Published:Updated:

டார்கெட் 177... ஆனால், அந்த 33... இந்தியா, வங்கதேசத்திடம் வீழ்ந்த கதை! #INDVSBAN #U19CWCFINAL

U19CWCFINAL
News
U19CWCFINAL ( ICC )

அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று, காலிறுதியில் ஆஸ்திரேலியாவையும் அரை இறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியிருந்ததால், தோல்வியையே சந்திக்காத அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது இந்தியா.

ஐந்தாவது முறையாக ஜூனியர் உலகக்கோப்பையை (அண்டர்19) வெல்லப்போகும் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா. அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று, காலிறுதியில் ஆஸ்திரேலியாவையும் அரை இறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியிருந்ததால் தோல்வியையே சந்திக்காத அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது இந்தியா.

டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபில்டிங்கைத் தேர்வு செய்தது. இதற்கு முன்பு நடைபெற்ற அண்டர் 19 இறுதிப் போட்டிகளில் பெருபான்மையாக சேசிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளதால் வங்கதேச அணி அதே ஃபார்முலாவைப் பின்பற்றியது .

பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்த தெம்பில் களம் இறங்கிய இந்திய அணிக்குக் கடும் சவால் காத்திருந்தது. வங்கதேச பெளலர்கள் கட்டுக்கோப்பான லைனில் தொடர்ந்து பந்து வீச ஜெய்ஸ்வாலும் சக்சேனாவும் ரன் அடிக்கத் திணறினர்.

டார்கெட் 177... ஆனால், அந்த  33... இந்தியா, வங்கதேசத்திடம் வீழ்ந்த கதை! #INDVSBAN #U19CWCFINAL
Image courtesy : ICC

17 பந்துகளைச் சந்தித்த சக்சேனா 2 ரன்னில் அவுட் ஆக, அடுத்து வந்த திலக் வர்மா ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஓவர்கள் கடந்து கொண்டே இருந்தன. ஆனால் ரன்கள் ஏறவில்லை. ஆமை வேகத்தில் முதலில் ஆடி பின்பு முயலின் வேகத்தில் ரன்களை கூட்டிவிடலாம் என்று கணக்குப்போட்ட ஓப்பனர்கள் இருவரும் அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு உயர்த்தியபோது 28 ஓவர்கள் முடிந்துவிட்டன. சரி 100 ரன்கள் எடுத்தாகிவிட்டது இனிமேல் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது திலக் வர்மா அவுட்டானார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதற்கு முந்தைய பந்தில் ஜெய்ஸ்வாலைத் தூக்கி அடிக்க வேண்டாம் என எச்சரித்தவர், தனது விக்கெட்டை அதே மாதிரி பறிகொடுத்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. நன்றாக செட் ஆகி இருந்த இரண்டு பேட்ஸ்மேன்களில் ஒருவர் அவுட் ஆனால் புதிதாக வரும் பேட்ஸ்மேன் ஒன்று அவருக்கான டைம் எடுத்துக்கொள்வார்... இல்லை அவரும் அவுட் ஆகிச் சென்று விடுவார். கேப்டன் பராக் இரண்டாவது ஆப்ஷனை டிக் அடித்துவிட்டார். அணியின் ஸ்கோர் 114/3.

மொத்த பாரமும் ஜெய்ஸ்வாலின் மீது விழுந்தது . ஆஸ்திரேலியாவுடன் காலிறுதியில் பின்வரிசை ஆட்டக்காரர்கள் காப்பாற்றிய மாதிரி, இறுதிப் போட்டியில் காப்பாற்ற எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் முன் வரவில்லை. நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் எதிர்பாராதவிதமாக ஷோரிபில் இஸ்லாம் பந்தில் அவுட் ஆக, இந்திய அணி அதளபாதாளத்தில் விழுந்தது. 121 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடித்து 88 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் வெளியே போகும்போது அணியின் ஸ்கோர் 156 ரன்களுக்கு 4 விக்கெட்கள்.

`தலைவனை இழந்த படை தறிகெட்டு ஓடும்' என்பது போல் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வாலை இழந்த இந்திய அணிக்கு அதே நிலை ஏற்பட்டது. அடுத்த 21 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்களுக்குத் தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டது .

177 ரன்களுக்குள் வங்கதேச அணியை ஆல் அவுட் ஆக்க வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு வங்கதேச வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை அடிக்க இந்தியா ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை எல்லோருக்கும் போய்விட்டது.

டார்கெட் 177... ஆனால், அந்த  33... இந்தியா, வங்கதேசத்திடம் வீழ்ந்த கதை! #INDVSBAN #U19CWCFINAL
Image courtesy : ICC

இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் லெக் ஸ்பின்னர் பிஷ்னோயின் பெளலிங் பர்ஃபார்மன்ஸ் இருந்தது. தான் வீசிய முதல் 5 ஓவர்களில் 4 விக்கெட்கள் எடுத்து மிரட்டினார். இவர் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையை விதைத்தார்.16 ஓவர்களில் 65 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது வங்கதேசம். ஓப்பனர் ஈமான் கால் தசைப்பிடிப்பு காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியே செல்ல இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர். ஆனால், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்களே நிடித்தது. 102 ரன்களுக்கு 6 விக்கெட்கள் போய்விட்ட நிலையில் வங்கதேசம் என்ன செய்து விடும் என்று அசால்ட்டாக எண்ணிக்கொண்டிருந்தபோது, மீண்டும் உள்ளே வந்தார் ஓப்பனர் ஈமான். கேப்டன் அக்பர் அலியுடன் ஜோடி சேர்ந்தவர் சிறுகச் சிறுக ரன்களாகச் சேர்த்து இந்திய பெளலர்களைச் சோதிக்க ஆரம்பித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெருக்கடியான சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு வங்கதேச கேப்டன் நன்றாகவே பாடம் எடுத்தார். 6வது இடத்தில இறங்கி காட்டுத்தனமா அடிப்பது மட்டும் அல்ல, லோ ஸ்கோரிங் மேட்ச்சில் நின்று விளையாடவேண்டும் என்பதையும் நிகழ்த்திக் காட்டினார்.

இருவர் விக்கெட்டுகளை எடுக்க பெரும்பாடுபட்ட இந்திய அணிக்கு, இந்தத் தொடரில் பார்ட்னர்ஷிப் பிரேக்கராக இருக்கும் ஜெய்ஸ்வாலை கேப்டன் பராக் பந்து வீச அழைத்தார். கை மேல் பலன் கிடைத்தது.

டார்கெட் 177... ஆனால், அந்த  33... இந்தியா, வங்கதேசத்திடம் வீழ்ந்த கதை! #INDVSBAN #U19CWCFINAL
Image courtesy : ICC

ஓப்பனர் ஈமான் வெற்றிக்கு 35 ரன்கள் தேவை என்ற நிலையில் இருக்கும்போது அவுட் ஆக, இந்தியர்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்தது. பெளலர்கள் விக்கெட்களை எடுத்து விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்க, அதற்கு ராஹிபுல் ஹாசன் முட்டுக்கட்டையாக இருந்தார். அவரது விக்கெட்டை இந்திய பெளலர்களால் எடுக்கவே முடியவில்லை. மறுமுனையில் கேப்டன் அக்பர் அலி ரன்களைச் சேர்த்துக்கொண்டிருக்க, மழை சிறிது நேரம் குறுக்கிட்டது. போட்டி 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 170 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றிக்குத் தேவை 6 ரன்கள் என்று இருக்க, அந்த ரன்களை பெளலர் ராஹிபுல் ஹாசனே எடுத்தார். 177 ரன்கள் என்ற குறைவான ஸ்கோர் எடுத்திருக்கும்போது பெளலர்கள் 33 ரன்களை எக்ஸ்ட்ராவாகக் கொடுத்தால் எப்படி ஜெயிக்க முடியும். அதில் 19 வைடுகள். 2 நோ பால். இந்த எக்ஸ்ட்ராக்களைத் தவிர்த்திருந்தாலே ஆட்டம் இந்தியா பக்கம் மாறியிருக்கும்.

டார்கெட் 177... ஆனால், அந்த  33... இந்தியா, வங்கதேசத்திடம் வீழ்ந்த கதை! #INDVSBAN #U19CWCFINAL
Image courtesy : ICC

5வது முறையாக கோப்பையைக் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணிய இந்திய வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது வங்கதேசம்.

இந்த உலகக் கோப்பையில் 400 ரன்களைக் குவித்த ஜெய்ஸ்வால்க்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. லீடிங் ரன் ஸ்கோரராகவும், லீடிங் விக்கெட் டேக்கராகவும் இந்தியர்கள் முறையே ஜெய்ஸ்வால் மற்றும் பிஷ்னோய் வந்த போதும் கூட உலகக்கோப்பையை இந்திய அணியால் கைப்பற்ற முடியாமல் போனது சோகம்தான்.