Published:Updated:

முகமது நிசார் : இந்தியாவின் முதல் மிரட்டல் வேகப்பந்து வீச்சாளர்...பாகிஸ்தான் போனாலும் மறக்கமுடியுமா?

Mohammad Nissar

"நிசார் பாகிஸ்தான் பக்கம் சென்றதன் விளைவு தான் நாம் ஸ்பின்னர்களையும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது" என்று சொன்னா விஜய் மெர்சன்ட். அது உண்மையும் கூட!

முகமது நிசார் : இந்தியாவின் முதல் மிரட்டல் வேகப்பந்து வீச்சாளர்...பாகிஸ்தான் போனாலும் மறக்கமுடியுமா?

"நிசார் பாகிஸ்தான் பக்கம் சென்றதன் விளைவு தான் நாம் ஸ்பின்னர்களையும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது" என்று சொன்னா விஜய் மெர்சன்ட். அது உண்மையும் கூட!

Published:Updated:
Mohammad Nissar

1932... இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் ஆட இங்கிலாந்து சென்றிருந்தது இந்திய அணி. இங்கிலாந்து அப்போதே கிரிக்கெட்டின் ஆதிக்க சக்தி. ஆனால் இந்திய அணிக்கு அதுதான் முதல் போட்டி. இந்தியாவுக்கு மட்டுமல்ல... வெள்ளைத் தோல் இல்லாத வீரர்கள் இணைந்து ஒரு அணியாக ஆடப் போவதும் அது தான் முதல் முறை. 25,000 ரசிகர்கள் ஆட்டத்தைக் காண வந்திருந்தனர். ஆனால் யாரும் இந்திய அணியைக் காண வரவில்லை. பெர்சி ஹோல்ம்ஸ், ஹெர்பட் ஸ்கட்லைஃப் எனும் இரண்டு சிறப்பான இங்கிலாந்து வீரர்களின் ஆட்டத்தைக் காண வந்திருந்தார்கள். காரணம் அந்த இருவருமே மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தனர். ஆட்டத்திற்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு தான் இந்த இணை முதல் தர போட்டி ஒன்றில் முதல் விக்கெட்டுக்கு 555 ரன்கள் சேர்த்து உலக சாதனை படைத்திருந்தது. அவர்களின் பேட்டிங்கைப் பார்ப்பதற்குத்தான் அத்தனை கூட்டமும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், லார்ட்ஸ் மைதானம் ரசிகர்களுக்கும் வேறு ஒரு ஸ்கிரிப்ட்டை தயாரித்து வைத்திருந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் பந்து வீச, இன்ஸிவிங்கர் மூலமாக ஸ்கட்லைஃபின் ஸ்டம்புகள் தகர்க்கப்பட்டன. ''யாருடா இது?'' என்று தங்கள் பார்வையை ரசிகர்கள் கூர்மையாக்கிய போது ஹோல்ம்ஸின் ஆஃப் ஸ்டம்ப் அரை மயில் தூரத்திற்கு சென்று விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் உலக சாதனை படைத்த இங்கிலாந்தின் வீரர்கள் பெவிலியனில் அமர்ந்திருந்தனர். வெறும் இருபதே நிமிடத்தில் அத்தனை ரசிகர்களையும் தன்வசம் இழுத்தார் அந்த இந்திய பந்து வீச்சாளர். அவரின் பந்து வீச்சைப் பார்த்த சிறுவர்கள் எல்லாம் அவர் பந்து வீசும் முறையிலேயே வீசிப் பார்த்தனர். அரை மணி நேரத்திற்குள் இங்கிலாந்து பத்திரிகைகளின் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்கும் அளவுக்கு பிரபலமானார்.

முகமது நிசார்... லாகூர் மாகாணத்தில் பிறந்த அந்த இந்திய பந்து வீச்சாளர் அன்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றாலும் பல மக்களின் இதயங்களை வென்றார். ரேங்க் டர்னர் பிட்சுகளுக்கும், உலகத்தர ஸ்பின்னர்களுக்கும் பெயர் போன இந்திய அணியின் முதல் வெற்றிகர பந்து வீச்சாளர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்பதே ஒரு பெரிய ஆச்சர்யம்தான்.

இங்கிலாந்து இங்கு வந்து ஆடிய டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்திலும் நிசார் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அந்தத் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது ஒரே ஒரு முதல் தர ஆட்டத்தில்தான். விஜயநகர அரசு அணிக்காக ஆடிய ஆட்டத்தில் ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார் நிசார். இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் கூட ஐந்து விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அவர் பார்த்துவந்த ரயில்வே வேலை, உலகப் போர், விடுதலை இயக்கம் என்று எல்லாம் இணைந்து நிசாரின் கிரிக்கெட் வாழ்க்கையை வெறும் 25 டெஸ்ட் போட்டிகளுடன் முடித்து வைத்தது.

Mohammad Nissar
Mohammad Nissar

பிரிவினையின் போது பலர் நிசாருக்கு கடிதம் எழுதினார்கள் இந்தியாவுடன் இணைந்துகொள்ள... ஆனால் நிசார் திட்டவட்டமாக லாகூர் எந்த நாட்டில் இணைகிறதோ நான் அந்த நாட்டுக்காரன் என்று சொல்லிவிட்டார். பாகிஸ்தான் பிரஜை ஆனார் நிசார். இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடு கூறுகையில் இங்கிலாந்து ஜாம்பவான் லார்வுடை விட வேகமாக பந்து வீசுபவர் நிசார் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் தனது வேகத்தை சரியான பாதையில் மட்டுமே பயன்படுத்தியவர்.

நிசார் சுதந்திரத்திற்கு முன்பு கிரிக்கெட்டால் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். வெளிநாட்டு தொடர்களில் ஆடிக்கொண்டிருக்கும்போது பணிக்குத் திரும்பவில்லை என்றால் வேலை போய்விடும் என்று மிரட்டல்கள் வருமாம். அதுவும் போக ஒரு முறை கொல்கத்தாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் அவர் சரியாக பந்து வீசாமல் போக, "அவர் நோன்பு இருப்பதால்தான் சரியாக ஆட முடியவில்லை" என்று விமர்சித்தார்களாம். இத்தனைக்கு நடுவிலும் தனது கிரிக்கெட்டை விடாமல் காத்து அதை இறுதி வரை நல்ல முறையில் ஆடிச் சென்றவர் நிசார்.

விஜய் மெர்ச்சண்ட் ஒரு முறை சொல்லும்போது, "நிசார் பாகிஸ்தான் பக்கம் சென்றதன் விளைவுதான் நாம் ஸ்பின்னர்களையும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது" என்றார். அது உண்மையும் கூட. பாகிஸ்தான் அணியின் முதல் வேகப்பந்து வீச்சாளரான முன்னாவர் அலி கான் என்பவரின் ரோல் மாடலே நிசார்தான். ஒரு வேளை இந்தியாவில் நிசார் தங்கியிருந்தால் நாமும் பல வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிந்திருப்போம்.

இந்தியாவின் முதல் விக்கெட், முதல் மெய்டன், முதல் ஐந்து விக்கெட் ஹால் என எல்லா சாதனைகளையும் தன் வசம் வைத்திருக்கிறார் நிசார். 2006-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளும் இணைந்து நிசார் டிராபி என்ற பெயரில் தொடர் ஒன்றை நடத்தின. பாகிஸ்தானில் நடக்கும் குவாட்-இ-அசாம் தொடரில் வெல்லும் அணியும், இந்தியாவின் ரஞ்சி கோப்பையை வெல்லும் அணியும் மோதும் பலப்பரீட்சை இது. அரசியல் காரணங்களால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இது நடக்கவில்லை. கடைசியாக நடந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார்.

வேகப்பந்து வீச்சு என்றால் என்ன என்று ஆசிய கண்டத்திற்கு அறிமுகப்படுத்திய அந்த வீரர் கடைசி வரை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கிரிக்கெட் ஆடினார். தனது கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய பையை எங்கு சென்றாலும் எடுத்துச் சென்றார். அப்படி ஒரு முறை செல்லும் போது தனது 52-ம் வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது கிரிக்கெட் பை அப்போதும் அவர் அருகிலேயே இருந்ததாம். இன்றைய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு இவ்வளவு தூரம் வளர்ந்திருப்பதை நிசார் நிச்சயம் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார். நிசார் உயிருடன் இருந்திருந்தால் இன்று தனது 111வது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கிரிக்கெட் ஆடி கொண்டாடி இருப்பார்!