Published:Updated:

தோனியின் ரகளை, டிராவிட்டின் அறிவுரை... ரெய்னாவின் புத்தகமும் கிரிக்கெட் கொடுத்த பாடமும்!

Suresh Raina

தன் வாழ்க்கையின் நினைவுகளைத் தொகுத்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. ‘Believe : what life and cricket taught me’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது அந்தப் புத்தகம்.

Published:Updated:

தோனியின் ரகளை, டிராவிட்டின் அறிவுரை... ரெய்னாவின் புத்தகமும் கிரிக்கெட் கொடுத்த பாடமும்!

தன் வாழ்க்கையின் நினைவுகளைத் தொகுத்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. ‘Believe : what life and cricket taught me’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது அந்தப் புத்தகம்.

Suresh Raina

சுரேஷ் ரெய்னா - இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய அங்கமாக விளங்கியவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அணி ரசிகர்களுக்கும் இன்னும் உயிராய் விளங்குபவர். 2006-ல் தொடங்கிய அவரது சர்வதேச கிரிக்கெட் பயணம் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆகஸ்ட் 15-ம் தேதி தோனி தன் ஒய்வை அறிவிக்க, அவரைத் தொடர்ந்து தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரெய்னா. இப்போது தன் கிரிக்கெட் மற்றும் வாழ்க்கை நினைவுகள் சிலவற்றைத் தொகுத்து புத்தகம் எழுதியிருக்கிறார் ரெய்னா.

தோனியோடு மிகவும் நெருங்கியவரான ரெய்னா, அவர்கள் இருவரையும் பற்றிய நிகழ்வுகளை இந்த புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார். ''ஹோட்டலில் தங்கும்போது தோனியின் அறைக்குப் பக்கத்தில் சென்றாலே எதையாவது கீழே போட்டுவிடுவேன். எப்போதும் அதை கிண்டல் செய்துகொண்டே இருப்பார். அதேசமயம், இருவரும் ஒன்று சேர்ந்தால் ஒரே ஆட்டமாக இருக்கும். ஒருமுறை டிராவிட் கேப்டனாக இருந்தபோது, 'வேண்டியதை ஆர்டர் செய்துகொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டார். நான், இர்ஃபான், மஹி, உத்தப்பா எல்லோரும் சேர்ந்து இஷ்டத்துக்கும் ஆர்டர் செய்துவிட்டோம். எல்லாம் தோனியின் பிளான். அது தெரிந்ததும் டிராவிட்டால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. நானும் தோனியும் சேர்ந்து யாராவது காலை வாரிவிட்டுக்கொண்டே இருப்போம். இருவரும் பயங்கரமான கூட்டாளிகள். ஆனால், சமயங்களில் தோனி என்னையும் வம்பிழுத்துவிடுவார்'' என்று கூறியிருக்கிறார் ரெய்னா.

Suresh Raina & MS Dhoni
Suresh Raina & MS Dhoni

அதேசமயம் தோனியுடனான நெருக்கமான உறவின் காரணமாக தான் சந்தித்த நெருக்கடிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். தோனிக்கு நண்பனாக இருப்பதால்தான் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது என்று சொல்லும்போது, இந்திய அணிக்காகவும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் தான் அளித்த பங்களிப்பை மறந்துவிடுகிறார்கள் என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தோனி தன் மீது வைத்திருந்த நம்பிக்கையையும், அவர் தோனியின் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய அணிக்காக அவர் தொடர்ந்து மிடில் ஆர்டர் ஆடியதற்கு அதுதான் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார். ஒருமுறை ''நானும் டாப் ஆர்டரில் ஆடவேண்டும்'' என்று கேட்டிருக்கிறார் ரெய்னா. ''நீ எப்போதுவேண்டுமானாலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய ஆள். ரஹானே, கோலி, ரோஹித் போன்றவர்களுக்கு டாப் ஆர்டர்தான் சரியான சாய்ஸ்'' என்ற தோனியின் வார்த்தைகள் மீது நம்பிக்கை கொண்டு அதற்கு மதிப்பளித்திருக்கிறார்.

எல்லோரும் தோனியை கேப்டன் கூல் எனப் புகழ்ந்தாலும், அந்தத் தன்மையை தோனியின் மிகப்பெரிய பலமாகத் தான் கருதவில்லை என்கிறார் ரெய்னா. ''விளையாடும்போது எந்தவொரு தருணத்திலும் தோனி சமாதானம் செய்துகொள்ளமாட்டார். எனக்கு அவரது அந்த குணம்தான் மிகவும் பிடிக்கும். அதுதான் அவரை மிகச் சிறந்த கேப்டனாகவும், தலைவராகவும் மாற்றியது என நான் நினைக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார் ரெய்னா.

தோனி, ரெய்னா இருவருமே மிகவும் சிறிய கிராமங்களிலிருந்து கிரிக்கெட் கனவோடு வந்ததும்கூட அவர்கள் இருவரும் விரைவில் நெருங்கிவிடக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார் ரெய்னா. அவர்களின் நட்பு, தோனியின் தன்மை எனப் பல விஷயங்களை இப்புதகத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.

புத்தகத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல், கிரிக்கெட் தனக்குக் கற்றுக்கொடுத்த விஷயங்களைப் பற்றியும் அதில் எழுதியிருக்கிறார். ஒருமுறை மலேசியாவுக்கு முத்தரப்புத் தொடரில் பங்கேற்கச் சென்றபோது ஒரு தவறான வசனம் எழுதிய டி-ஷர்ட் அணிந்திருக்கிறார் ரெய்னா. அதைப் பார்த்ததும் அவரைக் கடுமையாகக் கண்டித்து அறிவுரை கூறியிருக்கிறார் அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட். இந்திய அணிக்காக விளையாடும் ஒரு வீரர் உடை போன்ற ஒரு சிறிய விஷயத்தில்கூட எவ்வளவு பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். உடனே அந்த டி-ஷர்டை குப்பையில் போட்டுவிட்டு வேறு உடைக்கு மாறியிருக்கிறார் ரெய்னா. இந்திய வீரர்கள் பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதில் டிராவிட் கவனம் செலுத்துவார் என்று கூறியிருக்கிறார் ரெய்னா.

Raina with Dravid
Raina with Dravid

ஒரு போட்டிக்கு தயாராகும்போது டிராவிட் மிகவும் சீரியசாக இருப்பார் என்று குறிப்பிட்டிருக்கும் ரெய்னா, ''கொஞ்சம் ரிலாக்சாக இருங்கள், அவ்வப்போது சிரியுங்கள் என்று எனக்கு சொல்லத் தோன்றும். ஆனால், அதுதான் அவர் தயாராகும் முறை என்பதை மதித்து விட்டுவிடுவேன்'' என்றும் பதிவிட்டிருக்கிறார்.

தன் கிரிக்கெட் வாழ்க்கையின் பல்வேறு நினைவுகளை இந்தப் புத்தகத்தில் பகிர்ந்திருக்கும் ரெய்னா, தன்னம்பிக்கை இருக்கும்போது நிச்சயம் சாதிக்க முடியும் என்ற கருத்தைத்தான் தன் புத்தகம் மூலம் வலியுறுத்துகிறார்.