Published:Updated:

``ஜெயிக்கிறமோ இல்லையோ சண்டை செய்யணும்!’’ - சி.எஸ்.கே சண்டைக்காரன் சுரேஷ் ரெய்னா #HBDRaina

அன்று சென்னை அணி தோற்றிருக்கலாம். ஆனால், எந்தவொரு ரசிகனும் சோகத்தில் இல்லை. ஒருவித ஆத்மதிருப்தியோடுதான் உறங்கச் சென்றான். அன்று நடந்தேறிய அதிசயத்தை நிகழ்த்திக்காட்டிய அசகாய சூரன், இந்திய கிரிக்கெட் உலகிலும், ஐ.பி.எல் உலகிலும் தன் பெயரை முத்திரை குத்திச் சென்ற வீரன்...

Suresh Raina
Suresh Raina

ஐ.பி.எல்லின் ஏழாவது சீஸன். குவாலிஃபையர் 2-வது ஆட்டத்தில் சென்னையும் பஞ்சாப்பும் மும்பை வான்கடேவில் மோதிக்கொள்கின்றன. முதலில் ஆடிய பஞ்சாப், 20 ஓவர்களுக்கு 226 ரன்கள் அடித்து மமதையுடன் நிற்க, சென்னை ரசிகர்களுக்கு இதயம் நின்றுவிட்டது. எளிதில் எட்டிப்பிடிக்க முடியாத இலக்கு. இதுவரை கண்டிராத அதிசயம் ஒன்று அரங்கேறினால் மட்டுமே, வெற்றி சாத்தியம் என்ற நிலை. கிட்டத்தட்ட, முதல் இன்னிங்ஸின் முடிவிலேயே ஆட்டத்தின் முடிவு தெரிந்துவிட்டதாக நொந்துபோனது சி.எஸ்.கே ஆர்மி!

Suresh Raina
Suresh Raina
BCCI

இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழக்கிறார் டு ப்ளெஸ்ஸி. தமிழகத்தில் பல தொலைக்காட்சிகள் அணைகின்றன, வீடுகளில் இருள் சூழ்கிறது. சில நிமிடங்களிலேயே, செல்போன்கள் ஒவ்வொன்றாய் அதிரத்தொடங்குகின்றன, செல்போனின் சிறிய ஒளி இருளை விலக்குகிறது. "டேய் மேட்ச் பாருடா" என மெசேஜ்கள் அணத்துகின்றன. அணைந்த தொலைக்காட்சிகளை ஆன் செய்துபார்த்தால், வான்கடேவில் ஒரு அதிசயம் நிகழ்ந்துகொண்டிருந்தது. வீசப்பட்ட பந்துகள் பவுண்டரிகளுக்கு பறந்து பறந்து அலுப்படைகின்றன. பந்துகளை விளாசிக்கொண்டிருந்த அடிடாஸ் மட்டையோ அசரவேயில்லை.

"ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ மொதல்ல சண்டை செய்யணும்" என்பதற்கேற்ப, ஒற்றை ஆளாக அவர் சண்டை செய்துகொண்டிருக்கிறார். இன்னும் பொருத்தமாக, சம்பவம் செய்துகொண்டிருக்கிறார். அடித்த அடியில் பஞ்சாப் அணியின் மமதை இறங்குகிறது, போதை தெளிகிறது. விக்கெட் என்ன, ஒரு டாட் பால் எடுக்கவே வியூகங்கள் அமைக்க வேண்டிய நிலை உண்டாகிறது. சூப்பர் கிங்ஸ் சின்னத்திலிருக்கும் சிங்கமே உயிர் பெற்று வந்ததுபோல், மைதானமே மிரட்சியில் அமர்ந்திருக்கிறது. தல தோனி டிரெஸ்ஸிங் ரூமில் இங்கும் அங்குமாக நடந்துகொண்டே இருக்கிறார். அவர் மனதில் பற்றி எரிந்துகொண்டிருக்கும் வெறிக்கு, களத்தில் உருவம் கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த `SOUTH PAW'.

Raina
Raina

பிட்சுக்குள் நுழையும்போது, 117 பந்துகளுக்கு 225 ரன்கள் தேவை என்ற நிலை. ஜான்சன் அசுர வேகத்தில் வீசிய பந்து, அவர் பேட்டில் எட்ஜாகி பவுண்டரிக்கு விரைகிறது. அதே ஓவரில் இன்னொரு பவுண்டரி. அடுத்ததாகப் பந்து வீச சந்தீப் ஷர்மா வருகிறார். அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் மூன்று பவுண்டரிகள். க்ளோஸில் ஃபீல்டிங் நிற்பவர்கள், மைதானத்துக்கு மேட்ச் பார்க்க வந்தவர்களாக மாறுகிறார்கள். ஃபீல்டர்களைவிட பால் பாய்களின் பணி அதிகரிக்கிறது. ரசிகர்கள் கேட்ச் எடுக்கிறார்கள். 16 பந்துகளில் அரைசதத்தைக் கடக்கிறார் அவர். ஐ.பி.எல் வரலாற்றின் இரண்டாவது அதிவேக அரைசதம் எனும் முத்திரையைப் பதிக்கிறார்.

பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசவருகிறார் பர்வீந்தர் அவானா. அந்த ஓவரை பர்வீந்தர் அவானா மட்டுமல்ல, மேட்ச் பார்க்க வந்த யாருமே தன் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். 33 ரன்கள் அந்த ஓவரில். நேர்திசையில் லாஃப்ட் ஷாட் ஒன்று ஆடியிருப்பார், அந்த மேட்சை நினைத்து கண்களை மூடினால் முன்னால் வந்து நிற்கும் ஷாட் அது. என்ன ஸ்டைலிஷான வீரர் அவர்! பவர் ப்ளே முடிவதற்குள், 100 ரன்களை சேர்க்கிறது சிஎஸ்கே. இப்போதைய தேவை 84 பந்துகளில் வெறும் 127 ரன்கள்.

``ஜெயிக்கிறமோ இல்லையோ சண்டை செய்யணும்!’’ -  சி.எஸ்.கே சண்டைக்காரன் சுரேஷ் ரெய்னா  #HBDRaina

25 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து களத்தில் கனன்றுகொண்டிருக்கிறார் அவர். என்ன நினைத்தாரோ, சில நிமிடங்கள் தன்னை ஆசுவசாப்படுத்திக்கொள்ள நினைத்தார். `ஸ்ட்ராடஜிக் டைம் அவுட்' வேண்டுமென்றார். டைம் அவுட் முடிந்து வீசிய முதல் பந்தில் அவர் அவுட். போல்டோ எல்.பி.டபிள்யுவோ கேட்சோ கொடுத்து அவுட்டாகவில்லை. அவுட்டாக்கியிருக்கவும் முடியாது. நான் - ஸ்டைரக்கர் பக்கம் க்ளவ்களையும் பேட்டையும் பிடித்து நின்றுகொண்டிருந்தவர், சின்னஞ்சிறு மிஸ் கம்யுனிகேஷனில் ரன் அவுட் ஆகிறார். பஞ்சாப் பெருமூச்சு விட்டது. நிகழ்ந்துகொண்டிருந்த அதிசயம் ஒரு முடிவுக்கு வந்தது. இன்னிங்ஸின் முடிவில் 202 ரன்கள் எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவுகிறது சென்னை.

சென்னை அணி தோற்றிருக்கலாம். ஆனால், எந்தவொரு சென்னை ரசிகனும் அன்று சோகத்தில் இல்லை. ஒருவித ஆத்மதிருப்தியோடுதான் உறங்கச் சென்றான். அன்று நடந்தேறிய அந்த அதிசயத்தை நிகழ்த்திக்காட்டிய அசகாய சூரன், இந்திய கிரிக்கெட் உலகிலும் ஐ.பி.எல் கிரிக்கெட் உலகிலும் தன் பெயரை காலத்தால் அழியாத அளவுக்கு முத்திரை குத்திச் சென்ற வீரன், #3 சுரேஷ் ரெய்னா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சின்ன தல!

``ஜெயிக்கிறமோ இல்லையோ சண்டை செய்யணும்!’’ -  சி.எஸ்.கே சண்டைக்காரன் சுரேஷ் ரெய்னா  #HBDRaina

உன் இடத்தை நிரப்பும் வல்லமை உனக்கு மட்டுமே உண்டு. மீண்டு வா... வாகை சூட வா!

Vikatan