Published:Updated:

நிவேதன் ராதாகிருஷ்ணன் எனும் 'Ambidextrous' ஸ்பின்னர்… தமிழனை அடையாளம் கண்ட ரிக்கி பான்ட்டிங்!

நிவேதன் ராதாகிருஷ்ணன்
நிவேதன் ராதாகிருஷ்ணன்

ஸ்டீவ் ஸ்மித், ரஹானே, ஸ்டாய்னிஸ் போன்ற பெரிய வீரர்களுக்கு பந்து வீசிய நிவேதன் ரிக்கி பான்ட்டிங்கையும் கவர்ந்திருக்கிறார். நிவேதன் ஒரு பேட்ஸ்மேனும்கூட என்பதை அறிந்த ரிக்கி பான்ட்டிங், நிவேதனை அரைமணி நேரம் பேட்டிங் ஆட வைத்து நுணுக்கமாக நிவேதனின் டெக்னிக்கை கவனித்திருக்கிறார்.

இலக்கணங்கள் உடைக்கப்படும்போதுதான் புதிய திறன்களும் திறமையாளர்களும் உருவாவார்கள். இதற்கு கிரிக்கெட்டும் ஒரு விதிவிலக்கல்ல. இங்கேயும் மரபார்ந்த பழைய இலக்கணங்களை உடைத்து புதிய பாணியில் கிரிக்கெட் ஆடியவர்களே பலரும் ஸ்டார்களாக கொண்டாடப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில் இப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஒரு வீரர் வித்தியாசமான திறனோடு இலக்கணங்களை உடைத்து நட்சத்திரமாக மிளிர தயாராகிக் கொண்டிருக்கிறார். அவர் தமிழர் என்பது கூடுதல் சிறப்பு!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அன்புசெல்வன் என்பவரின் மகன் நிவேதன் ராதாகிருஷ்ணன். அன்பு செல்வன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிலேயே செட்டில் ஆக, அங்கே கிரிக்கெட் பயிற்சிகள் எடுத்து உள்ளூர் அணிகளுக்கு விளையாடிவருகிறார் நிவேதன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு பிரிமியர் லீகிலும் விளையாடியிருக்கிறார்.

18 வயதே ஆன இந்த இளம் வீரர் இரண்டு கைகளிலும் சம வீரியத்தோடு பந்துவீசும் திறனோடு கிரிக்கெட் ஆடி வருகிறார். ஒரு ஆஃப் ஸ்பின்னராக வலக்கையில் வீசும் நிவேதன் இடக்கை ஸ்பின்னராகவும் அசத்தி வருகிறார். கூடுதலாக இவர் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடக்கூடியவராக இருப்பதால் ஆஸ்திரேலிய உள்ளூர் அணிகள் இவரை தங்கள் அணிக்கு ஆட வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.

நிவேதன்
நிவேதன்

துபாயில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டோருக்கான தொடரின் மூலமே நிவேதன் ராதாகிருஷ்ணனின் மீது வெளிச்சம் பாய்ந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தொடரில் எட்டு விக்கெட்டுகளை எடுத்தவர் ஒரு அரைசதத்தையும் அடித்திருந்தார். இந்த தொடரை பார்த்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நிர்வாகம் நிவேதனை டெல்லி அணியின் நெட் பௌலராக ஐபிஎல்-க்கு அழைத்து வந்தது.

ஸ்டீவ் ஸ்மித், ரஹானே, ஸ்டாய்னிஸ் போன்ற பெரிய வீரர்களுக்கு பந்து வீசிய நிவேதன் ரிக்கி பான்ட்டிங்கையும் கவர்ந்திருக்கிறார். நிவேதன் ஒரு பேட்ஸ்மேனும்கூட என்பதை அறிந்த ரிக்கி பான்ட்டிங், நிவேதனை அரைமணி நேரம் பேட்டிங் ஆட வைத்து நுணுக்கமாக நிவேதனின் டெக்னிக்கை கவனித்திருக்கிறார். (நிவேதனை அடுத்த சீசனில் ஏலத்தில் எடுப்பதற்கான டெஸ்ட்டிங்காக கூட இருந்திருக்கலாம்!)

பேட்ஸ்மேன் சுலபமாக ரிவர்ஸ் ஸ்வீப், சுவிட்ச் ஹிட் போன்றவற்றை அடிப்பது போல பௌலர்கள் கைகளை மாற்றி அவ்வளவு எளிதாக பந்துவீசி விட முடியாது. ஐசிசி-யின் விதிகளும் பேட்ஸ்மேன்களுக்கு கொடுக்காத கிடுக்குப்பிடிகள் பலவற்றையும் பௌலர்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது. இதனால் பெரும்பாலும் எந்த பௌலர்களும் ஒரே போட்டிகளில் இரண்டு கைகளில் வீசுவதற்கு முயற்சிப்பதில்லை. இத்தனை வருட கிரிக்கெட் வரலாற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு வீரர்கள் மட்டுமே இப்படி இரண்டு கைகளிலும் பந்து வீசியிருப்பார்கள். அதுவும் எதாவது ஒரு போட்டியில் மட்டுமே வீசியிருப்பார்கள். இப்போதுதான் சமீபமாக இலங்கையை சேர்ந்த கமிந்து மெண்டீஸ் போன்ற ஒன்றிரண்டு வீரர்கள் இரண்டு கைகளிலும் சீராக வீசும் திறனோடு வரத்தொடங்கியிருக்கின்றனர்.

நிவேதன் சிறுவயதாக இருக்கும்போது ஒரு வலது ஆஃப் ஸ்பின்னராகவே பயிற்சி செய்திருக்கிறார். ஒருநாள் அவருடைய தந்தை இடக்கையிலும் பந்து வீச முயற்சிக்கலாமே என சொல்லியிருக்கிறார். அங்கிருந்துதான் எல்லாமே தொடங்கியிருக்கிறது. ‘'அவர் இப்போது இடக்கை ஸ்பின்னையும் மிகச்சிறப்பாக வீசுகிறார். இயல்பாகவே அவருக்குள் இருக்கும் இந்த திறன் இயற்கை கொடுத்த பரிசு. வித்தியாசமான திறனுடையவன் என்கிற கர்வமெல்லாம் நிவேதனுக்கு இருப்பதில்லை. தொடர்ந்து முயற்சி செய்து தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்’' என்கிறார் நியு சவுத் வேல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த டேவிட் ஃப்ரீட்மேன்.

நிவேதன் இடது கை பேட்ஸ்மேன்
நிவேதன் இடது கை பேட்ஸ்மேன்

நியூசிலாந்தின் உள்ளூர் அணிகளான நியு சவுத் வேல்ஸ் மற்றும் டான்ஸானியா டைகர்ஸ் இரண்டு அணிகளுமே நிவேதனை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டின. ஆனால், டான்ஸானியா டைகர்ஸ் அணியையே தேர்வு செய்துள்ளார்.

‘'என்னிடம் எப்போதுமே இரண்டு விதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. ‘நீ மிகச்சிறந்த வீரன். உன்னால் இரண்டு கைகளாலும் வீச முடிகிறது. இதற்கு முன் இப்படி ஒருவரை பார்த்ததே இல்லை’ என சிலரும், ‘’இப்படி இரண்டு கைகளில் வீசுவது ஒரு ஏமாற்று தந்திரம்... இதில் பெரிதாக ஒன்றுமில்லை’ என்றும் கூறியிருக்கின்றனர். ஆனால், நான் என்னுடைய திறனை வளர்த்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறேன்’' என தன்னம்பிக்கையோடு பேசுகிறார் நிவேதன்

கிரிக்கெட்டின் அடுத்த பரிணாமமாக 'ambidextrous' என்கிற விஷயமே இருக்கும் என விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பேட்ஸ்மேனோ, பௌலரோ அவரால் இரண்டு கைகளாலும் ஒரு விஷயத்தை செய்ய முடியுமாயின் அதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்திய வீரரான அஷ்வின் கூட தன்னுடைய யூடியூப் சேனலில் பௌலர்கள் இரண்டு கைகளிலும் பந்து வீச வேண்டியதற்கான தேவை குறித்து பேசியிருந்தார். கிரிக்கெட்டின் அடுத்த ட்ரெண்ட்டாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிவேதன் ராதாகிருஷ்ணன் மாதிரியான வீரர்கள் பெரிய ஸ்டார்களாக கொண்டாடப்படும் நாள் சீக்கிரமே வந்துவிடும்.

கேரி சோபர்ஸ் பற்றிய புத்தகங்கள் அத்தனையையும் தேடித்தேடி படிக்கும் நிவேதனுக்கு கேரி சோபர்ஸ் மாதிரியான ஒரு வீரராக வர வேண்டும் என்பதே ஆசை. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு கேரி சோபர்ஸ் உருவானால் நமக்கும் பெருமைதானே!

அடுத்த கட்டுரைக்கு