
2022 ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் நிச்சயம் ரெய்னா சென்னை அணியால் வாங்கப்படுவார் என்று நினைத்திருந்தேன்.
சுரேஷ் ரெய்னா - ஐ.பி.எல் அரங்கின் முடிசூடா மன்னன். ஆள ராஜ்ஜியமின்றி ஒதுங்கியிருக்கிறார். பல இளைஞர்களின் கரியருக்கு முன்னுரையாய் அமைந்த ஐ.பி.எல் ஏலம், மிஸ்டர் ஐ.பி.எல்-க்கு முடிவுரை எழுதியிருக்கிறது. சுரேஷ் ரெய்னா இந்த ஐ.பி.எல் தொடரில் ஆடப்போவதில்லை. இனி கிரிக்கெட் அரங்கில் அவரை நாம் காணப்போவதில்லை.
என் பால்ய நினைவின் இடுக்குகளெங்கும் இந்தப் பெயரும் அவரின் ஜெர்ஸி எண்ணும், நீங்காத இடம் வகிக்கின்றன. சச்சின், தோனி முகம் பதித்த லேபிள்கள் எளிதில் கிடைத்துவிடும். ஆனால், “ரெய்னா முகம் பதித்த பரீட்சை அட்டை, நோட் லேபிள் மட்டும்தான் வேணும்!” என்று அழுது புரண்டு வாங்கியதுண்டு. விளம்பரங்களின் ஓரத்தில் ரெய்னா இருந்தால்கூட ஓடி வந்து சேனல் மாற்ற விடாமல் பார்த்ததுண்டு.

நடிகர்கள், கார்ட்டூன் கேரக்டர்களின் பெயர்கள் தாங்கி நின்ற பள்ளிக்கூட பெஞ்சுகளில், கூரிய காம்பஸ் கொண்டு ரெய்னாவின் பெயரைப் பதித்திருக்கிறேன். நான்காம் வகுப்பு தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை என்னைத் தாங்கிய அந்த 9 பெஞ்சுகளும், ‘RAINA -03’ என்ற பெயரையும் தாங்கியே நின்றிருக்கின்றன. தோனியும் கோலியுமே தெரிந்த என் தோழிகளுக்கு ரெய்னா குறித்து விரிவுரை ஆற்றியிருக்கிறேன்.
ரெய்னா என்னும் பெயருக்கு உற்சாகம், கொண்டாட்டம், பாசிட்டிவிட்டி என்று ஏராளமான புனைபெயர்களைச் சொல்லலாம். யார் விக்கெட் எடுத்தாலும், ஓடிவந்து முதுகிலேறி பிறர் வெற்றியையும் தன் வெற்றியாகக் கொண்டாடும் அற்புதம். ரெய்னாவை ஒவ்வொருவருக்கும் பிடித்துப்போகக் காரணம் அதுதான்.
48-ம் நம்பர் பதித்த நீல உடையில் ரெய்னா ஒரு டீம் பிளேயர்தான். அணிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்து கொண்டிருந்தார். டாப் ஆர்டரில் இறங்குவார். அங்கு வேறொருவருக்கு இடம் வேண்டுமென்றால், மிடில் ஆர்டரில் இறங்க, அங்கிருந்து லோயர் மிடில் ஆர்டருக்கும் நகரத் தயாராகவே இருப்பவர். அங்கு அவர் துணைக் கதாபாத்திரம் மட்டும்தான். அதனால்தானோ என்னவோ, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தபோது பெரிய தாக்கம் ஏற்படவில்லை.
ஆனால், 3-ம் நம்பர் பதித்த மஞ்சள் உடையில் ரெய்னா ஒரு ஹீரோ. தமிழகமே கொண்டாடிய சின்ன தல! 2019 வரை சூப்பர் கிங்ஸுக்காக அதிக போட்டிகளில் விளையாடியவர் ரெய்னாதான். கெய்லைப் போல் இமாலய சிக்ஸர்களோ, தோனியைப் போல் கடைசி பால் சிக்ஸர்களோ ரெய்னா அடித்ததில்லை. ஆனால், அணியைத் தன் தோள்களில் தாங்கிக்கொண்டே இருந்திருக்கிறார். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சச்சின் கொடுத்த நம்பிக்கையை, சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒவ்வொரு முறையும் ரெய்னா கொடுத்திருக்கிறார். வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்த தருணங்களில் சூப்பர் ஹீரோவாக மாறி சாகசமும் செய்திருக்கிறார்.

2014 குவாலிபையர் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை யாரால் மறக்க முடியும்?! கெய்ல், டி வில்லியர்ஸ், மெக்கல்லம் போன்ற அதிரடி சூரர்களுக்கு இணையாக வாணவேடிக்கை நடத்தினார் ரெய்னா. ஒவ்வொரு ஷாட்டுக்கும் தட்டித் தட்டி சிவந்துபோன கரங்கள், இப்போது இதை எழுதும் போது கலங்கவே செய்கின்றன.
2022 ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் நிச்சயம் ரெய்னா சென்னை அணியால் வாங்கப்படுவார் என்று நினைத்திருந்தேன். அவர் பெயர் திரையில் வந்து, கேமராக்கள் சென்னை நிர்வாகத்தைக் காட்டியபோது, எப்படியும் கையைத் தூக்கிவிடுவார்கள் என்று நினைத்தேன். தாமதமான ஒவ்வொரு நொடியும் அச்சம் அதிகரித்தது. மஞ்சள் உடையில் அரைசதம் அடித்து ரெய்னா பேட்டை உயர்த்திய தருணங்கள், அஷ்வின், பொலிஞ்சர், பிராவோ போன்றோர் விக்கெட் எடுத்தபோதெல்லாம் அவர்கள் இடுப்பில் ஏறிக் கையை உயர்த்திய தருணங்கள் எனப் பல சம்பவங்கள் கண்முன் வந்து போயின. ஆனால், நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அடுத்த நாளும் நடக்கவில்லை. ரெய்னா, இப்போது மஞ்சள் உடை அணியப்போவதில்லை. புதிய வீரர்களில் யாரேனும் ஒருவர் அந்த மூன்றாம் நம்பரை அணியும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியும் இருக்கப்போவதில்லை.
அந்த 2020 சீசனை ரெய்னா விளையாடாமல் விட்டபோது, அது இப்படியொரு முடிவை ஏற்படுத்தும் என்று நினைத்திருக்கவில்லை. அன்று விழுந்த விரிசல், இந்த உறவை பலவீனமாக்கிவிட்டது. கடந்த சீசன் ஃபார்ம், பிளேயிங் லெவனில் இருந்து ஒதுக்கியது. உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடாததால் மற்ற அணிகளும்கூட இவரை ஒதுக்கிவிட்டனர். சுரேஷ் ரெய்னா - அன்சோல்டு என்ற வார்த்தைகள் இன்னும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன தாள முடியாத வலியுடன்.