Published:Updated:

தோனி நினைத்ததைச் செய்து முடித்தவர் ரெய்னா... சென்னை சூப்பர் கிங்ஸுக்காக இத்தனை சாதனைகளா?! #Raina

#Raina

இதுவரை சிஎஸ்கேவுக்கென ஒரு சதத்தினையும் 38 அரை சதங்களையும் அடித்துள்ளார். அதேப்போல், ஐபிஎல்-ல் அதிக பவுண்டரிகளை அடித்த வீரர்களில், ரொய்னாவுக்கு இரண்டாம் இடம்; அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலிலோ, ஐந்தாம் இடம்!

Published:Updated:

தோனி நினைத்ததைச் செய்து முடித்தவர் ரெய்னா... சென்னை சூப்பர் கிங்ஸுக்காக இத்தனை சாதனைகளா?! #Raina

இதுவரை சிஎஸ்கேவுக்கென ஒரு சதத்தினையும் 38 அரை சதங்களையும் அடித்துள்ளார். அதேப்போல், ஐபிஎல்-ல் அதிக பவுண்டரிகளை அடித்த வீரர்களில், ரொய்னாவுக்கு இரண்டாம் இடம்; அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலிலோ, ஐந்தாம் இடம்!

#Raina
சிஎஸ்கே அணியில் இருந்து ரெய்னாவின் வெளியேற்றம் அவரின் ரசிகர்களுக்குப் பேரிடியாய் இருக்கிறது. ''சென்னை சூப்பர் கிங்ஸுக்காக உயிரையே கொடுத்தவருக்கு இப்படி ஆகிடுச்சே'' என சோஷியல் மீடியாக்களில் ஸ்டேட்டஸ் போட்டு கலங்குகிறார்கள். உண்மையில் சிஎஸ்கே-வுக்காக சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பு எப்படிப்பட்டது?!

சின்ன தல!

சுரேஷ் ரெய்னாவின் கரியர் இந்திய அணியில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருந்தாலும் சிஎஸ்கே-வைப் பொருத்தவரை இறக்கங்கள் ஏதும் பெரிதாக இல்லை.

193 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா, அதிகப் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும், குறிப்பாக, தொடர்ந்து 158 போட்டிகளில் ஒரே அணிக்காக தொடர்ந்து ஆடியவர் என்கிற பெருமையையும் பெற்றவர்.

ரெய்னா, தோனி
ரெய்னா, தோனி

பொதுவாக டி20 போட்டிகளில் சமபலம் கொண்டவர்கள் மோதிக் கொள்ளும் கயிறு இழுக்கும் போட்டியைப் போல, ஆட்டம், இரண்டு பக்கமும் மாறி மாறிச் சென்று கொண்டேயிருக்கும். ஆட்டத்தின் ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு விக்கெட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சின்ன கவனச்சிதறலால் கூட, வெற்றி வாய்ப்பே பறி போகலாம். அத்தகைய ஒரு ஃபார்மேட்டில், போட்டியின் ஒரு ரன்னை இரண்டாக மாற்றுவது, போட்டியின் போக்குக்கு ஏற்ப தன்னுடைய ஆடும் முறையை மாற்றி போட்டியைத் தன் பக்கம் திருப்புவது, இறுதி ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி வெற்றியைத் தங்களுடையதாக்குவது எனப் பல வியூகங்களை உள்ளடக்கிய பேட்ஸ்மேனாக இருந்தவர் ரெய்னா.

மூன்றாவது விக்கெட்டுக்கு உள்ளே வந்து, இவர் காட்டிய மாயாஜால வித்தைகளால் கைநழுவிப் போக வேண்டிய எத்தனையோ போட்டிகள், சிஎஸ்கேக்கு சாதகமாக முடிந்திருப்பது வரலாறு! 2008-ம் ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து ஏழு ஆண்டுகள், ஒவ்வொரு சீசனிலும் 400 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் இவர்தான். நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்துவது மட்டுமன்றி அழுத்தத்தைச் சமாளித்து விளையாடுவதும், அவருடைய கூடுதல் சிறப்பு.

#Raina
#Raina

ஐபிஎல்-ல் 5000 ரன்கள் எனும் கடின இலக்கைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரரும் இவர்தான். இன்றைய தேதிக்கு ஐபிஎல்லில் அதிக ரன்களைச் சேர்த்தவர்கள் பட்டியலில், கோலி முதலிடத்திலும் சுரேஷ் ரெய்னா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். இருவருக்கும் உள்ள ரன் வேறுபாடுகள் வெறும் 44 தான். இதுவரை இவர் அடித்துள்ள 5368 ரன்களில் சிஎஸ்கேவுக்காக இவர் அடித்த மொத்த ரன்கள் 4527. இதில் முக்கியமான இன்னொரு விஷயம், சிஎஸ்கேவுக்காக ஆடிய, இந்தப் போட்டிகளில், அவருடைய ஸ்ட்ரைக்கிங் ரேட் 137. ஒரு சீசனில் கூட, அது 120-க்குக் கீழே சென்றதில்லை.

இதுவரை சிஎஸ்கேவுக்கென ஒரு சதத்தினையும் 38 அரை சதங்களையும் அடித்துள்ளார். அதேபோல், ஐபிஎல்-ல் அதிக பவுண்டரிகளை அடித்த வீரர்களில், ரொய்னாவுக்கு இரண்டாம் இடம்; அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலிலோ, ஐந்தாம் இடம்!

சிஎஸ்கேவுக்காக ஐபிஎல்லில் அவர் நிகழ்த்திய சாதனைகள் சாம்பியன்ஸ் லீகிலும் தொடர்ந்தது. சாம்பியன்ஸ் லீகில் 842 ரன்கள் அடித்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராய் திகழ்கிறார் ரெய்னா. அதிக சிக்ஸர்களை அடித்ததில் இரண்டாவது இடத்தில் உள்ள அவர், ஆறு அரைசதங்களை விளாசி அதிக அரைசதங்களை அடித்தவர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் மற்றும் டி20 போட்டிகள் என அத்தனையிலும் சதமடித்த முதல் மற்றும் ஒரே இந்திய வீரர் இவர்தான். இப்படி பேட்டிங்கில் சொல்லவே மூச்சுத் திணறும் எண்ணற்ற சாதனைகளை, போகின்ற போக்கில் நிகழ்த்தியதுதான், மிஸ்டர் ஐபிஎல் என்று ரெய்னா கொண்டாடப்படக் காரணம்.

Dhoni, Raina
Dhoni, Raina

ஐபிஎல்-ல் விளையாடிய பத்து சீசன்களில் எட்டு சீசன்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது, சிஎஸ்கே. அதேப்போல சாம்பியன்ஸ் டிராபிக்கு ஐந்து முறை தேர்வாகி, அதில் இரண்டு முறை கோப்பையைத் தன்வசமாக்கியுள்ளது. இந்த அத்தனை போட்டிகளிலும், ரெய்னாவின் பங்களிப்பு, மிக மிக முக்கியமானது. இப்படிப்பட்ட ஒரு ஒப்பற்ற பேட்ஸ்மேனின் இடத்தை, சிஎஸ்கே யாரைக் கொண்டு நிரப்பப் போகிறது என்பதற்கான விடை தோனிக்கு மட்டுமே தெரியலாம்.

சிஎஸ்கேயின் பேட்டிங் வரிசைக்கு வலிமை சேர்த்த ரெய்னா, பெளலிங் யூனிட்டிற்கும் பலம் சேர்த்தார். இக்கட்டான சூழ்நிலைகளில் கைகொடுக்கும் பிரேக் த்ரூ பெளலராக கேப்டன் தோனியால், பெரிதும் நம்பப்பட்ட ரெய்னா, இதுவரை 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிரடி பேட்ஸ்மேன்கள் ஜாலம் காட்டும் டி20 போட்டிகளில், அவரது எக்கானமி வெறும் 7.19 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபீல்டிங்கிலோ ரெய்னாவின் செயல்பாடு அட்டகாசமானது. தோனி தூணாக நிற்பதால், எப்படி ஸ்டம்புக்குப் பின்னால் பந்து போவது பேட்ஸ்மேனுக்கு டேஞ்சர் ஸோனோ அதேபோல ரெய்னா இருக்கும் பக்கம் கேட்சுக்காக பந்து சென்றால், அது பேட்ஸ்மேனுக்கு கன்டெயின்மென்ட் ஸோன்தான். ஒட்டுமொத்தமாக ஐபிஎல்-ல் 101 கேட்சுகளைப் பிடித்துள்ள ரெய்னா அதிகமான கேட்சுகளைப் பிடித்தவர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். நூறாவது கேட்சாக, 2019 ஐபிஎல்-ல் பிரித்வி ஷா அடித்த பந்தினைக் கேட்ச் பிடித்ததன் மூலமாய் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளின் வீழ்ச்சிக்குக் காரணமான ஒரே ஃபீல்டர் என்ற மைல்கல்லையும் கடந்த ஐபிஎல் தொடரில் எட்டினார்.

Suresh Raina
Suresh Raina

லீக் போட்டிகளிலேயே, அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரெய்னா, பதற்றத்தை அதிகரிக்கும் நாக் அவுட் போட்டிகளில், எடுப்பதோ விஸ்வரூபம். சிஎஸ்கே அணி வெற்றியைப் பதிவு செய்துள்ள நாக் அவுட் மற்றும் ப்ளே ஆஃப் போட்டிகளில் இவருடைய சராசரி, 42.3 என்பதே அணிக்கு அவரின் முக்கியத்துவத்தைச் சொல்லும். 2014-ம் ஆண்டு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான, இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில், வெற்றிக்கான இலக்காய் 227 என்னும் இமாலய இலக்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்க, முதல் ஓவரிலேயே விக்கெட்டை சிஎஸ்கே பறிகொடுக்க, அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா, ஆறு சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளை விளாசி, 25 பந்துகளில் 87 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில், அந்தக் குறிப்பிட்ட ஆறு ஓவர்களில் அணியின் ஸ்கோர், 100 ரன்கள். அடுத்த சில பந்துகளில் எதிர்பாராத விதமாக ரெய்னா, ரன் அவுட் ஆனதால், 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றியைப் பறிகொடுத்தாலும், ரெய்னாவின் இந்த இன்னிங்ஸ்தான் இன்று வரை ஐபிஎல்-ன் சிறந்த இன்னிங்ஸாகப் பார்க்கப்படுகிறது.

2013-ம் ஆண்டு அதே கிங்ஸ் லெவன் அணிக்கு எதிராக, ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் அவர் அடித்த 100 ரன்கள், 2009-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான 98 ரன்கள், 2011-ம் ஆண்டு குவாலிஃபையரில் அடித்த 73 ரன்கள் என ஒரு உற்ற நண்பன் எப்படி அபாயத்தில் உதவுவானோ அதேபோல, அணிக்குத் தேவைப்பட்ட அத்தனை பொழுதுகளிலும் ஆபத்பாந்தவனாய், ரெய்னா இருந்திருக்கிறார்.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

இப்படி ஈடு இணையற்ற பேட்ஸ்மேனாக, பெளலராக, ஃபீல்டராக, அநேகனாய், சிஎஸ்கேயின் முதுகெலும்பாய், பக்க பலமாய் சுரேஷ் ரெய்னா இருந்து வருவதால்தான் அவருடைய விலகல் சிஎஸ்கேவுக்கு ஏற்பட்ட இழப்பாய், பார்க்கப்படுகிறது. மனோஜ் திவாரி, விஷ்ணு வினோத், முரளி விஜய் எனப் பல மாற்று வீரர்கள் அவரின் இடத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், அவர்களால் அவருடைய இடத்தில் ஆட முடியுமே தவிர, அவர் விட்டுச் சென்றிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

அணியின் கேப்டன் தல தோனி என்றால் அதன் நங்கூரம் சின்ன தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரெய்னாதான். இவருடைய விலகல், ஈடு கட்டவே முடியாததுதான் என்றாலும், சோதனைகள் சிஎஸ்கே அணிக்கு ஒன்றும் புதிதல்லவே?! எதனையும் சமாளிக்கும் தோனி இதனையும் சமாளித்து, வழக்கம் போல, சோதனைகளைச் சாதனைகளாக மாற்றி, நான்காவது முறையாக சிஎஸ்கே அணியை, கோப்பையை வெல்ல வைப்பார் என நம்புவோம்!