக்பேஷ் லீக் நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியும் பெர்த் ஸ்காசர்ஸ் அணியும் மோதின. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இது சிட்னி அணி வெல்லும் மூன்றாவது சாம்பியன் பட்டமாகும்.

சிட்னி சிக்சர்ஸும் பெர்த் ஸ்காசர்ஸும் ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளைப் போன்றது. இரண்டு அணிகளுக்கும் இடையே அப்படி ஒரு கடுமையானப்போட்டி இருக்கிறது. இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் மூன்று முறை இறுதிப்போட்டியில் மோதியுள்ளன. இதில் இரண்டு முறை பெர்த் அணியும் ஒரு முறை சிட்னி அணியும் வெற்றிபெற்று கோப்பையை வென்றுள்ளன. இந்த சீசனில் கூட குவாலிஃபையர் சுற்றில் இந்த இரண்டு அணிகளுமே மோதியிருந்தன. அதில் சிட்னி அணி வென்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெற்றது. பெர்த் அணி தோற்று சேலஞ்சர்ஸ் சுற்றுக்குச் சென்று வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு வந்தது.

இறுதிப்போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. பேட் ஃபிளிப் முறையில் வென்ற பெர்த் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

சிட்னி சிக்சர்ஸ் அணியின் சார்பாக இந்த சீசனின் தொடர் நாயகனான ஜோஷ் பிலிப்பேவும் நல்ல ஃபார்மில் இருக்கும் ஜேம்ஸ் வின்ஸும் களமிறங்கினர். இருவருமே பவுண்டரியும் சிக்சருமாக அடித்து பவர்ப்ளேவை சிறப்பாகவே தொடங்கினர். ஆண்ட்ரூ டை வீசிய 4வது ஓவரில் வின்ஸ் ஒரு பந்தை அவர் காலுக்குள்ளேயே அடித்துவிட இன்னொரு எண்ட்டில் இருந்து பிலிப்பே வேகமாக ஓடி வந்து தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

பெர்த் ஸ்காசர்ஸ்
பெர்த் ஸ்காசர்ஸ்

முதல் 4 ஓவர்கள் பவர்ப்ளே முடிவில் 31 ரன்கள் அடித்திருந்தது சிட்னி சிக்சரஸ் அணி. வின்ஸ் தொடர்ந்து நல்ல பந்துகளை பெரிய ஷாட் ஆடி மற்ற பந்துகளில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார். நம்பர் 3-ல் வந்த டேனியல் ஹூக்ஸ் ஹார்டி வீசிய 7-வது ஓவரில் சிக்சர் அடித்துவிட்டு மறுபடியும் ரிச்சர்ட்சன் வீசிய 8 வது ஓவரில் பெரிய சிக்சருக்கு முயற்சிசெய்ய பவுண்டரி லைனில் மன்றோவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதன்பிறகு இன்னொரு எண்ட்டில் விக்கெட்டுகள் சீராக விழுந்துகொண்டே இருக்க ஓப்பனரான வின்ஸ் மட்டும் நின்று ஆடினார்.

குவாலிஃபையர் போட்டியில் இதே பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்கு எதிராக வின்ஸ் 98 ரன்களில் இருக்கும் போது ஆண்ட்ரூ டை ஒரு வைடை வீசி வின்ஸை சதமடிக்க விடாமல் செய்திருப்பார். அன்றைக்கு அடிக்க முடியாமல் போன சதத்தை இன்றைக்கு அடித்துவிட வேண்டும் என வின்ஸ் உறுதியாக இருந்தார். 10 ஓவருக்கு மேல் சென்றவுடன் கியரை மாற்றி பவுண்டரியும் சிக்சருமாக வெளுத்தெடுத்தார்.

ஹார்டியின் ஓவரில் வைடு லைன் வரை நகர்ந்து வந்து லெக் சைடில் பெரிய சிக்சரை தூக்கியடித்து அட்டகாசம் செய்தார். இடையே இரண்டு கேட்ச்சையும் வின்ஸுக்கு டிராப் செய்ததால் தொடர்ந்து அதிரடியில் மிரட்டினார். சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த வின்ஸ் ஃபவாஸ் அஹமது வீசிய 16-வது ஓவரில் இன்சைட் அவுட் ஷாட்டுக்கு முயன்று கல்லியில் மிட்செல் மார்ஷிடம் கேட்ச் ஆனார். 95 ரன்களில் துரதிஷ்டவசமாக சதத்தை தவறவிட்டு வின்ஸ் வெளியேறினார். கடைசியில் கிறிஸ்டியன், பிராத்வெயிட் அதிரடி காட்ட சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்கள் எடுத்தது.

பிக்பேஷ் லீகின் சாம்பியனான சிட்னி சிக்சர்ஸ்... பெர்த் ஸ்காசர்ஸ் வீழ்ந்தது எப்படி?! #BBLFinal

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்காசர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் சார்பாக லிவிங்ஸ்டனும் பேன்கிராஃப்ட்டும் ஓப்பனர்களாக களமிறங்கினர். இருவரும் கடந்த சேலஞ்சர்ஸ் போட்டியிலேயே சிறப்பாக ஆடியிருந்தனர். இங்கேயும் அதே ஃபார்மை தொடர்ந்தனர். வார்சூயிஸ் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிக்களையும், சீன் அப்பாட் வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் சிக்சரையும் அடித்து மிரட்டினார் பேன்கிராஃப்ட். இதன்மூலம் முதல் 4 ஓவர் பவர்ப்ளேயில் மட்டும் பெர்த் அணி 41 ரன்களை சேர்த்தது.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த பேன்கிராஃப்ட் பேர்ட் வீசிய 5வது ஓவரில் ஒரு புல் ஷாட் ஆட முயன்று எட்ஜ் ஆகி மிட் விக்கெட்டில் வின்ஸிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு லிவிங்ஸ்டன் பவுண்டரிக்களை அடித்து ஆட தொடங்கினார். இவருக்கு துணையாக இங்லிஸ் கொஞ்சம் நேரம் நின்றார். இதன்விளைவாக 10 ஓவர்கள் முடிவில் 91 ரன்களை எடுத்தது பெர்த் அணி. ஆனால், இதன்பிறகு விக்கெட்டுகள் விழத்தொடங்கி ரன்ரேட் ஏறத்தொடங்கிவிட்டது. 11-வது ஓவரில் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்று எட்ஜ்ஜாகி சில்க்கிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்களில் வெளியேறினார் லிவிங்ஸ்டன். இதன்பிறகு மிட்செல் மார்ஷ் சீக்கிரமே வெளியேறிவிட கேப்டன் ஆஷ்டன் டர்னர் மற்றும் ஹார்டி ஆகியோர் பெரிய ஷாட்டுகளுக்கு முயன்று ரன்ரேட்டை குறைக்க முயன்ற போதிலும் அவர்களால் முடியவில்லை. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

சிட்னி சிக்சர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த சீசனிலும் சிட்னி அணிதான் சாம்பியன் ஆகியிருந்தது. இது சிட்னி அணி வெல்லும் 3வது சாம்பியன் பட்டமாகும். 95 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவிய வின்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த சீசனில் 500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் ஜோஷ் பிலிப்பேவுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு