ஐபிஎல் ஆரம்பிக்கப்போகிறது என்றாலே 'டாக் ஆஃப் டவுன்' ஆக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் இருக்கும். இம்முறையும் அப்படியே! ஆனால் காரணங்கள் அவ்வளவு பாசிட்டிவ்வானதாக இல்லை. வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தது தொடங்கி ரெய்னா வெளியேறியது வரை தொடர்ந்து சர்ச்சைகள். இந்நிலையில் முதல்முறையாக இதுகுறித்து பேசியிருக்கிறார் சுரேஷ் ரெய்னா. cricbuzz மற்றும் ndtv ஆகிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் தனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

"நான் இந்திய திரும்பியது எனது தனிப்பட்ட முடிவுதான். குடும்பத்தின் நலன் கருதித்தான் இந்த முடிவை நான் எடுத்தேன். சிஎஸ்கேவும் என் குடும்பம்தான். தோனியும் எனக்கு மிகவும் முக்கியமான மனிதர். அதனால் இந்த முடிவு எனக்குக் கடினமானதாகவே இருந்தது. எனக்கும் சிஎஸ்கேவுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. காரணமே இல்லாமல் யாரும் 12.5 கோடி ரூபாய் வேண்டாம் என வரமாட்டார்கள். நான் சர்வதேச போட்டிகளில் வேண்டுமானால் ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் எப்படியும் அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லில் ஆடுவேன்."
ஸ்ரீனிவாசன் ரெய்னா குறித்துப் பேசிய கருத்துகளுக்கும் முதல்முறையாக இந்த பேட்டிகளில் பதிலளித்திருக்கிறார் ரெய்னா.
"ஸ்ரீனிவாசனை நான் தந்தை ஸ்தானத்தில்தான் பார்க்கிறேன். எப்போதும் என்னுடன் அவர் துணை நின்றிருக்கிறார். என்னை அவரது இளைய மகனாகத்தான் அவரும் கருதுகிறார். அவர் சொன்ன பல விஷயங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. மகனைத் திட்டும் உரிமை தந்தைக்கு இருக்கிறது. நான் வெளியேறிய காரணம் என்னவென்று தெளிவாகத் தெரியாமல் சில விஷயங்களைப் பேசிவிட்டார். இப்போது நிலவரம் தெரிந்தபிறகு எனக்கு மெசேஜூம் அனுப்பினார். எனக்கிருக்கும் சிக்கல்கள் குறித்தும் சிஎஸ்கே எதிர்காலம் குறித்து நீண்ட நேரம் உரையாடினோம்."
இந்த சீசனிலேயே தான் மீண்டும் ஆடுவதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ரெய்னா.

"இப்போது க்வாரன்டீனிலும் பயிற்சி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் என்னை அணியில் பார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை."ரெய்னா
பால்கனி இருக்கும் அறை தரப்படாததால்தான் ரெய்னா வெளியேறியதாக முதலில் சொல்லப்பட்டது. அதற்கும் தற்போது விளக்கம் அளித்துள்ளார் ரெய்னா. "என்னைப் பற்றித் தெரிந்த அனைவருக்கும் அது பொய் எனத் தெரியும். எனது பெயருக்கும் சிஎஸ்கே பெயருக்கும் களங்கம் விளைக்கவே இப்படி செய்திகள் பரப்பப்படுகின்றன."
இதன் தொடர்ச்சியாக 'UAE-ல் கொரோனா ஏற்பாடுகள் திருப்திகரமாக இருந்ததா?' என்ற கேள்வியும் ரெய்னாவிடம் வைக்கப்பட்டது.

"அணி நிர்வாகமும், பிசிசிஐ-யும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதுபோன்ற சூழல் இதற்கு முன்பு வந்ததில்லை. அனைவருக்குமே இது புதிய அனுபவம். மிகவும் ஸ்ட்ரிக்ட்டான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அனுமதி இல்லாமல் யாரும் எங்கேயும் செல்ல முடியாது. மனித தொடர்பு இல்லாமல் எங்கள் அறைகளிலேயேதான் நாங்கள் இருந்தோம். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை எங்களுக்குப் பரிசோதனை எடுக்கப்பட்டது."
"என் இளம் குடும்பம் இந்தியாவில் தனியாக இருக்கிறது. எனக்கு எதாவது நடந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? எனக்கு என் குடும்பம்தான் மிகவும் முக்கியம். இந்த இக்கட்டான சூழலில் அவர்களைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. 20 நாள்களாக நான் என் குழந்தைகளைப் பார்க்கவில்லை. இப்போதும் க்வாரன்டீனில்தான் இருக்கிறேன்."
பதன்கோட்டில் ரெய்னாவின் மாமா கொல்லப்பட்டது குறித்தும் இந்தப் பேட்டிகளில் அவர் பேசியிருக்கிறார்.

"பதன்கோட் சம்பவம் மிகவும் துயரம் மிக்கது. எங்கள் குடும்பத்தில் அனைவரையுமே அது மனதளவில் பாதித்திருக்கிறது. இந்த நேரத்தில் அவர்களைப் பார்த்துக்கொள்வது என் கடமை. அதனால்தான் திரும்பி வந்தேன். அப்படியும், நான் இன்னும் க்வாரன்டீனில்தான் இருக்கிறேன். இனிதான் என் பெற்றோரையும் அத்தையும் சென்று பார்க்கவேண்டும்."
அணியினருக்கு கொரோனா இருப்பது தெரிந்து மனமுடைந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். "இத்தனை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுக்குப் பிறகும் அணியினர் பாதிக்கப்படுகின்றனர் என்றால் அது இந்த நோய் எவ்வளவு ஆபத்தானது என்பதையே காட்டுகிறது. விரைவில் அனைவரும் குணமாகிவிடுவார்கள் என நம்புகிறேன்."