சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இந்திய அணியின் கதவைத் தட்டும் இளம் வீரர்கள்!

ரிங்கு சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிங்கு சிங்

இந்த ஐ.பி.எல் சீசனின் ராக் ஸ்டார் ரிங்கு சிங்தான். நரம்புகளில் மின்னல் பாய்ச்சும் துள்ளலான இசைக்கச்சேரியைப் போன்றதுதான் ரிங்கு சிங்கின் ஆட்டம்

பரபரப்பாக நடந்துவந்த 16-வது ஐ.பி.எல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசனிலும் பல ஸ்டார் வீரர்கள் அதிரிபுதிரியாக பெர்ஃபாம் செய்திருந்தனர். இன்னொரு பக்கம் இளம் வீரர்கள் தங்களுக்கெனப் புது அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அழுத்தமிகு ஆட்டங்களை ஆடி புதிய ஸ்டார்களாகப் பரிமளித்திருக்கின்றனர். இந்திய அணிக்கான தேர்வு முன்பைப் போல் வெறுமனே உள்ளூர்ப் போட்டிகளை மட்டுமே கருத்தில் கொண்டு அல்லாமல் ஐ.பி.எல் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடக்கிறது. இந்த ஐ.பி.எல் சீசனில் தங்கள் பெர்ஃபாமென்ஸ் மூலம் இந்தியத் தேர்வுக்குழுவின் ரேடாரில் சிக்கும் வாய்ப்புள்ள வீரர்கள் சிலரைப் பற்றி இங்கே...

ரிங்கு சிங்
ரிங்கு சிங்

ரிங்கு சிங்

இந்த ஐ.பி.எல் சீசனின் ராக் ஸ்டார் ரிங்கு சிங்தான். நரம்புகளில் மின்னல் பாய்ச்சும் துள்ளலான இசைக்கச்சேரியைப் போன்றதுதான் ரிங்கு சிங்கின் ஆட்டம். ‘இந்தக் காரியத்தைச் செய்ய இயலாது’ என்கிற பேச்செல்லாம் ரிங்கு சிங்கின் அகராதியிலேயே கிடையாது. எதுவாக இருந்தாலும் இறங்கி ஒரு கை பார்த்துவிடுவோம் என்பதுதான் ரிங்குவின் பாணி. அதனால்தான் குஜராத்துக்கு எதிரான போட்டியில் ஜெயிக்க, 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் தேவைப்பட்டபோது எந்த அழுத்தமும் இல்லாமல் அவரால் அவ்வளவு இயல்பாக அந்த இமாலய இலக்கை எட்ட முடிந்தது. லக்னோவிற்கு எதிரான கடைசிப் போட்டியில் ரிங்கு கடைசிவரை நின்று வாள் வீசி வீழ்ந்தபோது எதிரணி வீரர்கள்கூட அவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ‘‘எங்கள் அணியின் புதிய ஃபினிஷர் ரிங்கு. அவர் என்னுடன் நின்றால் என்மீதான அழுத்தம் குறைந்து விடுகிறது'’ என நெடுங்காலமாக கொல்கத்தா அணியின் ஃபினிஷராக இருக்கும் ரஸலே ரிங்குவைப் பாராட்டியிருந்தார். இந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக அதிக ரன்களை அடித்திருப்பவர் ரிங்கு சிங்தான். 14 போட்டிகளில் 474 ரன்களை 149 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். ஆட்டங்களில் மின்னலாக சிக்ஸர் வீசும் இந்த வீரனுக்கு விரைவிலேயே இந்திய அணியின் கதவுகள் திறக்கக்கூடும்.

மோஷின் கான்
மோஷின் கான்

மோஷின் கான்

ரிங்கு சிங், யாஷஸ்வி போன்றவர்கள் இந்த சீசன் முழுவதும் ஆடியிருந்தார்கள். ஆனால், இந்த சீசனில் ரொம்பவே சொற்பமான போட்டிகளில் ஆடிய மோஷின் கான், தன்னுடையை தடத்தை வெறும் ஒரே ஒரு ஓவரில் பதித்துவிட்டுச் சென்றிருந்தார். மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் டிம் டேவிட்டையும் கேமரூன் க்ரீனையும் களத்தில் வைத்துக்கொண்டு 11 ரன்களை டிஃபண்ட் செய்து அசத்தியிருந்தார். காயம் காரணமாக இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் ஆட முடியாமல் இருந்தார். அவரின் தந்தை தீவிர உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்படி ஒரு சூழலில்தான் அந்த மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கி மோஷின் கான் சாதித்தார். கடந்த சீசனிலேயே 9 போட்டிகளில் ஆடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில் கவனிக்க வேண்டியது அவருடைய எக்கானமியைத்தான். அது 5.96 ஆக மட்டுமே இருந்தது. இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது அரிய இனம். மோஷின் கான் மாதிரியான சிக்கனவாசிகள் இந்திய அணிக்குள் சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கப்பட வேண்டும்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

“மும்பையில் ஒரு எளிய பின்னணியிலிருந்து வந்த வீரர் ஒருவர் ஆடும் ஆட்டத்திற்கு இன்று ஜாம்பவான்களான குமார் சங்ககராவும் ஜோ ரூட்டும் பட்லரும் எழுந்து நின்று கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெருமிதமாக இருக்கிறது.” ஹர்ஷா போக்லேவின் இந்தப் பாராட்டில் அவர் குறிப்பிடும் அந்த மும்பை இளைஞன் வேறு யாருமில்லை, யாஷஸ்வி ஜெய்ஸ்வால்தான். கங்குலியை நகலெடுத்ததைப் போல இடதுகையில் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆடிய யாஷஸ்விதான் இந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் பெரும் நம்பிக்கையாகத் திகழ்ந்தார். குறுகிய வடிவ வெள்ளைப் பந்தாட்டத்தின் ஆகச்சிறந்த வீரர் எனச் சிலாகிக்கப்படும் ஜாஸ் பட்லரின் ஆட்டத்தையே விஞ்சி நின்று ஆதிக்கம் செலுத்தும் வகையில் யாஷஸ்வியின் ஆட்டம் அமைந்தது கூடுதல் சிறப்பு. இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்களை எடுத்திருக்கும் வீரரும் யாஷஸ்விதான். 14 போட்டிகளில் 625 ரன்களை 163 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். ஆரஞ்சுத் தொப்பிக்கான பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கும் வீரர்களில் சூர்யகுமார் மற்றும் க்ளாஸனின் ஸ்ட்ரைக் ரேட் மட்டும்தான் யாஷஸ்வியைவிட அதிகமாக இருக்கிறது. மரபார்ந்த முறையில், அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடக்கூடிய வல்லமை பெற்ற வீரராக யாஷஸ்வி தன்னை நிரூபித்திருக்கிறார். “விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் கொஞ்சம் ஒதுங்கிவிட்டு யாஷஸ்வி போன்ற இளம் வீரர்களுக்கு டி20 போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என ரவிசாஸ்திரி திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். ஆனால், “இந்திய அணியின் அழைப்புக்காகக் காத்திருக்கிறீர்களா?” என யாஷஸ்வியிடம் கேட்டால், ‘‘நான் என்னுடைய வேலையைச் செய்கிறேன். நடப்பதெல்லாம் தானாக நடக்கட்டும்'’ என சாந்தமாகப் பேசி சைலன்டாக ஒதுங்கிவிடுகிறார் யாஷஸ்வி.

பிரப்சிம்ரன் சிங்
பிரப்சிம்ரன் சிங்

பிரப்சிம்ரன் சிங்

‘‘ஐ.பி.எல் இளம் வீரர்களுக்கான மகத்தான மேடை. இங்கே பெர்ஃபாம் செய்தால் இந்திய அணிக்கு விரைவிலேயே தேர்வாவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது’’ என டெல்லிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்துவிட்டு பிரப்சிம்ரன் சிங் பேசியிருந்தார். அந்த சதத்தை வெறும் எண்ணாகப் பார்த்தோமெனில், அதன் மதிப்பை பெரிய அளவில் உணர முடியாது. ஏனெனில், அது அப்படி ஒரு இக்கட்டான சூழலில் வந்த சதம். பிரப்சிம்ரன் மட்டும் ஒரு முனையில் நிற்க, இன்னொரு முனையில் விக்கெட்டுகள் அனைத்தும் வரிசையாக விழுந்துகொண்டே இருந்தன. அந்தச் சமயத்தில் ஒற்றை வீரனாக நின்று போராடி சதமடித்திருந்தார் இந்த 22 வயது இளைஞன். பஞ்சாபைச் சேர்ந்த இந்த இளம் வீரர்தான் இந்த சீசனில் ஷிகர் தவானுக்குப் பிறகு பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரர். பிரப்சிம்ரனின் கனவு பலிக்க வேண்டும்!

துஷார் தேஷ்பாண்டே
துஷார் தேஷ்பாண்டே

துஷார் தேஷ்பாண்டே

இந்த சீசனில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட வீரர் துஷார் தேஷ்பாண்டேதான். ஓவருக்கு 10 பந்துகளுக்கு மேல் வீசி தோனியையே ஒரு கட்டத்தில் கிறுகிறுக்க வைத்திருக்கிறார். எதிரணிக்கு உதவ இம்பாக்ட் ப்ளேயராக இறங்குகிறாரோ என ரசிகர்கள் கலாய்த்துத் தள்ளினர். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல தொடர் வாய்ப்புகளைப் பெற்று துஷார் தேஷ்பாண்டே ஒவ்வொரு போட்டியிலும் தன்னை மெருகேற்றிக்கொள்ளத் தொடங்கினார். “டெத் பௌலிங் என்பது அனுபவத்தின் வழி நிபுணத்துவம் பெற வேண்டியது. துஷார் தேஷ்பாண்டே தொடக்கத்தில் தடுமாறினார். ஆனால், தொடர்ச்சியாக அழுத்தமான சூழல்களில் ஆடி ஆடித் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு இப்போது பிரமாதமாகத் தேறிவிட்டார்” என தோனியே துஷார் தேஷ்பாண்டேவுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். சென்னை அணிக்காக இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் எனும் பெயருமே துஷாருக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சென்னை அணி தீட்டியிருக்கும் இந்த வைரம் இந்திய அணி வரை முன்னேறி ஜொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.