இந்த 2023 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் அதிரடியான வெற்றியை பதிவு செய்துள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி. 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு லக்னோ அணி வீரர்களை ஆல்-அவுட் ஆக்கியது, மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம், அணியின் பந்து வீச்சாளர்கள் தான். அதிலும் குறிப்பாக ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் வீசி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.

நேற்றைய போட்டியின் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒற்றை நாயகனான ஆகாஷ் மத்வால், 1993 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கி என்ற பகுதியில் பிறந்தார். இவரின் குழந்தைப் பருவமும் பள்ளிப் பருவமும் இங்கு தான். உத்திரகாண்டின் ரூர்க்கி பகுதியில் உள்ள பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்து வந்தார். இவர், பள்ளியில் படிக்கும் போதே டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்துள்ளார். டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுப்பதில் மிகவும் வல்லவர், ஆகாஷ் மத்வால். இவரின் 19வது வயதில், இராணுவ வீரரான இவரது தந்தை இறந்துவிட்டார். தந்தையின் இழப்பு மத்வாலுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பள்ளியில் படிக்கும் போதே, டென்னிஸ் பால் கிரிக்கெட் தான் இவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாக இருந்து வந்துள்ளது.
ஆகாஷ் மத்வால், படிப்பில் அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்ட மாணவராக சிறந்து விளங்கியவர். இன்ஜினீயரிங் படிப்பை படித்துக் கொண்டிருந்த போது, கிரிக்கெட் விளையாடுவதை வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே விளையாடி வந்துள்ளார், மத்வால். இன்ஜினீயரிங் படிப்பை முடித்து பட்டமும் பெற்றுள்ளார், ஆகாஷ் மத்வால்.

உத்தரகாண்ட் அணியின் பயிற்சியாளர்கள், ரெட் பால் கிரிக்கெட் பற்றி பல விஷயங்களை ஆகாஷுக்கு கற்றுக் கொடுத்தனர். மேலும், டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பந்து வீச படிப்படியாக பயிற்சியின் மூலம் கற்றுக் கொண்டார், ஆகாஷ் மத்வால். ரிஷப் பண்ட் மற்றும் ஆகாஷ் மத்வால் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவரும் உத்தரகாண்டின் ரூர்க்கியில் உள்ள தண்டேரா என்ற பகுதியில் அருகருகே வசித்து வந்துள்ளனர். ரிஷப் பண்ட், உத்தரகாண்ட் பயிற்சியாளரான அவ்தார் சிங்கிடம் பயிற்சி பெற்று வந்துள்ளார். பின்னாட்களில், தரக் சின்ஹாவிடம் பயிற்சி பெறுவதற்காக டெல்லிக்கு சென்றுவிட்டார், ரிஷப் பண்ட்.
தன்னுடைய 25 வது வயதில், 2019 ஆம் ஆண்டில் நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபியில் உத்தரகாண்ட் அணிக்காக களமிறங்கி விளையாடினார் மத்வால். இது தான் இவரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது. அதே 2019 ஆண்டில் ரஞ்சி தொடரில் உத்தரகாண்ட் அணிக்காக களமிறங்கி, அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.

அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு, விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் உத்தரகாண்ட் அணியில் விளையாடி வந்தார். இதுவரை 10 முதல் தர போட்டிகளில் விளையாடி, 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 17 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக இவர், 29 டி20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 2019 -ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நெட் பௌலராக இருந்திருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியுடன் மோதவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய ஆகாஷ் மத்வால், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பங்களிப்பை அளித்தார். அடுத்த போட்டியிலும் இவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இந்த ஆட்டத்தின் மூலம் வந்துள்ளது

இந்த சீசனின் தொடக்க போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலிங் ஆர்டர், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடாமல் போனது, மும்பைக்கு பின்னடைவாக இருந்தது.
தற்போது, நேற்றைய ஆட்டத்தின் மூலம் அவர்களின் இடத்தை நிரப்பியுள்ளார், ஆகாஷ் மத்வால். மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆகாஷ் மத்வால் எனும் ஒரு சிறப்பான பௌலர் கிடைத்துள்ளார்.