Published:Updated:

`இந்திய வீரர்கள்... வெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகள்’ - ரெய்னா கேள்வியும் பிசிசிஐ-யின் பதிலும்..!

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா ( பிசிசிஐ )

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாத வீரர்களை வெளிநாட்டுக் கிரிக்கெட் லீக் தொடர்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தவிர பெரும்பாலும் வெளிநாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாத இன்னும் ஓய்வை அறிவிக்காத ஆக்டிவ் வீரர்கள் ஐபிஎல் தவிர உள்ளூர் ரஞ்சிப் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இந்தநிலையில், அவர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை

இதுதொடர்பாக இர்பான் பதனுடனான இன்ஸ்டாகிராம் வீடியோ சாட்டில் இந்திய வீரரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான சுரேஷ் ரெய்னா பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ``பிசிசிஐ, ஐசிசி அல்லது குறிப்பிட்ட லீக் தொடர்களில் பங்கேற்கும் அணி நிர்வாகங்களுடன் இணைந்து இந்திய வீரர்கள் அந்தத் தொடர்களில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கும் என்று நம்புகிறேன். பிசிசிஐயின் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாத வீரர்களை இதுபோன்ற வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

`மறக்க முடியுமா... 10 வருடங்களுக்கு முன் இதேநாளில் சம்பவம் செய்த ரெய்னா!’ -T20WC மெமரீஸ்

யூசுப் பதான், ராபின் உத்தாப்பா மற்றும் என்னைப் போல் எத்தனையோ வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்பதன்மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். குறிப்பிட்ட இந்தத் தொடர்தான் என்றில்லை, எங்களை ஒன்றிரண்டு தொடர்களில் விளையாட அனுமதியுங்கள். பிசிசிஐயின் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் நாங்கள் இல்லை; அதேபோல் வீரர்கள் சிலருக்கு ஐபிஎல் ஒப்பந்தமும் இல்லை. இதனால், சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. இதனால், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறோம்.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா
Twitter

கரீபியன் பிரீமியர் லீக், ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் போன்ற தொடர்களில் விளையாடுவதன் மூலம் எங்கள் திறமையை நிரூபித்து சர்வதேச போட்டிகளுக்குத் தயாராக இருக்க முடியும். வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களால் இதுபோன்ற தொடர்களில் விளையாட முடிகிறது. அதன்மூலம், சர்வதேச போட்டிகளுக்கு அவர்களால் திரும்ப முடிகிறது. நாங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறோம். ஆனால், இங்கோ 40 முதல் 50 வீரர்கள் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் மற்றவர்கள் குறித்து சிந்திப்பதில்லை அல்லது புறக்கணிக்கப்படுகிறார்கள். எங்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை. வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில் பங்கேற்கும்போது நல்ல அனுபவம் கிடைக்கும்’’ என்றார் ஆதங்கத்துடன். சுரேஷ் ரெய்னா, ஜூலை 2018-க்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

``ஜெயிக்கிறமோ இல்லையோ சண்டை செய்யணும்!’’ -  சி.எஸ்.கே சண்டைக்காரன் சுரேஷ் ரெய்னா  #HBDRaina

வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மட்டுமே வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்றிருக்கிறார்கள். இருவருமே ஓய்வு அறிவித்த பின்னர் சேவாக், டி10 லீக் தொடரிலும் யுவராஜ் குளோபல் டி20 கனடா லீக் தொடரிலும் விளையாடியுள்ளனர். அதேநேரம், இங்கிலாந்தின் ஹண்ட்ரட் லீக் வீரர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அதிலிருந்து வெளியேறியிருந்தார்.

பிசிசிஐ
பிசிசிஐ

இதுதொடர்பாக ஐஏஎன்எஸ் ஊடகத்திடம் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், ``ஓய்வு நெருங்கும்போது இப்படி அவர்களுக்குத் தோன்றுவது இயற்கையானதுதான். அது அவர்களின் பார்வை. தங்கள் எதிர்காலம் குறித்து சிந்திக்கையில் இதுபோன்று கருத்துக் கூறுவது இயல்பானதுதான். ஆனால், ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை மற்ற எந்தத் தொடர்களிலும் விளையாடாத இந்திய வீரர்கள் இங்கு விளையாடுவது என்பது முக்கியமான விஷயமாகப் பார்க்கிறோம்’’ என்றார். இதுதொடர்பாக பிசிசிஐ இதுவரை அதிகாரபூர்வமாக விளக்கமோ பதிலோ அளிக்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு