நடப்பு ஐ.பி.எல் சீசனில் தோனியின் ஓய்வு குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கிறது. தோனியுமே கூட சூசகமாக பல சமயங்களில் ஓய்வு குறித்து பேசுகிறார். சில சமயங்களில் 'நீங்கள்தான் இது என்னுடைய கடைசி சீசன் என முடிவெடுத்துவிட்டீர்கள்...' என ஜாலியாக ரசிகர்களையும் விமர்சகர்களையும் கலாய்க்கிறார்.
தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறுவாரா மாட்டாரா என்பதுதான் ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. இந்நிலையில், தோனியின் ஓய்வு சார்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஒரு லேட்டஸ்ட் அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

மே 6 ஆம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதியிருந்தன. இந்த போட்டிக்கு கமெண்ட்ரி செய்ய சுரேஷ் ரெய்னாவும் மைதானத்திற்கு வந்திருந்தார். போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகவும் ரெய்னா பங்கேற்றிருந்தார். எல்லாம் முடிந்த பிறகு தோனியும் ரெய்னாவும் நீண்ட நேரம் மைதானத்தில் நின்றே உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தோனியிடம் பேசிய விஷயத்தைதான் ரெய்னா இப்போது பகிர்ந்திருக்கிறார்.

'கடைசியாக தோனியை சந்தித்தப்போது கோப்பையை வென்றுவிட்டு இன்னும் ஒரு சீசனுக்கு ஆடுவேன் எனக்கூறினார்.'
என ரெய்னா தோனியின் ஓய்வு பற்றி தோனியிடமே நேரடியாக கேட்டு ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் தோனியின் ஓய்வு பற்றி எதோ ஒரு புதிய செய்தி வெளியாகி பரபரப்பைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது. தோனி என்ன சொல்லப்போகிறார்? பொறுத்திருந்துப் பார்ப்போம்.