Published:Updated:

`எப்போதும் தோனியிடம் `ஏன்’ என கேட்டதில்லை.. அன்று கேட்டுவிட்டேன்!’ -ரெய்னா சொல்லும் `2015’ சீக்ரெட்

ரெய்னா
ரெய்னா

அன்று எதற்காக என்னை முன்னதாக களமிறங்கச் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. அதனால் ஆட்டம் முடிந்ததும் அவரிடமே கேட்டேன்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் ரெய்னா இடையே ஒரு நல்ல புரிதல் இருக்கும். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது ரசிகர்களால் இதைப் பார்க்க முடியும். அதனால்தான் ரசிகர்களுக்கு தோனி `தல’ என்றால் சுரேஷ் ரெய்னா `சின்ன தல’. இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ள ரெய்னா, தனக்கு தோனிக்குமான உறவு குறித்தும் 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தன்னை முன்னதாக களமிறங்கச் சொன்னது குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

தோனி, சுரேஷ் ரெய்னா
தோனி, சுரேஷ் ரெய்னா

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் உலகக் கோப்பை தொடரில் சொல்லவே வேண்டாம். இருநாட்டு ரசிகர்களும் அந்த த்ரில்-ஐ ரசிப்பார்கள். ஆனால் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் அப்படியான த்ரில் போட்டியாக அமையவில்லை. இந்தியா முழுமையாக பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. முதலாவதாக ஆடிய இந்திய அணியில் கோலி சதமடித்தார். அந்தத் தொடரில் வழக்கமாக 5-வது வீரராக களமிறங்கும் ரெய்னா அன்று 4-வது வீரராக களமிறங்கினார். தவான் ஆட்டமிழந்ததால், மீண்டும் இடக்கை பேட்ஸ்மேனை அனுப்பலாம் என்ற முடிவில் ரெய்னா களமிறங்கி இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

அன்றைய ஆட்டத்தில் கோலி சதமடித்த போதும், வழக்கமான அதிரடியை அவர் காட்டவில்லை. 126 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், ரெய்னா 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 56 பந்தில் 74 ரன்கள் குவித்தார். இந்திய அணியும் 300 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 224 ரன்களில் ஆட்டமிழந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இந்த ஆட்டம் தொடர்பாக 5 ஆண்டுகள் கழித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய ரெய்னா, ``நான் என்றுமே தோனியின் முடிவுகளைக் கேள்வி கேட்டது கிடையாது. 2015-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது நான் சாண்ட்விட்ச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன் என நினைக்கிறேன். அப்போது தோனி என்னிடம் வந்து `பேடுகளை கட்டிக்கொண்டு தயாராக இரு.. அடுத்து நீ தான்’ என்றார். நானும் தயாராகிவிட்டேன். அப்போது விராட் மற்றும் தவான் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தார்கள். தவான் ஆட்டமிழந்த பின்னர் நான் களமிறங்கினேன். அன்று என்னால் சில நல்ல ஷாட்கள் ஆட முடிந்தது. 70-80 ரன்கள் எடுத்தேன்.

அன்று எதற்காக தோனி என்னை முன்னதாக களமிறங்கச் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. அதனால் ஆட்டம் முடிந்ததும் அவரிடமே கேட்டேன். வழக்கமாக கேட்கமாட்டேன். ஆனால், அன்று அவர் மனதில் என்ன இருந்தது என தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதற்கு அவர், `நீ லெக்-ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக விளையாடுவாய் அப்போது அங்கு அவர்கள்தான் பந்து வீசிக் கொண்டு இருந்தார்கள். அதனால்தான் உன்னைப் போகச் சொன்னேன்’ என்றார். மேலும், நானும் சிறப்பாக விளையாடியதாகச் சொன்னார்” என அந்த நினைவுகளைப் பகிர்ந்தார்.

அந்தத் தொடரில் பாகிஸ்தானின் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா சிறப்பாக விளையாடி எதிரணிக்கு நெருக்கடி அளித்து வந்தார். அதைச் சமாளிக்க ரெய்னாவை முன்னதாக தோனி களமிறக்கினார். யாசிர் அந்தப் போட்டியில் 8 ஓவர்களுக்கு 60 ரன்கள் விட்டுக்கொடுத்ததோடு விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

ரெய்னா, தோனி
ரெய்னா, தோனி

தொடர்ந்து தோனி குறித்து பேசிய ரெய்னா, ``எல்லா ஆட்டத்திலும் அவர் ஒரு ஸ்டெப் முன்னாடிதான் இருப்பார். ஸ்டெம்புக்குப் பின்னால் நிற்பதால் அவருக்கு பிட்சின் தன்மை குறித்து நன்றாக அறிந்து வைத்திருப்பார். ஐபிஎல் தொடரில் நான் குஜராத் அணிக்கு கேப்டனானபோது, `என்னிடம் எப்போதும்போல் யோசனைகள் கேட்கலாம்’ என்றார். அவர் கடவுளின் கிப்ட் என்றுதான் நான் சொல்லுவேன்” என்றார் நெழ்ச்சியுடன்!

அடுத்த கட்டுரைக்கு